Tuesday, May 22, 2012

எனது இந்தியா! (இரண்டு நகரங்களின் கதை (டெல்லி & பாடலிபுத்திரம்) !) - எஸ். ராமகிருஷ்ணன்....



இந்திய வரலாற்றில் இரண்டு நகரங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இரண்டு நகரங்களும் எத்தனையோ அரசியல் மாற்றங்​களைக் கண்​டவை. மாமன்​னர்கள் முதல் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைப் பெண்​கள் வரை எத்தனையோ விதமான மனிதர்களைச் சந்தித்தவை. அதிகாரத்தைக் கைப்பற்று​வதற்கான பேராசை, வன்முறை, சதி, வன்கொலைகள் என்று இந்த இரு நகரங்களின் கதைகளும் குருதியால் எழுதப்பட்டவை. ஒன்று, பாடலிபுத்திரம். இன்னொன்று, டெல்லி!கி.மு. 490-ல் மகத மன்னர் அஜாதசத்ருவால் கங்கை ஆற்றின் அருகில் நிறுவப்பட்டது பாடலிபுத்திரம். சுல்தான்கள் காலம் தொடங்கி  பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வரை அரசாட்சி செய்தது டெல்லி.பாடலிபுத்திரம் என்ற பெயரில் இரண்டு நகரங்கள் இந்தியாவில் இருந்தன. ஒன்று, வடக்கே கங்கை ஆற்றின் கரையில் இருந்த பாடலிபுத்திரம். இது, அசோகர் ஆட்சி செய்தது. அன்றைய பாடலிபுத்திரம்தான் இன்று பீகார் மாநிலத்தின் தலைநகரமான பாட்னா. மற்றது, பல்லவர் காலத்தில் புகழ்பெற்று இருந்த தென்னாட்டு பாடலிபுத்திரம். இதை இன்று, திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் அருகே உள்ளது) என்று அழைக்கிறோம். இங்கு புகழ்பெற்ற சமணக் கல்வி நிலையம் அமைந்திருந்தது. சைவக்குரவர் திருநாவுக்கரசர் இங்கே கல்வி பயின்று 'தருமசேனர்’ என்ற பெயர் பெற்றார் என்பார்கள்.பீகாரில்தான் மகாபாரதக் கர்ணன் ஆண்ட அங்க​தேசம் உள்ளது. அங்கே பேசப்படும் மொழி 'அங்கிகா’ என்று அழைக்கப்படுகிறது. கர்ணன், தன்னை நாடி வருபவர்களுக்குத் தானம் அளித்த இடம் கர்ணசோலா என்று அழைக்கப்படுகிறது. பாடலிபுத்திரம் நகரை உருவாக்கிய அஜாதசத்ரு, தனது தந்தை பிம்பிசாரனை சிறையில் அடைத்துக் கொடூரமான முறையில் கொலை செய்தார் என்று, புத்த நூல்கள் கூறுகின்றன. ஆனால், அஜாதசத்ரு தனது தந்தையைச் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தியது உண்மை. ஆனால், பிம்பிசாரனைக் கொலை செய்யவில்லை. பிம்பிசாரன் தற்கொலை செய்துகொண்டார் என்கின்றன சமண ஏடுகள்.

