2012-13ஆம் கல்வியாண்டு முதல் 1-8 வகுப்புகளுக்கு கிரேடு முறை அமல்படுத்தப்படுகிறது. 2013-2014ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கும் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் மாணவர்கள் மொட்டைப் மணப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதற்கு பதிலாக அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரேடு முறையை அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,
பள்ளி மாணவர்கள் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையை மாற்றி அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை (கிரேடு சிஸ்டம்) கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு, நிபுணர் குழுவை அமைத்தது. அந்த நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை விவரம் வருமாறு:-
தற்போதைய தேர்வுமுறை மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே அமைந்துள்ளது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாக்களும் மாணவர்கள் எளிதாக கண்டறியும் வகையிலேயே உள்ளன. இதன் காரணமாக, மாணவர்களால் பாடத்தை தாண்டி வெளியே படிக்க முடியவில்லை.
அரசு பொதுத் தேர்வுகளாலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், தேர்வில் தோல்வி காரணமாக தவறான முடிவு எடுப்பதற்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு முறை கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது. மேலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.
இந்த முறையின்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 3-ம் பருவம். இந்த பருவங்களில் உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு என இரண்டு வகையான மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், பருவ இறுதி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகளான விளையாட்டு, நாடகம், பாடல்கள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், தேர்வுகள் பருவ இறுதி மதிப்பீட்டிலும் இடம்பெற வேண்டும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடு வழங்கப்பட வேண்டும்.
55 முதல் 60 மார்க் வரை - ஏ 1 கிரேடு (பாயிண்ட் 10)
49 முதல் 54 வரை - ஏ 2 கிரேடு (பாயிண்ட் 9)
43 முதல் 48 வரை - பி 1 கிரேடு (பாயிண்ட் 8)
37 முதல் 42 வரை - பி 2 கிரேடு (பாயிண்ட் 7)
31 முதல் 36 வரை - சி 1 கிரேடு (பாயிண்ட் 6)
25 முதல் 30 வரை - சி 2 கிரேடு (பாயிண்ட் 5)
19 முதல் 24 வரை - டி கிரேடு (பாயிண்ட் 4)
13 முதல் 18 வரை - இ 1 கிரேடு (பாயிண்ட் இல்லை)
12 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் - இ 2 கிரேடு (பாயிண்ட் இல்லை)
மூன்று பருவங்களின் முடிவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் கிரேடு சராசரி அடிப்படையில் ஆண்டு இறுதியில் கிரேடு வழங்கப்பட வேண்டும். ஒரு பருவத்தில் எடுக்கப்படும் பாடங்கள் அடுத்த பருவத்திற்கு வராது. இதனால், ஆண்டு தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும். இதுபோல, 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் கல்லூரிகளில் இருப்பதைப் போன்று செமஸ்டர் முறையையே அறிமுகப்படுத்தலாம்.
நிபுணர் குழு அளித்த மேற்கண்ட பரிந்துரைகளை ஆராய்ந்த அரசு மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் (2012-13) ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து (2013-14) 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறையை கொண்டுவர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் கல்லூரிகளில் இருப்பதைப் போல அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ தேர்வு முறை (டிரெமஸ்டர் சிஸ்டம்) நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment