Thursday, September 13, 2012

"சசிகலாவின் வேதனையை ஜெயலலிதா உணர்வாரா? ம.நடராஜனின் அதிரடி பேட்டி.


ப்போது பேட்டி கேட்டாலும் உடனே தடதடக்கும் ம.நடராசன், சிறை சென்று மீண்ட பிறகு 'நோ... நோ’ என்று சொல்ல ஆரம்பித்தார். திடீரென்று 'நானோ’ டெக்னாலஜிபற்றி லண்டனில் பேசிவிட்டுத் திரும்பியவரைச் சமீபத்தில் சந்தித்ததில் இருந்து...  
 ''அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டீர்கள். இதற்கான உண்மைக் காரணத்தை இப்போதாவது சொல்ல முடியுமா?''
''முதலில் நான் வெளியேற்றப்பட்டேன் என்பதே காமெடி. வெளியே நிற்பவனை எப்படி வெளியேற்ற முடியும்? இதற்கான விளக்கத்தை முதல்வர் ஜெயலலிதாதான் சொல்ல வேண்டும். ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பவரைத்தானே அந்தக் கட்சியில் இருந்து வெளியேற்ற முடியும். உறுப்பினராகவே இல்லாத ஒருவனை வெளியேற்றி அறிக்கைவிட்ட சாதனையைச் செய்த ஒரே அரசியல் கட்சித் தலைவர் ஜெயலலிதாவாகத்தான் இருக்க முடியும். அரசு ஊழியராக இருக்கும் என் சகோதரியும் கட்சி உறுப்பினர் அல்ல. எங்களைக் கட்சியைவிட்டு நீக்கிய ஜெயலலிதா, எங்களது உறுப்பினர் எண்ணைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.''
''உங்கள் மீது நிலங்களை அபகரித்ததாக அல்லவா புகார்கள் கிளம்பின?''
''என் குடும்பத்துக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலத்தையே சும்மா போட்டிருக்கும் ஒருவன், எதற்குப் புதிதாக நிலங்களை அபகரிக்கப்போகிறேன்? நில அபகரிப்பு செய்ததாகச் சொல்லி என்னைக் கைதுசெய்து 82 நாட்கள் சிறையில் அடைத்தார்கள். ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தால், உடனே மறு வழக்கு. அதில் ஜாமீன் கிடைத்தால், அடுத்த வழக்கு என்று மொத்தம் ஆறு வழக்குகள் போட்டார்கள். இத்தனை மாதங்கள் ஆகியும் இவற்றில் எந்த வழக்குக்கும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லையே ஏன்? நான் குற்றம் செய்தவன், நிலங்களை அபகரித்தவன் என்றால், குற்றப் பத்திரிகையைத் தாக்கல்செய்து, வழக்கு நடத்தி தண்டனை வாங்கித்தாருங்கள். ஆதாரம் இருந்தால், அதைச் செய்யுங்கள். அவர்களது நோக்கம் என்னை மூன்று மாதங்கள் சிறைவைக்க வேண்டும். அதுதான் லட்சியம்.''
''முதலமைச்சர் நாற்காலிக்கு நீங்கள் ஆசைப்பட்டு சில காரியங்களைச் செய்ததாகச் சொல்கிறார்களே?''
''இதற்கு என்ன ஆதாரம்? ஜெயலலிதாவை முதன்முதலில் முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்ததே நான்தான். 25 ஆண்டுகளுக்கு முன் வராத ஆசை இப்போது எனக்கு வந்துவிட்டதா? கதை எழுதுவதையும் கற்பனைச் செய்தி களை உருவாக்குவதையுமே தொழிலாகக்கொண்ட சில போலீஸ் உயர் அதிகாரிகளின் கடைந்தெடுத்த கற்பனைதான் இது. தனிமையில் இருக்கும் ஜெயலலிதா மனதில் விஷ விதைகளைச் சில உயர் போலீஸ் அதிகாரிகள் விதைக்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய கற்பனைகளில் இதுவும் ஒன்று.
