Monday, September 17, 2012

அ.தி.மு.க. அலுவலகத்தைப் பூட்டிய மனைவி... விரட்டப்பட்ட பின்னும் இருக்கும் பி.ஏ..


தேசியக் கட்சிகளின் கோட்டை​யான கன்னியாகுமரி, நாகர்​கோவில் சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று உற்சாகத்தில் இருந்தனர் அ.தி.மு.க. ரத்தத்தின் ரத்தங்கள். அதிலும் நாகர்கோவில் தொகுதியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் அந்த உற்சாகத்தையும் மீறி இப்போது ஒலிப்பது கட்சிப் பிரமுகர்களின் பொருமல்கள்! 
'அமைச்சர் பச்சைமாலின் மனைவி, 'இங்க எதுக்கு வர்றீங்க?’னு கட்சி ஆபீஸையே பூட்டிட்டுப் போயிட்டாங்க. இரட்டைக் கொலை வழக்கில் கைதாகி கட்சியில் இருந்தே நீக்கப்பட்ட சகாயம்தான் இன்றைக்கும் குமரி அ.தி.மு.க-வில் பெரிய சக்தி....’ என்று சரவெடிகளைக் கொளுத்துகிறார்கள் குமரி அ.தி.மு.க-வினர்.
பெயர் வெளியிட விரும்பாத அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், ''குமரி மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகம் நாகர்கோவில் வேப்ப மூடு பகுதியில் நீதிமன்றக் கட்டடத்தை ஒட்டி ஒரு முட்டுச் சந்தில் இயங்கி வருகிறது. எதிர்க் கட்சியாக இருக்கும்போதுகூட வடசேரிப் பகுதியில் பிரமாண்டமான கட்டடத்தில் ஆபீஸ் இருந்தது. கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று வனத் துறை அமைச்சராக பச்சைமால் ஆனதும், வாடகையை அவர்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்து இந்த முட்டு சந்துக்கு ஆபீஸை மாற்றி​விட்டார். அதிலும்கூட வாடகை பாக்கி வைத்துள்ளார். சமீப காலமாக கட்சிக்குள் பச்சை​மாலின் மனைவி செல்வ அழகியின் தலையீடு அதிக​மாக இருக்கிறது. முன்பெல்லாம் கட்சி ஆபீஸில் அமைச்சரின் அரசியல் உதவியாளர் காரவிளை செல்வன், கட்சிக்காரங்களோட குறைகளைக் கேட்பார். அதனால், கட்சித் தொண்டர்களுக்கும் உண்மையிலேயே பலன் இருந்துச்சு. ஆனால் இப்ப நிலைமையே தலைகீழாயிடுச்சு. பச்சைமாலின் மனைவி செல்வ அழகி மனசுவெச்சாத்தான் பதவி, உதவி, நிவாரணம் எல்லாம் தேடி வரும். உண்மையாக உழைக்கிறவங்களுக்கு கட்சியில் மரியாதையே இல்லை. இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி, திடீர்னு கட்சி ஆபீஸுக்கு வந்த செல்வ அழகி, கட்சி நிர்வாகிகளை வெளியே போகச் சொல்லித் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு, கட்சி ஆபீஸைப் பூட்டிட்டாங்க. உடனே சில பத்திரிகைக்காரங்க அதைப் படம் எடுத்துட்டாங்க. அடுத்த சில நொடிகளில் ஸ்பாட்டுக்கு வந்த சகாயம்தான், செல்வ அழகியை சமாதானப்படுத்திப் பூட்டை திறந்ததோடு, மீடியாவிலும் செய்தி வராமல் செய்தார்.
