திராவிடக் கட்சிகளைப் போன்றே கம்யூனிஸ்ட் கட்சிகளும் மாறிவிட்டன’ என்று, சமீப காலமாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். அது, நிஜம்தான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் சகல கட்சிக்காரர்களின் பாராட்டு மழையுடன் தா.பாண்டியனின் 80-வது பிறந்த நாள் வைபவம் நடந்தது.
பிறந்த நாளை எப்போதுமே கொண்டாடாத காம்ரேட்கள், தா.பாண்டியன் பிறந்த நாளுக்குத் தேதி குறித்தது ஆச்சர்யம்தான். ஆனால், 'பிறந்த நாள்’ என எங்கேயும் குறிப்பிடாமல், '80-வது ஆண்டு விழா’ என்று பூசி மெழுகியிருந்தனர். விழா அன்றுதான், சி.பி.ஐ. எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீது குண்டாஸைப் பாய்ச்சியது அரசு. அதனால்தானோ என்னவோ, ஓ.பன்னீர்செல்வம் பெயர் அழைப்பிதழில் இருந்தும் வரவில்லை. காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவில் ஆளுயுர மாலை, வாள் என திராவிடக் கட்சி ஸ்டைல் சம்பிரதாயங்கள் அத்தனையும் அரங்கேறின.
''பிறந்தநாள், வாள், பரிசுகள் என்று கம்யூனிஸ்ட்களும் மாறிட்டே வர்றீங்க. வீரத்துக்கு அடையாளமாகத்தான் வாள் கொடுப்பார்கள். ஆனால், நியாயப்படி பார்த்தால் துப்பாக்கியைத்தான் பரிசாகக் கொடுத்திருக்க வேண்டும்'' என்று பரபரப்பைப் பற்றவைத்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன், ''கடந்த தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்தபோது ஒரு பிரச்னை. அப்போது, ஓ.பி.எஸ்-சையும் செங்கோட்டையனையும் நள்ளிரவில் தா.பா.வீட்டுக்கு அழைத்துப் போனேன். அங்கே நடந்த சந்திப்பு, ஓர் அரசியல் மாற்றத்தை உருவாக்கியது. நிச்சயம் நம்பிக்கை வையுங்கள். தமிழகத்தில் சிவப்புத் துண்டு ஆட்சி அமைக்கும்'' என்று கொளுத்திப் போட்டார்.
''சமதர்ம சமுதாயம் அமைப்பது 100 மீட்டர் ரேஸ் இல்லை. அது, மராத்தான் ஓட்டம். மக்கள் நினைத்தால் மாற்றம் கொண்டு வரலாம். அதை, தா.பா. செயல்படுத்த வேண்டும்'' என, மாற்றத்தைப் பற்றிப் பேசினார் தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமசந்திரன். அடுத்துப் பேசவந்த திருமாவளவனும் தன் பங்குக்கு, ''வீரவாள் என்பது வீரத்தின் அடை யாளம் என்பதைவிட, அது அதிகாரத்தின் குறியீடு என்பதுதான் சரி. ஆதிக்க சக்திகளிடம் இருந்து பாட் டாளிகளின் கைகளுக்கு அதிகாரம் மாற வேண்டும் என்பதற்கு அடையாளமாகத்தான் இங்கே வாள் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
அடிக்கடி தண்ணீரைக் குடித்தபடியே பேச ஆரம் பித்தார் பாரதிராஜா. ''நான் மேடையில் மட்டுமல்ல, சினிமாவிலும் பேசுவதை நிறுத்திவிட்டேன். தா.பா-வுக்காகத்தான் இங்கே வந்தேன். மேடை போட்டுக் கொடுத்தால் அங்கே ஆக்ரோஷமாகப் பேசி சிலர் பெரிய ஆள் ஆகிவிடுகிறார்கள்'' என்று மேடையில் இருந்த சீமானை மறைமுகமாக விளாசினார். ''ஈழப் பிரச்னையில் நாம் தோற்றுவிட்டோம். திராவிடம் பேசி நம்மை அழித்து விட்டனர். தமிழர் இனம் அழிவதை தமிழக அரசியல்வாதிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். திராவிடத்தைப் பேசிக்கொண்டே ஈழத்தைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டார்கள். பேசியே தமிழர்களை மழுங்கடித்து விட்டனர்'' என்று பாரதிராஜா பேசியதை, மேடையில் இருந்த வைகோ உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருந்தார். பேசி முடித்ததும் உடனே கிளம்பியும் போய்விட்டார் பாரதிராஜா.
அடுத்துப் பேசவந்த வைகோ எடுத்தவுடனே கர்ஜிக்கத் தொடங்கினார். ''பாரதிராஜாவே... வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசிவிட்டுப் போயிருக்கிறீர். விமர்சிப்பார்களைப் பகைவனாகக் கருதுபவன் நான் அல்ல. என்னைப் பேச வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளிவிட்டார். அரசியல்வாதிகளையும் திராவிடத்தையும் பற்றிப் பேசுவது சிலருக்குப் பொழுதுபோக்கு. திராவிடம் இல்லை என்றால், இங்கே எதுவுமே இல்லை. பெரியார், அண்ணா இல்லாமல், இங்கே எதுவுமே நடந்திருக்காது. 'திராவிடம் என்று சொல்லி நாட்டைக் கெடுத்து விட்டனர்’ என்று யார் சொல்வது... அல்லிநகரத்துப் சின்னசாமி (பாரதிராஜாவின் இயற்பெயர்). மண்ணின் மணத்தை திரையில் வடிக்கும் திறமை பாரதிராஜாவை விட்டால் வேறு யாருக்கும் இல்லை. ஆனால், அவரோ 'அரசியல் வாதிகள் பேசிவிட்டுப் போய்விடுவார்கள்’ என்று கேலி பேசியிருக்கிறார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக நீங்கள் (பாரதிராஜா) பிரசாரம் செய்ததற்காக உங்கள் அலுவலகம் சூறையாடப்பட்டது. அப்போது அந்த அலுவலகத்துக்கு வந்த முதல்ஆள் நான்தான். அந்தக் காரியத்தைச் செய்த தி.மு.க-வைக் கண் டித்துப் பேசியதற்காக அவதூறு வழக்கு என் மீது பாய்ந்தது. அந்த வழக்கு இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், நீங்களோ பத்தாவது நாளில் கருணாநிதியின் காலடியில் பல் இளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தீர்கள். இனி, திராவிடம் பற்றி ஒரு வார்த்தை பேசினால், பத்து வார்த்தைகள் நாங்கள் திருப்பிப் பேசவேண்டி வரும். பாரதிராஜா பேச்சை கம்யூனிஸ்ட்களாகிய நீங்கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்'' என்று முடித்தவர் விறுவிறுவெனக் நிகழ்ச்சியை விட்டு கிளம்பினார். அவரை சமாதானம் செய்ய முயன்றபோதும் முடியவில்லை.
ஏற்புரை நிகழ்த்திய தா.பாண்டியன், ''இது அரசியல் மேடை அல்ல. அரசியலில் பங்கெடுத்த ஒரு மனிதனின் மேடை. தமிழகத்தில் கருத்து வேறுபாட்டைக் கடந்து பண்பாட்டைக் காக்க எல்லோரையும் அழைத்தோம். இங்கே பேசிய வர்களின் கருத்துக்கு ஏற்பு, மறுப்பு எதற்கும் நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை'' என்று முடித்துக் கொண்டார்.
தி.மு.க-வை அழைக்காத 'பெருந்தன்மை’ காரணமாகவோ என்னமோ அதிசயமாக அடுத்த நாள், தா.பாண்டியன் வீட்டுக்கே சென்று வாழ்த்தினார் முதல்வர் ஜெயலலிதா!
No comments:
Post a Comment