Monday, April 9, 2012

கோட்டையில் ஒரு கூலி!

k-kamarajகாமராஜர் தலைமையிலான தமிழக அமைச்சரவை 13-4-1954ல் பதவியேற்றது. இது தமிழகத்தின் 13-வது அமைச்சரவை ஆகும். சென்னை கலைவாணர் அரங்கில் கவர்னர் ஸ்ரீஸ்ரீபிரகாசா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஏற்கெனவே, ராஜாஜி தலைமையிலான மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த சி.சுப்பிரமணியம், எம்.பக்தவச்சலம், ஏ.பி.ஷெட்டி, எம்.ஏ.மாணிக்கவேலர், சண்முக ராஜேஸ்வர சேதுபதி ஆகிய ஐவரையும் தம்முடைய மந்திரிசபையில் சேர்த்துக் கொண்டார் காமராஜர். பி.பரமேஸ்வரன் மற்றும் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி ஆகிய இருவரையும் புதிதாகச் சேர்த்துக் கொண்டார். மொத்தம் காமராஜ் உட்பட எட்டு அமைச்சர்கள். தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் இந்த அமைச்சரவையைப் பாராட்டி எழுதின.

காங்கிரஸ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டால் சி.சுப்பிரமணியத்தையும், அவரை ஆதரித்த எம்.பக்தவச்சலம் போன்றவர்களையும் தம்முடைய அமைச்சரவையில் காமராஜர் சேர்த்துக் கொண்டது, அவரது தன்னம்பிக்கையையும் தொலைநோக்குப் பார்வையையும், தீர்க்கதரிசனத்தையும் காட்டியது. கட்சி ஒற்றுமையைக் கட்டிக் காப்பதில் அவர் கொண்டிருந்த அக்கறையையும் புலப்படுத்தியது.

பொதுநிர்வாகம், காவல்துறை ஆகிய இரண்டு துறைகளை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு, பிற துறைகளை மற்றவர்களிடம் கொடுத்தார் காமராஜர். சக அமைச்சர்களின் இலாகா மற்றும் நிர்வாகப் பணிகளில் தாம் குறுக்கீடு செய்யாமல் அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார் காமராஜர்.

காமராஜர் முதல்வராகப் பதவியேற்றபோது, அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். அமைச்சராகிறவர்கள் ஆறுமாத காலத்துக்குள் சட்டமன்ற உறுப்பினராகவோ, மேல்சபை உறுப்பினராகவோ இருக்க வேண்டும் என்பது விதிமுறை.

காமராஜரை மேல்சபை உறுப்பினராகும்படி அவரது நண்பர்கள் வற்புறுத்தினர். மக்களை f2004102701நேரில் சந்திக்காத தேர்தல் தனக்கு வேண்டாம் என்று காமராஜர் மறுத்துவிட்டார். சட்டசபைத் தொகுதி ஒன்றில் போட்டியிடவே அவர் விரும்பினார். அப்போது வடஆற்காடு மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.ஜே. அருணாசலம் தமது பதவியை ராஜினாமா செய்தார். அத்தொகுதியில், எல்லோரது விருப்பத்தின்படி காமராஜர் போட்டியிடுவார் என்று செய்தி பரவியது.

குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் காமராஜ் போட்டியிட்டார். அவரை எதிர்த்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வி.கே.கோதண்டராமன் போட்டியிட்டார். இதர கட்சிகள் அனைத்தும் காமராஜரை ஆதரித்தன.

காமராஜர் முதல்வர் பதவியை ஏற்றதும், ராஜாஜியின் புதுக்கல்வி (குலக்கல்வி)த் திட்டத்தை ரத்து செய்தார். இதனால் பெரியார், ‘பச்சைத் தமிழர்’ காமராஜர் ஆட்சி தொடர வேண்டும் என்று பச்சைக் கொடி காட்டினார்.

1954-ஜூலை இறுதியில் தேர்தல் நடைபெற்றது. ஆகஸ்ட் முதல் தேதியன்று முடிவு வெளியானது.

காமராஜர் (காங்கிரஸ்) 64,344 வி.கே.கோதண்டராமன் (கம்யூ) 26,132 தலைவர் காமராஜ் 38,212. வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

எனவே, தேர்தல் விதிமுறைப்படி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தனது பணியை ஆற்றினார் காமராஜர்.

