Thursday, September 20, 2012

கல்லைக் கரைத்த கலெக்டர்கள்!


 கிரானைட் ஊழலில் சம்பந்தப்பட்ட கனிம வளம், வருவாய், பொதுப் பணி, கலால், வணிக வரி ஆகிய துறைகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 34 பேர் சம்பந்தப்பட்ட இடங்கள், பி.ஆர்.பி. மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 38 இடங்களில் 15-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது லஞ்ச ஒழிப்புத் துறை. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டுமே 18 இடங்கள். சென்னையிலும் சேலத்திலும் தலா ஆறு இடங்கள். கோவையில் இரண்டு இடங்கள். ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சி, கரூர் மாவட்டங்களில் சிலரது ஜாகைக்குள் நுழைந்தனர் அதிகாரிகள். பி.ஆர்.பி. அண்ட் கோ-வின் கிரானைட் ஊழலுக்கு உடந்தையாக இருந்ததற்காக, மதுரையின் முன்னாள் கலெக்டர்கள் மதிவாணன், காமராஜ் ஆகியோரும் வளைக்கப்படலாம் என்று எழுதி இருந்தோம். லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் தற்போது பதிவு செய்திருக்கும் இரண்டு வழக்குகளிலுமே, இவர்கள்தான் அச்சாணி​யாக இருக்கப்போகிறார்கள் என்று தகவல்.
மேலூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 2008-ம் ஆண்டு இறுதியில் பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் நடந்த ஓர் ஊழலைக் கண்டுபிடித்து அப்போதைய தி.மு.க. அரசுக்குப் புகார் அனுப்புகிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முருகேசன்  கேட்டிருந்த தகவல்களுக்கு, '2004 மார்ச் மாதத்தில் இருந்து 2008 மார்ச் மாதம் வரையிலான நான்கு ஆண்டுகளில், பி.ஆர்.பி. நிறுவனம் நான்கு லட்சம் கன மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்ததாக சுங்கத் துறையில் இருந்து சி.டி. ஆதாரம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அதே கால கட்டத்தில் 78 ஆயிரத்து 631 கன மீட்டர் அளவுக்கே பி.ஆர்.பி. நிறுவனம் கிரானைட் கற்களை உற்பத்தி செய்திருப்பதாக கனிம வளத் துறையில் இருந்து முருகேசனுக்குப் பதில் கொடுத்து இருக்கிறார்கள். ஏற்றுமதிக்கும் உற்பத்திக்கும் பெரிய வித்தியாசம் இருந்ததால், இதில் மோசடி செய்து அரசுக்கு வரவேண்டிய வருமானத்தைத் தடுத்து​​விட்டார்கள் என்பதுதான் முரு​கேசனின் குற்றச்சாட்டு. ஆதாரத்​​துடன் இந்தப் புகார் இருந்தும், பின்னணியில் பெரிய அளவில் 'கைம்மாறு’ சேவைகள் நடந்ததால், புகார் ஏறக்கட்டப்பட்டது.
முருகேசன் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக்​கொண்டே இருந்ததால், புகாரை விசாரிக்கும்படி அப்​போது மதுரை கலெக்டராக இருந்த சீதாராம​னுக்கு மார்ச் 2009-ல் ஃபார்​வர்டு செய்கிறது அரசு. கூடவே, விசாரணை அறிக்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என சில நிர்பந்தங்களும் வந்தன. ஊழல்களை நன்கு அறிந்திருந்ததால், 'அப்படி எல்லாம் விசாரிக்க முடியாது’ என்று கோப்புகளைப் பத்திரமாகக் கட்டிவைத்துவிட்டார் சீதாராமன். இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. மே 20-ல் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மே 27-ல் சீதாராமனை மதுரையை விட்டுத் தூக்கியது அதிகார வர்க்கம். அவருக்குப் பதிலாக, திருவாரூரில் கலெக்டராக இருந்த மதிவாணன் மதுரை கலெக்டராக அழைத்துவரப்பட்டார்.
