''இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்... உறவும் வரும் பிரிவும்
வாழ்க்கை ஒன்றுதான்...'' - ஹம்மிங்கோடு வந்தார் கழுகார். அ.தி.மு.க. - தே.மு.தி.க. உரசல் பற்றிய செய்திகளோடு வருகிறார் என்பது நமக்குப் புரிந்துவிட்டது.
''கடந்த இதழுக்கு, 'கூட்டணியை உலுக்கும் உள்ளாட்சி நிலவரம்... விஜயகாந்த்தை கழற்றிவிட நினைக்கிறாரா ஜெ.?’ என்ற தலைப்பில் நான் கொடுத்த கவர் ஸ்டோரி, கிட்டத்தட்ட நடக்கத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே இருக்கும் கொதிநிலை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது.
'தே.மு.தி.க. எங்களுக்கு அரசியல் பாலபாடம் நடத்த வேண்டாம்’ என்று சட்டசபையில் ஜெயலலிதா சீறியது... அந்தக் கட்சியின் மீதான கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறது!'' என்ற கழுகாரிடம்,
''அவையில் என்னதான் நடந்தது?'' என்றோம்.
''தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியம், புதன்கிழமை அன்று பேசினார். 'சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தி.மு.க-வினர் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி சுகவாசம் அனுபவிக்க அனுமதிக்கக் கூடாது. சிறைவாசம் சுகவாசமாக மாறிவிடக்கூடாது’ என்று ஆட்சியாளர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.
அதாவது, கைதாகிறவர்களைக் கறாராக நீங்கள் கவனிக்கவில்லை என்பதுதான் அதனுடைய உட்பொருள்.
உடனே ஜெயலலிதா, 'எந்தக் கைதிக்கு அப்படி வசதி செய்து தரப்பட்டது என்று சொல்லுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம். பொத்தாம்பொதுவாகச் சொல்லக்கூடாது’ என்றார்.
அதற்கு விளக்கம் தராத தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினார்.
'திருத்தணி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடு...’ என்று சொல்லி அந்த இடத்தில் இருக்கும் பிரச்னையை அவர் சொல்லத் தொடங்க, உடனே ஜெயலலிதா எழுந்துவிட்டார். 'முதன்முறையாக இப்போதுதான் தே.மு.தி.க. அவைக்குள் நுழைந்து இருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் எங்களுக்குப் பாலபாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதேபோலதான் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. பேசும்போது, மேட்டூரில்தான் மேட்டூர் அணை இருக்கிறது என்றார். அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடு திருத்தணி கோயில் என்பதெல்லாம் நீங்கள் சொல்லாவிட்டால் எங்களுக்குத் தெரியாதா?’ என்று கோபத்தைக் காட்டினார். இப்படியரு ரியாக்ஷன் வரும் என்று தே.மு.தி.க. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!''
''கோபத்துக்குக் காரணம், உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு பிரச்னைதானே?''
''10 மாநகராட்சிகளில் நான்கு மேயர்களைக் குறிவைத்துக் கோரிக்கை வைத்திருப்பதை, கடந்த இதழிலேயே உம்மிடம் சொல்லியிருக்கிறேன். நகராட்சித் தலைவர் பதவிகளில் 40-க்கும் மேற்பட்ட பதவிகளையும் அதோடு மொத்த இடங்களில் 30 சதவிகிதத்துக்கு அதிகமான இடங்களையும் தே.மு.தி.க. கேட்கிறதாம்.
'சட்டசபைத் தேர்தலிலேயே குறைந்த இடங்களைத்தான் நாம் வாங்கி இருக்கிறோம். எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை வாங்கிவிட வேண்டும்’ என்று தே.மு.தி.க. முன்னணியினரே சொல்லி வருகிறார்கள். ஆனால், அந்த அளவுக்குக் கொடுக்க முடியாது என்பதில் அ.தி.மு.க. விடாப்பிடியாக இருக்கிறது.
எப்படியாவது தொகுதிப் பங்கீட்டை சீக்கிரமே முடித்துவிட வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்ப மனுவை முதன் முதலில் கேட்டது அ.தி.மு.க.! அதோடு கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதற்காக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன் அடங்கிய தொகுதிப் பங்கீட்டுக் குழுவையும் அமைத்துவிட்டார் ஜெயலலிதா. அ.தி.மு.க. ஒதுக்கும் இடங்களை வாங்கிக்கொண்டு தே.மு.தி.க. போட்டியிடுமா என்பது சந்தேகமே. சட்டசபைத் தேர்தலில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிக¬ளை எல்லாம் அழைத்துத் தனது அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதையும் அதன்பிறகு விடிய விடியப் பேச்சுவார்த்தை நடத்தித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதனால் தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது இதுவரை சஸ்பென்ஸ்தான்!''
''ஓகோ!''
''கேப்டன் கோபத்தைக் காட்டினாலும் பண்ருட்டி ராமச்சந்திரன் அ.தி.மு.க-வோடு ஆதரவாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறார். 'பாலபாடம் நடத்த வேண்டாம்’ என்று ஜெயலலிதா அவையில் சொன்னதற்கு இரண்டு நாட்கள் முன்பு விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கென பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா அவையில் அறிவித்தார். அதற்காக நன்றி தெரிவித்துப் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், 'அரசியலில் போட்டி இருக்கலாம், பொறாமை இருக்கக் கூடாது’ என்று அப்போது சொன்னதற்கு அர்த்தம் உண்டு என்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு மானிய கோரிக்கை மீது விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் முதலில் எதிர்க்கட்சியான தே.மு.தி.க. உறுப்பினர்கள்தான் பேசுகிறார்கள். அவர்கள் பேசும்போது, ஜெயலலிதா அவையில் இருப்பதில்லை. பணிகள் காரணமாகத்தான் அவர் வெளியே செல்கிறார் என்று சொல்லப்பட்டாலும், தே.மு.தி.க. இதனை ரசிக்கவில்லை. மொத்தத்தில், உரசல் நாளுக்குநாள் அதிகமாகிறது!'' என்ற கழுகார் அடுத்த சமாசாரத்தை அவிழ்த்தார்...
''தி.மு.க-வின் முப்பெரும் விழா வழக்கமாக செப்டம்பர் 15-ம் தேதிதான் நடக்கும். இம்முறை செப்டம்பர் 18-ம் தேதி வேலூரில் நடக்கும் என்று அறிவித்து இருந்தார்கள். திடீரென தேதியும் இடமும் மாறி இருக்கிறது. 30-ம் தேதி சென்னையில் முப்பெரும் விழா நடக்கும் என்று தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதிதான் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகிறது. அந்த சமயத்தில் முப்பெரும் விழா நடத்துவதை தி.மு.க. விரும்பவில்லை. அன்றைய தினம் சி.பி.ஐ. ஏதாவது சொல்லிவிடக் கூடாது என்ற பயம் இருக்கிறது.
மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைப்பது எளிது என்று சில மூத்த வழக்கறிஞர்கள் கருணாநிதிக்குச் சொல்லி இருக்கிறார்கள். மகளும் இருந்தால் நல்லதுதானே என்றும் கருணாநிதி நினைக்கிறார். 15-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகிவிட்டால், 30-ம் தேதிக்குள் கனிமொழிக்கு ஜாமீன் வாங்கி அழைத்து வந்துவிடலாம் என்று துடிக்கிறாராம் கருணாநிதி. அதற்காகத்தான் இந்த தள்ளி வைப்புகள்!''
''ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளதே?''
''ஸ்பெக்ட்ரம் வழக்கு கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சர் ஆகி வருவதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன. டெல்லி வட்டாரத்தில் பலமாகப் பேசப்படும் விஷயங்களை நான் உமக்குச் சொல்கிறேன். மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எனப்படும் 'டிராய்’ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைதான் இந்த சந்தேகங்களுக்கு அடிப்படைக் காரணம். '2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படவில்லை’ என்று சொல்கிறது அந்த அறிக்கை.
ஏலத்தில் விடாமல் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்று கொடுத்ததால் அரசுக்கு 1.75 லட்சம் கோடி இழப்பு என்று மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கை சொன்ன பிறகுதான் நாட்டில் இந்த விஷயம் தீயாய் கிளம்பியது. சி.பி.ஐ. இந்த விஷயத்தைக் கையில் எடுத்து விசாரித்தது. இதில் முகாந்திரம் இருப்பதாக நம்பிய பிரதமர், அன்றைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொன்னார்.
இதில் கலைஞர் டி.வி. சம்பந்தப்பட்டு இருப்பதாகச் சொல்லி, கனிமொழியும் கைதானார். தயாநிதி மாறன் மீது புகார் கிளம்பியது. அவரையும் ராஜினாமா செய்யச் சொன்னார் பிரதமர். 14 பேர் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். நீதிபதி சைனி, குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் காரியத்தில் மும்முரமாகி உள்ளார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் டிராய், 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் இழப்பு எதுவும் ஏற்படவில்லை’ என்று சொல்கிறது. ஆ.ராசா ஆதரவு வட்டாரத்தின் முகத்தில் இப்போதுதான் கொஞ்சம் சிரிப்பு மலர ஆரம்பித்துள்ளது!''
''டிராய்... தடுமாறுவது ஏன்?''
''எல்லாம் ப்ளாக் மெயில் பாலிடிக்ஸ்தான் என்று சொல்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய இருவர் மீதும் ஆ.ராசாவும் கனிமொழியும் சிறப்பு நீதிமன்றத்தில் வைத்த நேரடியான தாக்குதல்தான் டிராயின் இந்த வழுக்கலுக்குக் காரணமாம். 'அவர்கள் இருவருக்கும் தெரியாமல் நான் எதையும் செய்யவில்லை’ என்று ராசா சொன்னார். அதையே கனிமொழியும் சொன்னார்.
