Wednesday, September 26, 2012

கூட்டுறவு குடைச்சல் ஆரம்பம்! சங்கங்களைக் கபளீகரம் செய்ய ஆளும் கட்சி


மிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்காக ஆளும் கட்சியினர் நடத் தும் அதிகார தர்பார்கள் எல்லை மீறு கின்றன. விரைவில் கத்திக்குத்தும், அரிவாள் வெட்டும் நடந்தால், அதிர்ச்சி அடைய வேண்டாம்! 
கடந்த தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் நடந்தபோது, தி.மு.க-வினர் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதாக ஆளும் கூட்டணித் தோழர்களே பூகம்பத்தைக் கிளப்பினார்கள். இதை​யடுத்து, கூட்டுறவு சங்கத் தேர்தல்களைப் பாதியிலேயே ரத்துசெய்தார் அப்போ​தைய முதல்வர் கருணாநிதி.
நீதிமன்றத் தடையால், 2001-ம் ஆண்டுக்குப் பிறகு, கூட்டுறவு சங்கங்​களில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்​களுக்கு ஓட்டு உரிமை இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, தொடரப்பட்ட வழக்கில், 'சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் மகாசபை (பொதுக் குழு) கூட்டங்களில் ஒப்புதல் பெற்று புதிய உறுப்பினர்களைச் சேர்க்கலாம்’ என்று, சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு அளித்தது. இதன் அடிப்படை​யில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு ஆகஸ்ட் 3-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த விவகாரங்கள் காரணமாகத்தான், கூட்டுறவு சங்க அலுவலகங்களிலும் கூட்டுறவு வங்கிகளிலும் அதிகாரிகளை உள்ளே வைத்துப் பூட்டி ஆத்திரத்தை காட்டினர் எதிர்க் கட்சிக்காரர்கள்.
இதுகுறித்து, நம்மிடம் பேசிய கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள், ''தமிழகம் முழுவதும் கூட்டுறவுவங்கிகள், பால் கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், சமூகநலத் துறையின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்கள் என சுமார் 22,500 கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. இவை அனைத்துமே 12 துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் வரு கின்றன. இப்போதைய நிலவரப்படி இந்தச் சங்கங்களில் வாக்களிக்கும் தகுதியுடைய அங்கத்தினர்கள் 1.39 கோடி பேரும் வாக்களிக்க முடியாத இணை உறுப்பினர்கள் 88 லட்சம் பேரும் இருக்கின்றனர். கோர்ட் உத்தரவு வந்ததுமே அமைச்சர் செல்லூர் ராஜு மாவட்டவாரியாக கூட்டுறவு சங்க அதிகாரிகளை அழைத்து ரகசியக் கூட்டம் நடத்தி சில உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கிறார். அ.தி.மு.க-வினரைத் தவிர வேறு யாரும் சங்கங்களில் பொறுப்புக்கு வந்தால் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும் என்பது அதிகாரிகளுக்கு அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு. அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கேட்க வேண்டும் என்பது, அதிகாரிகளுக்கு அமைச்சர் இட்ட கட்டளை. 'ஃபார்ம் 16’ என்று சொல்லப்படும் உறுப்பினர் சேர்க்கைப் படிவங்கள் இப்போது மாவட்டச் செய லாளர்களிடம்தான் இருக்கின்றன. அவரால் தலைவர் பதவிக்குத் தீர்மானிக்கப்படுகிற நபர், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து (நபருக்கான உறுப்பினர் சேர்க்கை கட்டணம் 110 ரூபாய்) மொத்தமாக 1,000 படிவங்களை வாங்கிக்கொள்ள வேண்டும். வங்கிகளைப் பொறுத்து இந்தத் தொகையும் படிவங்களும் இன்னும் அதிகரிக்கும். அந்தப் படிவங்களில் தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களின் பெயர்களை எழுதி பூர்த்தி செய்து மீண்டும் மாவட்டச் செயலாளரிடம் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். அதை அப்படியே அந்தந்த வங்கிகளின் தனி அதிகாரிகளுக்கு அனுப்பி, அத்தனை பேரையும் உறுப்பினர் ஆக்குகிறார்கள்.
