* இந்திய ஹாக்கி வீரர்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது? இந்திய அணியின் கேப்டன் ராஜ்பால் சிங்கின் வாக்குமூலம் இது - ‘ஹாக்கி வீரர்களிடம் ஷூவே கிடையாது. எங்களுக்கு வழங்கப்படும் உபகரணங்களும் மிக மோசமானதாக இருக்கும். 25,000 ரூபாயைப் பரிசாகக் கொடுப்பதால் யாருக்கும் சந்தோஷம் இல்லை. இது எங்களை நிலை குலைய வைத்துள்ளது. எங்களுக்கு மரியாதை தராவிட்டாலும் பரவாயில்லை. அவமானப்படுத்த வேண்டாம்.’
இந்திய அணியின் கேப்டனே ஹாக்கி நிர்வாகத்தை இப்படியெல்லாம் வெளிப்படையாகக் கண்டித்த பிறகு தான் நிலைமை மாறத் தொடங்கியது. இந்திய விளையாட்டு அமைச்சகம், ஹாக்கி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. இது தவிர, பஞ்சாப் அரசாங்கம் ஹாக்கி அணிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியது. இந்திய ஹாக்கி நிர்வாகத்தில் நிலவும் குளறுபடிகளால் இந்தியாவில் நடக்கவிருந்த சாம்பியன்ஸ் டிராபி, நியூசிலாந்துக்குச் சென்று விட்டது. ஆனாலும், ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டிகள், அடுத்த பிப்ரவரியில், இந்தியாவில் தான் நடக்கவுள்ளன. லண்டன் ஒலிம்பிக்குக்குத் தகுதி பெறாவிட்டால் இருக்கிறது இன்னொரு ரகளை! கிரிக்கெட் உலகக் கோப்பை நடந்தபோது அதைப் பயன்படுத்திக் கொண்டு சர்ச்சைக்குரிய வாக்குறுதிகளை அள்ளி வீசினார் பூனம் பாண்டே. விளைவு, இன்று இந்தியாவின் முன்னணி மாடலாகி விட்டார். இப்போது, இந்திய ஹாக்கியில் நிலவும் சர்ச்சைகளை முன்வைத்து, டிஜே ஜென்னி என்கிற இன்னொரு மாடலும் குளிர்காயக் கிளம்பிவிட்டார். தன் நிர்வாணப் படங்களை விற்று ஹாக்கி வீரர்களுக்கு உதவுவதாகக் கிளம்பியிருக்கிறார். ‘நான் பூனம் பாண்டே போல பொய்யர் கிடையாது. சொன்னதைச் செய்து தருவேன்’ என்றெல்லாம் சபதமளிக்கிறார்.
* ஒலிம்பிக் தங்க மகன் அபினவ் பிந்திரா, சுயசரிதை எழுதியுள்ளார்.
‘எ ஷாட் அட் ஹிஸ்டரி’ என்கிற நூலை எழுதி முடித்துள்ளார். ‘ஒரு துப்பாக்கி சுடும் வீரனின் போரடிக்கும் கதையை யார் படிக்கப் போகிறார்களோ?’ என்று தன்னடக்கத்தோடு பேசுகிறார் பிந்திரா.
* தேர்வுக்குழு தலைவரான ஸ்ரீகாந்த், இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட தோல்விகளால் தம் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்று ஆங்கிலச் செய்தி சேனலொன்றில் அரை மணி நேர நிகழ்ச்சியொன்று சூடாக நடைபெற்றது. ஆனால், ஸ்ரீகாந்த்தின் பதவிக்காலம் அடுத்த வருடம்தான் முடிகிறது. அதுவரை அப்பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது. ஸ்ரீகாந்த் பல குளறுபடிகள் செய்தாலும் தமிழக வீரர்களின் திறமை வெளிப்பட்ட போதெல்லாம் உடனடியாக அவர்களை இந்திய அணிக்குத் தேர்வு செய்தார். முரளி விஜய், பத்ரிநாத், அஸ்வின், முகுந்த் போன்ற வீரர்கள் இதனால் அனுகூலம் அடைந்தார்கள். ஸ்ரீகாந்த் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் உடனடியான இத்தனை வாய்ப்புகள் கிடைத்திருக்குமா என்று யாரும் யோசித்தது போல தெரியவில்லை.
* ராகுல் திராவிட் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இங்கிலாந்து தொடரில், தோனிக்கு அடுத்து சிறப்பாகவும் பொறுப்பாகவும் ஆடியது திராவிட் மட்டும்தான். ஒருநாள் போட்டியில் பத்தாயிரம் ரன்களைக் கடந்தும் திராவிடுக்கு உரிய மதிப்பை யாருமே அளிக்கவில்லை. எளிமையான மனிதராக இருப்பதால் இவரை அலட்சியப்படுத்தியே அவருடைய கிரிக்கெட் காலத்தை முடித்துவிட்டார்கள். ஆனால், திராவிட் அளவுக்கு அணிக்காக, தலையைக் கூட கொடுக்கத் தயாராக நின்ற ஒரு வீரர் என்று யாரையும் கை நீட்ட முடியாது. விக்கெட் கீப்பராகவும் ஓப்பனராகவும் திராவிட் ஆடிய போதெல்லாம் அவர் பலி ஆடாகவே பார்க்கப்பட்டார். ஆனாலும், என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதைத் தட்டிக் கழிக்காமல் அந்தப் பணிக்குச் சிறப்பு சேர்த்தவர் திராவிட்.
No comments:
Post a Comment