சிறிலங்காவுடனான கடல் எல்லை மற்றும் கிழக்கு கடற்பரப்பின் மீது கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவதற்காகபுதிய ஆளில்லா உளவு விமான அணியொன்றை இந்தியா சிறிலங்காவுக்கு மிக நெருக்கமாக உச்சிப்புளியில் நிறுவியுள்ளது.
இராமநாதபுரத்தில் உள்ள உச்சிப்புளியில் இயங்கும் ‘ஐஎன்எஸ் பருந்து‘ என்று அழைக்கப்படும் இந்தியக் கடற்படையின் விமானதளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து இந்தப் புதிய அணி செயற்படத் தொடங்கியுள்ளது.
இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி வைஸ் அட்மிரல் அனில் சோப்ரா இந்த ஆளில்லா உளவு விமான அணியை ஆரம்பித்து வைத்தார்.INAS 344 என்று அழைக்கப்படும் இந்த அணி, இந்தியக் கடற்படையின் மூன்றாவது ஆளில்லா உளவு விமான அணியாகும்.
இந்தத் தளத்தில் இருந்து முதற்கட்டமாக, இஸ்ரேலியத் தயாரிப்பான மூன்று உளவு விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
விரைவில் மேலும் இரண்டு உளவு விமானங்கள் இந்த அணியில் சேர்க்கப்படவுள்ளன.இவை அதிநவீன வசதிகளைக் கொண்டவை என்பதுடன், சிறிலங்கா விமானப்படையிடம் உள்ள ஆளில்லா உளவு விமானங்களை விடத் துல்லியமான படங்களையும், தகவல்களையும் வழங்கக் கூடியவையாகும்.
சிறிலங்காவில் அதிகரித்து வரும் சீனத் தலையீடுகளை அடுத்து பிராந்திய ரீதியாக இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி வரும் நிலையிலேயே, சிறிலங்காவுக்கு மிகநெருக்கமாக இந்தியா இந்த உளவு விமான அணியை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment