Monday, September 17, 2012

'இளைஞர்களை நேர்காணல் செய்யும் முதியவர் ஸ்டாலின்'' வறுத்தெடுக்கும் அ.தி.மு.க.


கள், மகன்களுக்காகக் கட்சி நடத்தும் கருணாநிதியாலும், மனைவி மற்றும் மச்சினனுக்காகக் கட்சி நடத்தும் விஜயகாந்தாலும் உருப்படியாக ஒன்றும் நடக்கப்போவதில்லை’ என்று, தி.மு.க-வையும் தே.மு.தி.க-வையும் மட்டும் மேடை போட்டு விளாசி வந்தது அ.தி.மு.க-வின் இளைஞர் அணி. இப்போது அவர்களிடம் சிக்கி ரஜினிகாந்த்தும் வறுபடுகிறார். 
கோவையில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இளைஞர் அணி மாநிலச் செய லாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் பேச்சில் அனல் பறந்தது. ''தி.மு.க-வில் இளைஞர் அணிச் செயலாளர் பதவியை கருணாநிதியின் மகனான ஸ்டாலின் வச்சிருக்கார். தே.மு.தி.க-வில் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் வச்சிருக்கார். பா.ம.க-விலோ ராமதாஸின் அன்புமகன் அன்புமணி வச்சிருக்கார். ஆனால், கழகத்துக்காகக் கொடிபிடிக்கும் கடைசி விசுவாசியைக்கூட தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்து அழகு பார்க்கும் தாயுள்ளம் அம்மாவிடம் மட்டும்தான் இருக்கிறது.
சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மரண அடி வாங்கி மண்ணைக் கவ்விய பிறகுதான், கருணாநிதிக்கு ஈழத் தமி ழர்களின் துயரம் ஞாபகத்துக்கு வருகிறது. தான் ஆட்சியில் இருந்தபோது ஈழத்தில் ராஜபக்ஷே நடத்திய குரூரங்களைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு, ஒரு மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து உலக சாதனை புரிந்தவர் கருணாநிதி. ஆனால், இன்றைக்கோ இழந்துபோன தனது அரசியல் அடை யாளத்தை மீட்டு எடுப்பதற்காக டெசோ நாடகத்தை நடத்தி இருக்கிறார். ஆனால், வீரத் தலைவியான நம் அம்மாவோ ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்தவர். குன்னூரில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவத்தினரை வெளியேற்றச் சொல்லி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இப்போது புரிகிறதா இன்னல்படும் தமிழினத்தின் துயர் துடைக்க முயலும் கரங்கள் அம் மாவுடையது மட்டும்தான் என்று!
உண்மை விசுவாசியாக யார் இருந் தாலும் அ.தி.மு.க-வில் உச்சத்துக்கு வர முடியும். ஆனால், தி.மு.க-விலோ மாநிலப் பொறுப்பை மகன் கவனித்துக்கொள்ள, ஒவ்வொரு மாவட்டமும் அந்தந்த குறுநில மன்னர்களின் கைகளில் சிக்கியிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நான், என் மகன், என் பேரன் என்று சித்த வைத்தியர்கள் கணக்காகத்தான் பொறுப்புக்கு வருகிறார்கள். இளைஞர்களைக் கவர்கிறேன், கழக இளைஞர்களுக்கு நிர்வாக வாய்ப்பு தருகிறேன் என்று மாவட்டம் தோறும் சென்று நேர்காணல் நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறார் முதியவர் ஸ்டாலின்.
அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கத்தைத் தாண்டி ஸ்டாலினால் எதுவும் செய்ய முடியாது என்பதை தி.மு.க. இளைஞர் அணியினர் தீர்க்கமாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதேபோல், மாவட்டங்களை ஆளும் குறுநில மன்னர்களும் அவரது வாரிசுகளும் எத்தனை ஆட்டம் போட்டாலும் கண்டுகொள்ள மாட்டார் கருணாநிதி. ஆனால், நம் கழகத்திலோ நிர்வாகிகள் தனது அதிகாரத்தை எள் முனையளவுக்குத் தவறாகப் பயன்படுத்தினாலும்கூட, அதிரடி நடவடிக்கை எடுத்து ஒடுக்குவதுதான் அம்மாவின் குணம். ராணுவக் கட்டுப்பாடுடன் இருக்கிறது அ.தி.மு.க. கடந்த ஆட்சியில் கிட்டத்தட்ட 76 அதிகார மையங்களிலும் கேட்டுவிட்டுத்தான் எந்த ஒரு காவல் நிலையத்திலும் போலீ ஸார் எஃப்.ஐ.ஆர். போட முடியும்.
இன்னொருவர், 'அ.தி.மு.க. ஆட்சியை பிடித்ததே என்னால்தான்’ என்று மேடைகளில் உளறிக்கொண்டு இருக்கிறார். ஆனால், நடந்த உண்மையை தமிழ்நாடே அறியும். தேர்தல் என்னும் காட்டாற்றை சிங்கம்போல எங்கள் அம்மா கடந்தபோது, வாழ்க்கைப் பிச்சை கேட்டு வந்து ஒட்டிக்கொண்ட சிறுகுருவிதான் விஜயகாந்த். சட்டமன்றத்தில் சிங்கிள் டிஜிட்டில் அதிலும் ஒற்றை மனிதராய் நின்ற அவருக்கு டபுள் டிஜிட் அந்தஸ்தையும் கூடவே எதிர்க்கட்சி அந்தஸ்தையும் வழங்கியது அம்மாவின் பெருந்தன்மை.
இந்த நேரத்தில் இன்னொரு நபருக்கும் ஒரு விளக்கத்தைக் கொடுத்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது. அதாவது தனது ஆருயிர் நண்பர் கருணாநிதியின் புகழ் என்றைக்கும் மறையாது என்று பேசியிருக்கிறார் ரஜினி. வரலாற்றில் இடம் பெற்றவர்கள் எல்லாம் மறையாத புகழுக்குச் சொந்தக் காரர்கள் என்று நினைத்தால், அது முட்டாள்தனம். வர லாற்றில் கட்டபொம்மனுக்கும் இடம் உண்டு அவரைக் காட்டிக்கொடுத்த எட்டப்பனுக்கும் இடம் உண்டு. அதேபோல் மகாத்மா காந்திக்கும் அவரைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கும் இடம் உண்டு. வரலாற்றில் இருக்கிறார்கள் என்பதற்காக எட்டப்பனும் கோட்சேவும் புகழுக்குச் சொந்தக்காரர்களா? இதே நிலைதான் கருணாநிதிக்கும்...'' என்று ரஜினியையும் விளாசித் தள்ளினார்.
ஆரம்பிச்சுட்டாங்கப்பா!

No comments:

Post a Comment