கங்கை ஆற்றின் கரையில் இருந்த பாடலி என்ற சிறிய கிராமத்தில் அஜாத சத்ருவால் கட்டப்பட்ட கோட்டையே பாடலிபுத்திரம் என்று அழைக்​கப்​பட்டது. அதுதான் பிறகு பெரிய நகரமாக வளர்ச்சி அடைந்தது.மகத ராஜ்ஜியத்தின் தலை​நகரமாக ராஜக்கிருகம் இருந்தது. அஜாதசத்ரு, தான் நிர்மாணம் செய்த பாடலிபுத்திரத்தைத் தலைநகராக மாற்றினார். பாடலிபுத்திரம் புத்தரின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புகொண்டது. இந்த நகரத்துக்கு புத்தர் வந்து இருக்கிறார். இந்த நகரில்தான், பௌத்த அறங்கள் முறையாகத் தொகுக்கப்பட்டு சங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அசோகரின் ஆட்சிக் காலத்தில் மூன்று லட்சம் பேர் வசித்த இந்தியாவின் மிகப் பெரிய நகரமாக பாடலிபுத்திரம் அமைந்து இருந்தது.சந்திர குப்த மௌரியர் காலத்தில் இந்த நகருக்கு வந்த மெகஸ்தனிஸ், பாடலிபுத்திரத்தின் நகர நிர்வாகம் மற்றும் அன்று இருந்த பண்பாட்டுச் சூழல்கள் பற்றி, தனது குறிப்பில் துல்லியமாக எழுதிவைத்து இருக்கிறார்.நகர நிர்வாகக் குழு ஒன்று பாடலிபுத்திரத்தை நிர்வாகம் செய்துள்ளது. ஐந்து பிரிவுகளாகச் செயல்பட்ட இந்தக் குழுவின் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து உறுப்பினர்கள் இருந்தனர். முதல் பிரிவின் வேலை, விளைச்சல் மற்றும் அதன் வினியோகம் குறித்துக் கண்காணிப்பது. இரண்டாவது, பாடலி​புத்திரத்துக்கு வரும் வெளியூர்வாசிகள் மற்றும் விருந்தினர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்வது. மூன்றாவது பிரிவு, பிறப்பு மற்றும் இறப்புக் கணக்கெடுப்பு மற்றும் பதிவேடுகளைப் பராமரிப்பது. நான்காவது, சந்தையில் பொருட்களின் விலையைக் கண்காணித்து வணிகம் முறையாக நடக்க உதவி செய்வது. ஐந்தாவது பிரிவு, சட்டம் மற்றும் பொது நிர்வாகத்தைக் கண்காணிப்பது. இப்படி, ஐந்து பிரிவுகளும் சேர்ந்து ஒரு குழுவாக, நகரை நிர்வாகம் செய்தன.பாடலிபுத்திரத்தில் அரசுப் பணியில் உள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் பென்ஷன் தரும் திட்டம் நடைமுறையில் இருந்தது. ஊழியர்களுக்கான சம்பளம், பணமாகப் பாதியும் பொருட்களாக மீதியும் வழங்கப்பட்டன. குசுமபுரம் என்ற வேறு பெயரிலும் பௌத்தக் குறிப்பேடுகளில் பாடலிபுத்திரம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மௌரியர்கள், குப்தர்கள் மற்றும் பலா வம்சத்தைச் சேர்ந்தவர்கள், இந்த நகரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தனர். இஸ்லாமியப் படையெடுப்பின்போதுதான் பாடலிபுத்திரத்தின் வீழ்ச்சி தொடங்கியது. ஷெகர்ஷா சூர்கான் காலத்தில்தான் இந்த நகரம் பாட்னா எனப் பெயர் மாற்றப்பட்டது.


