Saturday, September 17, 2011

சொல்வதெல்லாம் உண்மை பாகம் 17

சாதாரண கான்ஸ்டபிளாகச் சேர்ந்து கண்காணிப்புத் துணையாக அதிரடி வளர்ச்சி கண்டவர். இவருடன் சேர்ந்தவர்களில் பலர் இன்னும் எஸ்.ஐ. பதவியைக் கூட எட்டிப் பிடிக்க முடியவில்லை. இவரின் கடைக்கண் பார்வை பட்டால்தான் காவல்துறை உயரதிகாரிகளும் சரி, கட்சியினரும் சரி தலைமையிடம் தங்களின் முகம் காட்ட முடியும். அவ்வளவு உச்சத்திலிருந்தவர் இப்போது சற்றே ஓய்விலிருக்கிறார். ஆனாலும் இவரைப் பற்றி ஏற்கெனவே வாய்மொழியாகக் கூறப்பட்ட புகார்கள் பலவும் இப்போது வழக்காக தயாராகி வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அவரின் மனசாட்சியுடன் பேசினோம். அவரின் வாக்குமூலம்:
06_1
தஞ்சை வளநாடு சோறுடைத்து என்பார்கள். ஆனால் எங்கள் குடும்பத்தில் பஞ்சம்தான் வந்து தஞ்சமடைந்திருந்தது. வறுமையின் பிடியில் படிப்பைத் தொடர முடியவில் லை. ஆனாலும் என் வாட்டசாட்டமான உடல் காக்கிச் சட்டையை போட்டுக் கொள்ள எனக்குக் கைகொடுத்தது. எண்பத்துநான்கில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தேன்; ட்ரெயினிங் முடிந்ததும் ஆயுதப்படையில் போட்டு கமிஷனர் அலுவலகத்தில்தான் பணியாற்றச் சொன்னார்கள். அப்போதெல்லாம் அதிகாரிகளின் அறையில் மண்பானை இருக்கும். அதில் தண்ணீர் தூக்கி வந்து நிரப்ப வேண்டும். இதான் எனது ஆரம்பகாலப் பணி. எந்த வேலையையும் ஈடுபாட்டுடன் செய்வதுதான் என் பிளஸ் பாயிண்ட். எல்லா அதிகாரிகளிடமும் பணிவாக நடந்து கொள்வேன். எண்பத்தொன்பதில் அரியாசனத்தின் மீது கதிரொளி விழுந்தது. அதுதான் வாழ்க்கையின் திருப்புமுனை. ஆட்சித் தலைமைக்கு காவல்துறையிலிருந்து பாதுகாப்புப் பணிக்கு ஆட்களை அனுப்புவார்கள். நான் அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொண்டவிதம் பலருக்கும் பிடித்திருந்ததால் அந்தத் திருப்பணிக்கு எனது பெயரும் தேர்ந்தெடுக்கப்பட்டது. விவரம் அறியாத வேலைக்காரனாக நான் அந்த வீட்டுக்குள் நுழைந்தேன். அதன்பிறகு ஏறக்குறைய இருப த்திரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டேன். அந்த வீட்டிலிருப்பவர்கள் எல்லாரையும்விட, அவரின் வாரிசுகளைவிடவும் தலைமையின் நெருக்கம் எனக்குத்தான் அதிகம். எனது பணிவும், வேலைகளை சலிக்காமல் செய்யும் அணுகு முறையும் தலைமையைக் கவர்ந்துவிட்டது. அதையே முதலீடாக வைத்து நான் அவரின் வளர்ப்பு மகனாக உருவெடுத்துவிட்டேன்.

