தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு அரசியல் வியாபாரத்தில் இறங்கிய இவர் இன்று சுமார் ஆயிரம் கோடிக்கு அதிபதி. மாம்பழ மாவட்டம் முழுவதையுமே தன் விரல் நுனியில் வைத்திருக்கும் வல்லமை படைத்தவர். ஆரம்ப காலம் தொட்டே சர்ச்சையில் சிக்கி வளர்ந்தவர். தலைமைக்கே சவால்விடும் அரசிய ல்வாதி. இவரின் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தலைமை எல்லாம் இரண்டாவது பட்சம்தான். கட்சியைப் பொறுத்தவரை மூத்த தலைவர்களில் முக்கியமானவர். கட்சித் தலைமையின் கட்டளைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனக்கென தனிப்பாதையில் பயணம் செய்பவர். ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் மாவட்ட அரசியலில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர். இப்போது கைது, விசாரணை என குழப்பத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவரின் மனசாட்சியுடன் பேசினோம். அவரின் வாக்குமூலம்.
‘‘என்னைப் போன்ற அரசியல்வாதிகள் பொதுவாக எதிர்க்கட்சிகளை எதிர்த்துதான் அரசியல் செய்வார்கள். ஆனால் நானோ, எங்கள் கட்சிக்குள்ளேயே எதிர் நீச்சல் போட்டு வருகிறேன். என்னைத் தட்டி வைக்கவும். கட்டுப்படுத்தவும் புதுப்புது திட்டங்களை தலைமை அறிவித்திருக்கிறது. இவற்றை நான் எப்போதுமே கண்டுகொள்வதி ல்லை. காரணம், இருபது வயதில் அரசியலுக்கு வந்து எழுபத்துமூன்று வயதைக் கடந்துவிட்டேன். ஐம்பது வருடங்களுக்கு மேலான என் அரசியல் அனுபவம் என்னை அந்த அளவுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. எங்கள் பகுதியில் எனது தந்தைக்குக் கொஞ்சம் செல்வாக்கு இருந்தது. கதர்க் கட்சியின் அனுதாபியான அவருக்கு அரசியல் செல்வாக்கெல்லாம் அவ்வளவாக இல்லை. அப்போதுதான் சூரிய கட்சி உதயமாகி அதன் கதிர்கள் தமிழகத்தில் பரவத் தொடங்கியிருந்த காலம். அப்போது லோக்கல் பஞ்சாயத்துத் தலைவருக்கு கட்சி சார்பாக போட்டியிட்டு ஜெயித்தேன். அப்போது லேசாக எனக்கு கட்சியினரின்அறிமுகம் கிடைக்க எனது பெயரும் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடையத் தொடங்கியது. அடுத்து 62-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்கள் தொகுதியில் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டேன். எதிர்த்து நின்ற கதர்ச்சட்டையைத் தோற்கடித்து வெற்றி பெற்றேன். அதன்பிறகு என் அரசியல் பயணம் சுறுசுறுப்படைந்தது. மாவட்டம் முழுக்க கட்சியை வலுப்படுத்தினேன். எங்கள் சமுதாய மக்களே மாவட்டத்தில் அதிகம் என்பதால் அனைவராலும் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன். அடுத்து 67-ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றேன். காஞ்சித் தலைமை ஆட்சியமைத்தது. இரண்டு வருடங்களில் தலைமை மரணமடைய, புதிய தலைமை பதவிக்கு வந்தது. அதன்பிறகு 71-ல் நடந்த தேர்தலிலும் எனக்கே வெற்றி கிடைக்க.. மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க மனிதராக நான் உருவெடுத்தேன்.
இந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் சொத்துப் பிரச்னை உருவாகியிருந்தது. எனது தந்தைக்கு மூன்று மனைவிகள். வாரிசுகளுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்னையில் மற்றவர்கள் எனக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர். ஆனாலும் எனது அரசியல் செல்வாக்கின் எதிரில் இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த சூழ்நிலையி ல்தான் 72-ல் கணக்குக் கேட்டுப் பிரிந்து வந்தார் இலைத்தலைவர். அந்த நேரத்தில் எனது அரசியல் செல்வாக்கை சமாளிக்க எனது உடன்பிறப்பு இலைக்கட்சியில் தன் னை இணைத்துக் கொண்டு எனக்கு எதிராக குரல்கொடுக்கத் தொடங்கியது. அப்போது அந்த கட்சியின் தலைமை அறிவித்தபடி என்னை எதிர்த்து கட்சியினரைச் சேர்த் துக்கொண்டு என் உ.பி.யின் வாரிசே கோஷமிட்டு என்னை அசிங்கப்படுத்தியது. அந்த வாரிசின் மேல் நான் தனியாக வழக்குப் போட்டேன் இருந்தாலும் என் ஆத்திரம் அடங்கவில்லை. புதிய கட்சிக்கான வேகம் செயல்பாடுகள் என அக்கட்சி பெரிய தோற்றத்தில் உருவெடுக்கவே எனது செல்வாக்கு சரிந்துவிடுமோ என்ற குழப்பத்தில் கொஞ்ச நாட்கள் இருந்தேன்.
இந்த நிலையில், ஒரு நாள் இரவில் என் உடன்பிறப்பும், அந்த வாரிசும் வெளியில் சென்றிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார்கள். இந்தக் கொலை விவகாரம் தமிழகத்தையே உலுக்கிப்போட்டது. இந்த கொலை விவகாரங்களில் பிரதானமாக அடிபட்டது என் பெயர்தான். ஆனாலும் ஆளுங்கட்சியின் அரசியல் பின்னணி என்னை பிரச்னை நெருங்காமல் பார்த்துக் கொண்டது.
ஆனாலும் 77-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த இரட்டைக் கொலை வழக்கு விவகாரமே தமிழகம் முழுவதும் பிரதானமாக எடுத்து வைக்கப்பட்டது. அவர்களின் படங்கள் அடங்கிய போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் அச்சடித்து ஒட்டப்பட்டது. இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில் எங்கள் கட்சி படுதோல்வியடைந்து எதிர்க்கட்சியே ஆட்சியமைத்தது. அதாவது எதிர்க்கட்சி காலூன்றி ஆட்சிக்கு வர நானும் ஒரு மறைமுக காரணமாகிவிட்டேன். ஆட்சிக்கு வந்த வேகத்தில் இந்தக் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு தனி நீதிமன்றத்தை அமைத்தது அரசு. பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு அந்த வழக்கிலிருந்து நான் விடுதலையடைந்தேன். இவை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க எனது தாய்க்குப் பிறந்த ஆண்வாரிசுகளில் என்னைத் தவிர மற்றவர்கள் என் அராஜகம் தாங்க முடியாமல் இலைக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதன்பிறகு சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எனது அரசியல் வாழ்க்கையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட. என் உடன்பிறப்புகள் மளமளவென உயர்ந்தனர். எது எப்படி இருந்தாலும் எங்கள் மாவட்டம் முழுவதும் அன்று முதல் இன்று வரை எங்களின் உறவினர்களால்தான் கட்டியாளப்படுகிறது என்பது மட்டும் உண்மை.
அடுத்து 80-ல் நடந்த தேர்தலில் எனது உடன்பிறப்பின் பெண் வாரிசான லக்ஷ்மிவிஜயாவிற்கு எதிர்க்கட்சியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. வெற்றிபெற்ற அவருக்கு சுழல் விளக்கும் கொடுக்கப்பட்டது. அதாவது அரசியலில் நுழைந்ததில் நான் சீனியராக இருந்தாலும் எனக்கு முன்பாகவே அவருக்கு சுழல் விளக்கு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அந்தத் தலைமை மறையும் வரை எங்களாலோ எங்ககட்சியாலும் கூட எதுவும் செய்துவிட முடியவில்லை.