காமராஜரின் மந்திரிசபை அமைப்பு, இலாக்காக்கள் ஒதுக்குதல், அவரது அணுகுமுறை ஆகிய பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்ந்து அறிந்த பத்திரிகை உலகம் அவரைப் பெரிதும் பாராட்டியது. தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில, தமிழ் பத்திரிகைகள் மட்டுமின்றி, வடஇந்தியாவில் இருந்த பத்திரிகைகள் பலவும் காமராஜரின் அமைச்சரவையைப் போற்றிப் புகழ்ந்து எழுதின.

பிரபல, ஆங்கில வார ஏடான ‘பிளிட்ஸ்’ பத்திரிகை, “கோட்டையில் ஒரு கூலி” என்று எழுதி காமராஜரின் சமத்துவ நோக்கையும், எளிமையையும் பாராட்டிப் போற்றியது. இந்த நம்பிக்கையை காமராஜர் அமைச்சரவை முற்றிலுமாகக் காப்பாற்றியது.

கோட்டைக்குள் முதலமைச்சராக காமராஜர் நுழைந்தபோது, முதலில் ஒருவார காலம் தயக்கமும், மயக்கமும் இருந்ததென்னவோ உண்மைதான்! அரசாங்க நிர்வாகத்தைத் தமது குறைந்த கல்வித் தகுதியை வைத்துக் கொண்டு திறம்பட நடத்த முடியுமா என்று அவர் சந்தேகப்பட்டார். ஆனால், ஒரு வாரத்திற்குள்ளேயே அவரிடமிருந்த தயக்கமும் மயக்கமும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்து விட்டன.

“மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்; நேர்மையும் தூய்மையும் வாய்ந்த நிர்வாகத்தை நடத்த வேண்டும்” என்று தீர்மானித்து விட்டால், அதற்குப் பட்டபடிப்போ, அனுபவ அறிவோ தேவையில்லை; உறுதியான மனமும் உன்னதமான எண்ணங்களும் இருந்தால் போதும் என்பதை உணர்ந்து கொண்டார் காமராஜ். அதன் பின்னர் அவரிடம் துளிக்கூடத் தயக்கம் இல்லை. நிதானமாகத் தம் பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

எதிர்க்கட்சியினர் கூறும் கருத்துக்களைக் கவனமாகக் கேட்டார். அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டபோது அவற்றை அனைவருடனும் கலந்துபேசி, மிக எளிதாகத் தீர்த்து வைத்தார். தாம் அதிகம் பேசாமல், மற்றவர்களை அதிகமாகப் பேசவிட்டுக் கேட்டுக் கொண்டார்.

kamaraj-children9பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு, நிவர்த்திக்க வேண்டுமென்று அதிகார்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். பத்திரிகையாளர்களை மிகுந்த அன்போடும் மரியாதையோடும் வரவேற்றுப் பேசினார். அவர்கள், தம்மை எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று அனுமதி அளித்தார்.

தமக்கே இருந்த மதியூகத்தைப் பயன்படுத்தி, அரசு நிர்வாகம் பற்றி விரைவிலேயே தெரிந்து கொண்டார். தவறான முடிவுகளையோ, முறையற்ற நியமனங்களையோ, அநாவசியமான தாமதங்களையோ தட்டிக் கேட்க அவர் தயங்கியதேயில்லை. தவறு செய்தவர்களை உடனுக்குடன் கண்டிக்கத் தவறியதுமில்லை. இத்தகைய காரணங்களினால், இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை மிக விரைவிலேயே ஈட்டினார் காமராஜர்.