அடுத்து 91-ல் ஆட்சி மாற்றம் வந்த பிறகும் முக்கிய தலைவர் என்பதில் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆட்கள் அப்படியே, அதே பணியில் தொடர அனுமதிக்கப்பட்டனர். அதில் எனது நெருக்கம் கொஞ்சம் அதிகமானது. அடுத்து 96-ல் மீண்டும் கதிரொளி கைவிரிக்க, நான் கொஞ்சம் முக்கிய புள்ளியாக உருவெடுத்தேன். முக்கியமானவரின் பாதுகாப்பு அதிகாரியாக வந்த பின்னர் உளவுக்கும், எனக்கும் நெருக்கம் அதிகமாகிவிட்டது. எனக்கு இரண்டு நட்சத்திரங்கள் வழங்கப்பட்டது. எனவே எனக்கு உதவியாளராக விநோதமானவரையும், விநாயகரையும் கொண்டுவந்து விட்டார் பழைய உளவு. அடுத்துவந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தலைமைக்கு கொஞ்சம் உடம்பு முடியாமல் போய்விட்டது. இந்த சூழ்நிலையில் எனது முக்கியத்துவம் அதிகமாகிப்போனது. உளவும் செங்கல்பட்டு பக்கம் பிழைப்பைப் பார்க்க போய்விட, எனது பவர் அதிகரித்து விட்டது. நான் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது அங்கு சாரதியாக இருந்த பெல்லைப் பார்த்தாலே எனக்கு பொறாமையாக இருக்கும். பவர்ஃபுல் ஜாம்பவானாக இருந்தார் அவர். நான் அவரிடம் போகும்போதெல்லாம் வெளியே போடா என்று விரட்டிவிடுவார். தலைமைச் செயலகத்தில், முக்கிய புள்ளியின் காரின் அருகில் நின் றுகொண்டே, தலைமை வருவதற்கு ஐந்து நிமிடம் வரை சிகரெட் பிடிக்கும் அளவிற்கு தைரியமானவர். அவருக்குப் பிறகு நான் அந்த இடத்தை கெட்டியாகப் பிடித் துக்கொண்டேன். ஆரம்பத்தில் எழும்பூர் குடியிருப்பில் சின்னவீடு. அப்போதெல்லாம் பஜாஜ் செட்டாக் ஸ்கூட்டர்தான் என் வாகனம். பின்னர் ஹீரோவாக உருவெடுக்கத் தொடங்கியதும் ஹீரோ ஹோண்டா பைக் வந்தது. பின்னர் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி. என பதவி உயர்வு கிடைத்ததும் அம்பாஸிடர் கார் கொடுக்கப்பட்டது. நான் தலைமைக்கு எதிரிலும், மற்றவர்கள் எதிரிலும் பணமோ, வசதியோ இருப்பதாகக் காட்டிக்கொள்ள மாட்டேன். அவர் வீட்டில் ஓய்விலிருக்கும் நேரங்களில் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு கிழிந்த பனியனுடன் தோட்ட வேலைகளை கவனிப்பேன். இதெல்லாம் எனது எளிமையின் வெளிப்பாடுகளாக அவர் நம்பினார். ஆனால் நானோ மதுரை, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கிக் குவித்திருப்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. என் பிஸினஸ்களுக்கெல்லாம் பழைய ஹீரோவின் பெயர் கொண்ட என் அண்ணன் மகனை பொறுப்பாளராகப் போட்டு வைத்துள்ளேன். எல்லாவிதமான சொகுசு கார்களில் ஏழெட்டு ரகங்கள் அவன் வீட்டில் அணிவகுத்து நிற்கும்.

கடந்த 2006-ல் மீண்டும் சூரியஒளி கோட்டை மீது விழுந்தது. அப்போது அனைத்து காக்கிகளும் முக்கியபுள்ளியின் வீட்டைத் தேடி வரத் தொடங்கினர். அந்நேரத்தில் முக்கியபுள்ளி போட்ட முதல் கையெழுத்தே தேசத் தந்தையின் பெயர் கொண்டவரை உளவுக்காக நியமித்ததுதான். காரணம், தேசத் தந்தையைத் தேர்வு செய்தது நான்தான் என்று அனைவருக்கும் தெரியும். அவரை மூன்று மாதத்தில் கழற்றிவிட, ஒரிஜினல் உளவு உள்ளே வந்தார். உளவைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்த அவ ரும், நானும் ஏற்கெனவே நெருக்கம் என்பதால் எங்களின் கூட்டணி பிரச்னை இல்லாமல் தொடர்ந்தது. அதிலும் நானே தலைமைக்கு நெருக்கமான இடத்தில் இருந்ததால் பல முக்கிய பிரச்னைகளை என் மூலமாகவே காய் நகர்த்தினார் உளவு.

