அன்று நிறைந்த வெள்ளிக்கிழமை... சுப முகூர்த்த நாளும்கூட. 10 மாநகராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்து கூட்டணி தர்மத்துக்குக் கெட்ட நேரத்தை சுட்டிக் காட்டிவிட்டார் ஜெயலலிதா. 'எந்நேரமும் மாற்றத்துக்கு உட்பட்டது’ என்று அடிக் குறிப்பு இருந்தாலும், இந்த உள்ளாட்சித் தேர்தல் சர வெடிக்குத் திரி கிள்ளிப் போட்டிருக்கும் அ.தி.மு.க. மேயர் வேட்பாளர்களின் பரபர புரொஃபைல் இதோ...
சைதை துரைசாமி (சென்னை):
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட வர். 'மினிஸ்டர் கேண்டிடேட்’ என்று அ.தி.மு.க-வின் மூத்த புள்ளிகளே விளிக்கும் அளவுக்கு, ஜெயித்தால் மந்திரியாகும் யோகத்தில் இருந்தவர். சொற்ப வாக்குகளில் தோற்றார். அடுத்து அ.தி.மு.க-வின் கோட்டாவுக்கு வந்த ராஜ்யசபா எம்.பி. பதவி துரைசாமிக்குத்தான் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரபி பெர்னார்டுக்கு அதை வழங்கினார் முதல்வர். காரணம் வணக்கத்துக்குரிய, சிவப்பு விளக்கு சுழலும் காரில் துரைசாமியை அமர்த்த வேண்டும் என்ற எண்ணம்தானாம். இப்போதே மேயர் தோரணையில் மிதக்கிறார் சைதையார்.
கார்த்தியாயினி (வேலூர்):
வேலூர் அ.தி.மு.க-வினருக்கு சற்றும் அறிமுகம் இல்லாதவர். கணவர் அனுஷ்குமார், மாவட்ட மருத் துவர் அணி இணைச் செயலாளராக இருப்பதுதான் கட்சியில் கார்த்தியாயினியின் விசிட்டிங் கார்டு. வி.ஐ.டி. யுனிவர்சிட்டியில் பி.ஹெச்.டி. ஆய்வு செய்து வரும் கார்த்தியாயினி, வேட்பாளர் அவதாரம் எடுத்தது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனாலும் 'இதுவரை இந்த மாவட்டத்துல எங்க கட்சி சார்பா நடந்த எந்தக் கூட்டத்திலும் போராட்டத்திலும் இந்த அம்மாவை நாங்களே பார்த்தது இல்லை. எங்களுக்கே அறிமுகம் இல்லாத இவங்க, வேலூர் மக்களை எப்படி இம்ப்ரெஸ் பண்ணுவாங்க?’ என்று புலம்புகிறார்கள் வேலூர் அ.தி.மு.க-வினர்.
சவுண்டப்பன் (சேலம்):
கடந்த 2001 முதல் 2006 வரை சேலம் மாநகராட்சி யின் துணை மேயராகவும், ஆறு மாத காலம் மேயராகவும் இருந்தவர் சவுண்டப்பன். சேலம் மேடை நாடக நடிகர்கள் சங்கத் தலைவராக இருக்கிறார். பெயரில்தான் சவுண்டு இருக்கிறது. ஆனால், கட்சியில் செம சைலன்ட் பார்ட்டி. மேயர் பொறுப்பு வரை வளர்ந்து இருந்தாலும், தனக்காக எந்த கோஷ்டியும் சேர்த்துக்கொள்ளாமல், எந்த கோஷ்டியிலும் இணைந்துவிடாமலும் இருப்பவர். கன்னட தேவாங்க செட்டியார் இனத்தை சேர்ந்தவர். சேலத்தில் குறைவான வார்டுகளில் மட்டுமே இவரது சமூகத்தினர் இருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகக் கை ஓங்கி இருக்கும் வன்னியர்களை எப்படி வளைப்பார் என்பது புரியாத புதிர். இந்த நிலையில், 'கடந்த ஆட்சிக் காலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவை வைத்து சேலத்தில் விழா எடுத்தவர் சவுண்டப்பன்’ என்ற புகார் கார்டன் கதவைத் தட்டி இருக்கிறதாம்.
