Tuesday, September 25, 2012

சிறு பிள்ளை விளையாட்டை அரசாங்கம் விளையாடலாமா?


சின்னப்பிள்ளைங்க மாதிரி விளையாடா​தீங்க’ என்று சொல்வார்கள். கடந்த வியாழக்கிழமை அன்று பள்ளிக்கூடங்கள் உண்டா இல்லையா என்ற விஷயத்தில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளைப் பார்த்தபோது அதைத்தான் சொல்லத் தோன்றுகிறது! 
மத்திய அரசைக் கண்டித்து நடந்த பந்த் காரணமாக யார் பாதித்தார்களோ, இல்லையோ பள்ளி மாணவர்களுக்குத்தான் ரொம்பப் பாதிப்பு. பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்து விட்டு, பிறகு அதை ரத்துசெய்த பள்ளிக் கல்வித்துறையின் குழப்பமான அறிவிப்புதான் இப்போது பெரும் புகைச்சலைக் கிளப்பி இருக்கிறது.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அரசுக்கு எதிராகஇந்தியா முழுவதும் பந்த் நடத்த எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதையடுத்து தமிழகத்திலும் தி.மு.க., கம்யூனிஸ்ட்டுகள் உள்பட எதிர்க்கட்சிகள் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்தன.
தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் பொதுவான காலாண்டுத் தேர்வு நடக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, 6-ம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை  காலாண்டுத் தேர்வுக்கான தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அறிவித்து இருந்தது.
ஆனால், 18-ம் தேதி காலை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தேவராஜன் மூலம் அவசர அவசரமாக அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வந்தது. அதில், 'விநாயகர் சதுர்த்தி மற்றும் பந்த் காரணமாக, எல்லாப் பள்ளிகளும் இரண்டு நாட்கள் விடுமுறை. மேலும், 20-ம் தேதி நடைபெறுவதாக இருந்த காலாண்டுத் தேர்வு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்ப’தாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தச் செய்தி டி.வி-யில் ஃப்ளாஷ் நியூஸாக ஓடியதைப் பார்த்ததும் முதல்வர் அலுவலக அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி. ஏனென்றால், இந்த அறிவிப்பு அதுவரை அவர்கள் யாருக்கும் தெரியாதாம். உடனே, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சபீதாவை அழைத்து, 'அரசியல் கட்சிகள் நடத்தும் பந்த்தை மத்திய, மாநில அரசுகள் ஆதரிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பந்த்துக்கு ஆதரவாகப் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டால், மாநில அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறியதாகி விடும்’ என்று எச்சரித்தார்களாம்.
இதையடுத்து, பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்,  தேர்வும் நடக்கும் என்று அவசர அவசரமாக அனைத்து மாவட்​டங்களுக்கும், அன்று மாலை 6 மணிக்கு இன்னொரு அறிக்கை பறந்தது.
இதுதொடர்பாக, அகில இந்தியத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை, ''தேர்வு நேரத்தில் விடுமுறை என்றும், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று, மாறிமாறி உத்தரவிட்டுக் குழப்பம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதனால் பரீட்சைக்குத் தயாராவதா, வேண்டாமா என மாணவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். மாணவர்கள் கல்வி நலனில் அரசாங்கம் எவ்வளவு அக்க றையாக இருக்கிறது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.
மத்திய அரசை எதிர்த்து நடக்கும் பந்த்தில் தி.மு.க. பங்கேற்கும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார். பள்ளிகள் விடுமுறை என்றால், பந்த் வெற்றியடைந்து விடும். இதனால், எதிர்க் கட்சி களுக்குப் பலம் கூடிவிடும் என்று உயர் அதிகாரிகள் திடீரென்று பள்ளிகள் இயங்கும் என்று மாற்றி அறிவிப்பு வெளியிடுகிறார்கள்.
பந்த் அன்றைக்குப் பள்ளிகள் இயங்கினாலும் மாணவர்கள் எவ்வளவு பேர் வந்து தேர்வு எழுதுவார்கள்? வராத மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறையினர் என்ன மாற்று வழி வைத்திருக்கின்றனர் என்று தெரியவில்லை. மொத்தத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் சமச்சீர் கல்வி தொடங்கி பல விஷயங்களில் அ.தி.மு.க. அரசு அதிருப்தியைச் சம்பாதித்து வருகிறது'' என்றார் ஆதங்கத்துடன்.
பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ''பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை நாட்களை பொதுத் துறைதான் அறிவிக்கும். மழை, வெள்ளம், உள்ளூர் விடுமுறை போன்றவற்றை கலெக்டர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்வார்கள். ஆனால், மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது என்றால் முதல்வர் அலுவலகம் மற்றும் பொதுத் துறைக்கு ஃபைலை அனுப்பி அனுமதி வாங்குவது வழக்கம். ஆனால், பந்த் நாளில் போக்குவரத்து பாதிக்கும், பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்று நினைத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் சபீதா தன்னிச்சையாக விடுமுறை உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுத் துறைக்கு எந்த ஃபைலையும் அனுப்பவில்லை. ஏன் கல்வித் துறை அமைச்சருக்குக்கூட தெரியாது. டி.வி. செய்தியைப் பார்த்துதான் தலைமைச் செயலாளர் மற்றும் பப்ளிக் டிபார்ட்மென்ட் அதிகாரிகளுக்கு விஷயம் தெரியும். உடனே, உயர் அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து ஆலோசனை செய்த பிறகுதான் பந்த் அன்றைக்கு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கச் செய்தனர். மாணவர்கள் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதற்காக பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா எடுத்த  நடவடிக்கை இப்போது சர்ச்சையாகி விட்டது.
பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சபீதா ஐ.ஏ.எஸ்-ஸிடம் பேசினோம். ''பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், பள்ளிக் கல்வி இயக்குநர் சொல்லியதாக மீடியாவில் யாரோ செய்தி பரப்பிவிட்டார்கள். அதற்குப் பிறகுதான் நாங்கள் அன்றைக்கு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்; காலாண்டுத் தேர்வுகள் நடக்கும் என்று விளக்கமாக அறிவிப்பு வெளியிட்டோம். சிலர் தவறாகப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட பிரச்னை இது. மற்றபடி பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கின. காலாண்டுத் தேர்வும் திட்டமிட்டபடி நடக்கிறது'' என்று முடித்துக்கொண்டார்.
மாணவர்கள் விஷயத்தில் கவனம் வேண்டும். அவசரம் வேண்டாம்!

No comments:

Post a Comment