எனவே எவ்வளவு உயர் பதவியில் உள்ள அதிகாரியானாலும் எனது மயிலாப்பூர் வீட்டிற்கு வந்தாக வேண்டும் என்ற நிலை. இதனால் ஒட்டுமொத்த காவல்துறையும் என் கட்டுப்பாட்டில் இயங்கியது. காவல்துறையில் உண்மையானவர்கள்,ஒழுக்கமானவர்கள், நேர்மையானவர்கள் என்ற வாசகங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. வேண் டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற வார்த்தைகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிலும் எனக்கும், உளவுக்கும் வேண்டியவர்களால் மட்டுமே காவல்துறையில் குப்பை கொட்ட முடியும் என்ற நிலை.

அதேபோல் சுழல்விளக்குகளும் கூட என் மூலமாகவே தலைமையை அணுகமுடியும். அவர்களைப் பற்றியும் என்னிடமும், உளவிடமும்தான் அதிகமாக கருத்துக் கேட் கப்படும். என்னோடு வந்த இரண்டு உதவியாளர்களையும்கூட எனது நிழல்களாக கையிலேயே வைத்துக்கொள்வேன். அவர்களுக்கும் வேண்டிய வேலைகளைச் செய்து கொடுப்பேன். எனக்கு வேண்டியவர்கள் எங்களை ரொம்பவும் பெருமையாகப் பேசுவார்கள். வேண்டாதவர்களோ நாங்கள் வண்டியைத் தள்ளிக்கொண்டு போவதால் ‘ட்ராலி பாய்ஸ்’ என்று கிண்டலடிப்பார்கள். நானோ எனது உதவியாளர்களோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. எங்களின் ஒரே குறி பணம்தான். அதிகாரத்தில் இ ருக்கும்போதே ஒரு அமைச்சருக்கு சமமாக செட்டிலாகிவிடவேண்டும் என்பதுதான். காரணம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் குடும்பங்களுக்காக உழைத்தி ருக்கிறேன். துணையின் வாரிசை நான் சின்ன வயசிலிருந்தே எடுத்து வளர்த்தேன். அவர்மீது எனக்கு அதிக அளவில் பாசம் உண்டு. அதே நேரத்தில் இரண்டு கு டும்பங்களுக்குமே நான் வேண்டியவன்தான்.

அந்த ஐந்து வருடத்தில் நான் நினைத்ததெல்லாம் நடந்தது. எதுவேண்டுமோ அதை என்னால் அடைய முடிந்தது. வாரிசுகளால் முடியாதவைகூட என்னால் முடிக்க முடியும் என்ற நிலை. எனவே கட்டப்பஞ்சாயத்துகள், அதிரடி, அடிதடி என களம் இறங்கினேன்.

முருகசாமியின் பெயர் கொண்டவரிடம், மணல் குவாரி எடுத்து என்னிடம் கொடுக்கக் கூறினார் முக்கியபுள்ளி. என் விசுவாசத்திற்குக் கிடைத்த பரிசு அது. அதை எடுத்து நடத்த ஆள் கேட்டு துணையிடம் போனேன். அரசருக்கு அப்பாவிடம் அவர் கொடுக்கச் சொன்னார். மாதம் மூன்று கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். அவரோ கள்ளக்கணக்கு எழுதத் தொடங்கினார். எனவே ஒரு வருடத்தில் அவரைத் தூக்கிவிட்டு புலித்தலைவரின் பெயர் கொண்டவருக்குக் கொடுத்தேன். அதில் எனக்கும் துணைக் குடும்பத்திற்கும் இடையே லேசான உரசல் ஏற்பட்டது. அந்த புலித் தலைவரின் பெயர் கொண்டவரோ பேரனை வைத்துப் படம் எ டுக்கப்போய்விட்டார். இதனால் பல்வேறு குழப்பங்கள் உருவானது.

இதற்கிடையில் மாறன் நெடு என்பவர் பலான தொழிலை பக்குவமாகச் செய்து வந்தவர். சூரிய ஒளியில் அவ்வப்போது குளிர் காய்ந்துகொள்வார். வக்ஃப்போர்டு நிலத்தை சுருட்டிவிட்டார் அவர். அந்த வழக்கு நடந்துகொண்டிருக்க, அதே இடத்தை பதினொரு கோடிக்கு மார்வாடி பில்டர்ஸுக்கு விற்றுவிட்டார். அதில் பிரச்னை ஏற்பட, பஞ் சாயத்து என்னிடம் வந்தது. நான் சீட்டிங் பார்ட்டியான நெடுவுக்கு சாதகமாகப் பேசப் போனேன். பதினொரு கோடியை மிரட்டிப் பேசி இரண்டு கோடி மட்டுமே கொடுத்து அனுப்பிவிட்டேன். இதில் எனக்கு இரண்டு கோடி கட்டிங்.

ஏற்கெனவே பூனைக் கண் விஷயம் உட்பட எதிர்க்கட்சியின் ஆட்சியல் இந்த நெடு மூன்றுமுறை கைது செய்யப்பட்டவர். ஆனாலும், இப்போது கூட்டத்தோடு தோட்டம் சென்று எடுத்த போட்டோவை வைத்து தப்பித்துக்கொள்ள கணக்குப் போட்டுள்ளார் என்பதெல்லாம் தனிக்கதை.

அதேபோல் ராமநாதபுரம் பக்கத்திலிருந்து திடீரென முளைத்த சூரிய நட்சத்திரம் ஒன்று டெல்லிக்குப் புறப்பட்டது. அதுபோகும் வழியில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒரு நிலப் பஞ்சாயத்து. அதில் நானும், அவரும் நேருக்குநேர் மோதினோம். வாடா, போடா என பேசவேண்டியதாகிவிட்டது. இருந்தாலும் வழக்கம்போல் அடிமாட்டு விலைக்கு பிரச்னையை முடித்தேன். பல கோடிகள் கட்டிங்காக கிடைத்தது. ஆனாலும், அந்த சூரிய நட்சத்திரத்தை பல்வேறு விதத்தில் போட்டுக் கொடுத்து டம்மியாக்கிவிட்டேன்.

அதேபோல் ஏ.சி.யில் கூட்டு சேர்ந்து ஃபைனான்ஸ் கொடுத்தேன். சொத்துக்களை எழுதி வாங்கும் வேலை அவருக்கு. அந்தச் சொத்தைப் பிடுங்கிவரும் வேலை எனக்கு.

இப்படி எல்லா விதத்திலும் வெற்றிக்கூட்டணி அமைத்திருந்த எனக்கு இப்போது குழப்பமான சூழ்நிலைதான். காரணம் என்மீது யாராவது ஒருவர் புகார் கொடுத்தால் போதும், சர்...சர்ரென்று புகார்கள் பறந்துவரும். எனவே சமுதாயத்துப் பெயரைச் சொல்லி தோட்டத்துக்கும் மறைமுகமாக தூது அனுப்பியுள்ளேன். அதேபோல் எங்கள் ஆட்சியில் எனது கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரிகள் பலர் இப்போதும் பவரில் இருக்கிறார்கள். அவர்கள் இப்போதும் எனக்கு விசுவாசமாக இருப்பது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.

ஆனாலும் ஹவுசிங் போர்டில் நான் வாங்கிய இடம் சட்டவிரோதமானது என்று சிலர் பேசி வருகின்றனர். காரணம், ஏற்கெனவே ஒரு சார்ஜ் மெமோ எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அது முடிக்கப்பட்டாலும் அப்பழுக்கற்ற அதிகாரியாக என்னைக் கருதமுடியாது. அதுபோன்ற அதிகாரிகளுக்கே அலாட்மெண்ட்டெல்லாம் தரமுடியும் என்பதால் எங்கிருந்து நடவடிக்கை எப்படி வரும் என்று தெரியவில்லை. எனவே, பயம் என்னை வாட்டுகிறது. அடுத்து ஆட்சி வந்தால் கண்காணிப்பாகிவிட வேண்டும் என்பதுதான் என் கனவு. அந்தக் கனவு நிறைவேறுமா என்பதுதான் தெரியவில்லை.

நன்றி குமுதம் ரிப்போர்டர்

No comments:

Post a Comment