எந்தச் சுயநலனும் இல்லாமல், எங்கள் குடும் பத்தில் உள்ள நல்லது கெட்டது எதிலும் பங்கேற்காமல், ஜெயலலிதாவின் நிழலே போதும் என்று வாழ்ந்து வருபவர் சசிகலா. அவரைச் சந்தேகப்படுவது பாவம். இது போலீஸ்காரர்களின் கற்பனை. அ.தி.மு.க. ஆட்சி வரக் கூடாது என்று கடந்த தி.மு.க. ஆட்சியில் உழைத்த போலீஸ்காரர்கள்தான் இன்று ஜெயலலிதாவுக்கு முக்கியமாகிவிட்டார்கள். அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கியவரை உற்சாகப்படுத்தி... எதிர்க் கட்சித் தலைவராகக் கொண்டுவந்து, பின்னர் முதலமைச்சர் ஆக்கிய நடராசன் இன்று எதிரியாகத் தெரிகிறேன். ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற வெண்ணிற ஆடை நிர்மலா வெற்றி பெறுவதற்கு உழைத்த ஓ.பன்னீர்செல்வத்தைவிட நான் கெட்ட வன் ஆகிவிட்டேனா? 'எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு யார்?’ என்று கேட்டபோது பி.ஹெச்.பாண்டியன் சொன்ன பதிலை இன்று அவரால் சொல்ல முடியுமா? அ.தி.மு.க. தலைமைக் கழகக் கட்டடத்தை ஜெயலலிதாவுக்கு வாங்கித் தரும் போது இன்றைக்கு அமைப்புச் செயலாளராக ஆக்கப்பட்ட பழனியப்பன் எங்கே இருந்தார்... யாருக்காவது தெரியுமா?
கட்சியை, ஆட்சியை, தலைமைக் கழகத்தை மீட்டுக்கொடுத்த நடராசனுக்குச் சிறை. ஜெயலலி தாவை வரவிடாமல் தடுத்தவர்களுக்கு மாலையும் மரியாதையும் பொறுப்புகளுமா? இதுதான் என்னுடைய கேள்வி.''
''உங்கள் குடும்பத்தால் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர்தான் அதிகம் சேர்ந்தது என்பதை மறுக்கிறீர்களா?''
''எங்களால்தான் இரட்டை இலைச் சின்னம் கிடைத்தது. எங்களால்தான் தலைமைக் கழகம் மீட்கப்பட்டது. எங்களால்தான் 1991-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்படும் அரசியல் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. 'நான் ராஜினாமா செய்யப்போகிறேன்’ என்று  எழுதிவைத்திருந்த கடிதத்தை நான் கொண்டுபோய் பதுக்கிவைத்ததால்தான், அவரால் இன்று வரை அரசியல் செய்ய முடிகிறது. இதை  ஜெயலலிதாவால் மறுக்க முடியுமா?
ஜெயலலிதாவுடன் இருக்கிறோம் என்பதற்கா கத்தான் சசிகலா மீதும் தினகரன் மற்றும் பாஸ்கரன் மீதும் ஃபெரா சட்டம் பாய்ச்சப்பட்டு ஓர் ஆண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்தார்கள். துன்பம் வரும்போது எல்லாம் அனுபவித்தவர்கள் இந்த சசிகலா குடும்பத்தினர். ஆட்சிக்கு வந்ததும், 'உங்களால் எனக்குப் பிரச்னை’ என்று துரத்திவிடுவது அநியாயம். எங்களது உழைப்புக்கு என்ன கூலி?
ஜெயலலிதாவுக்காக 46 வயதில் அரசாங்க வேலையை விட்டுவிட்டு வந்தவன் நான். 10 ஆண்டு சர்வீஸை விட்டுவிட்டு வந்த எனக்கு ஜெயலலிதா செய்தது என்ன? சிறைத் தண்டனை மட்டும்தான்!''
''நீங்கள் எந்த ஆதாயமும் இதுவரை பெறவில்லையா?''
