Monday, September 3, 2012

ராமஜெயம் கொலை வழக்கு. பாதி கிணறைத் தாண்டிய சிபிசிஐடி.



மு
ன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. குற்றவாளிகள் இன்னமும் போலீஸ் கைகளில் சிக்கவே இல்லை. முதல் மூன்று மாதங்கள் இந்த வழக்கை திருச்சி மாநகரப் போலீஸாரும், கடந்த இரண்டு மாதங்களாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரும் விசாரித்து வருகின்றனர். இப்போது, பாதி கிணற்றைத் தாண்டிவிட்டதாகச் சொல்கிறது சி.பி.சி.ஐ.டி. வட்டாரம்! 
3,000 செல்போன் தொடர்புகள்!
ராமஜெயம் கொலையான மார்ச் 29-ம் தேதி, திருச்சி தில்லைநகர் மற்றும் மாம்பழச்சாலை ஏரியாக்களில் தொடர்பில் இருந்த சுமார் 3,000 செல்போன் நம்பர்களைத் திரட்டியுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸார், ஒவ்வொருவரும் யாருடன் பேசினார்கள் என்ற தகவலைத் திரட்டி வருகின்றனர். இதுவரை 1,500 பேரிடம் விசாரணையை முடித்துள்ள சி.பி.சி.ஐ.டி. வட்டாரம், 'அவர்களிடம் இருந்து கொலைக்கானத் தொடர்பைப் பெற முடியவில்லை’ என்கிறது. ராமஜெயம் கடத்திக் கொலைசெய்யப்பட்ட தகவலை நிச்சயம் போன் மூலம் யாருக்காவது கொலையாளிகள் தெரிவித்திருப்பார்கள் என்று நம்பும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார், மற்ற செல்போன் நபர்களிடமும் விசாரணையைத் தொடர்ந்து நடத்துகிறார்கள். இந்த விசாரணையில் எப்படியும் துப்புக் கிடைத்துவிடும் என்று ஆணித்தரமாக நம்புகின்றனர்.
60 மோட்டிவ்கள்!
ராமஜெயத்தைக் கொலை செய்வதற்கான 60 மோட்டிவ்களை சி.பி.சி.ஐ.டி. பட்டியல் இட்டுள்ளது. அரசியல் எதிரிகள்,  ஈகோ யுத்தம், நிலம் வாங்குவதில் ஏற்பட்ட போட்டி, கொடுக்கல் வாங்கல் தகராறு, பெண் தொடர்புகள், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகள் தொடர்பு, போலீஸ் அதிகாரிகளிடம் பகை என்று பட்டியல் நீள்கிறது. இந்த மோட்டிவ்களில் குடும்பத்துக்குள் நிலவிய ஈகோ யுத்தம், பெண் தொடர்பு, போலீஸ் அதிகாரிகளிடம் பகை உள்ளிட்ட 30 மோட்டிவ்களை இதுவரை விசாரித்து எலிமினேட் செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்தில் இருந்து தகவல் கசிகிறது. மீதி உள்ள காரணங்களை வேகவேகமாக விசாரித்து வருகிறார்கள்.
105 சாட்சிகள்!
இந்தக் கொலை விவகாரம் தொடர்பாக இதுவரை 105 சாட்சிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி உள்ளார்கள். அதற்காக சேலம், சென்னை, மதுரை, தஞ்சை, புதுகை என 10-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கும் போய் வந்துள்​ளனர். இந்த சாட்சிகளில் சிலரிடம் இருந்து கொலைக்கான 'க்ளு’ கிடைத்திருப்பதாகச் சொல்லப்​படுகிறது.
கண்காணிப்பு வளையத்தில் ஐவர்!
