Saturday, September 24, 2011

Saturday, September 24, 2011 தயவு செய்து பிடிவாதமாக இருங்கள்... ஜெயலலிதாவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்! - ஓ பக்கங்கள், ஞாநி

அன்புள்ள முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம்.


கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை மக்கள் திரண்டு நடத்தியதையடுத்து ஒரு வாரம் கழித்தேனும் நீங்கள் போராட்டக் குழுவினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை முதலில் பாராட்டுகிறேன். பிரச்னைக்கு தீர்வு காணும்வரை அணு உலை வேலைகளை நிறுத்திவைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியதையும், அதே போன்ற ஒரு தீர்மானத்தை அமைச்சரவைக் கூட்டம் நடத்தி நிறைவேற்ற ஒப்புக் கொண்டதையும் பாராட்டுகிறேன். மக்களின் உணர்வுக்கு இவையெல்லாம் தற்காலிகமான ஆறுதல்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அடுத்தது என்ன என்பதே முக்கியம். பிரதமரைச் சந்திக்க ஒரு அனைத்துக் கட்சி, மக்கள் அமைப்பினர் குழுவை அனுப்பப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். அந்தக் குழு மாநிலத்தின் சார்பில், மக்கள் சார்பில் பிரதமரிடம் என்ன சொல்லப் போகிறது என்பதும் அவர் பதிலுக்கு என்ன சொல்லப் போகிறார் என்பதும்தான் இனி முக்கியமானவை.கூடங்குளம் அணு உலைக்கு செர்னோ பில், ஃபூகுஷிமா உலைகளுக்கு ஏற்பட்ட கதி நிச்சயம் ஏற்படாது என்று மன்மோகன் சிங், சோனியா காந்தி தலையில் அடித்துச் சத்தியம் செய்வார். அதைக் கேட்டு ஒப்புக் கொண்டு உங்கள் குழு திரும்பிவரப் போகிறது என்றால், அதைவிட தமிழக மக்களுக்கு பெரிய துரோகம் எதுவும் இருக்க முடியாது. உலகத்தில் நூறு சதவிகிதம் பாதுகாப்பான அணு உலை என்று எதுவும் கிடையாது என்பது விஞ்ஞானிகளே ஒப்புக் கொள்ளும் உண்மை. அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தில் சென்று மோதிய விமானம் போல ஒன்று கல்பாக்கத்தில் மோதினால், கோபாலபுரம், போயஸ் கார்டன் உட்பட சென்னை நகரமே கதிர்வீச்சில் காலியாகிவிடும் என்பதுதான் உண்மை.


சில அடிப்படை உண்மைகளை தயவு செய்து உங்கள் குழு இந்தச் சமயத்தில் மனத்தில் கொள்ள வேண்டும்மன்மோகன் அரசு, வெளிநாட்டு அரசுகளுடன் இப்போது போட முற்படும் வர்த்தக ஒப்பந்தங்களின்படி, அணு உலைகள் நிர்மாணிக்கும் பணி இனி தனியாரிடம் தரப்படும். அந்த அரசுகள் தங்கள் நாட்டுத் தனியார் நிறுவனங்கள் நிர்மாணிக்கும் அணு உலையில் விபத்து ஏற்பட்டால், நஷ்ட ஈட்டை ஓரளவுக்கு மேல் தரமுடியாது என்றும் இந்திய அரசேதான் தரவேண்டுமென்றும் சொல்லுகின்றன. போபால் விபத்தில் நஷ்ட ஈடு பிரச்னையே இன்னும் தீரவில்லை. சாதாரண ரசாயன ஆலை விபத்து அது. அதுவே பல தலைமுறைகளுக்கு ஆயிரக்கணக்கான மக்களை பாதித்துவிட்டது. அணு உலை விபத்து பல மடங்கு அதிகமாக பாதிக்கக்கூடியது என்பதற்கு ஜப்பான் சாட்சி.கூடன்குளம் உலைக்கு எந்த விபத்தும் நேராது, எந்தத் தாக்குதலும் நடக்காது, எந்த இயற்கைப் பேரழிவும் வராது, அப்படி எது நடந்தாலும் அந்த உலை பத்திரமாகவே இருக்கும் என்ற பிரும்மாண்டமான கற்பனையை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொண்டாலும், அணு உலை இயங்குவது என்பதே சுற்றிலும் வாழும் மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பதை நீங்கள் கவனித்தாக வேண்டும். அதிலிருந்து வரும் கதிரியக்கம் மெல்ல மெல்ல சுற்றுப்பகுதி மக்களின் உடல் நிலையை பாதிக்கிறது என்பதும், அதிலிருந்து கடலில் வெளியேற்றப்படும் சூடான நீர், மீன்வளத்தை பாதிக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மைகள்.


ஒரு அணு உலை கட்டுவதற்கு 10 முதல் 20 வருடங்கள் வரை ஆகிறது. கட்டி இயங்க ஆரம்பித்தால் அதன் ஆயுட்காலம் அதிகபட்சம் 40 வருடங்கள்தான். ஆனால் அதில் உருவான அணுக்கழிவுகளின் கதிர் இயக்கம் பத்தாயிரம் வருடங்களுக்கு மேல் நீடிக்கும் என்பதால் அத்தனை காலமும் அதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். முழு பத்திரமாக வைத்திருக்க உலகில் எங்கேயும் இன்னமும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் அணுக் கழிவுகள் வைக்கப்பட்டிருக்கும் பல இடங்களில் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. கல்பாக்கத்தில் பல அணு உலைகள் உள்ளன. அவற்றில் இதுவரை பல விபத்துகள் நடந்திருக்கின்றன. ஊழியர்கள் இறந்த சம்பவங்களும் உண்டு. எட்டு வருடங்களுக்கு முன்னால் அங்கே ஊழியர்களின் தொழிற்சங்கம் நிர்வாகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் பல விபத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வேலை நிறுத்தம் செய்வோம் என்று அச்சுறுத்திய பிறகுதான் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் அரைகுறையாக செய்யப்பட்டன. ஒவ்வொரு ஊழியரும் ஓராண்டில் அதிகபட்சம் எந்த அளவு கதிர் வீச்சுக்கு உள்ளாகலாம் என்ற வரையறைகள் மீறப்படுகின்றன. முழு விவரத்தை ஊழியருக்கே சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.


தற்காலிக வேலைகளுக்காக சுற்றிலும் உள்ள கிராமங்களிலிருந்து தினக்கூலிக்கு அழைத்து வரப்படும் ஊழியர்களுக்கு என்ன கதிர்வீச்சு ஏற்படுகிறது என்ற தகவல் கூட சொல்லப்படுவதில்லை. அணு உலை நிர்வாகம் எப்போதும் பொய் சொல்வதையும் மூடி மறைப்பதையும் மழுப்புவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் இந்தியாவில்தான் அணு உலையை நடத்துபவர்களே அதைக் கண்காணிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். முற்றிலும் சுயேச்சையான அமைப்பாக கண்காணிப்பு அமைப்பு இதுவரை இல்லை.எந்தத் தகவலைக் கேட்டாலும் அணுசக்தி சட்டத்தின் கீழ் ரகசியம் என்று சொல்லி மறுக்கப்படுகிறது.கல்பாக்கத்தை சுற்றியும் உள்ள கிராமங் களில் புற்றுநோய் ஏற்படுவது அதிகமாக உள்ளது.மலட்டுத்தன்மை, பிறவியிலேயே உடல் ஊனம் போன்ற சிக்கல்கள் உள்ளன. கதிரியக்கம் செல்களை பாதிப்பதால் ஆறு விரல்களுடன் குழந்தைகள் பிறப்பது கல்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இது பற்றி மருத்துவர் புகழேந்தி தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு பல வருடம் முன்பே தெரிவித்தார். ஆனால் அவர்கள் எந்த ஆய்வையும் மேற்கொள்ள வில்லை.மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் அணு உலைகளுக்கும் தேவை. சூழல் பாதிப்பு பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பின்னரே அணு உலை கட்டும் பணி ஆரம்பிக்க வேண்டும். ஆனால் கூடங்குள உலைகள் கட்ட ஆரம்பிக்கும் முன்பு அப்படிப்பட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவற்றை வெளியிடவும் இல்லை. வெளியிட்டு மக்கள் ஆட்சேபங்களை பரிசீலித்த பிறகே கட்ட அனுமதி தந்திருக்க வேண்டும்.


வேறு எந்த தொழிற்சாலையில் விபத்து நடந்தாலும் அதன் பாதிப்பு அந்த தலை முறையோடு முடிந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஆனால் அணு உலை விபத்தோ, கதிரியக்கமோ பல தலைமுறைகளுக்கு பாதிப்பை தருபவை. இவ்வளவு ஆபத்தான அணு உலையை ஏன் ஆரம்பிக்க வேண்டும்?வேறு வழியில்லை. நமக்கு மின்சாரம் வேண்டும் என்ற வாதம் உங்களிடம் அதிகாரிகளால் சொல்லப்படும் பொய். அணு உலைகளால் இந்தியாவின் மின் பற்றாக்குறையை தீர்க்கவே முடியாது. இப்போது இயங்கும் 20 அணு உலை களுமாக சேர்ந்து இந்தியாவின் மொத்த மின்சாரத்தில் மூன்று சதவிகிதத்தைக் கூட தர முடியவில்லை. இந்த வெறும் மூன்று சதவிகிதத்துக்காக பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கதிரியக்கக் கழிவுகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். இதற்காக 3897 கோடிகளை வருடந்தோறும் மத்திய அரசு செலவிடுகிறது. ஆனால் அதே அரசு தரும் வெறும் 600 கோடி ரூபாயில், நமக்கு ஐந்து சதவிகித மின்சாரத்தை ஏற்கெனவே கொடுப்பவை காற்றாலைகளும் சூரிய சக்தியும்தான். அணு உலைக்கு ஒதுக்கும் ஆயிரக்கணக்கான கோடிகளை காற்று, சூரியசக்தி போன்றவற்றுக்கு ஒதுக்கினால், இன்னும் அதிக மின்சாரம் கிடைக்கும். அடுத்த 20 வருடங்களில் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தாலும் அணு சக்தியிலிருந்து கிடைக்கப்போகும் மின்சாரம் ஆறு சதவிகிதம்தான். 25 சதவிகித மின்சாரத்தை அணுசக்தியிலிருந்து பெறும் பிரான்ஸ் நாடு அடுத்த 20 வருடங்களுக்குள் அத்தனை உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது.

அணு சக்திக்கு இந்தியா அதிக பணம் ஒதுக்குவதற்குக் காரணம் மின்சாரமே அல்ல. அணுகுண்டு தயாரிக்க அதிலிருந்து தான் கச்சாப்பொருள் கிடைக்கிறது என்பது தான் ஒரே காரணம். எனவே மின்சாரம் தேவையென்றால் மாற்று எரிசக்தி பற்றி யோசியுங்கள். ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் வீணாகக் கிடக்கும் வேலிகாத்தான் உடைமரங்களை ஆவியாக்கி மின்சாரம் தயாரிக்கும் சிறு ஆலைகளை நிறுவி உள்ளூர் மின்தேவையை அதிலேயே சந்தித்துவிடலாம். பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில் இது நடந்து கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் இதை பெரும் வீச்சில் செய்ய திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்திலும் பஞ்சாயத்து யூனியன் ஒவ்வொன்றிலும் சிறு மின் திட்டங்களை ஆரம்பிக்கலாம்.கூடங்குளம் பாதுகாப்பானதுதான் என்று சொல்லி உங்கள் குழுவினரை ஏமாற்ற மத்திய அரசு அதிகாரிகள் எல்லா முயற்சிகளும் செய்வார்கள். அவர்களிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன்வையுங்கள். கடந்த இருபதாண்டுகளாக இயங்கும் கல்பாக்கம் அணு உலைகளில் என்னென்ன விபத்துகள் நிகழ்ந்தன, ஏன் நிகழ்ந்தன, கல்பாக்கத்தின் சுற்று வட்டாரத்தில் கதிர் வீச்சு பாதிப்பு பற்றிய மருத்துவ ஆய்வையும் அணுசக்தித் துறைக்கு தொடர்பில்லாத விஞ்ஞானிகளைக் கொண்டு அடுத்த மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தரச் சொல்லுங்கள். அதன் பிறகு தான் கூடங்குளம் பற்றி முடிவெடுங்கள்.

1988-89ல் அணு உலைகளின் ஆபத்து பற்றி நானும் நண்பர்களும் முரசொலி மாறனுக்கு எடுத்துச் சொன்னோம். அதையடுத்து கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று தி.மு.க செயற்குழுவில் தீர்மானம் போட்டது. அடுத்த சில மாதங்களில் ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சி, போதிய பாதுகாப்புகளுடன் அணு உலையை ஆரம்பிக்கும்படி மாற்றித் தீர்மானம் போட்டது. அன்று அந்த துரோகம் நடக்காமல் இருந்திருந்தால், கூடங்குளம் உலை கட்டும் வேலையே நடந்திராது. கேரளாவைப் போல நாமும் நம் மாநிலத்தில் அணு உலை வேண்டவே வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும். ஏறத்தாழ ஆரம்பிக்கத் தயார் நிலையில் கூடங்குளம் அணு உலையை எப்படி ஒரேயடியாக மூடுவது என்று கேட்பார்கள். கட்டி முடிக்கப்பட்ட சட்டமன்றக் கட்டடம் வசதிக் குறைவானது என்பதால், அதை காலி செய்துவிட்டுப் போனவர் நீங்கள். வசதிக் குறைவுக்கே அப்படி செய்யலாம் என்கிறபோது, பல தலைமுறைகளுக்கே ஆபத்தான ஆலையை மூடத் தயங்க வேண்டியதில்லை. சூழலுக்குக் கேடான சேது சமுத்திரம் திட்டம் பல கோடி ரூபாய் செலவுக்குப் பின் இப்போது நிறுத்தப்படவில்லையா? இதுவரை எவ்வளவு செலவாயிற்று என்பது முக்கியமில்லை. இனி தரப்போகும் விலை என்ன என்பதே முக்கியம்.

உங்கள் புகழ் பெற்ற பிடிவாதத்தை இதில் நீங்கள் காட்டினால் தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களை வாழ்த்துவார்கள்.

No comments:

Post a Comment