வனத் துறை அமைச்சர் பச்சைமாலும் கட்சிக் கூட்டம், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்னு எது நடத்தினாலும் தம்பத்துக் கோணத்தில் உள்ள அவர் வீட்டில் வெச்சுத்தான் நடத்துவார். கட்சி அலுவலகத்தில் காரவிளை செல்வனிடம் தொண்டர்கள் குறைகளைச் சொல்லி மனு கொடுப்பதும் அவை அமைச்சரின் பார்வைக்குச் சென்று பலன் கிடைப்பதும் செல்வ அழகிக்குப் பிடிக்கலை. மாவட்டத்தில் அவர்தான் பெரிய ஆளா இருக்கணும்... தொண்டர்கள் எல்லாரும் தன்னைத் தேடி வந்து பார்க்கணும்கிற எண்ணத்தில்தான் அந்த அம்மா ஆபீஸுக்குள் புகுந்து இந்த மாதிரி செஞ்சாங்க.
இத்தனைக்கும் இந்த அம்மா அமைச்சர் மனைவி என்பதைத் தாண்டி, கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை. முன்பு அமைச்சரின் உதவியாளரா சகாயம் இருந்தபோது, மாவட்ட அலுவலகத்தில் என்ன நடந்தாலும் உடனே செல்வ அழகி கவனத்துக்குப் போயிடும். இப்ப  தகவல்கள் போய்ச் சேர்வது இல்லை. அந்தக் கோபத்தில்தான் ஆபீஸில் உட்கார்ந்திருந்த கட்சி நிர்வாகிகளிடம் 'கட்சி ஆபீஸுக்கு நாங்க வாடகை கொடுக்கிறதே எனக்கு நீங்க விசுவாசமா இருக்கத்தான். எனக்கு நீங்க விசுவாசமா இல்லாதப்ப, உங்களுக்கு ஆபீஸ்ஒரு கேடா?’ன்னு கத்தியிருக்காங்க. கட்சி ஆபீஸைப் பூட்டுறதுக்கு அந்த அம்மாவுக்கு என்ன அதிகாரம் இருக்கு?
தேரூர் அருகே வனத் துறை ஊழியர் ஆறுமுகம், அவரது மனைவி யோகீஸ்வரி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குமரி மாவட்டப் பாசறைச் செயலாளரா இருந்த சகாயத்தைக் கைது செஞ்சாங்க. உடனே முதல்வர் அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கிட்டாங்க. ஆனால் இன்னைக்கும் கட்சி நடத்தும் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதில் இருந்து பணப் பட்டுவாடா வரை எல்லா வேலையும் சகாயம்தான் கவனிச்சுட்டு இருக்கார். அமைச்சரின் செயல்பாடுகள் தொடர்பாக பத்திரிகையாளர்களுக்குத் தகவல் கொடுக்கிறதும்கூட சகாயம்தான். இப்ப மாவட்டப் பாசறைச் செயலாளரா ராஜீவ்னு ஒருத்தரைப் போட்டு இருக்காங்க. இந்த ராஜீவ் இதுக்கு முன்னாடி சகாயத்துக்கு உதவியாளரா இருந்தவர். இவரை பாசறைச் செயலாளராப் போடுறதும் சகாயமே அந்தப் பொறுப்பில் இருப்பதும் ஒண்ணுதான்'' என்றார் கோபமாக.
இது தொடர்பாக வனத் துறை அமைச்சர் பச்சைமாலிடம் விளக்கம் கேட்கப்  பேசினோம். ''என் மனைவி கட்சி ஆபீஸைப் பூட்டியதாகச் சொல்லப்படும் சம்பவம் வெறும் வதந்தி. அதில் துளிகூட உண்மை இல்லை. கட்சியைவிட்டு நீக்கப்​பட்ட சகாயத்தை நான் சந்தித்தே பல மாதங்கள் ஆகி​விட்டன. என்னை நாடி அவர் வந்ததும் இல்லை. கட்சிக் கொடி கட்டிய வண்டியில் அவர் ஏறிப் போகவோ, வரவோ செய்திருக்கலாம். அதைப் பற்றி எனக்குத் தெரியாது'' என்றார்.
குமரியில் 'அம்மா’வுக்கே காட்டுறாங்க பெப்பே!

No comments:

Post a Comment