ராமஜெயத்துடன் மிகநெருக்கமாக இருந்த ஐந்து பேரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நிழல் கண்காணிப்பு செய்து வருகிறார்கள். போலீஸ் விசாரணையில் இவர்களிடம் இருந்து உருப்படியான தகவல்களைப் பெற முடியவில்லையாம். தேவைப்பட்டால் கடைசிக் கட்டத்தில் இவர்களை பெங்களூருவுக்குக் கொண்டு சென்று நார்கோ அனாலிசிஸ் செய்து உண்மை அறியும் திட்டமும் சி.பி.சி.ஐ.டி. யோசனையில் இருக்கிறதாம்.
வெளிநாடு செல்ல திட்டமிட்டது ஏன்?
'தனக்குப் பிடித்த பெண்ணுடன் இந்தோனேசியா அல்லது பெரு நாட்டுக்குச் சென்று செட்டிலாக ராமஜெயம் திட்டமிட்டிருந்தார். இந்த முயற்சியைத் தடுக்க நினைத்தவர்கள் ராமஜெயத்தைக் கொலை செய்திருக்கலாம்’ என்ற பேச்சும் பரவலாக உலவுகிறது. இந்தக் கோணத்தில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீஸார், 'அவர் வெளிநாடு செல்லத் திட்டமிட்டு இருந்தது பிசினஸுக்காகத்தானே தவிர, குடும்பம் நடத்த அல்ல’ என்று சொல்கிறார்கள்.
தொடரும் குழப்பங்கள்!
தனது வீட்டில் இருந்து ராமஜெயம் கிளம்பி வெளியே வந்தபோது பார்த்த வாட்ச்மேன் ஆறுமுகம், ஓய்வு பெற்ற நீதிபதி மணி ஆகியோரைத் தவிர வேறு நேரடி சாட்சிகள் இதுவரை போலீஸிடம் சிக்கவில்லை. நேரடி சாட்சியான ஓய்வு பெற்ற நீதிபதி மணி, ராமஜெயம் வீட்டுக்கு அருகில் மூன்று இளைஞர்கள் நடமாடியதைப் பார்த்ததாக சொன்​னார். அதை வைத்து தீவிர விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி-யினர், அந்த மூன்று இளைஞர்களும் பால் பூத் துகளில் பால் சப்ளை செய்பவர்கள் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் மார்ச் 29-ம் தேதி, அன்று ராமஜெயம் வாக்கிங் போனதைப் பார்க்கவில்லை என சொல்வதால், ராமஜெயம் கடத்தப்பட்ட இடம் குறித்து சி.பி.சி.ஐ.டி. குழப்பம் அடைந்துள்ளது.
மேலும், கடத்தப்பட்ட வாகனம் எது? வாகனத்திலேயே கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறெங்​காவது வைத்து கொலை செய்யப்​பட்டாரா? கொலையாளிகள் எத்தனை பேர் என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னமும் விடை கிடைக்கவே இல்லை.
மகிழ்ச்சியில் மாநகரப் போலீஸ்!
மாநகரப் போலீஸின் கைகளில் இருந்து இந்தக் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்​பட்டதும் 'சி.பி.சி.ஐ.டி-யினர் குற்றவாளிகளை சீக்கிரம் கண்டுபிடித்துவிடக் கூடாதே’ என்ற பதைபதைப்பில் இருந்தனர் மாநகரப் போலீஸார். அவர்கள் குற்றவாளிகளை சீக்கிரமாகக் கண்டுபிடித்​திருந்தால் பொதுமக்களிடமும் காவல்துறை வட்டாரத்திலும் தங்களது இமேஜ் ரொம்பவும் சரிந்து​விடும் என்று பயந்தனர். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இறங்கி இரண்டு மாதங்கள் கடந்தும் துப்புத் துலங்காததால், 'நல்லவேளை நம்ம இமேஜுக்கு டேமேஜ் வரலை’ என சந்தோஷப்படுகின்றனர் மாநகரப் போலீஸார்.
அவரவர் கவலை அவரவர்க்கு!

No comments:

Post a Comment