Friday, September 7, 2012

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் ஒரே முகம்தான். உம்மன் சாண்டி.


க்ளிஃப் ஹவுஸ், திருவனந்தபுரம். ஊரே மணக்கும் அத்தப் பூக்கோலங்கள், மீண்டும் மீண்டும் ஒலிக்கும் அத்தப்பூப் பாடல்கள், வீதியெங்கும் உற்சாகம்... ஒட்டுமொத்தக் கேரளமும் ஓணம் கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்க, தன் அலுவல் அறையில் தனி ஓர் ஆளாக கோப்புகளுக்குள் மூழ்கியிருக்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி.
 ''ஓணம் கொண்டாட எல்லா போலீஸும் போச்சு. ஓபீஸர்ஸும் போச்சு. சொகமா?'' என வாஞ்சையாக விசாரிக்கிறார்.
''ஓணம் கொண்டாட்டத்துக்காக மூன்று நாட்கள் அரசு விடுமுறை. ஆனால், நீங்கள் பாதுகாப்புக் காவலர்கள்கூட இல்லாமல் பணிபுரிந்துகொண்டு இருக்கிறீர்களே?''
''நீங்கள் சொன்ன அதே காரணம்தான். மூன்று நாட்கள் அரசு விடுமுறை. அதனால் போலீஸையும் ஓபீஸர்களையும் ஊருக்குப் போகச் சொல்லிட்டேன். நான் மக்களுக்கு எந்தக் கெட்டதும் செய்யவில்லை என நினைக்கிறேன். அதனால், என் உயிருக்கு எந்தப் பயமும் இல்லை. என்ன சரிதானே?''
''கேரள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றியோ, தோல்வியோ... அது எப்படி உம்மன் சாண்டி மட்டும் புதுப் பள்ளி தொகுதியில் தவறாமல் வெற்றி பெறுகிறார்... அதுவும் 42 வருடங்களாகத் தொடர்ந்து 10 தேர்தல்களில்?''
''காலை ஆறு மணிக்குப் பொதுமக்கள் சந்திப்போடு ஆரம்பிக்கும் எனது தினம். இடையில் அலுவலகத்தில், அரசு விழாக்களில் எனச் செல்லும் இடம் எங்கும் மக்களைச் சந்திப்பதும் அவர்களோடு உரையாடுவதுமே எனது கடமை. நான் ஓய்வறியாமல் உற்சாகமாக உழைப்பதற்கான எரிபொருளைக் கேரள மக்களின், அதுவும் உழைக்கும் மக்களின் வியர்வையில் இருந்தே பெறுகிறேன். என் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதை 24X7 நேரமும் நீங்கள் என் வெப்சைட்டில் பார்க்கலாம். குறைகளை உடனுக்குடன் சி.எம். செல்லுக்கு அழைத்துச் சொல்லலாம். இப்படி என் வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் மக்களோடு பின்னிப் பிணைந்ததாக மாற்றிக்கொண்டு இருப்பதால் என்னைத் தங்களில் ஒருவனாகவே கேரள மக்கள் கொண்டாடுகிறார்கள். அதனாலேயே காங்கிரஸ் தோற்றாலும் ஜெயித்தாலும் உம்மன் சாண்டி மட்டும் சட்டமன்றத்துக்குள் தவறாமல் நுழை கிறான். கேரளத்தில் உம்மன் சாண்டியை நேரில் பார்க்காத மக்களே இருக்க முடியாது.''
''கேரளத்தில் எதிர்க் கட்சியான கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''தயங்காமல் சொல்வேன்... அவர்கள் 100 சதவிகிதம் செயல்படுகிறார்கள். ஆனால், எனது ஆட்சியை விமர்சிப்பது மட்டுமே அவர்களது செயல்பாடாக இருக்கிறது. நாக்கில் நரம்பில்லாமல் எப்படியும் பேசலாம் என்பதே தோழர்களின் மோட்டிவ். ஆச்சர்யமாக சமீப காலமாக என்னையும் சர்க்காரையும் விமர்சிப்பதைக் குறைத்துக்கொண்டு, அவர்களுடைய சகாக்களை விமர்சிப்பது, அடிப்பது, உதைப்பது என விநோதமான அரசியலில் ஈடுபடுகிறார்கள். பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்களுக்குக்கூடத் தேவை இல்லாமல் மாநிலம் தழுவிய பந்த் செய்வதுபோன்ற செயல்கள் கேரளத்தின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்பதை எப்போது உணர்வார்களோ? தோழர்கள் என்ன செய்கிறார்கள் என கேரள மக்கள் நன்றாகவே கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.''
