சரியாக 25 வருடங்களுக்கு முன்னால் ஏப்ரல் 16 அன்று ஸ்வீடன் வானொலி போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலை அம்பலப்படுத்தியது. இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் என்று வர்ணிக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் ஆட்சியைத் தூக்கி எறிந்தது போஃபர்ஸ் ஊழல். இந்தியாவில் இந்த ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் ஊழலின் வெள்ளி விழா ஆண்டில் தமக்கு ஊழல் தொடர்பான அத்தனை முக்கிய ஆவணங்களையும் கொடுத்த ரகசிய மனிதர் யார் என்பதை இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.ஸ்வீடன் நாட்டு போலீஸ் துறைத் தலைவரான ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் தான் சித்ராவுக்கு முக்கியமான 350 ஆவணங்களின் பிரதிகளையும் கொடுத்தவர். 25 வருட காலமாக இதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்தவர், இப்போது பகிரங்கமாகத் தாமே முன்வந்து சித்ரா மூலமாக ஒரு பேட்டியில் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். ஸ்டென் போன்ற அரசு, காவல்துறை சார்ந்த மனசாட்சியுள்ள அதிகாரிகள் ரகசியமாக தகவல் தருவதன் மூலம்தான் உலகில் பல ஊழல்கள், முறைகேடுகள் அம்பலத்துக்கு வருகின்றன. தகவல் தந்தவர் யார் என்பதை வெளிப்படுத்தாமல் ரகசியமாக வைத்துக் கொள்வது பத்திரிகையாளரின் முக்கியமான அறம்.
எழுபதுகளில் அமெரிக்க அதிபர் நிக்சன் ஆட்சி கவிழக் காரணமாக இருந்தது வாட்டர்கேட் ஊழல். நிக்சன் தன் எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அலுவலகம் இருந்த வாட்டர்கேட் ஹோட்டல் அறைகளை ஒட்டுக் கேட்பதற்குக் கருவிகள் பொருத்த ஆட்களை அனுப்பியது தான் வாட்டர்கேட் ஊழல். அவர்கள் அறையை உடைத்து நுழைந்தபோது சிக்கிக் கொண்டார்கள். இவர்கள் வெறும் திருடர்கள் அல்ல, நிக்சனின் உளவாளிகள் என்பதை வாஷிங்டன் போஸ்ட் நிருபர்கள் பாப் உட்வர்ட், கார்ல் பெர்ன்ஸ்டென் தொடர்ந்து பல கட்டுரைகளின் மூலம் அம்பலப்படுத்தினார்கள். கடைசியில் நிக்சன் பதவி விலகவேண்டியதாயிற்று. அவருடைய அதிகாரிகள் பலர் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.நிருபர் உட்வர்ட் தன் கட்டுரைகளில் இந்த விவகாரம் பற்றிய முழுத் தகவல்களைத் தனக்குக் கொடுத்தவருக்கு ‘டீப் த்ரோட்’ என்று பெயர் சூட்டி எழுதி வந்தார். அடித்தொண்டையிலிருந்து தகவல்களை ரகசியமாகக் கிசுகிசுத்து வந்ததால் இந்தப் பெயர் என்று வைத்துக் கொள்ளலாம். உட்வர்டின் டீப் த்ரோட் அமெரிக்க விசாரணை அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இணை இயக்குனராக இருந்த வில்லியம் மார்க் ஃபெல்ட். அவரைப் போலவே ஸ்வீடிஷ் காவல்துறையின் உயர் அதிகாரிதான் சித்ரா சுப்ரமணியத்தின் டீப் த்ரோட் ஸ்டென்.ஏன் ஸ்டென் இந்த ஊழலை அம்பலப்படுத்தினார்? ஸ்வீடன் நாட்டில் பொது வாழ்க்கையில் - அரசியலில், வர்த்தகத்தில்- பல உயர்ந்த தரமான அளவுகோல்களை நாங்கள் ஏற்படுத்தி, பல வருடங்களாகின்றன. ஊழல் என்றால் எங்கோ தொலைவில் ஆப்ரிக்கா, ஆசியாவில்தான் நடக்கும் என்ற நினைப்பில் இருந்த எங்களுக்கு ஸ்வீடன் அரசின், அரசியலின் உயர்நிலையிலேயே இப்படி ஊழல் நடப்பது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தேன். இதை மூடி மறைக்க எங்கள் நாட்டுத் தலைமை முயற்சித்ததும், எனக்கு இதை எப்படியாவது அம்பலப்படுத்துவதைத் தவிர வேறு நியாயமான வழி எதுவும் இல்லை" என்கிறார் ஸ்டென்.
