முந்தைய ஆட்சியில், அரசு "கேபிள் டிவி' நிறுவனம், ஆளுங்கட்சியினரின் திடீர் தலையீடு காரணமாக, வெறும் 432 இணைப்புகளாக குறைக்கப்பட்டது. பின், அந்த நிறுவனமே முடக்கப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததால், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கேபிள் கார்ப்பரேஷனுக்கு தனியாக தலைவரும், நிர்வாக இயக்குனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே, தஞ்சை, நெல்லை, கோவை மற்றும் வேலூரில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள், பராமரிப்பு செய்யப்பட்டன.
மீதமுள்ள மாவட்டங்களிலும், "கேபிள் டிவி' சேவையை துவங்கும் வகையில், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.,க்கள், அரசு "கேபிள் டிவி'யில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 40 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். இவர்களில், 34 ஆயிரத்து 344 ஆபரேட்டர்கள், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தில் இணைந்துள்ளனர். இவர்களிடம், ஒரு கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன.
அரசு கேபிள் மூலம், கட்டணச் சேனல்கள் உட்பட 90 சேனல்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. கேபிள்ஆபரேட்டர்கள் மூலம், சந்தாதாரர்களிடம் மாதச் சந்தாவாக ஒரு இணைப்புக்கு 70 ரூபாய், கேபிள் ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும். இதில், ஒரு இணைப்புக்கு 20 ரூபாயை, கேபிள் ஆபரேட்டர்களிடமிருந்து அரசு "கேபிள் டிவி' நிறுவனம் வசூலிக்கும். எனவே, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், அரசு "கேபிள் டிவி' இணைப்புகள் இன்று முதல் 24 மணிநேர தடையற்ற ஒளிபரப்பு சேவையை வழங்க உள்ளன.
இதற்கான துவக்க நிகழ்ச்சி, தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது. அரசு கேபிள் ஒளிபரப்பை, முதல்வர் ஜெயலலிதா இன்று, வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார். அதே நேரத்தில், வேலூர் மையத்திலும் விழா நடந்தது. அதில், அதிகாரிகள் கலந்து கொண்டனர். சேவையை துவக்கி வைத்து, சென்னையில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். . இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள், தங்களது சந்தாதாரர்களுக்கு, ஒளிபரப்பை வழங்கினர்.
ஏக போக நிலை மாற்றம் ஜெ., பேச்சு : துவக்க விழா நிகழ்ச்சியில் முதல்வர் ஜெ., பேசியதாவது: அரசு கேபிள் துவக்கி வைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கேபிள் டி.வி., இணைப்பு வழங்குவதன் மூலம் ஏகபோக நிலையில் இருந்து மக்களிடம் அதிரடி கட்டணம் வசூலித்து ஒரு குடும்பத்தினரே அதிக லாபம்பெற்று வந்தனர். இதனால் அரசு கேபிள் டி.வி., மூலம் அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும் என மக்களுக்கு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறேன். இதன் மூலம் ஏகபோக நிலை மாறியிருக்கிறது. இன்று முதல் மக்கள் குறைந்த செலவில் நிறைந்த சேவையை பெற முடியும் நிலை உருவாக்கியிருக்கிறோம் . அரசு மூலம் நிர்வகிக்கப்பட்ட கேபிள் டி.வி., ஆப்ரேட்டர்கள் மூலம் ரூ. 70 மட்டுமே வசூலிக்கப்படும். இதன் மூலம் மக்களுக்கு மாதம் 70 முதல் 100 ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும். குறைந்த கட்டணத்தில் கேபிள் டி. வி, இணைப்பு பெற வழி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஜெ., பேசினார்.
அதேபோல, மற்ற மாவட்டங்களிலும் கேபிள் சேவையை அந்தந்த ஆபரேட்டர்கள் வழங்குகின்றனர். கட்டண சேனல்களாக உள்ள, "சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி, டிஸ்கவரி தமிழ்' போன்ற சேனல்கள் முதலில் இடம்பெறாது. இலவச சேனல்கள் மட்டுமே இன்று ஒளி பரப்பப்படும். கட்டணச் சேனல்களின் கட்டணத்தை முடிவு செய்த பின், அவற்றின் ஒளிபரப்பு வழங்கப்படும். மேலும், உள்ளூர்சேனல்கள் இதனால் சற்று சுதந்திரமாக முறையான வரன்முறைகளுடன் ஒளிபரப்பாகும் சூழ்நிலை ஏற்படும்.அரசு "கேபிள் டிவி' செயலாக்கம் பல்வேறு மாவட்டங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், வரவேற்பு அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடைமீறி ஒளிபரப்பாகும் உள்ளூர் சேனல்கள்: கடந்த ஆக.15 முதல் தமிழகம் முழுவதும் உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்புக்கு தமிழக அரசு விதித்த தடையை மீறி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜெய்குரு, ஜே.ஜி.,-ஜி,- "ஜி' பிளஸ், "ஜி' மியூசிக் உள்ளூர் கேபிள் "டிவி' சேனல்கள் ஒளிபரப்பாகிறது. தேனி மாவட்டம் கூடலூரில் "ஜி.சி.சி.', தேவதானப்பட்டியில் "ராகம்', சின்னமனூரில் "சிவகாமி' ,ஆகிய உள்ளூர் சேனல்களும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், "கீழை',"கீழை பிளஸ்', "டி.என்.டி.ஜே', "கே.எல்.சி.டி.'ஆகிய நான்கு உள்ளூர் சேனல்கள் தொடர்ந்துஒளிபரப்பாகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஸ்கை, மூன், வத்திராயிருப்பில் "டவர்', "எஸ்.எஸ். குமார்' மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் "எஸ்.டெலிவிஷன்', "கியூ', "எஸ்.ஆர்.எம்.', "வேல்', "டவர்', "நந்தா' ஆகிய உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நெல்லை மாவட்டம் தென்காசியில் "ஏ.எம்.என்',"மயூரி' உள்ளிட்ட உள்ளூர் சேனல்களும், செங்கோட்டை புறநகர் பகுதியிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை, குலசேகரம், தோவாளையிலும் உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பாகிறது.
No comments:
Post a Comment