'' 'கேரளத்தில் வசிப்பதற்கே பயமாக இருக்கிறது. இங்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லை’ என லெப்டினென்ட் கர்னல் அந்தஸ்து பெற்றிருக்கும் மோகன்லாலே வெளிப்படையாகப் புலம்புகிறாரே... சட்டம் - ஒழுங்கு நிர்வாகத்தில் ஏன் இத்தனை தடுமாற்றம்?''
''அரசியல் கொலைகள் அரங்கேறிய, 'கட்சியைவிட்டு வெளியேறினால் கொல்லுவோம்’ என கம்யூனிஸ்ட்டுகள் மேடைகளிலே கொலை மிரட்டல் விடுத்த காலகட்டத்தில் மோகன்லால் அப்படிச் சொன்னார். ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கக்கூடிய அச்சம்தான் மோகன்லாலுக்கும் இருந்த‌து. அதனை ஒரு முதல்வராகப் போக்க வேண்டியது என் கடமை. அதனால், மக்களின் பாதுகாப்புக்கு இடைஞ்சலாக இருந்த ரௌடிகளையும் கூலிப் படைகளையும் அடக்கி ஒடுக்கினோம். இந்நாள் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ என யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யம் பார்க்காமல் கைதுசெய்தோம். அது தொடரும். இப்போது சட்டம் - ஒழுங்கு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.''
''மக்களுக்காக இவ்வளவு கவலைப்படுகிறீர்கள். ஆனால், இந்தியாவின் பல மாநிலங்களில் லாட்டரிச் சீட்டுக்குத் தடை இருக்கும்போது, கேரளத்தில் அது ஏழைகளின் வருமானத்தைச் சுரண்டுகிறதே?''
''லாட்டரிச் சீட்டுக்குத் தடை விதிப்பதுகுறித்து நாங்களும் யோசித்துவருகிறோம். ஆனால், அதைத் தடை செய்வதற்கு முன் லாட்டரி மூலம் அரசுக்கு வரும் வருமானத்தை வேறு வழியில் பெறுவதற்கான சாத்தியங்களையும் ஆராய்ந்துகொண்டு இருக்கிறோம். அரசின் வருமானத்துக்காக மக்களை வதைப்பது சரியல்ல என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். லாட்டரியைப் பொறுத்தவரை அதிக அளவில்‌ மோசடி நடப்பது சிங்கிள் டிஜிட் லாட்டரியில்தான். அதற்கு நான் தடை விதித்து விட்டேன்.''
''இந்தியாவிலேயே படித்தவர்கள் அதிகம் வசிக்கும் கேரளத்தில்தான், அதிகமாக‌ மது குடிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம்?''
''கள்ளுக் கடை... கேரளத்துக்கு ஒரு கரும்புள்ளி! 'மது கூடவே கூடாது’ என அழுத்தமாகச் சொன்ன நாராயண குரு பிறந்த மண்ணில், இப்படி ஒரு சூழல் இருப்பது அவமானமாக இருக்கிறது. ஆனால், மதுவிலக்கை எடுத்த எடுப்பிலேயே முழுமையாக அமல்படுத்திவிட முடியாது. ஏனெனில், இங்கு நூற்றுக்குத் தொண்ணூறு பேர் குடியைக் கொண்டாடுகிறார்கள். அவர்களிடம் ஒரே இரவில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. விழிப்பு உணர்வு மூலமும் கடுமையான சட்ட திட்டங்கள் மூலமாகவும்தான் குடிப்பழக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியும். அதன் வெளிப்பாடாகவே கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய மதுக் கொள்கைகளை உருவாக்கியும் புதிய கள்ளுக் கடைகளைத் திறக்காமலும் இருக்கிறோம். மெள்ள மெள்ள கேரளம் போதையில் இருந்து விடுபடும் என நம்புகிறேன்.''
'' 'பத்மநாப சுவாமி கோயில் நகைகளைப் பாயசம் மூலமாக ராஜா குடும்பம் கடத்துகிறது. அதற்கு உம்மன் சாண்டியும் துணை!’ எனக் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டி இருக்கிறாரே?''
