Thursday, September 6, 2012

ஆஸ்ரா கர்க் டிரான்ஸ்ஃபருக்குக் காரணம் விஜயகாந்த்? பரபரக்கும் திருப்பூர்


திருப்பூர் எஸ்.பி-யாகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் முடிவதற்குள் மீண்டும் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார் அதிரடிக்குப் பெயர் போன ஆஸ்ரா கர்க். குற்றச் செயல்கள் மலிந்துபோன திருப்பூரை, தனது கட்டுக்குள் கொண்டு வந்த ஆஸ்ரா கர்கை ஏன் திடீரென மாற்றினார்கள் என்று புரியாமல் பொதுமக்கள் விழிக்கிறார்கள். 
நம்மிடம் பேசிய சில  போலீஸார், ''ஆஸ்ரா கர்க் வந்ததில் இருந்து திருப்பூர் ஓரளவு அமைதியான மாவட்டமாக மாறிவிட்டது. யார் மீது புகார் என்றாலும், புகார் உண்மையாக இருப்பின் தைரிய​மாக நடவடிக்கை எடுத்தார். அதுதான் இப்போது அவருக்கு வினையாகி விட்டது. மணல் கொள்ளை பற்றித் தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து, அதிரடி நடவடிக்கை எடுத்தார். அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிவந்த லாரிகளுக்குக் கடுமையான அபராதம் விதித்தார். இதை முக்கிய அமைச்சர் ஒருவர் கண்டித்தும், அசராமல் தனது நடவடிக்கையைத் தொடர்ந்தார். அதனால் முன்பே இவர் மாற்றப்படலாம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அந்தச்செய்தி ஊட கங்கள் மூலம் வெளியே வந்துவிட்டதால், அப்போது நடவடிக்கை பாயவில்லை.
தமிழகம் முழுக்க மணல் அள்ளும் தொழிலில் கோலோச்சிக்கொண்டு இருக்கும் ஒரு முக்கியப்பிரமுகருக்கும் ஆஸ்ரா கர்க்கின் செயல் எரிச்சலை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன் ஆஸ்ரா கர்க்குக்கு போன் செய்த அவர், 'மணல் ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டாராம். அதற்கு எஸ்.பி., 'சட்டவிரோதமாக வரும் லாரிகள் என்றால் நிச்சயம் பறிமுதல் செய்யப்படும்’ என்று உறுதியாகப் பதில் சொன்னாராம். உடனே மணல் புள்ளி, 'நீங்க இங்கே தொடர்ந்து எஸ்.பி-யாக இருக்கணுமா... வேண்டாமா?’ என்று அதட்ட... 'உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி வைத்து விட்டாராம் ஆஸ்ரா கர்க்.
சில நாட்களுக்கு முன், திருப்பூரில் உள்ள கிளப் ஒன்றில் சீட்டு விளையாடிய பெரும்புள்ளிகள் கைது செய்யப்​பட்டனர். அதில், சாதி கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தேசியக் கட்சியைச் சேர்ந்த தலைவர்  ஒருவருடைய உறவினரும் அடக்கம். எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் யாராக இருந்தாலும் கைது செய்யுங்கள் என்று கூறிவிட்டார் ஆஸ்ரா கர்க். இதை மானப் பிரச்னையாக கருதிய பெரும் புள்ளிகள் தங்களின் மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்தி, இவரை மாற்றுவதற்குத் தொடர்ந்து முயன்று வந்தனர்.  
இந்தப் பிரச்னைகளுக்கு இடையில் கடந்த மாதம் திருப்பூர் வந்த விஜயகாந்த், ஆளும் கட்சியைச் சகட்டுமேனிக்கு திட்டினாலும், 'ஆஸ்ரா கர்க் மிக நேர்மையான அதிகாரி’ என்று அவரைப் பாராட்டிப் பேசிவிட்டார். இது போதாதா மேலிடத்தைக் கடுப்பேற்ற? இத்தனை விஷயங்களும் ஒன்று சேர்ந்துதான், அவருடைய டிரான்ஸ்ஃபருக்குக் காரணமாகி விட்டது'' என்றார்கள்.
ஆனால் வேறு சில அதிகாரிகளோ, ''மதுரை கிரானைட் விவகாரம் பற்றி நன்கு அறிந்தவர் ஆஸ்ரா கர்க். அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சில தர்மபுரியிலும் தொழில் செய்கின்றனர். அதனால், ஆஸ்ரா அங்கு இருந்தால் அதிரடி நடவடிக்கைளை எடுக்க அரசுக்குச் சுலபமாக இருக்கும் என்பதால்தான் தர்மபுரிக்கு மாற்றப்பட்டு உள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுத்தாள் வெளியான விஷயத்தில் இன்னும் போலீஸார் திணறிக் கொண்டு இருக்கின்றனர். தர்மபுரியில்தான் கேள்வித்தாள் அவுட்டானது என்று கருதப்படுவதால் இதில் இன்னும் வேகமாக நடவடிக்கை மேற்கொள்ள ஆஸ்ராகர்க்தான் சரியான நபர் என்று நினைப்பதால்தான் இந்த மாற்றம்'' என்கிறார்கள்.
தனக்கு மாற்றல் உத்தரவு வந்த கடந்த சனிக்கிழமை மாலை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளில் செயல்பட்டு வந்த பெரிய செங்கல் சூளைகளில் அதிரடி நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தார் ஆஸ்ரா. 'விளைநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக செம்மண் எடுத்து செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. சேம்பர்களில் பலரைக் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குகின்றனர்’ என்று அவருக்கு வந்த புகாரின் அடிப்படையில் அதிரடி ஆய்வு நடந்தது. முறைகேடாக இயங்கி வந்த நான்கு சேம்பர்களைக் கண்டுபிடித்து, ஆறு பேரை உடனடியாக கைது செய்தார். நான்கு சேம்பரில் ஒன்று... நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நின்ற ஒருவருடையது. மற்றவை ம.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்குச் சொந்தமானது.
செங்கல் சூளைக்காக செம்மண் எடுத்ததில் பல நூறு கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு கனிமவளத் துறை அதிகாரிகள் சிலர் துணை போய் உள்ளனர் என்பதையும் கண்டுபிடித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைக்குப் போகும் முன் ஆஸ்ரா கர்க்குக்கு மாற்றல் உத்தரவு வந்ததால், அனைவரும் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
இந்தச் செம்மண் விவகாரம் தொடர்பாக ஆஸ்ரா கர்க்கிடம் பேசினோம். ''முறைகேடுகளில் ஈடுபட்ட நான்கு சேம்பரைக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைதுசெய்து இருக்கிறோம். தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்'' என்றார். தர்மபுரிக்கு மாற்றம் செய்துள்ளதைப் பற்றி கேட்டபோது சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார்.
திருப்பூரைத் தொடர்ந்து தர்மபுரி களைகட்டப் போகிறது!

No comments:

Post a Comment