Thursday, September 29, 2011

நளினி தொடர்: பாகம் -2 விடியாத இரவு...

ஊரெல்லாம் இருட்டு. சென்னையில் பிரதான ஏரியாவான ஆர்.ஏ. புரத்தின் க்ரீன்வேஸ் சாலையும் இருட்டாகத்தான் இருந்தது. என் கண்கள் தூக்கத்தைத் தேடினாலும், பக்கத்து அறையில் என் கணவர் மீது என்னவெல்லாம் சித்ரவதைகள் அரங்கேற்றப்படுகின்றனவோ என்ற பயம், தூக்கத்தை மறுத்தது. எரிச்சலில் தவித்த என் கண்களுக்கு, அந்த அறையின் பளீர் வெளிச்சம் அலர்ஜியைக் கொடுத்திருக்க வேண்டும். வாழ்க்கையின் எந்த இடத்தில் இருக்கிறோம், எதிர்காலம் என்ன என்றே புரியாத கேள்விகளில் புரண்டு கொண்டிருந்த என்னை பூட்ஸ் கால்களின் சத்தம் எழுப்பியது.



திரும்பிப் பார்த்தேன். குண்டு முகமுடைய அந்த போலீஸ் உயரதிகாரி, கண்களில் கொடூரம் கொப்பளிக்க என்னை நோக்கி வந்தார். அவரைப் பார்த்து எழுந்து நின்றேன். அவரது கைகளோ நேராக என் கழுத்துக்கு நீண்டது. என் கழுத்தில் கிடந்த தாலியை கெட்டியாகப் பிடித்தது. என் உடல் கூசியது. என்னையும் மீறிய என் உடல் நடுக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. உடம்பெல்லாம் தொப்பலாக நனைந்திருந்தது. அவரின் கைகளின் பலத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. நொடியில் என் தாலியை பிடுங்கி எறிந்தார். என் இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று மோதவைத்து வளையல்களை உடைத்தார்.


nalini-story-2
அடுத்து அவரின் பார்வை என் கால்களுக்குச் சென்றது. மெட்டியையும், கொலுசையும் கழற்றி வீசினார். ஒரு விதவையாகவே அங்கே நான் உருவாக்கப்பட்டேன். அதைப் பார்த்து ரசித்து கை தட்டினார். அடுத்த நொடியில் நான்கைந்து காவலர்கள் வந்து அவர் பின்னால் நின்றார்கள். ‘ம்.. ஆரம்பிங்க’ என்று அந்த அதிகாரி இசைவு கொடுக்க, அந்த காவலர்கள் கோரஸாக என்னை திட்டத் துவங்கினார்கள். சொல்லப் போனால், அவர்கள் பிரயோகித்த அசிங்க வார்த்தைகள் என்னை அன்றைக்கே கொன்றுவிட்டது.



வார்த்தைகளால் கொல்லப்பட்டு ஒரு நடைபிணமாக நின்றேன். மீசையில்லாத அமுல்பேபி நடிகர் பெயர்கொண்ட ஆய்வாளர் என் பக்கத்தில் வந்தார். என் கண்களை நேராகப் பார்த்தவர், ‘கொலைகாரி, நடுத்தெருவில் உன்னை அம்மணமாக ஓடவிட்டு, கல்லால் அடிச்சுக் கொன்னாலும் என் ஆத்திரம் தீராது. உன்னை........................தால்தான் என் வெறி அடங்கும்...” என்று அவரது கைகளால் அசிங்க சைகைகளைக் காட்டினார். நான், கண்களை மூடிக்கொண்டேன். இதைப் பார்த்துவிட்டு, பலம் கொண்ட மட்டும் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அன்றைய முழு இரவும், எனக்கு காதுகள் கேட்கவில்லை. இங்கே இன்னொரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு ஆசை. இந்தத் தொடரில் நான் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. எனக்கு நடந்த அவலங்கள், மனித உரிமை மீறல்கள் வெளி உலகுக்கு தெரிய வேண்டும் என்பது மட்டும்தான் என் நோக்கம்.

மறுநாள், ஆயுதம் தாங்கிய போலீசார் எங்களை ரவுண்டப் செய்து நின்றார்கள். என்னையும், என் கணவரையும் வேனில் ஏற்றினார்கள். எங்கே கொண்டு போகிறார்கள் என்பதுகூட எங்களுக்குத் தெரியாது. செங்கல்பட்டில், ஒரு நீதிமன்றத்தில் வண்டியை நிறுத்தியபோதுதான், நாங்கள் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். நீதிமன்ற வளாகத்தில் வைத்தே, ‘நீதிபதிகிட்ட நேத்து ராத்திரி நடந்ததைச் சொல்ல மாட்டீங்கன்னு தெரியும். சொன்னா... உங்க உசுருக்கு உத்தரவாதம் கிடையாது’ என்று எப்போதோ பார்த்த சினிமா வசனத்தை உச்சரித்து மிரட்டினார்கள். நீதிபதி முன்பு நிறுத்தியபோதுகூட என் பக்கத்தில் நின்ற போலீஸார், உசுருக்கு உத்தரவாதம் இருக்காது என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள். நீதிபதி, எங்களை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை.



எங்கிருந்து எனக்குள் அப்படி ஒரு ஆவேசம் தோன்றியதோ தெரியாது. ‘‘அய்யா நாங்க எந்தக் குற்றமும் செய்யல. தயவுசெஞ்சு எங்களுக்கு அரசாங்க செலவுல வக்கீல் வெச்சுக் கொடுங்க’’ என்று நீதிபதியிடம் வேண்டினேன். நீதிபதி, தலையை நிமிராமலேயே, “அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்” என்றார். அவர் சொல்லி முடிப்பதற்குள், அருகில் இருந்த அறைக்குள் எங்களை வேகவேகமாக இழுத்துச் சென்றுவிட்டார்கள்.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக, ஏதேதோ வாதங்களை எங்களுக்கு எதிராக அரசுத் தரப்பு வக்கீல் அடுக்கினார். எதுவுமே சரியாக கேட்கவில்லை, புரியவும் இல்லை. பின்பு, மீண்டும் நீதிபதி முன்பாக நிறுத்தி, ஒரு வினாடிகூட தாமதிக்காமல் எங்களை வண்டியில் ஏற்றினார்கள். “உனக்கு வக்கீல் வேணுமா? நாங்க வச்சுக் கொடுக்கிறோம்’’ என்று கருவியவாறே வண்டியில் வைத்தே என்னை அடிக்க ஆரம்பித்தார்கள். ஏற்கெனவே நொந்து போயிருந்த என் உடம்புக்கு அது வலிக்கவில்லை. நான், வக்கீல் வேண்டும் என்று கேட்ட விவகாரம், மறுநாள் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. எங்களை போலீஸ் காவலில் அனுப்பும் ரிமாண்ட் ரிப்போர்ட்டிலும் இந்த விபரங்கள் நீதிபதியால் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், என்ன பதிவு செய்து என்ன? வக்கீல் வைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொடக்கம் முதலே என்னை இவ்வழக்கில் அப்ரூவராக மாற்றி, என்னை என் கணவரிடமிருந்து பிரித்து, இலங்கைத் தமிழரான அவரை முதல் குற்றவாளியாக்க வேண்டும் என்பதே சிறப்புப் புலனாய்வுக் குழுவின்(எஸ்.ஐ.டி.) திட்டமாக இருந்தது. என்னை மட்டும் வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும், சித்ரவதைகளை நிறுத்திவிடுவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறுவது, கணவன், மனைவி இடையே வெறுப்பை உண்டாக்குவது, மிரட்டுவது, சித்ரவதை செய்வது என எஸ்.ஐ.டி கையாளாத தந்திரங்களே இல்லை.

