Saturday, September 3, 2011

அஜித்,அரசியலுக்கு வருவது நல்லது! - வெங்கட்பிரபு


இயக்குனர் வெங்கட்பிரபுவை புதிதாகப் பார்க்கும் யாருக்கும் சாமியார் ஒருவர் டைரக்டர் ஆகிவிட்டாரோ என்று சந்தேகம் வரும். அந்த அளவுக்கு அடர்ந்த தாடி; ஆனால், அதையும் மீறி கண்களில் கொப்பளிக்கிறது குறும்பு. அஜித்தின் ஐம்பதாவது பட இயக்குனர் என்ற எந்தப் பந்தாவும் இல்லாமல், நெஞ்சு வரைக்கும் நீளத் துடிக்கும் தாடியைத் தடவிக் கொடுத்தபடி பேசுகிறார்...

அஜித்துக்கும், அர்ஜுனுக்கும் இடையேயான போட்டிதான் மங்காத்தா. பல குடும்பங்களுக்கு ஆதரவா நிற்கும் ஒருத்தனைத் தேடி ஸ்பெஷல் பிராஞ்ச் சி.ஐ.டி. வர்றார். அதுக்கு என்ன காரணம் என்பதுதான் முன்பாதி. அதுக்கு முடிவு என்ன என்பது பின்பாதி. பின்பாதி முழுக்க ஒரே நாளில் நடப்பதுபோல திரைக்கதையைச் செய்திருக்கேன். எல்லாத்துக்கும் மேல அஜித்-பிரேம்ஜி கூட்டணியில் காமெடி தாறுமாறா ஆட்டம் போடுது!"

ஹீரோ, அஜித் எப்படி?

நான் அவரிடம் கதை சொல்லப் போனபோது, ‘மங்காத்தா’ படத்தில் உங்களுக்கு நெகடிவ் கேரக்டர் என்று சொன்னவுடன், ‘சரி’ என்று ஒப்புக் கொண்டார். அவருடைய பெயர் ‘விநாயக் மகாதேவன்’. அவர், இயல்பா கிரே ஹேர் - சால்ட் அண்ட் பெப்பர் லுக்குன்னு எப்படி இருக்காரோ அப்படியே விட்டுட்டோம். ஹாலிவுட் நடிகர் ‘ஜார்ஜ் க்ளூனி’ மாதிரி இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னேன். அப்படியே மாறி வந்தார். மற்றபடி, சீரியஸ் விஷயங்களை வெளிப்படையாகப் பேசும் அருமையான ஹீரோ அவர்."

அஜித், ரசிகர் மன்றங்களைக் கலைச்சுட்டாரே. அதனால மங்காத்தா பாதிக்கப்படுமா?

அவர் என்ன செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும். அவருக்கு தமிழக அரசியல் மட்டுமல்ல; தேசிய அரசியல் அத்துப்படி. தினமும் என்னிடம் அரை மணி நேரம் டிஸ்கஸ் செய்வார். அவரிடம், எதிர்காலத்தைப் பற்றி ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது. அஜித் போல நல்ல நேர்மையான மனிதர்கள் அரசியலுக்கு வந்தால், அது நாட்டுக்கு ரொம்ப நல்லது. அவர் ரசிகர் மன்றத்தைக் கலைத்தாலும் அவரின் பின்னால் கலங்காத ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. அவர்களைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணம் அவருக்கு இருக்கிறது."

உங்க பெரியப்பா, இளையராஜா இசையில் படம் பண்ணுவீர்களா?

பெரியப்பாவை வைத்து நான் சினிமா எடுக்க வேண்டும் என்பது எனது இலட்சியக் கனவு. நிச்சயமாக, எதிர்காலத்தில் இசைஞானியின் இசையில் நான் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுப்பேன். அதில் இசை தான் உயிர்நாடியாக இருக்கும். அதுமட்டுமல்ல, ‘மங்காத்தா’வில் என் சகோதரி பவதாரிணி, என் தம்பி கார்த்திக் ராஜா, பிரேம், மற்றும் யுவன் சங்கர் ராஜா, இத்தனை பேரும் ரீ-ரிக்கார்டிங்கில் பணியாற்றி இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா, மிகப் பிரமாதமாக மியூஸிக் போட்டு இருக்கிறார். அந்த வகையில் என் பெரியப்பாவின் ஆசீர்வாதம் எங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது."

பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற வைர முத்து, இளையராஜாவையும் சேர்த்து சினிமா செய்யும் முயற்சி உங்களிடம் இருக்கிறதா?

கவிப்பேரரசு வைரமுத்து ஒரு ஜீனியஸ். அவரின் மகன் மதன் கார்க்கியையும், இசைஞானி இளைய ராஜாவையும் சேர்த்து ஒரு படம் பண்ணும் திட்டம் உள்ளது."

கிராமப் பின்னணியில் சினிமா எடுப்பீர்களா?

நான் லண்டனில் படித்தவன். எனக்குக் கிராமம் தெரியாது. என் அப்பாவிடம் கிராமத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டு இருக்கிறேன். நான் ஒரு கிராமியப் பின்னணியில் நிச்சயமாக படம் பண்ணுவேன்."

டைரக்ஷனில் உங்கள் குரு..?

இயக்குனர் லிங்குசாமி, நண்பர் சமுத்திரக்கனி, இவர்களின் பாதிப்பு எனது படத்தில் இருக்கும். மற்றபடி, நான் எல்லா இயக்குனர்களின் படத்தையும் உன்னிப்பாகக் கவனித்து வருபவன்."

உங்களின் எதிர்காலக் கனவு?

‘ஸ்டீவன் ஸ்பீல்பர்க்’ செய்தது போல குழந்தைகளுக்காக நான் ஒரு படம் செய்ய வேண்டும்."

No comments:

Post a Comment