ஆயிரம் ஆண்டுகளாக பாடலிபுத்திரம் புகழ்பெற்று விளங்கியிருக்கிறது என, கிரேக்கக் குறிப்புகள் கூறுகின்றன. கலை, கலாசாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிலும் உலகின் மிகச் சிறந்த நகரம் என்று கொண்டாடப்பட்ட பாடலிபுத்திரம், 12-ம் நூற்றாண்டில் அழியத் தொடங்கி, இன்று மிச்சம் இருப்பது அதன் தொன்மை நினைவுகளின் சில சான்றுகள் மட்டுமே.வரலாற்றில் காணப்படும் டெல்லி, அதே பெயரில் இன்றும் இருக்கிறது. ஆனால், ஒவ்வோர் ஆட்சியின்போதும் அதன் பரப்பளவும் நகர அமைப்பும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இந்த ஆண்டு, புதுடெல்லி உருவாக்கப்பட்டு 100-வது ஆண்டு. அதை, விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். புது டெல்லி என்பது, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய பகுதி. உண்மையில், டெல்லி நகரம் என்பது ஒரு திறந்தவெளி மியூசியம். நகரின் ஒவ்வொரு கல்லும் சரித்திர நினைவுகளையே முணுமுணுத்துக்கிடக்கும் நகரம். டெல்லி எப்போதுமே, அதிகார ஆசையின் சூதாட்டப் பலகையாகவே இருந்திருக்கிறது. இன்று, நாம் காணும் டெல்லியில் இடிபாடுகளும், கல்லறைகளும், கோட்டை மதில்களும் கண் முன்னே தெரிகின்றன. ஆனால், கண்ணுக்குத் தென்படாமல் எத்தனையோ மனிதர்களின் கனவுகள், ஆசைகள், சூழ்ச்சிகள், வெற்றிகள், தோல்விகள் டெல்லி மண்ணில் புதைந்து இருக்கின்றன. இந்த நகரின் கதையை, ஆயிரம் நாக்குகள் சேர்ந்து பாடி​னாலும் முடியாது போலும்.'டெல்லி, ஒரு மாபெரும் கல்லறைத் தோட்டம். இறந்தும் ஆசை அடங்காத ஆவிகள் அங்கே அலைந்துகொண்டு இருக்கின்றன’ என்கிறார் எழுத்தாளர் குஷ்வந்த் சிங். அது உண்மைதான். இறந்த உடல்களைத் தேடி அலையும் கழுகுகள், டெல்லி மாநகரின் மீது இன்றும் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு நகருக்கும் ஓர் இயல்பு இருக்கும். யார் எப்போது அதிகாரத்தின் உச்சத்துக்குப் போவார், யார் வீழ்ச்சி அடைவார் என்றே தெரியாத சூதாட்ட மனநிலையுடன் இருப்பதுதான் டெல்லியின் இயல்பு. அதற்கான சாட்சியங்களை வரலாறு நெடுகக் காணலாம்.சூபி ஞானிகள் வழிகாட்டுவதாகவும், அவர்களின் கருணையால்தான் டெல்லி மாநகர் இன்னும் அழிந்துபோகாமல் இன்றும் உயிரோட்டமாக இருக்கிறது என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. அதற்கு சாட்சியம் போல, ஹஜ்ரத் குவாஜா குத்புதீன் பக்தியார் காகி, ஹஜ்ரத் குவாஜா நஸ்ருதீன் ஷிர்கே, ஹஜ்ரத்  நிஜாமூதீன் அவுலியா போன்ற சூபி ஞானிகளின் தர்காக்கள் டெல்லியில் இருக்கின்றன. டெல்லி ஜின்களின் நகரம் என்றே தானும் உணர்வதாக சொல்கிறார் வரலாற்று ஆய்வாளர் வில்லியம் டேல்ரிம்பிள்.இன்னொரு பக்கம், மகாபாரதத்தில் பாண்டவர்கள் உருவாக்கிய இந்திரப்பிரஸ்தம் என்ற நகரம்தான், இப்போது உள்ள டெல்லி என்கிறார்கள். அதுவும் ஒரு நம்பிக்கைதான். அதற்கு, வரலாற்றுப் பூர்வமான சான்றுகள் இல்லை. இந்திரப்பிரஸ்தம், யமுனை நதியின் இடது கரையில் உருவாக்கப்பட்டது என்றும், நாகர்கள் வாழ்ந்த அடர்ந்த காட்டை அழித்து உருவாக்கப்பட்ட இந்த நகரை மயன் வடிவமைத்தார் என்றும் மகாபாரதம் கூறுகிறது. இந்திரப்பிரஸ்தம் நகரில், பாண்டவர்கள் நெடுங்காலம் வாழவில்லை. சூதாடுவதற்காக துரியோதனனிடம் இருந்து அழைப்பு வந்தவுடன் இந்திரப்பிரஸ்தம் நகரில் இருந்து கிளம்பிய பாண்டவர்கள், அதன் பிறகு அந்த நகருக்குத் திரும்பவே இல்லை. குருஷேத்ரப் போரின் முடிவில், கௌரவர்கள் ஆண்ட அஸ்தினாபுரத்தையே பாண்டவர்களும் ஆண்டார்கள். அவர்கள் ஆசை​ஆசையாக உருவாக்கிய இந்திரப்பிரஸ்தம், அதன் முக்கியத்துவத்தை இழந்தது.