அதன்பிறகு 89-ல் நடந்த தேர்தலில் நான் வெற்றி பெற எனக்கு முதல் முறையாக சுழல்விளக்கு கொடுக்கப்பட்டது. உள்ளாட்சியை பார்க்கச் சொன்னார்கள். அந்த நேரத் தில்தான் என் மகனின் திருமணம் நடந்தது. நான் உள்ளாட்சியை கவனித்ததால் தமிழகம் முழுக்க இருந்த ஒட்டுமொத்த அதிகாரிகளும் கல்யாணத்திற்கு நன்கொடை வசூல் செய்து தரும்படி கேட்கப்பட்டது. இந்த விவகாரம் உளவுத்துறை மூலம் தலைமைக்குத் தெரியவர, ஏழு மாதத்திலேயே எனக்கு பதவியிறக்கம் செய்யப்பட்டு விவசாயத்தை கவனிக்கச் சொன்னார்கள். அன்றிலிருந்து பயிர் விவகாரங்களாலேயே நான் பிஸியாகி விட்டேன்.
உள்ளாட்சி போனால் என்ன? ஆட்சியிலிருந்தால் போதாதா? சுழல் விளக்கை வைத்துக்கொண்டு எனக்குத் தேவையான நிலங்களை எல்லாம் வளைத்துப் போட்டேன். எந்த சூழ்நிலையும் என் வருமானத்தைக் குறைத்துவிடவில்லை.
திருமண விஷயத்தில் நான் என் தந்தையை அல்ல தலைமையையே பின்பற்றிக் கொண்டேன். மனை, துணை என இரண்டாக அமைத்தேன். மனையை வீட்டின் வழியிலும் துணையை கலையின் வழியிலும் தேர்வு செய்தேன்.
சட்டமன்றத்தில் நான் மலர்கனியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதுதான் வெளிச்சத்திற்கு வந்தார் துணை. பிறகு நெடிய போராட்டத்திற்குப் பின்னரே என் ஆறாவது முடிச்சுக்கு அங்கீகாரம் கிடைத்தது.
நில அபகரிப்பில் எனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டேன். எங்கள் ஊரில் பஸ்டாண்டு அருகில் நகைக்கடை ஊழியர்களுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட சுமார் பத்து கிரவுண்டு நிலத்தின் மதிப்பு சுமார் ஐந்து கோடி. அதை ஆக்கிரமிக்க நான் பல்வேறு முயற்சிகள் செய்ய, பல சமுதாய அமைப்புகள் எனக்கு எதிராக எழும்பி பிரச்னையை பூதாகரமாக்கிவிட்டன. எங்கள் பகுதியில் என்கட்சி தோற்றுப் போனதற்கு அந்தம்மாள் காலனி விவகாரமும் முக்கியக் காரணம். அதேபோல் கோவை நகைக்கடை உரிமையாளருக்குச் சொந்தமான நிலத்தை மடக்க முயற்சிக்க, அதுவும் இப்போது சிக்கலாகிவிட்டது. இன்னொரு நில விவகாரத்தில் துவங்கிய பிரச்னை ஆறு கொலையில் முடிந்து என் உ.பி.யின் வாரிசு குற்றவாளியாகிப் போனார். இப்படி அண்மைக்காலமாக நான் இறங்கிய நில விவகாரமெல்லாம் வில்லங்கத்தில் சிக்கிக்கொண்ட து. என் மனைவியின் வாரிசும், துணையின் வாரிசும், உ.பி.யின் வாரிசும்தான் என் தளபதிகளாக நியமித்திருந்தேன். அதில் முதல் வாரிசு அரசியல், வசூல் என கவனிக்க வியாபாரத்தை இரண்டாம் வாரிசு பார்த்துக்கொண்டது. அதுமட்டுமின்றி என் கல்வி நிறுவனங்களையும் இவர்கள் இருவரே கவனித்து வருகின்றனர். எல்.கே.ஜி.யிலிருந்து இன்ஜினீயரிங் வரை படிக்க முடியும் அளவிற்கு கல்வி நிறுவனங்களை கட்டி வைத்திருக்கிறேன். உ.பி.யின் வாரிசுதான் ஒட்டுமொத்த கட்டப்பஞ்சாயத்துக்கும் தனி அதிகாரி. அவரால்தான் எங்கள் மாவட்டமே திக்குமுக்காடிப் போனது.