என் கணவரை நான் வெறுக்கவேண்டும் என்பதற்காக, என்னென்ன பொய்களைச் சொல்ல முடியுமோ, அத்தனை பொய்களையும் என்னிடம் சொன்னார்கள். இதேபோல், கர்ப்பிணியான என்னைப் பற்றி, எனது கணவரிடம் பல்வேறு பொய்களைக் கூறி, என் கணவரும் என்னை வெறுக்கும்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

இந்த முயற்சிக்கு, என் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த எங்கள் வாரிசு தடையாக இருக்கும் என்று எஸ்.ஐ.டி.யினர் கருதினர். நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் போதெல்லாம் ஷூ காலை வேகமாக என் வயிற்றுக்கு நேராக கொண்டு வந்து, ‘‘குழந்தையை காலால் மிதிச்சே கொன்னுடுவோம்’’ என்று ஒருவர் மாற்றி ஒருவர் மிரட்டுவார்கள். நான், ஒவ்வொரு நொடியும் என் குழைந்தையை கொன்றுவிடுவார்களோ என்ற பயத்திலேயே இருப்பேன்.



இந்த வழக்கில் எங்கள் அனைவரின் ஒப்புதல் வாக்குமூலங்களையும் ஒரே ஒரு அதிகாரிதான் வரிசையாகப் பதிவு செய்தார். மல்லிகையில் நான் பார்த்த அதிகாரிகளில் இந்த அதிகாரி மீது மட்டும் ஏனோ ஒரு மரியாதை வந்தது. ஆனால் அடுத்த நாள் ‘மரியாதைக்குரியவன் நான் அல்ல’ என்பதை அந்த அதிகாரியும் காட்டிவிட்டார். அந்த அதிகாரியும் மற்ற சில அதிகாரிகளும், தொடர்ந்து 20 நாட்கள் என்னை தூங்கவிடாமல் பார்த்துக்கொண்டனர். இருபது நாட்களும் அவர்களுக்கு அதுதான் டியூட்டியாக இருந்தது. தினமும் இரவு 10 மணியானால் போதும். ஒரு பெண் போலீஸ் என்னை அழைத்துச் சென்று, அன்று எந்த அதிகாரி பணியில் இருக்கிறாரோ, அவருடைய அறைக்குள் என்னை விட்டுவிடுவார். கதவு வெளியிலிருந்து சாத்தப்படும்.



இதெல்லாம், என்னை எந்த நேரம் யார் பலாத்காரம் செய்வார்களோ? என்ற பயத்தை என்னுள் ஏற்படுத்தும் தந்திரம் என்பது பின்னாளில் எனக்குத் தெரிய வந்தது.



அறையில் நுழைந்ததும் அந்த அதிகாரி, “ஏண்டி, தே.....! நீயும், உன் குழந்தையும் உயிரோடு இருக்கணும்னா, ஒழுங்கா எல்லா உண்மையையும் சொல்லிடு. இல்லைன்னா இங்கிருந்து உயிரோட போக முடியாது’’ என்று ஆபாச வார்த்தைகளால் திட்டுவார். நான், எனக்குத் தெரிந்த உண்மைகளை ஒன்றுவிடாமல் சொல்ல ஆரம்பிப்பேன்.

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவர் கண்களை மூடி, தூங்குவதுபோல் நடிப்பார். அவர் தூங்கிவிட்டார் என நினைத்து, நான் சொல்வதை நிறுத்தினால், ‘யார ஏமாத்தப் பார்க்கற...’ என்று மீண்டும் ஆபாச வார்த்தைகளால் திட்டி அடிக்கவும் செய்வார். நான் திரும்பவும் சொல்ல ஆரம்பிப்பேன். அப்போது மீண்டும் அவர் கண்களை மூடுவார். நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். ஆனால் அவரோ...

-இரவுகள் நீளும்

நன்றி மீடியா வாய்ஸ் வார இதழ்


No comments:

Post a Comment