இன்று இருக்கும் டெல்லிக்குத் தெற்கே 50 கி.மீ சுற்றளவில் பழங்கால டெல்லி இருந்திருக்கக்கூடும் என்கின்றனர். டெல்லியின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு மன்னரது காலத்தில் உருவாக்கப்பட்டதே. பாடலிபுத்திரம், மகத மன்னர் காலம் தொடங்கி 12-ம் நூற்றாண்டு வரை  புகழ்பெற்று இருந்தது. பிறகு,அதன் வீழ்ச்சி தொடங்கியது. ஆனால், 12-ம் நூற்றாண்டில் புகழ்பெறத் தொடங்கிய டெல்லி, இன்று அதன் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஒரு நகரின் தொடர்ச்சியாக இன்னொரு நகரம் செயல்படுவதுபோலவே இருக்கிறது.டெல்லி என்ற பெயர் தில்லு என்ற மௌரிய அரசனைக் குறிப்பது என்றும், தோமர் இனத்தினர் வளர்ந்த இடம் என்பதைக் குறிக்க தில்லி என்று அழைத்தனர் என்றும் பலவிதப் பெயர்க் காரணங்கள் இருக்கின்றன. இதில் எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.கி.மு. 300-லேயே டெல்லி, சிறிய கோட்டை இருக்கும் நகரமாக உருவாக்கப்பட்டது. என்கின்றனர். கி.பி. 736-ல் தில்லிகா என்ற பெயரில் தோமரா வம்ச மன்னர் அனங்கபாலால் இந்த நகரை மறு உருவாக்கம் செய்து இருக்கிறார். லால்கோட் எனப்படும் அந்தப் புராதன டெல்லி இன்றுள்ள நகரில் இருந்து தெற்குப் பகுதியில் அமைந்து இருக்கிறது. இன்றும்கூட அதன் இடிபாடுகளை பார்க்கலாம். அங்கே 30 அடி உயரமான சுற்றுச்சுவர் ஒன்றும் காணப்படுகிறது. தோமரா மன்னர்கள்தான் டெல்லியின் அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்கியவர்கள். ஆரவல்லி மலைத் தொடரை ஒட்டி டெல்லி அமைந்து இருந்ததால், மழைக் காலத்தில் வீணாகும் நீரைச் சேமிப்பதற்காக சூரஜ் குந்த் பகுதியில் சிறிய அணையை தோமரா மன்னர்கள் கட்டி இருக்கின்றனர். தோமரா இன மன்னர் சூரஷ் பால் காலத்தில் டெல்லி முழுமையான வளர்ச்சி அடைந்து இருக்கிறது. அதன் பிறகு, 12-ம் நூற்றாண்டில் பிரித்விராஜ் சௌகான் ஆண்டபோது, 13 நுழைவாயில்கள்கொண்ட பெரிய கோட்டை கட்டப்பட்டு இருக்கிறது. டெல்லியில் அடிமை வம்சம் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது, குத்புதீன் ஐபக் டெல்லியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்ய விரும்பினார். அதன் காரணமாக, டெல்லி புதுப் பொலிவு அடைந்தது. இல்துமிஷூக்குப் பின் வந்த டில்லி சுல்தான்கள், டெல்லி நகரை ஒரு கலைக்கூடமாக மாற்றினர். மெஹ்ருலி பகுதி குத்புதீன் ஐபக்காலும், ஸ்ரீபோர்ட் பகுதி அலாவுதீன் கில்ஜியாலும் உருவாக்கப்பட்டது. துக்ளக் ஆட்சியின்போது, துக்ளகாபாத், பெரோஷாபாத் ஆகிய பகுதிகள் உருவாக்கப்பட்டன. லோடி வளாகப் பகுதி, லோடி அரசர்களால் ஏற்படுத்தப்பட்டது.


விகடன்  

No comments:

Post a Comment