''எந்தச் சொத்திலாவது என் பெயர் உண்டா? நான் கைகாட்டி வளர்ந்தவர்கள் எல்லாம் எங்கோ இருக்க... நான் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கிறேனே? என்னுடைய சமகாலத் தோழர்கள் துரைமுருகன், காளிமுத்து, வைகோ போன்றவர்கள் எல்லாம் எம்.பி-க்களாக, எம்.எல்.ஏ-க்களாக, அமைச்சர்களாக இருந்துவிட்டார்கள். நான் இதுவரை எதற்காகவாவது முன்வந்தேனா?
அப்படிப்பட்ட என் மீது ஏன் இந்த சந்தேகம்? சாலையில் செல்லும் ஒரு பெண்ணுக்கு மனசுக்குள் ஏதோ பயம். அதற்காக எதிரில் பார்க்கும் அனைவரையும் கத்தியால் குத்த ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது என்னுடைய கைதும்... அதற்கு வெளியில் சொல்லப்படும் காரணமும்.''
''நீக்கப்பட்ட அனைவரும் வெளியில் நிற்க... சசிகலா மட்டும் மீண்டும் கார்டனுக்குள் சேர்க்கப்பட்டாரே, அவர் சென்றதை ஏற்றுக்கொள்கிறீர்களா?''
''சசிகலா மீண்டும் கார்டனுக்குள் சென்றதில் எனக்கு உடன்பாடு இல்லை. எங்கள் யாருக்கும் உடன்பாடு இல்லை. பெங்களூரு வழக்கு முடியும் வரை அவர் அங்கு இருப்பார் என்று நினைக்கிறேன். எங்களை நீக்கியதுபற்றிக் கவலை இல்லை. நான் எப்போதும் வெளியே இருப்பவன். சிலர் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் இருப்பவர் கள். ஆனால் சசிகலா, ஜெயலலிதாவுக்கு உதவியாக எத்தனை வருடங் கள் இருந்தார்? அவரை நீக்கியபோது அவர் மனது என்ன பாடு பட்டு இருக்கும். இதனை ஜெயலலிதா உணர்ந்தாரா?''
''சசிகலாவிடம் இது பற்றிப் பேசினீர்களா?''
''இது என்னுடைய சொந்த விஷயம். அதுபற்றிச் சொல்ல விரும்பவில்லை.''
''யாராவது உங்களிடம் சமாதானம் பேசினார்களா?''
''யாருடைய பேச்சுக்கும் நான் தலைவணங்க மாட்டேன். 'நடராசனுக் கும் சசிகலாவுக்கும் நான்தான் திருமணம் செய்துவைத்தேன். அந்த உரிமையில் கேட்கிறேன். அனைத்துக்கும் ஜெயலலிதாதான் காரணம், என்று சொன்னால் போதும். சசிகலா மீது எந்த வழக்கும் வராமல் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கருணாநிதி சொல்லி அனுப்பியபோது, அதை நிராகரித்தவன் இந்த நடராசன். அப்படிப்பட்ட என்னை யாரும் சமாதானப்படுத்த முடியாது.''
''கடைசியாக, உங்களது நண்பரைப் பற்றி ஒரு கேள்வி... மதுரை ஆதீனம், தனது இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவைத் தேர்ந்துஎடுத்துள்ளதை ஆதரிக்கிறீர் களா?''
''அபத்தமான முடிவு அது. மதுரை ஆதீனம் என்னிடம் பேசுவதற்கு எத்தனையோ முறை முயற்சித்தார். 'நித்தியானந்தாவை நீக்கிவிட்டேன் என்று அறிவித்துவிட்டு எனக்கு போன் செய்யுங்கள்; அதுவரை பேச மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு, அவரிடம் பேசுவதைத் தவிர்த்துவருகிறேன். ஆனால், 'முதலமைச்சருக்கு அருகில் இருக்கும் அதிகாரி என்னைக் காப்பாற்றுவார்’ என்று நித்தியானந்தா சொல்வது முதலமைச்சருக்குத் தெரியுமா?'' என்ற குண்டைப் போட்டு முடிக்கிறார் ம.நடராசன்.

No comments:

Post a Comment