ஜெயா (திருச்சி):
மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜெயா, மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணிச் செய லாளர் ராஜேந்திரனின் மனைவி. 1984-ம் ஆண்டு முதல் கட்சி உறுப்பினர். ஆனாலும், இதுவரையில் எந்தப் பொறுப்பும் வகித்தது இல்லை. புதுமுகமான ஜெயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில், மேயர் ஸீட் எதிர்பார்த்துக் காத்திருந்த கட்சியின் சீனியர்கள் பலருக்கும் அதிர்ச்சி. புத்தூர் ஆபீஸர்ஸ் காலனியில் கால்நடைத் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியின் வீட்டுக்கு எதிரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். சிவபதியின் சிபாரிசின் பேரிலேயே ஜெயாவுக்கு ஸீட் கிடைத்தது என்றும் சொல்கிறார்கள். ஸீட் எதிர்பார்த்து ஏமாந்த பலரும், 'ஜெயாவை வேட்பாளர் ஆக்கினால் தோல்வி அடைந்துவிடுவோம்’ என்று தலைமைக்கு ஃபேக்ஸ் மேல் ஃபேக்ஸ் அனுப்பி வருகிறார்களாம். .
செ.ம.வேலுசாமி (கோவை):
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா தங்கியிருந்தார். அவருக்குத் தேவையான பொருட்களை தினமும் சென்னைக்கும் கொடநாட்டுக்குமாக கொண்டுபோய்ப் சேர்க்கும் பொறுப்பு வேலுசாமிக்குத் தரப்பட்டு இருந்தது. ஆனால், இந்தப் போக்குவரத்தை ஒழுங்காக நிர்வகிக் காததால் டென்ஷனான ஜெயலலிதா, கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து இவரைத் தூக்கி எறிந்ததாகச் சொல்வார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சூலூர் தொகுதியில் இவருக்கு முதலில் ஸீட் வழங்கப்பட்டது. பிறகு அதைப் பறித்ததால், தே.மு.தி.க. கைக்கு தொகுதி போனது. இப்படிக் கட்சியில் தொடர் புறக்கணிப்புக்கு உள்ளாகி நொந்துகிடந்த இந்த மாஜி அமைச்சருக்கு ஒரு வழியாக இப்போது அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.
மல்லிகா பரமசிவம் (ஈரோடு):
ஈரோடு மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செய லாளராக இருக்கும் மல்லிகா, கழகத்துக்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே கட்சியில் உயர் பொறுப்பு கிடைத்துள்ளது. மேயர் வேட்பாளர் வாய்ப்பு என்ற விறுவிறு வளர்ச்சியைப் பெற்றிருப்பது லோக்கல் அ.தி.மு.க-வினரின் மண்டையைக் காய வைத்து இருக்கிறது. பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மற்றும் அமைச்சர் கோகுல இந்திராவின் மூலம் மல்லிகா ஸீட் வாங்கி இருக்கி றார் என்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்திலும் இப்போதும் ஸீட் எதிர்பார்த்து ஏமாந்தவர்கள், மல்லிகாவுக்கு எதிராகப் 'பழைய விஷயங்களை’க் கிளறி எடுத்து தலைமைக்கு ஃபேக்ஸ் அனுப்பி இருக்கிறார்களாம். கூடவே தே.மு.தி.க-வும் ஈரோட்டை கேட்டு நச்சரிப்பது மல்லிகாவுக்கு கிலியைக் கிளப்பி இருக்கிறது.
விசாலாட்சி (திருப்பூர்):
மாநில மகளிர் அணித் துணைச் செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், தலைமைக் கழகப் பேச்சாளர் என்று அ.தி.மு.க-வின் கட்சிப் பொறுப் பளவில் பல அவதாரங்களை எடுத்திருக்கும் விசாலாட்சியிடம் ஜெயலலிதாவுக்கு தனிக் கருணை உண்டு. காரணம் இரு முறை எம்.எல்.ஏ. டிக்கெட் வழங்கப்பட்டு... பிறகு இவரது கைகளில் இருந்து பறிக்கப்பட்டதுதான். தொடர் ஏமாற்றங்களைத் தாங்கிக்கொண்டு விடாப்பிடியாக விசுவாசியாக இருந்து வரும் விசாலாட்சிக்குத் தகுந்த கௌரவத்தை வழங்கி இருக்கிறது தலைமை. ஆனாலும் விசாலாட்சிக்கு ஒவ்வொரு முறை வாய்ப்பு கிடைக்கும்போதும் அதைத் தட்டிவிடுவதோடு மட்டுமின்றி இவரது தோல்வியில் சந்தோஷப்படும் லோக்கல் அ.தி.மு.க. புள்ளி, இந்த முறையும் விசாலாட்சியைக் கவிழ்ப்பதற்காக 'சாமி... சாமி!’ என்று பிரார்த்தனையில் இறங்கியிருக்கிறாராம்.
ராஜன் செல்லப்பா (மதுரை):
கட்சியில் பொறுப்பான பதவிகள் இல்லாத போதும்கூட மதுரைக்குள் செல்லப்பாவுக்குத் தனியான ஓர் ஆதரவு வட்டம் உண்டு. மத்திய தொகுதி இடைத் தேர்தலில் அவரைப் பின்வாங்கவைத்துவிட வேண்டும் என்பதற்காக அழகிரி பட்டாளம் துரத்தித் துரத்தி அடித்தது. அவருடைய தொழில் சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் ஏகப்பட்ட இடைஞ்சல்கள். அத்தனைக்கும் ஈடுகொடுத்து கம்பாகக் களத்தில் நின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக மதுரையில் நடந்த ஹார்லிக்ஸ் திருட்டு விவகாரத்தைத் திரட்டிக் கொடுத்து ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மத்திய தொகுதி தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால், செல்லப்பாவின் வாய்ப்பு நழுவிப்போனது. அதனால்தான் இப்போது மேயர் வாய்ப்பு.
விஜிலா சத்தியானந்த் (திருநெல்வேலி):
அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் உயர்ந்த இடத்தை எட்ட முடியும் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இவரே. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தீவிர அரசியலுக்கு வந்த விஜிலாவுக்கு கட்சியின் மாநகர் மாவட்ட மகளிர் அணித் துணைச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. நெல்லை அ.தி.மு.க-வில் கோஷ்டி அரசியல் தீவிரமாக இருந்த நிலையிலும் எதிலும் தலையிடாமல் இணக்கமாகச் செயல்பட்டதால், பொதுக் குழு உறுப்பினர் பதவியும் தேடி வந்தது. அமைச்சர்கள் ஓ.பி.எஸ்., கோகுல இந்திரா ஆகியோரின் தீவிர விசுவாசி. ஆனாலும், கட்சியில் நீண்ட காலம் செயல்பட்டு வந்த சிலர், இவரது வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையிலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயிருக்கிறார்கள்.
சசிகலா புஷ்பா (தூத்துக்குடி):
அ.தி.மு.க-வில் மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் துணைச் செய லாளராக இருந்து வரும் இவருக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இறுதியில் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வுக்கு அந்தத் தொகுதி வழங்கப்பட்டுவிட்டதால் கடைசி நேரத்தில் போட்டியிடும் வாய்ப்பை இவர் இழக்க நேரிட்டது. அப்போது ஜெயலலிதா, 'உனக்கு மீண்டும் வாய்ப்பு தருகிறேன்’ என்று கூறியதை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார். 'சசிக்கு நெருக்கமாக இருப்பதும், மணல் வைகுண்டராஜனுக்கு உறவினராக இருப்பதுமே இந்த சசிகலாவுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைப்பதற்குக் காரணம்’ என்கிறார்கள். நெல்லையில் இலவசமாக ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தையும் சென்னையில் டீம் ஐ.ஏ.எஸ். அகடமியையும் இவர் நடத்தி வருகிறார் என்பது கூடுதல் தகுதி.
- ஜூ.வி. டீம்
No comments:
Post a Comment