நில விவகாரங்களுக்கு காக்கிச் சட்டைகள் சிலரையே ஏஜெண்டுகளாக நியமித்ததுதான் என் ஸ்பெஷாலிட்டி. பட்டிபள்ளத்தில் மூன்று ஸ்டார்களைக் கொண்டிருந்த ராமரின் தம்பிதான் எனக்கு முக்கிய ஏஜெண்ட். அப்பா அப்பா... என்று என்னை அன்பாக அழைத்தவர்களில் அவரும் ஒருவர். அவர்மூலம் முக்கிய உருளை மாவுமில் ஒன்றை அதன் உரிமையாளரை மிரட்டி, உருட்டி பத்துக் கோடிக்கு வாங்கி முப்பது கோடிக்கு கைமாற்றிவிட்டேன்.
அதேபோல் எங்கள் பகுதியில் கண்காணித்து, ஆணையில் துணையாக இருந்த அரையடிதான் இப்போது சென்னையில் முக்கிய இடத்தில் முக்கிய பதவியில் இருக்கிறார். இங்கிருந்த அதிகாரியான அவரை இந்திய அதிகாரியாக மாற்றியதில் எனக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இப்போது என் தொடர்பான சில வழக்குகள் அவரின் தலைமையில் விசாரிக்கப்படுவதால், நான் நிச்சயம் விடுவிக்கப்படுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஆனாலும் தலையைப் பற்றித்தான் எனக்கு அதிக கவலை. ஊரின் பேரைச் சொல்லி போஸ்டர் அடிக்கக்கூடாது என்று பொதுவான அறிக்கையைப் போல் எனக்காகவே ஒன்றை வெளியிட்டார்கள். தமிழகம் முழுவதும் அனைவரும் அதன்பிறகு பெயரைப் போட்டே போஸ்டர் அடித்தனர். நானோ இன்றுவரை ஊரின் பெயரால்தான் அழைக்கப்படுகிறேன். அதேபோல் இரண்டுமுறை மாவட்டப் புள்ளியாக இருந்தவர்கள் மீண்டும் போட்டியிடக்கூடாது என்று அறிவித்தார்கள். நானே கொஞ்ச நாட்கள் என் வாரிசை அமர வைத்துவிட்டு மீண்டும் பதவிக்கு வந்துவிட்டேன். இப்படி எதிலும் என்னை கட்டுப்படுத்த முடியாததால் என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப் பார்க்கிறார்கள். அதேபோல் எங்களிடமிருந்து புயல் புறப்பட்டுப் போனபோது அதற்கான கூட்டம்வரை நான் போய்விட்டேன். ஆனால், மீண்டும் அழைத்து வரப்பட்டேன்.
என் வாரிசுகளுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. ஆனால், அவர்களின் வாரிசுகளை அங்கீகரிக்கச் சொல்கிறார்கள். இதில் எனக்குத் துளியளவும் உடன் பாடில்லை. அதுவும் கட்சிக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத துணையை பொதுவான குழுவின் மேடையில் அமர வைத்திருந்தது எனக்கு மிகுந்த கோபத்தைக் கொடுத்தது. எனவே அவரை மேடையிலிருந்து இறக்கச் சொல்லி தலைமைக்கு அங்கேயே எழுதிக்கொடுத்தேன். இப்படி எனது நேரடியான நடவடிக்கை கட்சியில் ஏற்றுக்கொள்ள ப்படவில்லை.
ஆனாலும் கட்சியில் அசைக்கமுடியாத சக்தியாகவே இருக்கிறேன். எங்கள் மாவட்டத்தில் தலைமையை சிறிய அளவிலும் என்னை முழு அளவிலும்தான் போஸ்டர்கள் அடிக்கின்றார்கள்.
இவை சில நேரங்களில் பிரச்னையைக் கிளப்பிவிடுகின்றன. இப்போது வழக்குகள் ஒரு பக்கமும், உள்கட்சி விவகாரங்கள் மறுபக்கமும் என்னை துரத்திக் கொண்டிருக்கிறது.
நன்றி குமுதம் ரிப்போர்டர் |
No comments:
Post a Comment