முதலமைச்சர் பதவிப் பொறுப்பை காமராஜர் எத்துணை சிறப்பாகவும் திறமையாகவும் வகித்தார் என்பதற்கு, அவர் காலத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய டபிள்யூ. ஆர்.எஸ்.சத்தியநாயன் கூறுவதைக் காண்போம்:

“சென்னை மாகாண அரசின் தலைமைச் செயலாளராக காமராஜரின் கீழ் ஏறக்குறைய ஐந்து ஆண்டு காலம் பணியாற்றினேன். அவருடைய செயல்திறனும் மதியூகமும் அந்த ஐந்து ஆண்டு காலமும் என் உள்ளத்தில், அவருக்கென்று ஓர் ஆழ்ந்த மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது. பாராட்டு உணர்வையும் என் மனதில் பதித்தது. ஏதாவதொன்றைத் தீர்மானிப்பதில் மிகத் துரிதமாகவும் தெளிவாகவும் இருப்பார். தன்னைப் பார்க்க வருகிறவர்களின் குணத்தை மின்னல் வேகத்தில் கண்டுபிடித்து விடுவார்.

அவர் முன்னால் நான் எவ்வளவு பெரிய பிரச்னைகளை வைத்தாலும், அது எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருந்தாலும் ஒரு வினாடியில் அதற்கு முடிவு சொல்லி விடுவார். எந்தப் பிரச்னையையும் அவர் நேரடியாகவே அணுகுவார். அவருடைய தீர்ப்பு மிகத் தெளிவாக இருக்கும். அவருக்கு முன்னால் அதிகாரிகளாகிய நாங்கள் வார்த்தை ஜாலத்தில் ஈடுபட்டதே கிடையாது. அவருக்கு எதையும் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதுமில்லை. வியக்கத்தக்க வேகத்தில் பிரச்னையைக் கண்டுபிடித்து விடுவார்” என்று சத்தியநாதன் கூறுகிறார்.

தமிழ்நாடு முழுவதும் காமராஜரின் கால்படாத கிராமமே இல்லை. எந்த இடத்திற்கு எந்த வேளையில் சென்றாலும் அந்த இடம், அங்கு வாழும் மனிதர்கள், அந்தப் பகுதியில் உள்ள மலை, ஓடும் நதி, குறுக்கிடும் பாலங்கள் ஆகிய விவரங்களைப் பளிச்சென்று கூறுவார்.

இதைப்பற்றி அவரே ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார். அதன் விபரம் வருமாறு:

“நான் எந்த சர்வ கலாசாலையிலும் படித்ததாகச் சொல்லவில்லை. ஆனாலும், எனக்குப் பூகோளம் தெரியும். தமிழ்நாட்டில் அனேகமாக எல்லாப் பகுதியும் எனக்குத் தெரியும். எங்கெல்லாம் ஆறுகள் ஓடுகின்றன? எங்கெல்லாம் ஏரிகள் இருக்கின்றன? என்பதெல்லாம் எனக்குத் தெரியும்! எந்த ஊரில் மக்கள் என்னென்ன தொழில் செய்து பிழைக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இவையெல்லாம் பூகோள சாஸ்திரம் இல்லையென்றால், நேர்கோடுகளையும் வளைந்த கோடுகளையும் கொண்ட புத்தகங்கள்தாம் பூகோளம் என்றால், அந்தப் பூகோளம் எனக்குத் தெரியாது என்றே வைத்துக் கொள்ளுங்கள்” என்று பேசினார் காமராஜர்.

மக்களின் உள்ளத்தை மட்டுமின்றி, நாட்டு நடப்புகளையும் அமைப்புகளையும் அங்குலம் அங்குலமாகத் தெரிந்து, அறிந்து வைத்திருந்தார் முதல்வர் காமராஜர்.

‘கோட்டையில் ஒரு கூலி’ என்று எழுதிய பிளிட்ஸ் என்ற ஆங்கில வார ஏடு, காமராஜரின் ஆட்சிப்பணிகள் குறித்து அவ்வப்போது செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது.

கோட்டையில் ஒரு கூலி என்பதை, கோட்டையில் நமக்கொரு ஏழை பங்காளன் என்றே தமிழக மக்கள் எண்ணி மகிழ்ந்தனர்.

ஆனால், ‘படித்தவர்கள்’ என்ற திமிர்பிடித்த அதிகார வர்க்கம் படிக்காத மேதையான காமராஜர் விஷயத்தில் நடந்து கொண்டவிதம், அவர்களையே வெட்கித் தலைகுனியும்படி செய்துவிட்டது!

- முனைவர் பி.எஸ்.செல்வராணி (பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு)

No comments:

Post a Comment