Wednesday, April 4, 2012

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது



சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயிலின் பங்குனிப் பெருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலைமாலை நேரங்களில் கபாலீஸ்வரர் வீதியுலா காட்சி நடைபெற்று வருகிறது. பங்குனிப் பெருவிழாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான தேர்திருவிழா இன்று காலை கோலாகலமாக நடந்தது.
முன்னதாக கபாலீஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்துடன் கோயிலில் இருந்து மேளதாளம் முழுங்கிட பிரமாண்டமான தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

இதைத்தொடர்ந்து, இன்று காலை 7.30 மணியளவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேளதாள, நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க கபாலீஸ்வரர் எழுந்தருளிய தேர் அசைந்தாடியபடி வீதியுலா புறப்பாடு தொடங்கியது. மயிலாப்பூரிலுள்ள நான்கு மாடவீதிகளிலும் கபாலீஸ்வரர் தேரில் அசைந்தாடி வரும் காட்சியை காண கொளுத்தும் வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.

தேர் நிலைக்கு வந்தடைந்ததும், தேரில் இருந்து இறைவன் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். இதையடுத்து, இரவு ஐந்திருமேனிகள் வீதியுலா நிகழ்ச்சி நடக்கும். தேர்திருவிழாவை காண சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். மாடவீதிகளில் பல இடங்களில் பக்தர்களுக்கு தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மோர் உள்ளிட்ட பானங்களை வழங்கினர்.

தேர்திருவிழாவை முன்னிட்டு, மயிலாப்பூர்லஸ் சந்திப்பில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

அறுபத்து மூவர் விழா: தேர்திருவிழாவை அடுத்து, நாளை பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் எழுந்தருளி, அறுபத்துமூன்று நாயன்மார்களுடன் வீதியுலா நடைபெறும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த அறுபத்து மூவர் விழாவை காண ஏராளமானவர்கள் மயிலாப்பூரில் குவிவார்கள். விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வர்த்தகர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மோர், அன்னதானம் ஆகியவற்றை வழங்குவார்கள்.

No comments:

Post a Comment