(சத்தமாகச் சிரிக்கிறார்...) ''பத்மநாப சுவாமி கோயிலின் நகை களை அச்சுதானந்தன் நேரில் பார்த்திருக்கிறாரா? பல லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் பாயசத்தில் வைத்துத் திருடக்கூடிய அளவுக்குச் சிறியதாகவா இருக்கின்றன? இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் அறைகளில் இருக்கும் நகைகளைக் கணக்கிட மட்டுமே இரண்டு முழு ஆண்டுகள் ஆகும். அச்சுதானந்தன் இப்படி ஏதாவது பேசிவிட்டு, பிறகு அதையே மாற்றிப் பேசுவார். என்னை யார் குற்றம்சாட்டினாலும் உண்மை எது என்பது என் மனதுக்கும் கேரள மக்களுக்கும் தெரியும்.''
'' 'கேரளத்தில் தேயிலைத் தோட்டங்களில் உள்ள தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அதனால், தமிழர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய மூணாறு, தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும்’ என அங்கு வசிக்கும் தமிழர்களே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதற்குத் தமிழக அரசியல் கட்சிகளிடமும் ஆதரவு இருக்கிறது. ஆனால், அது சாத்தியமா?''
''அப்படி ஒரு பேச்சுக்கே இடம் இல்லை. இடுக்கி, பீர்மேடு, தேவிகுளம் பகுதி மக்களோடு 50 ஆண்டுகளாக அணுக்கமான உறவுகொண்டு இருக்கிறேன். அவர்கள் ஒருபோதும் அப்படி நினைத்த‌தே இல்லை. மூணாறில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியதே இந்தக் கேள்விக்கான அடிப்படை. கேரளத்தில் ஆண்டாண்டு காலமாக‌ மலையாளிகளும் தமிழர்களும் சகோதரர்களாகப் பழகுகிறார்கள். மற்றபடி, தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத் தப்படுகிறார்கள் என்பது அபத்தமான குற்றச்சாட்டு. நாங்கள் தமிழர்களை நேசிக்கிறோம்.''
'' 'தமிழர்களை நேசிக்கிறோம்’ என்கிறீர்கள். ஆனால், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளம் முழுக்கத் தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்களே?''
(நீண்ட யோசனைக்குப் பிறகு...) ''சில கசப்பான, இதயத்தை நொறுக்கக் கூடிய மனிதத்தன்மையற்ற அசாம்பாவிதங்கள் அங்கும் இங்கும் நடந்திருக்கின்றன. அவற்றை நினைத்தால் இப்போதும் வருத்தமாக இருக்கிறது. ஒருகட்டத்தில் நிலமையை நாங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம். ஆனால், தமிழ்நாட்டில் தொடர்ந்து நீண்ட காலம் அப்பாவி மலையாள டீக்கடை நாயர்கள்கூடத் தாக்கப்பட்டார்கள். முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தமிழர்கள் தயவுசெய்து உணர்வுபூர்வமாக அணுகுவதைத் தவிர்த்துவிட்டு, அறிவுபூர்வமாக அணுக வேண்டும்.''
''ஆனால், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த ஆனந்த் கமிட்டி 'அணை பலமாக இருக்கிறது’ என்று அறிவித்த பிறகும் 'புதிய அணை கட்டியே தீருவோம்’ என நீங்கள்தானே பிடிவாதம் பிடிக்கிறீர்கள்?''
''999 ஆண்டு முல்லைப் பெரியாறு அணை உடன்படிக்கையில் இப்போதுதான் 117 ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. கடந்த ஆண்டில் தொடர்ச்சியாக எத்தனை முறை நிலநடுக்கம் வந்திருக்கிறது தெரியுமா? இன்று பலமாக இருப்பதாகச் சொல்லப்படும் அணை நாளையே அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு இடிந்துபோனால் அதற்கு யார் பொறுப்பு? ஒவ்வொரு நாளும் கேரள மக்கள் அணை இடிந்துவிடும் என்ற மரண பயத்திலேயே தூங்கச் செல்கிறார்கள். மக்‌களுடைய மரண பயத்தைப் போக்க புதிய அணையைக் கட்டியே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதே சமயம், உச்ச நீதிமன்றம் சொன்ன தில் ஒரு சொட்டு நீர்கூடக் குறைவில்லாமல் வழக்கம்போல தமிழகத்துக்கு வழங்கத் தயாராக இருக்கிறோம். ஏனெனில், தேனி, மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளின் வேதனையை நாங்கள் நன்றாக அறிவோம். அதேபோல, எம் மக்களின் உயிரைக் காப்பாற்ற புதிய அணை அவசியம் என்பதைத் தமிழகம் உணர வேண்டும். காலங்காலமாகக் கட்டிக் காத்த தமிழக-கேரள உற‌வைத் தொடர‌, பேச்சுவார்த்தை மூலமாக சுமுகத் தீர்வு காண வேண்டும் என்பதில் கேரளம் எப்போதும் உறுதியாக இருக்கிறது. ஆனால், தமிழக அரசுதான் இரண்டு முறை பேச்சுவார்த்தையில்கூடப் பங்கேற்கவில்லை.''
