Thursday, September 13, 2012

4,000 கோடி இழப்புக்காக 24,000 கோடி ஸ்வாகா? விமான நிலைய ஊழலில் கிடுகிடு


நிலக்கரி, விமான நிலையம் மற்றும் மின் திட்டங்களில் நடந்த முறைகேடுகள், பிரதமர் மன்மோகன் சிங் முகத்தில் கரியைப் பூசி இருக்கிறது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது என்று காங்கிரஸ் தொண்டர்கள் கலங்கி நிற்கிறார்கள். நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் எதிர்க் கட்சிகள் அடம்பிடிக்க... என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மத்தியஅரசு விழிபிதுங்கி நிற்கிறது. 
முதலில், எந்த இழப்பும் இல்லை என்றார்கள். ஊழலே நடக்கவில்லை என்றார்கள். இப்போது விசாரணை தொடங்கும் என்று அறிவித்துள்ளார்கள். இந்த அரசியல் சூழ்நிலை குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் பாலகோபால் நம்மிடம் விரிவாகப் பேசினார். விமான நிலைய முறைகேடுகள் குறித்து ஆரம்ப கட்டத்திலேயே பல அதிர்ச்சித் தகவல்களைக் கிளப்பியவர் இவர்.
''மூன்று முக்கியமான முறைகேடுகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதில் விமான நிலைய ஊழலை ஆரம்பத்தில் கண்காணித்தேன் என்ற அடிப்படையில் சில விஷயங்களை வெளிச்சப் படுத்துகிறேன்.
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில், விமானக் கட்டணங்கள் தவிர பயணிகளிடம் விமான நிலையப் பயன்பாட்டுக் கட்டணத்தை ஒப்பந்த உடன்படிக்கைக்கு மாறாக வசூலித்தனர். இந்தவிவகாரம் குறித்து ஒரு வருடத்துக்கு முன்பே நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். பிரதமருக்கு மூன்று கடிதங்களும் எழுதினேன். பின்னர், இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன். 'டெல்லி, மும்பை விமான நிலை யங்களில் பயணிகளிடம் இப்படிக் கட்டணம் வசூலிக்க எந்த விதிமுறைகளும் இல்லை’ என்று நீதிமன்றமும் அப்போது சொன்னது. வெளியூரில் இருந்து வரும் பயணிகளிடம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 1,300 ரூபாயும் உள்நாட்டு விமான நிலையத்தில் 200 ரூபாயும் வசூலிக்கப் பட்டது. இது தவறு என்று நீதிமன்றம் சொன்னது
'இதுவரை எவ்வளவு கட்டணம் வசூலிக்கப் பட்டது?’ என்று நான் நாடாளுமன்றத்தில் கேட்டேன். ஒன்றரை ஆண்டு காலத்தில் பயணிகளிடம் சுமார் 1,481 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டதாகத் தகவல் தரப்பட்டது. 'டயல்’ என்ற தனியார் நிறுவனம்தான் இதை வசூலித்துள்ளது. இந்தக் கட்டணத்தை வசூலிக்க அரசுதான் அனுமதி கொடுத்துள்ளது. அதற்குச் சில காரணங்களைச் சொன்னார்கள்.
'இந்த விமான நிலையத்தைக் கட்ட 8,800 கோடி ரூபாய் ஆகும் என்று திட்டமிடப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் டெண்டர் போட்டு இருக்க, டயல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. திட்ட ஒப்புதல் கிடைத்த பிறகு 8,975 கோடி என்று சொன்னது. 2010-ம் ஆண்டில் விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 12,857 கோடி ரூபாய் என்றது. 50 சதவிகிதத்துக்கு மேல் கூடுதலாகச் செலவான தொகையை சரிக்கட்டுங்கள் என்று கேட்டார்கள். எனவே, பயணிகளிடம் வசூலித்துக் கொள்ள அனுமதித்தோம்’ என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால், ஒப்பந்தத்தில் இதுபோன்று வசூலிக்க விதிமுறைகள் இல்லை. இதைத்தான் சி.ஏ.ஜி. தவறு என்கிறது.
டெல்லி விமான நிலையத்துக்காக நிலத்தை வாங்கும் செலவும் இந்த தனியார் நிறுவனத்துக்குக் கிடையாது. சுமார் 4,608 ஏக்கர் நிலத்தை அரசே சொற்ப விலைக்குக் குத்தகையாகக் கொடுத்துள்ளது. இதுதவிர, கூடுதலாக 190 ஏக்கர் நிலத்தையும் 'ஒன் டைம்’ கட்டணமாக சுமார் ஆறு கோடி ரூபாய்க்கு கொடுத்து இருக்கிறது. இந்த நிலத்தில் ஐந்து சதவிகித நிலத்தை டயல் நிறுவனம் தனது வர்த்தகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் அனுமதிக்கிறது. ஐந்து சதவிகிதம் என்றால் சுமார் 239 ஏக்கர் வருகிறது. இந்த நிலத்தை நான்கு ஆண்டு களுக்கு முன்பே ஏக்கருக்கு 36 கோடி ரூபாய் என்று ஏரோ சிட்டி ஹோட்டலுக்கு குத்தகை விட்டுள்ளது. இப்போது, டெல்லி விமான நிலைய நிலம் ஒரு ஏக்கர் 100 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால், இந்த 239 ஏக்கர் நிலம் மட்டுமே 24 ஆயிரம் கோடி மதிப்பிலானது. தனியார் நிறுவனம் ஒன்று ஏற்கெனவே கொள்ளை லாபம் அடைந்த பிறகும், பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கலாமா என்பது தான் எங்களது கேள்வி. சி.ஏ.ஜி. சொல்வதற்கு முன்பே நாடாளுமன்றத்தில் பிரதமர் முன்பு இந்தக் கேள்வியை எழுப்பினோம். '24 ஆயிரம் கோடி அவர்களுக்குக் கிடைக்கப்போகிறது. ஆனால், 4,000 கோடி இழப்பு என்று சொல்லி வசூலிப்பது தவறு அல்லவா?’ என்று கேட்டோம்.
நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பிய பின்னரும் பிரதமரும் அமைச்சரும் இதை சட்டமாக்கி அனுமதிக்கின்றனர். சி.ஏ.ஜி. சொல்லும் 1,63,557 கோடி ரூபாய் லாபம் என்பது டயல் நிறுவனம் மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்கு எழுதி ஒப்புக்கொண்ட கணக்கின் அடிப்படையிலானது.
டெல்லி,  மும்பைக்கு அடுத்து சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள விமான நிலையங்களும் நவீனப்படுத்தப்படுகின்றன. இங்கு கட்டுமானப் பணிகள் தனியார் வசம்விடப்படவில்லை. இந்திய விமான நிலையக் குழுமத்தின் கீழ் நவீன விமானத்தளம் கட்டப்படுகிறது. ஆனால், கட்டி முடித்த பின்னர், தனியார்கள் வசமே ஒப்படைக்கத் திட்டமிடுகிறார்கள். தனியார்களிடம்தான் திறமை இருப்பதாகச் சொல்கிறார்கள். 58 ஆண்டுகளுக்குக் குத்தகை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் அமைச் சரவை அனுமதி பெறவில்லை. இந்திய விமான நிலையக் குழுமத்துக்கு கிடைக்க வேண்டிய பங்குகளை சரியாகக் கொடுக்கவில்லை. இந்த விவகாரங்களை முறைப்படி விசாரித்தால், இன்னும் பல தில்லுமுல்லுகள் வெளிவரும்'' என்கிறார் பாலகோபால்.

No comments:

Post a Comment