ஏற்கெனவே உறுப்பினர்களாக இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேரையாவது மகா சபைக் கூட்டத்துக்கு அழைத்து ஆரோக்கியமான விவாதம் நடத்தித்தான் புதிய உறுப்பினர்களை சேர்க்க முடியும். ஆனால், இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது இல்லை. யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே, ஏதாவது ஒரு  பத்திரிகையில் மகாசபைக் கூட்ட அறிவிப்பு விளம்பரங்களைக் கொடுப்பார்கள். பல பேருக்கு விஷயம் தெரிவதற்குள் கூட்டம் முடிந்து விடும். ஆளும் கட்சிக்காரர்கள் சரியாகப் பூர்த்தி செய்யாமலும் சரியான ஆவணங்கள் இல்லாமலும் கொத்துக் கொத்தாய் படிவங்களைக் கொடுக்கிறார்கள். அனைத்தும் ஏற்கப்படுகின்றன. மகாசபைக் கூட்டத்தில் அங்கீகாரம் பெறப்பட்டது என்பதைப் பதிவு செய்வதற்காக அதிகாரிகளே மினிட் புத்தகங்களை வீடு வீடாய்த் தூக்கிச் சென்று, விஷயம் தெரியாத பழைய உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்குகிறார்கள். இதே நிலை நீடித்தால் தேர்தலுக்குள் பல இடங்களில் நிச்சயம் வெட்டுக்குத்து நடக்கும்'' என்றார்கள்.
நலிந்து கிடந்த கூட்டுறவு வங்கிகளை மேம்படுத்து​வதற்​காக பேராசிரியர் வைத்தியநாதன் என்பவர் தலைமையில் 10 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை 2004-ல் அமைத்தது மத்திய அரசு. அந்தக் கமிட்டி பிப்ரவரி 2005-ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. 'கூட்டுறவு வங்கிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். மாநில அரசுகளின் தலையீடு இல்லாமல் தன்னாட்சி பெற்ற நிலையில் கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாகச் சேர்ந்து மூன்று ஆண்டுகள் வங்கியின் பலனை அனுபவித்தவர்களை மட்டுமே கூட்டுறவுத் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட அம்சங்களை வைத்தியநாதன் கமிட்டி சிபாரிசு செய்திருந்தது. 'இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு மாநில அரசுகள் நபார்டு வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டு அதை சட்ட மாகவும் இயற்ற வேண்டும்’ என்பதும் கமிட்டியின் பரிந்துரை. இதன்படி, கடந்த தி.மு.க. ஆட்சியில் நபார்டு வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, 03.01.08-ல் சட்டமும் இயற்றப்பட்டது. இதை அடுத்தே தமிழகத்தில் நலிவுற்ற கூட்டுறவு வங்கிகளைப் புனரமைக்க சுமார் 800 கோடி ரூபாயை முதல் தவணையாக ரிலீஸ் செய்தது நபார்டு வங்கி. எஞ்சிய 25 சதவிகிதத் தொகையான சுமார் 300 கோடி இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது.
31.3.13-க்குள் கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்தினால்​தான், தமிழகத்துக்கு இந்தப் பணம் கிடைக்கும். அதற்காகத்தான் அ.தி.மு.க. அரசு கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்துவதில் இவ்வளவு அவசரமும் அக்கறையும் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பேசினோம். ''புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஜூலை 27-ல் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டு, அது சங்க அலுவலகங்களில் ஒட்டப்பட்டது. மகாசபை கூட்டம் குறித்தும் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. விளம்பரங்களுக்காக இவ்வளவு ரூபாய்தான் செலவழிக்க வேண்டும் என்று ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு லிமிட் இருப்பதால் 'தினபூமி’, 'மக்கள் குரல்’ போன்ற பத்திரிகைகளில் கொடுத்திருக்கிறார்கள். அ.தி.மு.க-வினருக்குத்தான் படிவங்களைக் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்யவில்லை. இளை யான்குடியில் தி.மு.க-காரர்கள்தான் அதிக மெம் பர்களைச் சேர்த்திருக்கிறார்கள்'' என்றவர், ''மெம்பராகி 30 நாட்கள் ஆகிருந்தாலே தேர்தலில் போட்டியிடலாம்'' என்ற கருத்தையும் வலியுறுத்தினார்.
ஆளும் கட்சி அத்துமீறுவதாகச் சொல்லி சிலர் கோர்ட்டுக்குப் போகும் முடிவில் இருப்பதால், கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நடப்பது சந்தேகம்தான் என்றும் சொல்லப்படுகிறது!

No comments:

Post a Comment