மன்மோகன், சிதம்பரம் இப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகிய மூவரையும் சாட்சிகளாகச் சேர்க்க வேண்டும் என்று இவர்களது தரப்பு வழக்கறிஞர் சுஷில்குமார் சொல்லி மேலும் டென்ஷனை அதிகப்படுத்தினார். இதைத் தொடர்ந்துதான் காங்கிரஸ் மேலிடம் தனது சுருதியை மெள்ளக் குறைக்க ஆரம்பித்துள்ளதாம்...''
''ஆனால் சி.பி.ஐ.?''
''அரசாங்கம் தகவல்களை முறையாகக் கொடுத்து விசாரணைக்கு ஒத்துழைப்பும் தந்தால்தானே வழக்கை முறையாக நடத்த முடியும்? என்னதான் நேர்மையான அதிகாரிகள், வளைந்து கொடுக்காத அதிகாரிகள் இருந்தாலும் பெரிய இடத்துப் பொல்லாப்பை எவ்வளவு காலம்தான் சமாளிக்க முடியும்? இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம், லேசாக கலர் மங்க ஆரம்பித்து இருப்பதாகவே சொல்கிறார்கள்.
இந்த நேரத்தில்தான் பிரசாந்த் பூஷண் மனுவும் தாக்கல் ஆகி உள்ளது. 'தயாநிதி மாறனின் பங்குகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த உண்மைகளை சி.பி.ஐ. கண்டு கொள்ளவில்லை. எனவே அவரிடம் முறையான விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடவேண்டும்’ என்று சொல்கிறது பிரசாந்த் பூஷணின் மனு. டிராய் கொடுத்த அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 6-ம் தேதி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதாவது உள் குழப்பம் ஆரம்பம் ஆகிவிட்டது. இது இந்த வழக்கை ஊத்தி மூடுவதற்கான முஸ்தீபுகளாகத்தான் தெரிகிறது''
''உச்ச நீதிமன்றம் சும்மா இருக்காதே?''
''அவர்களது மேற்பார்வையில்தான் வழக்கே நடக்கிறது. எனவே அவர்களும் இதை உன்னிப்பாகத்தான் கவனிக்கிறார்கள். டிராய் அறிக்கை வெளியானதற்கு மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் ஸ்வான் இயக்குநர் வினோத் மற்றும் யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா ஆகியோரது ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் சிங்வீ, டாட்டூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச்தான் இதை விசாரித்தது. வினோத், சஞ்சய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று டிராய் சொல்லி இருக்கிறது’ என்பதை ஜாமீன் வழங்குவதற்கான ஆதாரமாகக் காட்டினார்.
அப்போது குறுக்கிட்ட சி.பி.ஐ. வக்கீலும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான ஹரீன் ரவால், 'டிராய் அறிக்கை, மத்திய அரசுத் துறைகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம்தான். அது ரகசியமானது’ என்றார். 'பத்திரிகையில் வெளியான பிறகு என்ன ரகசியம்? இந்த அறிக்கை பற்றி நாங்கள் விசாரிக்கிறோம்’ என்றார்கள் நீதிபதிகள். எனவே உச்ச நீதிமன்றம் சும்மா விடாது என்றே தெரிகிறது. ரகசியமான அறிக்கையை பத்திரிகைக்கு யார் லீக் பண்ணியிருக்க முடியும்.. என்பதும் தெரியாத ரகசியம் அல்ல!'' என்றபடி கழுகார் விட்டார் ஜூட்!
ரேஸில் முந்தும் ஜூனியர்
காலியாக இருக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவி வளம் கொழிக்கும் அட்சயப் பாத்திரம் என்பதால், கடும் ரேஸ் நடக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் சீனியர்களை நியமிக்கும் சம்பிரதாயம் காற்றில் விடப்பட்டது. இப்போதும் ஏழாவது இடத்தில் உள்ள ஜூனியர் ஒருவர் ரேஸில் முந்திவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சகாயம் முன் ஆஜராவாரா அழகிரி?
திருமங்கலம், சிவரக்கோட்டையில் அழகிரிக்குச் சொந்தமான தயா இன்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி அந்தப்பகுதியின் நீராதாரமான கரிசல்குளம் கண்மாயையும், கமண்டல நதியையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பதாக விவசாயி ராமலிங்கம் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பாக, கடந்த மாதம் 19-ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தார்கள். ஆனாலும், 22-ந்தேதி கலெக்டர் சகாயம், மாவட்ட வருவாய் அதிகாரியோடு திடீரென மறுஆய்வு நடத்தியவர், கண்மாயின் 4-வது மடை இடித்து அடைக்கப்பட்டிருப்பதையும், நீராதாரப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்தார்.
இதைத் தொடர்ந்து 8-ந்தேதி, அழகிரிக்கும், காந்தி அழகிரிக்கும் நோட்டீஸ் அனுப்பினார். 'நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தடுப்புச் சட்ட’த்தின் கீழ் அனுப்பப்பட்ட நோட்டீஸில், வருகிற 16-ம் தேதி காலை அழகிரியும், காந்தி அழகிரியும் கலெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் சகாயம் முன்னிலையில் அவர்கள் ஆஜராவார்களா?
No comments:
Post a Comment