Thursday, September 13, 2012

பி.ஆர்.பி-யைப் பழிதீர்க்கும் வீரகாளி?


கிரானைட் குவாரி ஊழலைத் தோண்ட ஆரம் பித்து 40 நாட்களுக்கு மேல் ஆன பிறகும், புதுப்புது மர்மங்கள் கிளம்பிக்கொண்டேதான் இருக்கின்றன!   
'அழகிரிக்கும் துரை தயாநிதிக்கும் எதிராக வாக்குமூலம் கேட்டாங்க!’
கிரானைட் புள்ளிகளுக்கு நிலங்களை வளைத்துக் கொடுத்தவர்கள், பினாமிகள் என 53 பேரின் ஜாதகங்களை கலெக்டர் கையில் வைத்திருப்பதாக கடந்த 29.8.12 இதழில் எழுதி இருந்தோம். அந்தப் பட்டியலில் பலர் அப்ரூவராக மாறி வாக்குமூலம் கொடுத்து வருகிறார்களாம். வழிக்கு வராதவர்களை வரிசையாக ஜெயிலுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது போலீஸ். பட்டியலில் நாம் சொல்லி இருந்த கீழ வளவைச் சேர்ந்த கனகு என்ற சொக்கலிங்கம், சண்முகம்பிள்ளை ஆகியோர் 9-ம் தேதி கைது செய்யப்பட்டனர். துரை தயாநிதியின் ஒலிம்பஸ் குவாரிக்கு அனைத்துமாக இருந்து காரியங்களைச் செய்துகொடுத்தவர்கள் என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டு. ''சண்முகம்பிள்ளை, தி.மு.க-வின் முன்னாள் மாவட்டப் பிரதிநிதி. சொக்கலிங்கம் அ.தி.மு.க-காரர். ஒலிம்பஸ் குவாரிக்கு அருகில் உள்ள டாமின் குவாரியில் கீழவளவைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் உடைகல் குத்தகை எடுத்திருந்தார். ஒலிம்பஸ் குவாரி நடவடிக்கைகள் தொடங்கியதுமே நாகராஜுக்கு உடைகல் கொடுப்பதை நிறுத்தியது டாமின். இதை எதிர்த்து நாகராஜ் பிரச்னையைக் கிளப்பினார். அப்போது, பி.ஆர்.பி., ஒலிம்பஸ் குவாரி நிர்வாகங்களைச் சேர்ந்தவர்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டு நாகராஜ் மீது எஃப்.ஐ.ஆர். போட வைத்தனர். இதில், சண்முகம் பிள்ளைக்கும் சொக்கலிங்கத்துக்கும் முக்கியமான ரோல் இருக்கிறது'' என்கிறது போலீஸ்.
கோர்ட்டுக்குப் போகும் வழியில், ''அரசுக்குச் சொந்தமான 'டாமின்’ குவாரியில் இருந்து கற்களை வெட்டிக் கடத்துறதுக்கு ஒலிம்பஸ் குவாரிக்கு உடந்தையா இருந்ததா ஒப்புக்கச் சொல்லி போலீஸ் மிரட்டுகிறது. அண்ணன் அழகிரிக்கும் அவரோட மகன் துரைக்கும் எதிராக எங்கிட்ட வாக்குமூலம் வாங்குறதுலயே குறியா இருந்தாங்க. 'அப்படி வாக்குமூலம் குடுத்துட்டா, இப்பவே நீங்க வீட்டுக்கு போகலாம்’னு சொல்லிப் பார்த்தாங்க. இல்லாத ஒண்ணை எப்படிச் சொல்றதுன்னு மறுத்துட்டேன். வெத்துப் பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு கோர்ட் டுக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க. அந்தப் பேப்பர்ல அவங்க என்ன வேணும்னாலும் எழுதிக்குவாங்க'' என்று சொன்னார் சண்முகம் பிள்ளை.
''சர்க்கரை பீர் மலையைக் காப்பாத்தச் சொல்லியும் இங்கே நடக்கிற கிரானைட் முறைகேடு பற்றியும் 20 வருடங்களாக அதிகாரிகளுக்குப் பெட்டிஷன் எழுதிப் போட்டுப் போராடிட்டு இருக்கிற என்னை, கிரானைட் ஊழலுக்குத் துணைபோனதா சேர்த்திருக்காங்க. இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்குங்க'' என்று சீறினார் சொக்கலிங்கம்.
  கிரானைட் குவாரிக்குள் யுனிவர்சிட்டி விடைத்தாள்கள்?
வெட்டிப் பதுக்கப்பட்ட கிரானைட் கற்களில் இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் கற்களை மட்டுமேஅளந்து முடித்திருக்கிறார்கள் அதிகாரிகள். இதனிடையே, சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களால் உருவாக்கப்பட்ட 'தக்ஷா’ என்ற ஆளில்லாக் குட்டி விமானத்தை கிரானைட் குவாரிகளுக்கு மேல் பறக்கவிட்டு அதன் மூலம் கிரானைட் குவாரி முறைகேடுகளின் ஆழத்தை வீடியோவில் பதிவு செய்திருக்கிறார் கலெக்டர். இடையபட்டி ஏரியாவில் குட்டி விமானம் தனது முதல்நாள் பயணத்தைத் தொடங்கியதுமே பகீர் கிளம்பியது. பி.ஆர்.பி-க்கு சொந்தமான குவாரி ஒன்றில் கிரானைட் பாறைகளை அடுக்கி உருவாக்கப்பட்டிருந்த ரகசிய அறை ஒன்றைக் காட்டிக் கொடுத்தது 'தக்ஷா’. ஒரு ஆள் மட்டுமே போய் வரும் வகையில் இடுக்குகளுக்கு அடியில் உருவாக்கப்பட்டிருந்த அந்த அறையில், பூட்டப்பட்ட மூன்று இரும்புப் பெட்டகங்கள் இருந்தன. அந்தப் பெட்டகங்களை உடைத்துப் பார்த்தபோது உள்ளே எதுவுமே இல்லை.
அந்த ரகசிய அறையில் சற்றுத் தள்ளி இன்னொரு பெட்டகமும் கிடந்தது. அதனுள்ளே பி.ஆர்.பி. நிறுவனத்தின் பொக்லைன்கள் இயக்கியது தொடர்பான ஆவணங்களும் டீசல் செலவுகள் சம்பந்தப்பட்ட ரசீதுகளும் இருந்தன. அவற்றுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அக்கவுன்டன்சி வினாத்தாள்கள் 14, விடை எழுதும் தாள்கள் 144 இருந்ததைக் கண்டு அதிகாரிகள் மிரண்டு போனார்கள். இதுகுறித்து, காமராஜர் பல்கலைக்கழகத்தில் போலீஸ் விசாரித்தபோது, 'மதுரை கருப்பாயூரணி ஏரியாவில் இயங்கிவந்த எஸ்.பி. கலை, அறிவியல் கல்லூரியை 2011-ல் பி.ஆர்.பி-யின் மகன் கிரையம் வாங்கினார். இந்தக் கல்லூரிக்கு நவம்பர் 2010, ஏப்ரல் 2011-ல் அனுப்பி வைக்கப்பட்ட விடைத் தாள்களில் உபயோகப்படுத்தியது போக எஞ்சியவை அவை. அந்தக் கல்லூரி இப்போது இயங்கவில்லை’ என்று சொன்னார்களாம். இருந்தாலும், வேறு ஏதாவது தில்லுமுல்லு திருகு தாளங்களைச் செய்திருக்கிறார்களா என்றும் துருவிக் கொண்டிருக்கிறது போலீஸ்!
   போராட்டத்துக்கு ஆள் திரட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ!
பி.ஆர்.பி-க்கு ஆதரவாக ஆட்களைத் திரட்டவும் போராட்டங்களைத் தூண்டவும் புத்தம் புது 'பைக்’குகளில் ஒரு கும்பல் மேலூர் ஏரியாவை வட்டமிடுவதாக ஏற்கெனவே எழுதி இருந்தோம். இவர்கள் மூலமாக பி.ஆர்.பி. ஊழியர்களுக்கு இப்போது சம்பளப் பட்டுவாடா இரவு பகலாக நடக்கிறது. கடந்த வாரம் மதுரை கலெக்டரேட்டை முற்றுகையிட இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் மேலூர் பகுதியில் இருந்து ஆட்களைத் திரட்டிச் சென்றதாகச் சொல்லும் உளவுத்துறையினர், ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர்தான் இவர்களை இயக்குகிறார் என்ற தகவலையும் மேலிடத்தின் காதில் போட்டு வைத்திருக்கிறார்களாம். பி.ஆர்.பி-க்கு ஆதரவாக மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களைப் போராட்டத்தில் குதிக்க வைக்கவும் இந்த எம்.எல்.ஏ. திரைமறைவு வேலைகளைச் செய்கிறாராம். 'பி.ஆர்.பி. குவாரிகளில் நாங்கள் உடைகல் எடுத்துப் பிழைப்பு நடத்தினோம். குவாரிகளை மூடிவிட்டதால் எங்கள் பிழைப்புக்கு வழி இல்லை. எனவே, குவாரிகளை உடனடியாகத் திறக்க வேண்டும்’ என்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கலாம். இதனிடையே, குவாரிகளுக்கு எதிராக 13-ம் தேதி மேலூரில் நல்லகண்ணு தலைமையில் உண்ணாவிரதம் நடத்த, தோழர்களும் தயாராகிறார்கள்.
வெளியே வந்தாள் வீரகாளி... உள்ளே போனார் பி.ஆர்.பி.!
கீழவளவு அருகில் உள்ள அம்மன்கோயில்பட்டி ஏரியாவில்தான் பி.ஆர்.பி. நிறுவனம் முதன்முதலில் நேரடியாக நிலம் வாங்கி கிரானைட் வெட்டியது. இங்குள்ள வீரகாளியம்மன் கோயிலில் இருக்கும் வடக்கு பார்த்த காளியம்மன் சிலை எட்டுக் கைகளு டன் உக்கிரமாக இருக்கும். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே இருந்த தீபா கிரானைட் குவாரியை தங்களது வழக்கமான பாணியில் வளைத்துப் போட்டது பி.ஆர்.பி. நிறுவனம். 'இங்கே கிரானைட் உடைப்பதால் காளி கோயிலுக்கு ஆபத்து’ என்று சொல்லி, அப்போது மேலூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்தை முடக்க அனைத்து உத்திகளையும் கையாண்டது கிரானைட் நிறுவனம். முடிவில், டவுன் பஸ்ஸைக் கொளுத்திய தாகப் போராட்டக்காரர்கள் மீதே வழக்குப் போட்டது அப்போதிருந்த போலீஸ். அதன்பிறகு எதிர்ப்பு குறைந்துபோனதால், கோயிலுக்கு அருகிலேயே குவாரிகள் வெடித்தன.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன், வீரகாளி யம்மன் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கோயில் வளாகத்தைச் செப்பனிட்ட போது, பூமிக்கு அடியில் இருந்து புதிதாக ஒரு காளி சிலை கிளம்பியது. அதை சாதாரண சிலை என நினைத்து கோயில் வளாகத்துக்குள்ளேயே போட்டு வைத்தனர். இப்போது, அந்தச் சிலையை வைத்து ஒரு தகவல் கசிய ஆரம்பித்திருக்கிறது. ''ஏற்கெனவே மூலஸ்தானத்தில் எட்டுக் கைகளுடன் இருந்த காளி சிலை மிகவும் உக்கிரமாக இருந்தது. இந்தச் சிலை இருந்தால் தொழில் செய்ய முடியாது என்று மலையாள மந்திரவாதிகள் சொன்னதால், ஏதோ பூஜைகள் செய்து அந்தச் சிலையை மாற்றிவிட்டு சாந்தமான இன்னொரு சிலையை வெச்சுட்டாங்க. இப்போது பழைய காளி சிலை வெளியில் வந்து தான், பி.ஆர்.பி-யை உள்ளே அனுப்பி விட்டது'' என்கி றார்கள் அம்மன்கோயில்பட்டியைச் சேர்ந்தவர்கள். இந்தத் தகவலால் இப்போது அந்தச் சிலையை கோயில் வளாகத்திலேயே ஒரு பீடத்தில் வைத்து பூஜை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
கிரானைட் ஊழல் தொடர்பாக மூச்சுக் காட்டாமல் முன்னேறிவரும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தங்களிடம் சிக்கி இருக்கும் ஆவணங்களை வைத்து சில அரசு அதிகாரிகளின் வீடுகளில் ரெய்டு அடிக்க அனுமதி கேட்டிருக்கிறார்களாம். கூடிய சீக்கிரமே, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், அரசு அதிகாரிகள் சிலர் சிறைக்கு அனுப்பி வைக்கப்படலாம்!

No comments:

Post a Comment