மே 29-ல் பொறுப்பேற்ற மதிவாணன், கிரானைட் விவகாரத்தில்தான் முதலில் மூக்கை நுழைத்தார்.அரசுக்கு அனுப்பி இருந்த புகார் தொடர்பாக ஜூன் 15-ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஜூன் 3-ல் முருகேசனுக்கு சம்மன் அனுப்பினார். அதே தேதியில் பி.ஆர்.பி-யையும் நேரில் ஆஜராகும்படி சம்மன் போட்டிருந்ததால் சுதாரித்துக் கொண்ட முருகேசன், 'இந்தப் புகார் நான் உருவாக்கியது இல்லை. அரசு ஆவணங்களை வைத்துப் பார்த்தாலே, ஊழல் வெட்டவெளிச்சமாகிவிடும். என்னிடம் விசாரிப்பதற்கு எதுவும் இல்லை. அதனால் விசாரணைக்கு வர முடியாது. இது சட்டப்படி குற்றம் என்று கருதினால், அதற்காக தாங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறேன்’ என்று கலெக்டருக்குப் பதில் அனுப்பிவிட்டார்.
இதையடுத்து, ஜூன் 15-ம் தேதி நடந்த விசாரணை யில் பி.ஆர்.பி. தரப்பிலும் வணிக வரி, கலால் துறை அதிகாரிகளும் முருகேசன் குறிப்பிட்டதுபோல் எந்த முறைகேடும் நடக்கவில்லை என 29.5.10-ல் அரசுக்கு அறிக்கை அனுப்பிய மதிவாணன், பத்திரிகைகளுக்கும் அறிக்கை கொடுத்தார். அதை ஆதாரமாகக்கொண்டு முருகேசனிடம் 10 லட்ச ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தது பி.ஆர்.பி. நிறுவனம். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்த முருகேசன், அங்கே இன்னும் ஓர் ஆவணத்தை தாக்கல் செய்தார். முருகேசனின் புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கலால் மற்றும் வணிக வரித் துறைக்கு கலெக்டர் மதிவாணன் அனுப்பிய சம்மன்களை, பி.ஆர்.பி. நிறுவனங்களின் ஃபை​னான்ஸ் அதிகாரியான ஆறுமுகம் என்பவரே கையெழுத்துப் போட்டு வாங்கி இருக்கிறார். இந்த தில்லுமுல்லுவைக் கண்டுபிடித்த முருகேசன், 'ஆறுமுகம் என்ற நபர் உங்களது அலுவலகத்தில் வேலை பார்க்கிறாரா?’ என்று கேட்டு கலால் மற்றும் வணிக வரித் துறைக்கு கடிதம் எழுதினார். 'அப்படி யாரும் இல்லை’ என அவர்கள் பதில் கொடுத்திருக்கிறார்கள். அரசு அலுவலகங்களுக்கு அனுப்பிய சம்மன்களை பி.ஆர்.பி-யின் ஆளை வைத்தே வாங்கவைத்து, அவர்கள் மூலமாகவே பதிலையும் போலியாகத் தயாரித்துக் கொடுத்துவிட்டார்கள் என்பதை ஆதாரத்துடன் கோர்ட்டில் சமர்ப்பித்தார் முருகேசன். இந்த நாடகங்களை செம்மையாக நடத்தி முடிப்பதற்கு ஆன செலவு மட்டுமே ஒரு 'சி’-க்கு மேல் இருக்கும் என்பது முருகேசனின் வாதம்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் பி.ஆர்.பி. ஊழலை தோலுரித்துக்கொண்டே இருந்த 'தினபூமி’ நாளிதழ் ஆசிரியர் மணிமாறன் மீது வழிப்பறி வழக்கைப் போட்டு, அதில் முருகேசனையும் கோத்துவிட்டார்கள். முருகேசன் உயர் நீதிமன்றத் தில் தொடுத்திருந்த வழக்கில் 2011 பிப்ரவரி 4-ல் தீர்ப்பு எழுதிய நீதியரசர் சந்துரு, 'முருகேசனின் புகார்களில் உண்மை இருக்கிறது. எனவே மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகள் அனைத்தையும் முறையாக அளந்து முடித்து, அங்கு நடந்துள்ள விதிமீறல்கள் குறித்து ஒரு மாதத்துக்குள் மாவட்ட கலெக்டர் அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவு தொடர்பாக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்​போடாத மாவட்ட நிர்வாகம், கோர்ட் உத்தரவுக்குத் தடை வாங்கும்படி, கிரானைட் கிங்கரர்களுக்கு யோசனை சொன்னது. அதன்படியே, மார்ச் 30-ல் அந்த உத்தரவுக்குத் தடை வாங்கிவிட்டார்கள் கிரானைட் புள்ளிகள். இந்த விவகாரத்தில்தான் மதிவாணன் சிக்கி இருக்கிறார். இந்த முறைகேடுகளின் அத்தனை அசைவுகளையும் அரங்கேற்றிக் கொடுத்தவர் கனிம வளத் துறை துணை இயக்குநராக இருந்த ராஜாராம். இவர் இப்போது கன்னியாகுமரி மாவட்டக் கனிம வளத் துறை துணை இயக்குநர். இவர் மீதும் மதிவாணனின் செய்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக அப்போதைய வணிக வரித் துறை அதிகாரி (ஓய்வு பெற்ற) பெரியசாமி, கலால் துறைக் கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் பி.ஆர்.பி. உள்ளிட்டவர்கள் மீது ஒரு வழக்குப் பதிவாகி இருக்கிறது. இன்னொரு வழக்கு மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் காமராஜை மையப்படுத்தியது. என்னதான் மதிவாணன் வளைந்து கொடுத்துப் போனாலும், அத்துமீறல்கள் ஓவராகிப்போனதால் ஒரு கட்டத்தில் ஆளும் தரப்பை அனுசரிக்க மறுத்​தார். இதையடுத்து அவரைக் கட்டாய விடுப்பில்அனுப்பி​விட்டு, காமராஜை​மதுரைக்​குக் கூட்டி வந்தார் தி.மு.க-வின் அப்போதைய அதிரடிப் புள்ளி.