''117 ஆண்டுகள்தானே ஆகியிருக்கின்றன. 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணையே இன்னும் பலமாகத்தானே இருக்கிறது?''
''சோழர்கள் கட்டிய அணைக்கும் பென்னி குக் கட்டிய அணைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இன்றைய சூழலில் முல்லைப் பெரியாறு அணை யின் விரிசலை விதண்டாவாதமாக எடுத்துக்கொண்டால், அதற்கு நாம் கொடுக்கவிருக்கும் விலை அதிபயங்கரமாக இருக்கும். எங்களைப் பொறுத்தவரை 'தமிழகத்துக்குத் தண்ணீர்... கேரளாவுக்குப் பாதுகாப்பு.’ இதுவே எங்களுடைய ஸ்லோகன்‍!''
'' 'அண்டை மாநில முதல்வர்’ என்ற முறையில் இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோருடன் உங்களுக்கு நட்புறவு இருக்கிறதா?''
''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக முதல்வருக்கு நான் எழுதிய‌ கடிதத்துக்கு ஜெயலலிதா நெகட்டிவ் தொனியிலேயே பதில் எழுதி இருந்தார். ஓணம் திருநாளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்தபோது, அப்போதைய முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி கூறினேன். சந்தோஷம் தெரிவித்தார். ஆனால், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் ஒரே முகம்தான். ஒரே அணுகுமுறைதான். எனினும் தமிழகத்தோடு சிநேகம்கொள்ளவே கேரளம் விரும்புகிறது.''
''சிநேகம்கொள்ள விரும்புகிறீர்கள்... சரி. ஆனால், முல்லைப் பெரியாறில் புதிய அணை, நெய்யாறு நீர்ப் பிரச்னை, அட்டப்பாடியில் தடுப்பணை என உங்களுடைய அத்தனை நடவடிக்கைகளும் தமிழக விவசாயிக‌ளுக்கு எதிராகவே இருக்கின்றனவே. உண்மையில், நீங்கள் தமிழர்களுக்கு நல்லவரா?''
''இந்த மூன்று பிரச்னைகளிலும் கேரளத்தையும் என்னையும் தமிழக விவசாயிகள் விரோதிகளாகவே பார்ப்பது அபத்தமானது. தமிழக விவசாயிகளின் நலனிலும் வாழ்விலும் எனக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது. அவர்கள் நிச்சயம் கேரள மக்களின் அச்சத்தையும் நியாயத்தையும் புரிந்துகொள்வார்கள். முல்லைப் பெரியாறில் புதிய அணை, நெய்யாறில் கேரள விவசாயிகளுக்குத் தண்ணீர், தமிழக விவசாயிகளுக்கு தாராளத் தண்ணீர். இதுதான் என்னுடைய விருப்பம். சிறந்த நாடாளுமன்றவாதியாக அறியப்படும் வைகோகூட இம்மூன்று விவகாரத்திலும் அதீதமாக எதிர்ப்புக் காட்டுவது ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழக மக்களும் எங்கள் மக்களே. நான் தமிழர்களுக்கு நல்லவரா என்பதைவிட, கேரள மக்களின் உயிர் முக்கியமானதா... இல்லையா? இந்தக் கேள்விக்குத் தமிழகத்தின் பதில்தான் எனது நிலையும்'' - அழுத்தமாகக் கை குலுக்கி விடை கொடுக்கிறார் உம்மன் சாண்டி!

No comments:

Post a Comment