Thursday, September 20, 2012

''என் நேர்மையை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியாது!'' சகாயம் அதிரடி!




கிரானைட் ஊழல் விவகாரம் நாடு முழுவதும் நாறிக்கிடக்கிறது. கைதுகள், அதிரடி ரெய்டுகள், ஆள் இல்லாத விமானச் சோதனை என்று மலை முழுங்கி மகாதேவன்களை விரட்டிக்கொண்டு இருக்கிறது அரசு. இந்த முறைகேடுகளைப் பற்றி முன்பே அரசுக்கு அறிக்கை அனுப்பினார் சகாயம் ஐ.ஏ.எஸ். ஆனால் அவர் அப்போது மாற்றப்பட்டார். அதன் பிறகு, அவரது அறிக்கை வெளியே வரவே, வேறு வழியின்றி அரசு அதிரடி ஆக்ஷன் காட்டி வருகிறது! 
லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிராகப் போராடி வரும் 'ஐந்தாவது தூண்’ என்ற அமைப்பின் சார்பில் 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 15-ம் தேதி நடந்தது. எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில்  சகாயம் கலந்துகொண்டதுதான் ஹைலைட்!
கிரானைட் ஊழல் விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மதிவாணன், காமராஜ்ஆகியோர் வீடுகளில் அதிரடி ரெய்டு அரங்கேறிய தினத்தில், விழா நடந்ததால் சகாயத்தின் பேச்சுக்கு ஏக எதிர்​பார்ப்பு நிலவியது.
தென்னிந்திய மனித உரிமை அமைப்பின் மாநில கூடுதல் செயலாளர் சித்திக், ''மலையையே முழுங்கி ஏப்பம்​விட்ட பி.ஆர்.பி. என்பவர் இப்போது சிறையில் இருக்கிறார். இந்த மாதிரி ஊழல் அயோக்கியர்களை எல்லாம் விட்டுவைக்கக் கூடாது. மாணவர்களே... இந்த மாதிரி ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக சகாயம் மாதிரி எழுந்து நில்லுங்கள்'' என்று ஆவேசம் காட்டினார்.
'20 ஆயிரம் கோடி சம்பாதித்தவர். 21 ஆண்டுகளில் 19 முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டவர். மதுரையை ஒரு கலக்கு கலக்கியவர்’ என்று சகாயத்தை அழைத்த தொகுப்பாளர், '20 ஆயிரம் கோடியை சம்பாதித்தவர் என்றால், வீட்டுக்குக் கொண்டுபோனவர் இல்லை... நாட்டுக்கு சம்பாதித்துக் கொடுத்தவர்’ என்றார். சகாயம் மைக் முன்பு வந்து நின்றதும், ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று கை தட்டியது.
''நாமக்கல் கலெக்டராக இருந்தபோது என் காருக்கு முன்னே, டூ வீலரை சாலையில் குறுக்கும் நெடுக்குமாக வேகமாக ஓட்டிச் சென்றார்கள் இருவர். அவர்களை வழிமறித்து விசாரித்தபோது, அவர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டியது தெரிந்தது. உடனே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டேன். உடனே அவர்கள், 'ஐயா இரக்கம் காட்டுங்கள்’ என்று கெஞ்சினார்கள். நான் மறுத்துவிட்டேன். நூறு ரூபாய் நோட்டை என்னிடமே நீட்டி லஞ்சம் கொ​டுக்க முனைந்தார்கள். தவறு செய்துவிட்டு தப்பிக்க லஞ்சம் கொடுத்தால் போதும் என்பது, எவ்வளவு குடித்திருந்தாலும் போதையில் இருந்தாலும், தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு நமது தேசத்தில் லஞ்சமும் ஊழலும் எங்கும் வியாபித்து இருக்கின்றன. இந்த ஊழல் நாட்டின் முன்னேற்றத்துக்கே பெரும்  தடையாக இருக்கிறது. ஏழைகளிடம் மட்டுமே இரக்கம் காட்டுவேன். ஆனால், தவறு செய்தவர்கள் மீது இரக்கம் காட்டவே மாட்டேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நான் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்​கிறேன். தவறு செய்த யாரையும் விட்டுவிட மாட்டேன்.
கிரானைட் பற்றி நான் பேச முடியாது. ஓர் அரசு ஊழியரை, அரசாங்கம் எங்கே வேண்டுமானாலும் மாற்ற முடியும். எனது 21 ஆண்டு கால அரசுப் பணியில் 19 முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறேன். என்னை எத்தனை முறை வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யுங்கள். என் நேர்மையை மட்டும் மாற்றவே முடியாது. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் பல மாணவர்களுக்கு அணியச் செருப்பு இல்லை. அரிசி வாங்கிச் சாப்பிடுவதுகூட கனவாக இருக்கிறது. அதற்கு மாற்றம் அவசியம். அப்படிப்பட்ட மாற்றத்துக்கு ஊழலும் லஞ்சமும் தடையாக இருக்கிறது. இந்த மாற்றம் மாணவர்கள், இளைஞர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். லஞ்சம், ஊழலுக்கு எதிராகப் போராடக் கூடியவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்த தேசத்துக்குத் தடையாக இருக்கும் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்குக் களம் அமைப்போம்'' என்று முழங்கினார் சகாயம்.
அடுத்துப் பேசிய பாண்டியராஜன் எம்.எல்.ஏ., ''ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்காக​கொல்லப்​பட்ட சத்தியந்திர துபே, மஞ்சுநாத் போன்றவர்​களையும், கொல்லப்பட்ட தகவல் அறியும் உரிமைப் போராளிகளையும் நாம் நினைவு கூற வேண்டும். எந்தப் பதவியும் கொடுக்கப்படாமல் ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, காத்திருப்புப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள்.  திருமங்கலம் ஃபார்முலா தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தேர்தல் கமிஷனில் பிரவீண் குமார், அமுதா போன்ற நேர்மை யான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இல்லையெனில், நான் எல்லாம் எம்.எல்.ஏ. ஆகியிருக்க முடியாது'' என்றார் பாண்டியராஜன்.
''சினிமாவில் எத்தனையோ ஹீரோக்களைப்பார்த்​திருப்​போம். நாம் எல்லோரும் அப்படி எளிதில் ஹீரோ ஆகிவிட முடியாது. லஞ்சத்துக்கும் ஊழ லுக்கும்எதிராக போர் ஆரம்பித்தால், நாம்தான் நிஜ ஹீரோக்கள்'' என்று பொளந்து கட்டினார் நடிகை அமலா பால்.  
விரைவில் வெடிக்கட்டும் ஊழலுக்கு எதிரான போர்!


No comments:

Post a Comment