காமராஜ் வந்த பிறகும் புதிதாக ஒரு பிரச்னை​யைக் கிளப்பினார்முருகேசன். 'மேலூர் பகுதிகளில் உள்ள கண்மாய், கால்வாய்களை கிரானைட் புள்ளிகள் ஆக்கிரமித்து விட்டார்கள்’ என்று அரசுக்கு ஆதாரங்​களுடன் புகார் அனுப்பி னார். இதை விசாரிக்கும்படி டி.ஆர்.ஓ-வுக்கு உத்தரவிட்டார் காமராஜ். டி.ஆர்.ஓ-வும் கள விசாரணை நடத்தி, கண்மாய், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உறுதி செய்து கலெக்டருக்கு அறிக்கை கொடுத்தார். இதையடுத்து நடந்த 'கவனிப்பு’களில் கவிழ்ந்துபோன காமராஜ், டி.ஆர்.ஓ. கொடுத்த புகாரைக் கடாசிவிட்டு, 'கண்மாய்களோ, கால்வாய்களோ, குவாரிகளால் ஆக்கிரமிக்கப் படவில்லை’ என்று உண்மையை மறைத்து அரசுக்கு அறிக்கை கொடுத்தார். அந்த அறிக்கைதான் இப்போது காமராஜைக் காவு கேட்கிறது. இந்த விஷயத்தில் இவருக்கு உறுதுணையாக இருந்த கனிம வளத் துறை துணை இயக்குநர் ராஜாராம், மேலூர் தாசில்தார் (இப்போது சிவகங்கை மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட சிறப்பு துணை கலெக்டர்) சுப்பு, பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர் (இப்போது பரமக்குடி செயற்பொறியாளர்) ராமச்சந்திரன் மற்றும் பி.ஆர்.பி. உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது விஜிலென்ஸ்.
ரெய்டில் சிக்கிய மூன்று வி.ஏ.ஓ-க்களையும் மதுரை கலெக்டர் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்திருக்​கிறார். மேலூர் தாலுக்கா அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாகிவிட்டதாகவும் தேடி வருகிறார்கள். ரெய்டின்போது அதில் மூன்றில் ஒரு பங்கு ஆவணங்களை வி.ஏ.ஓ-க்கள் வீடுகளில் இருந்து கைப்பற்றி இருக்கிறார்கள். 38 இடங்களில் நடந்த ரெய்டுகளில் சுமார் 500 ஆவணங்கள் சிக்கி இருக்கின்றனவாம். அதிகப்பட்சமாக, திருச்சியில் உள்ள முன்னாள் கனிம வளத் துறை அதிகாரி ஜெயக்குமாரின் வீட்டில் இருந்து 14 லட்ச ரூபாய் பணமாகக் கைப்பற்றப்பட்டதாம். கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் விசாரணைக்குப் பிறகுதான், இந்த மெகா ரெய்டை நடத்தி முடித்திருக்கிறார்கள்'' என்கிறார்கள். அடுத்ததாக, கிரானைட் புள்ளிகளுக்கு சலுகை காட்டிய போலீஸ் அதிகாரிகள் பட்டியல் ஒன்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் கைக்கு வந்திருக் கிறதாம். ஆக, கூடிய விரைவில் காக்கிகள் வட்டாரமும் கதறும்!


No comments:

Post a Comment