இந்தியாவிலும் ஊழலை மூடி மறைக்க பெரும்முயற்சி நடந்ததை ஸ்டென் குறிப்பிடுகிறார். ராஜீவ்காந்தி, அருண் நேரு, இத்தாலிய தரகர் கொட்ரோச்சி மூவரின் பெயரும் வெளிவராமல் பார்க்க என்னென்னவோ செய்தார்கள் என்கிறார் ஸ்டென். குறிப்பாக அருண் நேரு பெயர் அம்பலமானாலும் பரவாயில்லை, கொட்ரோச்சி பெயர் வெளியாகக் கூடாது என்று கடுமையாக வேலை செய்தார்கள் என்று சொல்லும் ஸ்டென், ராஜீவ்காந்தி லஞ்சம் வாங்கியதற்கு எந்த சாட்சியமும் இல்லை,ஆனால், கொட்ரோச்சி குற்றவாளி என்பதற்கு பலமான சாட்சியம் உள்ளது என்கிறார். கொட்ரோச்சியைக் காப்பாற்ற ராஜீவ் ஆட்சி கடைசி வரை முயற்சி செய்ததையும் கடைசியில் கொட்ரோச்சி மீது ஒரு குற்றமும் இல்லை என்று இந்திய நீதிமன்றங்களிலேயே சொல்லப்பட்டதையும் ஸ்டென் சுட்டிக் காட்டுகிறார்.போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஊழல் நடந்தது எவ்வளவு நிஜமோ அவ்வளவு பொய் அந்த பீரங்கி தரமில்லாதது என்பது என்று ஸ்டென் சொல்கிறார். நல்ல சரக்கு. நல்ல கம்பெனி. வியாபார ஆசையில் ஊழலில் இறங்கிவிட்டதுதான் குற்றம் என்பது ஸ்டென் கருத்து. போஃபர்ஸ் பீரங்கிகள் தரமானவை என்பதை நானும் நேரில் கார்கில் யுத்த களத்தில் பார்த்தேன். அந்தப் போரில் இந்தியா வெல்ல, அவை முக்கிய பங்காற்றின.போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொகை அன்று பெரியது. கொட்ரோச்சி சுருட்டியது சுமார் 21 கோடி என்கிறார்கள். மொத்த ஊழல் தொகை 50 கோடி இருக்கலாம். இன்றைய மதிப்பில் அது அதிகபட்சம் 500 கோடி என்றே மிகைப்படுத்தினாலும் கூட, ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் ஒப்பிட்டால் ரொம்பச் சின்னது.ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலை விடக் கூடுதலாக போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல், இந்திய அரசியலையும் பலருடைய வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிறது.
ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலை விடக் கூடுதலாக போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல், இந்திய அரசியலையும் பலருடைய வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிறது.ஒற்றைப் பெரும் கட்சி ஆட்சி நடத்துவது என்ற நிலையில் இருந்த தில்லி அரசியல் இனி கூட்டணி அரசியல்தான், மாநிலக் கட்சிகளுக்கு தில்லியில் பங்கு கொடுத்தால் தான் ஆட்சி நடத்த முடியும் என்ற நிலையைத் தொடங்கி வைத்தது போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம். அதை எதிர்த்து காங்கிரசிலிருந்து வெளியேறிய வி.பி.சிங், ஜன் மோர்ச்சாவை உருவாக்கி, பின்னர் அதை ஜனதா தளமாக்கினார். தி.மு.க., அசாம் கணபரீஷத் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்து தேசிய முன்னணியைத் தொடங்கினார். அதன் பின்னர் இன்று வரை தில்லி அரசியல், மாநிலக் கட்சிகள் ஆதரவுடனான கூட்டணி அரசியல் பாதையை விட்டு பழைய பாதைக்குப் போகவே முடியாத நிலையை அடைந்துவிட்டது.இன்று போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் பற்றி இடதுசாரிகள் தவிர வேறு எந்தக் கட்சியும் பேச விரும்புவதில்லை. பாரதிய ஜனதா, சோனியாகாந்தியை எரிச்சலூட்டுவதற்காக அவ்வப்போது கொட்ரோச்சி பற்றிப் பேசும். ஆனால் கொட்ரோச்சி, ராஜீவுக்கு நிகராக போஃபர்ஸ் கம்பெனி தலைவர் அர்ட்போவின் டயரியில் குறிப்பிடப்பட்ட அருண் நேருவைப் பற்றி வாயைத் திறக்காது. காரணம் அருண் நேரு வி.பி. சிங்கிடமிருந்தும் விலகி பாரதிய ஜனதாவில் ஐக்கியமானவர். அயோத்தி பாபர் மசூதியில் 1948லிருந்து பூட்டி வைக்கப்பட்டிருந்த பகுதியை ஹிந்துக்கள் வழிபாட்டுக்குத் திறந்துவிடும்படி ராஜீவ் ஆட்சியில் உத்தரவிட்டு, பாபர் மசூதி இடிப்புக்கு வழிவகுத்துக் கொடுத்தவர் அருண் நேருதான்.தி.மு.க.வின் நிலை இன்னும் மோசம். 1975ல் இந்திராவின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி தமிழக ஆட்சியை இழந்த தி.மு.க. அதன்பின் 1989 வரை ஆட்சிக்கு வர முடியவே இல்லை. 1989ல் ஆட்சிக்கு வர உதவியது போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் எதிர்ப்புதான். தெருமுனைகளிலெல்லாம் பீரங்கி பொம்மை வைத்து பிரசாரம் செய்த தி.மு.க.வுக்காக ராஜீவ் ஊழல் எதிர்ப்பு நாயகன் வி.பி.சிங் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலையடுத்து காங்கிரஸ் அணியை விட்டுவிட்டு வெளியேறவே முடியாமல் அதை ஆரக் கட்டித் தழுவிக் கொண்டிருக்கும் தி.மு.க.வால் நெருக்கடி காலம், போஃபர்ஸ் இரண்டைப் பற்றியும் பேசவே முடிவதில்லை.போஃபர்ஸ் ஊழல் பத்திரிகைத் துறைக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்தது. ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் இரண்டு பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு ஊழலை அம்பலப்படுத்தின. உண்மையில் இதற்கான முழு பெருமை பத்திரிகைகளை விட நிருபர் சித்ரா சுப்ரமணியத்துக்கே உரியது. அவர் ஹிந்துவில் இருந்தபோது அது போஃபர்ஸ் பற்றி வெளியிட்டது. கருத்து வேறுபாட்டால் அவர் எக்ஸ்பிரஸுக்குச் சென்றதும் அங்கேயும் அவர் தம் புலனாவைத் தொடர்ந்தார். அவரை இரு ஏடுகளும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டன.
