Thursday, September 20, 2012

புத்தகங்களை வாங்காவிட்டால் நூலகங்கள் எதற்கு? புலம்பும் பதிப்பாளர்கள்!


டந்த தி.மு.க. அரசும், இப்போதைய அ.தி.மு.க. அரசும், நூலகத் துறையை ஒப்புக்குச் சப்பாணியைப் போலதான் நடத்துகின்றன'' என்று வருத்தம் தோய்ந்த குரலில் பேசுகின்றனர் தமிழ்ப் பதிப்பாளர்கள். கடந்த சில வருடங்களாகவே நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதை தமிழகஅரசு பெருமளவுக்குக் குறைத்து விட்டதால்தான் இந்தக் கோபக்குரல்கள்! 
பாரதி புத்தகாலயத்தைச் சேர்ந்த நாகராஜ​னிடம் பேசியபோது, பலதகவல்​களைப் பகிர்ந்து கொண்டார். ''தமிழ்நாடு முழுக்க சுமார் 3,800 நூலகங்கள் இயங்குகின்றன. இவற்றுக்குத் தேவையான புத்தகங்களை வாங்க, ஒவ்வோர் ஆண்டும் நூலகத்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகும். பதிப்பாளர்கள் 10 புத்தகங்களுக்கு விண்ணப்பித்தால், நான்கு புத்தகங்களுக்கு ஆர்டர் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், 2008-ம் ஆண்டுடன் அது முடிந்துவிட்டது. அதன்பிறகு, வெளிப்படையான புத்தகக் கொள்முதல் குறைந்து விட்டது.
பதிப்பாளர்களிடம் இருந்து நூலகத் துறை புத்தகங்கள் வாங்கவே இல்லை என்று சொல்ல முடியாது. தங்களுக்குச் சாதகமானவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது. உதாரணமாக, கடந்த 2008-09ஆண்டில், மொத்தம் 14.63 கோடி ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கப்பட்டன. அதில் 7 - 8 கோடி ரூபாய்க்கு 15 பதிப்பாளர்களிடம் இருந்து மட்டுமே வாங்கி இருக்கின்றனர். 2009-10 ஆண்டில் மிகச்சில பதிப்பகங்களிடம் இருந்து மட்டும் 13.6 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கப்பட்டன. 2010-11 ஆண்டிலும் 13.41 கோடிக்குப் புத்தகங்கள் வாங்கினர். ஆனால், 95 சத விகிதப் பதிப்பாளர்களுக்கு எந்த ஆர்டரும் இல்லை என்பதுதான் கொடுமை.
தமிழ்நாட்டில் புத்தகப் பதிப்பை பெரும் தொழிலாக செய்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களுக்கு சாதகமாகத்தான் நூலகத்துறை நடந்து கொள்கிறது. ஆனால், பெரும்பாலான பதிப்பா ளர்கள் மிகவறுமையான சூழலில், தங்களின் கொள் கைகளுக்காகப் புத்தகம் வெளியிடுகின்றனர். புத்தக விற்பனை பெரியஅளவுக்கு இல்லாத நிலை யில் நூலக ஆணையை நம்பிதான் பல பதிப் பகங்கள் இயங்குகின்றன. அரசு இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்கிறார் நாகராஜ்.
நூலகத்துறையின் ஆமை வேகம் இன்னொரு கொடுமை. தமிழ்நாட்டின் எந்த நூலகத்திலும் புதிய புத்தகங்களைப் பார்க்க முடியாது. காரணம், 2008-ம் ஆண்டில் வெளிவந்த புத்தகங்களுக்கு 2011-ல்தான் ஆர்டரே எடுக்கிறார்கள். அந்த தாமதமான ஆர்டர்கூட இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது என்பதுதான் புகார். இன்னொரு முக்கியமான விஷயம், தமிழ்நாடு அரசு வீட்டு வரி, சொத்து வரி இவற்றுடன் சேர்த்து செஸ் வரியும் வசூலிக்கிறது. அந்த செஸ் வரியின் ஒரு பகுதி நூலகங்களுக்கானது. அதாவது, நூலகத்துக்கும் சேர்த்துதான் மக்கள் வரி செலுத்துகின்றனர். அந்தப் பணம் உரிய நோக்கத்துக்காக முழுமையாகப் பயன் படுத்தப்படுவது இல்லை.
'கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தின் நீலகண்டன், ''ஒவ்வோர் ஆண்டும் நூலக ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் அவர்களுக்கு சாதகமானவர்களும், அ.தி.மு.க. ஆட்சியில் அவர் களுக்கு சாதகமானவர்களும் இந்தக் குழுவில் இருப்பார்கள். ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு புத்தகங்கள் வாங்குவது, அறிவியல், நாடகம், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள்.. போன்ற ஒவ்வொரு தலைப்பிலும் எந்தெந்தப் புத்தகங்களை எவ்வளவு வாங்குவது என்பதை இவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அப்படி தீர்மானிப்பது தரம் அடிப்படையில் ஜன நாயகமாக நடைபெறுவது இல் லை. வேண்டியவர்களுக்கு மட்டுமே நூலக ஆணை கிடைக்கிறது. பெரிய பதிப்பாளர்களுக்குப் பிரச்னை இல்லை. சிறிய பதிப்பாளர்கள்தான் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்'' என்கிறார் வேதனையுடன்..
இதுகுறித்து, நூலகத் துறையைக் கவனிக்கும் அமைச்சர் சிவபதியிடம் பேசினோம். ''நானே மீண்டும் உங்களிடம் பேசுகிறேனே'' என்று கூறியவர் இணைப்பைத் துண்டித்து விட்டார். இந்த இதழ் அச்சுக்கு போகும் வரை அவரிடம் இருந்து பதில் வரவில்லை.
புத்தகங்கள் வெறும் காகிதங்கள் அல்ல. புத்தகங்களைப் புறக்கணிப்பது என்பதன் நேரடி பொருள், அறிவை ஒதுக்கி வைப்பதுதான். அறிவை அப்பால் வைத்துவிட்டு மக்களுக்கு எதைப் போதிக்க விரும்புகிறது இந்த அரசு?

No comments:

Post a Comment