ஸ்வீடனில் இருந்தசித்ரா, போஃபர்ஸ் ஊழலைத் துப்பறிந்தபோது கருவுற்றிருந்தார். சில மாதங்களில் குழந்தை பிறந்தது. உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் சித்ரா தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றினார். அவரையும் குழந்தைகளையும் கடத்தப் போவதாக மிரட்டல்கள் வந்தன. அவருக்கு அன்னிய நிதி உதவி வருவதாகக் காட்ட, அவரது வங்கிக் கணக்கில் அநாம தேயமாக பணம் போடும் முயற்சிகள் நடந்தன. அவர் அதையெல்லாம் முறியடித்தார்.சித்ராவுக்கும் ஹிந்துவுக்கும் இருந்த உறவு முறியக் காரணம் என்ன என்பதை இப்போது ஸ்டென் தெரிவிக்கும் தகவல் சொல்கிறது. முக்கியமான ஆவணங்கள் சிலவற்றை ஸ்டென் கொடுத்தும் கூட, அவற்றை ஹிந்து பல மாதங்கள் வெளியிடாமல் தாமதம் செய்தது. ஸ்டென்தான் லீக் செய்கிறார் என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் பரவியது. இது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. சித்ரா, ஹிந்துவை விட்டு எக்ஸ்பிரசுக்கு மாறினார். ஸ்டென் இப்போது சித்ராவுக்கு அளித்திருக்கும் பேட்டியில், ‘சித்ரா மீது இருந்த நம்பிக்கையால்தான் ஆவணங்களைக் கொடுத்ததாகவும்; பத்திரிகை பெயருக்காக அல்ல என்றும்; சித்ரா எந்தப் பத்திரிகையில் இருந்தாலும் கொடுத்திருப்பேன்’ என்றும் சொல்கிறார்.என் வாழ்க்கை திசையை மாற்றியதிலும் போஃபர்ஸ் ஊழலுக்கு ஒரு முக்கியமான பங்கு உள்ளது. கல்லூரி நாட்களுக்குப் பின் 16 வருடங்களாக நேரடி அரசியலில் பங்கேற்காத நான், வி.பி.சிங், ஜன் மோர்ச்சா, தேசிய முன்னணிகளைத் தொடங்கியதும் காங்கிரசுக்கு மாற்று அணி உருவாவதில் அக்கறையுடன் அவரை ஆதரித்து தமிழகத்தில் அவருடைய மேடைப்பேச்சு மொழி பெயர்ப்பாளனாக செயல்பட்டேன். 1988ல் மறைமலை நகரில் ராஜீவ் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது, நானும் நண்பர் எழுத்தாளர் நாகார் ஜுனனும் அதைக் கிண்டல் செய்து அகில இந்திய போஃபர்ஸ் பீரங்கி ஊழல் ரசிகர் மன்ற மாநாட்டுச் சிறப்பு மலர் என்று ஒன்றை வெளியிட்டோம். அது முரசொலியின் இணைப்பாக வெளிவந்து பின்னர் அதுவே முரசொலியின் ‘புதையல்’ ஞாயிறு மலராயிற்று. ஓராண்டு காலம் அதில் காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரம் செய்தேன். தமிழகத்தில் தி.மு.க.வும் தில்லியில் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணியும் ஆட்சிக்கு வந்ததும் நான் நேரடி அரசியலிலிருந்து விலகிக் கொண்டேன்.என்னைப் பொறுத்தமட்டில் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடையவர்கள் யாரும் தண்டிக்கப்படாமல் போய்விட்டது வருத்தமாக இருந்தாலும், இரு காரணங்களுக்காக அந்த நிகழ்வை முக்கியமானதாக என்றும் கருதுவேன். இந்தியாவில் தில்லி அரசியலில் ஃபெடரலிசம் கொஞ்சமேனும் ஏற்பட அதுவே தூண்டுதலாக இருந்தது முதல் அம்சம். இன்று போல அன்று டெலிவிஷன் சேனல்கள் இல்லை. ஆனால் அச்சு ஊடகங்களான பத்திரிகைகளின் சக்தி எத்தகையது என்பதை சுதந்திர இந்தியாவில் காட்டிய முதல் நிகழ்வு அதுதான். எமர்ஜென்சியில் களங்கத்துக்குள்ளான பத்திரிகைத்துறை அதைத் துடைத்தெறிந்து தன் அசல் வலிமையை கடமையை போஃபர்சில் செய்தது.
இதிலிருந்தெல்லாம் நாம் கற்ற பாடங்கள் என்ன என்பதன் அடையாளங்கள் ஏதேனும் 25 வருடம் கழித்து நிலவும் இன்றைய அரசியல் சூழலில் தெரிகிறதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment