உலகம் முழுவதும் விளையாடும் ஒரு விளையாட்டு. இந்த ஒரு காரணம் போதும். கருப்புப் பணம், கள்ளப் பணம், வரி ஏய்ப்பு என சகல சாத்தான் குணங்களுக்கும் வடிகாலாக, விடிவெள்ளியாக கால்பந்து திகழ.
ஏன் ?
- கால்பந்து உலகளாவிய விளையாட்டு. உள்ளே நுழைவது சுலபம். 220 நாடுகளில் ஆடும் ஒரு விளையாட்டில் எக்கச்சக்க பின்வாசல்கள், எங்கு நுழைந்து எப்படி வேண்டுமானாலும் வெளியேறலாம்
- கால்பந்து கிளப்கள் அதன் பங்குதாரர்கள் என்பது ஒரு மேகி நூடுல்ஸ் சிக்கல். யார் யாரோடு தொடர்புடையவர்கள், ஒன்றினை நுனி எங்கு முடிகிறது, எங்கு தொடங்குகிறது என்று கண்டறிவது கடினம். இது ஆரம்பம் தான். சர்வதேச விளையாட்டு வீரர்கள், விளையாட்டு வீரர்கள் வாங்குதல்/விற்றல், பரிவர்த்தனைகள், டிவி உரிமம், இணைய உரிமம், கிளப்பின் ப்ரான்சைஸ் உரிமங்கள், வீரர்களின் மேனேஜர்கள், அவர்களின் நிறுவனங்கள், ஏஜெண்ட்கள், ஸ்பான்சர்கள், இடைநிலை தரகு நிறுவனங்கள், வீரர்களின் சொந்த/உரிமம் பெற்ற நிறுவனங்கள் என நீளும் இடியாப்ப சிக்கலில் பணத்தினை உள்நுழைந்து வெளியேற்ற பத்தாயிரம் வழிகள் எந்நேரமும் திறந்தே இருக்கின்றன.
- சட்டரீதியாகவும் கிளப்புகள் பிரச்சனைக்குரியவை. ஐரோப்பாவின் டாப் 20 கிளப்புகளும், இருவது வகையிலான சட்ட அமைப்பு முறையில் இருக்கின்றன என்பது தான் தொடக்கம். சிலவை தனியார் நிறுவனங்கள் (Pvt Ltd), சில பவுண்டேஷன்கள். இதிலேயே, அரங்கம் தொடர்பான வருமானம், விற்பனை பார்க்கும் டிவிஷன் உள்ளே இருக்கலாம்; தனி நிறுவனமாக இருக்கலாம். இது போலவே, வீரர்களை வாங்குவது/விற்பது நடத்துவதும் தனி நிறுவனம். உள்ளுக்குள் உள்ளாக என ஒரு கிளப்பின் பங்குதாரர்களையும், முதன்மை நிறுவனர்களையும் ஒட்டி பல்வேறு நிறுவனங்களும், பல அமைப்புரீதியிலான சட்டப்பூர்வமான வாசல்கள் (Entities) இருக்கும். அதனால், கணக்கு காட்டுதலும், நிறுவனங்களுக்கிடையேயான பரிவர்த்தனைகளின் தணிக்கை ரீதியான தொடர்ச்சிகளும் (audit trail) கண்டறிந்து, பகுத்தாய்ந்து முடிவுக்கு வருதல் சிரமம்.
- விளையாட்டு என்பதே அதிக ரிஸ்க் உள்ள சமாச்சாரம். அதிலும் வீரர்கள் அதை விட ரிஸ்க்கானவர்கள். ஒரு சீசனில் நன்றாக ஆடும் ஒரு வீரர், இன்னொரு சீசனில் மொக்கையாவார். ஊர் பேர் தெரியாமல் திடீரென எங்கிருந்தோ முளைக்கும் ஒரு வீரர் குறைந்த காலத்தில் உலகப் புகழ் பெறுவார். நாளை என்ன நடக்கும், ஒரு வீரர் எப்படி ஆடுவார் என்கிற தெளிவு இல்லாமல் இருப்பதாலேயே விளையாட்டு சுவாரசியமாகிறது. ஆனால், அதுவே கருப்புப் பண ஆட்களுக்கு சாதகமாகவும் மாறிவிட்டது. திடீரென ஒரு கிளப் டேவி பெக்கமை, $40 மில்லியன் கொடுத்து வாங்கும். இரண்டே வருடங்களில் இது $60 மில்லியன் ஆகலாம். அடிப்படையில் எவ்விதமான காரணமும் இருக்காது, ஆனாலும் இந்த மாதிரியான திடீர், குபீர் வருமான உயர்வுகள் சாதாரணம். விளையாட்டின் ஆதாரமே “culture of unpredicatability”. இது தான் சாதகமும், பாதகமும்.
- ஆப்ரிக்க, மத்திய தென்னமரிக்க நாடுகளிலிருந்து கால்பந்து ஆடும் வீரர்களுக்கு பணம் ஒரு பெரும்கனவு. அதனால் அவர்களை சுற்றி எப்போதும் ஒரு தரகர், ஏஜெண்ட் கூட்டம் இருந்து மனதினைக் கெடுக்கும். அவர்களை வைத்துக் கொண்டு, முதலாளிகளால் பணத்தினை சரமாரியாக கைமாற்ற முடியும்.
உதாரணத்துக்கு அந்த வீரரை ஒரு ஐரோப்பிய கிளப் $10 மில்லியனுக்கு வாங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் $5 மில்லியன் மட்டுமே நேரடியாக போகும். மீதி பாதி, அவருடைய நாட்டில் ஏதேனும் ஒரு நிறுவனம் வழியாக கொடுக்கப்படும். அந்த பாதிபணம் நூற்றுக்கு நூற்றியம்பது விழுக்காடு கருப்புப் பணமே. இரண்டு வருடங்களில் அவரை வேறு ஒரு கிளப்புக்கு $15 மில்லியனுக்கு விற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது முதலில் எடுத்த கிளப் அந்த $15 மில்லியனையும் நேரடியாக கேட்கலாம். லாபத்துக்கு லாபம். $5மில்லியன் கருப்புப் பணத்தையும் மாற்றியாகிவிட்டது. - கால்பந்து ஒரு செலவு பிடிக்கும் விளையாட்டு. கிளப்பிற்கான வருமானம் என்பது அவர்கள் ஆடும் சீசனைப் பொறுத்து. ஆனால், வருடம் முழுக்க ஒரு கிளப்பினை நடத்த ஏகப்பட்ட பணம் தேவை. பயிற்சிகள், கருவிகள், சப்போர்ட் பணியாளர்கள் என அனுமார் வாலாய் நீளும் செலவுகளால் தான் ஒரு சில கிளப்புகளைத் தவிர உலகின் பெரும்பாலான கிளப்புகள் நட்டத்தில் ஒடுகின்றன. இந்த மாதிரி நட்டத்தில் ஓடும் கிளப்புகள் கிடைத்தால் அல்வா.நட்டத்தில் இருக்கும் கிளப்புகளுக்கு தேவை பணம். அதன் ரிஷி,நதிமூலங்கள் தேவையில்லை. அதன் பங்குதாரர்கள் காசு போடுகிறேன் என்று சொன்னால், முன்னால் ஆட்றா ராமா என்று குட்டிக்கரணம் அடிப்பார்கள். அதை வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாருமே இல்லாத ஸ்டேடியத்தில் டீ ஆற்றி விட்டு, டிக்கெட்டுகளை கிழித்துப் போட்டுவிட்டு வருமானம் வந்தது என்று சொல்லலாம். ஒரே நாளில் 10,000 பஜ்ஜி, போண்டாக்கள் விற்றது என வெள்ளையாக்கலாம். டம்மி நிறுவனங்கள் வைத்து ஸ்பான்ஸர் என்று சொல்லி கும்மியடிக்கலாம்.
- மேலே சொன்ன ஒரு காரணத்தினாலேயே அந்த லோக்கல் கிளப்பின் புரவலராக மாறியபின், அந்த கிளப் இருக்கும் நாட்டின் பெருந்தலைகளோடு மேட்ச் பார்க்கும் வாய்ப்பு சர்வசாதாரணமாக அமையும். எல்லா கிரிமினல்களுக்கும் ஒரு சமூக முகம் தேவை. அந்த சமூக முகம், ஒரு வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கிளப்பினை தூக்கி நிறுத்திய முகம்;விளையாட்டினை ஊக்குவிக்கும் முகம்; மக்களுக்கு பிடித்த ஒரு விளையாட்டினை அங்கீகரித்த முகம். அந்த முகம் முக்கியம். அது கல்வித் தந்தையோ, கால்பந்து தந்தையோ!அதை வைத்துக் கொண்டு அந்த ஊரின் பெரிய மனிதர்களோடு உறவாடி தமக்கு தேவையானதை சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியத்தோடு தான் இந்த பண உள்நுழைவே நடக்கும். அதன் பிறகு இம்மாதிரியான பணத்தினை பல்வேறு தொழிகளில் அந்த ஊரில் போடலாம். யாரும் சந்தேகப் படமாட்டார்கள். ஏனென்றால், கால்பந்து கிளப்பினையே வாங்கியவரால், பிற காரியங்கள் செய்ய முடியாதா என்ன?
எப்படி ?
கால்பந்தினைப் பயன்படுத்திக் கொண்டு கருப்பினை வெளுப்பாக்கி நாமம் போடுவது மூன்று வழிகளில்.
- கிளப்பினை வாங்கல்
- பரிவர்த்தனை சந்தை
- சூதாட்டம்
கிளப்பினுள் காசு நுழைத்து அதை பல்வேறு நிறுவனங்களின் வழியே ’ஷட்டில்’அடித்து பின் வெளியேற்றுவது என்பது நம்பியார் காலத்து டெக்னிக். ஆனாலும், அதிலும் இப்போது பல்வேறு தளங்களில் வியாபாரம் நடக்கிறது. வெறுமனே வரிகளற்ற சொர்க்கங்களில் நிறுவனங்கள் வைத்து, அதன் வழியே பணத்தினைப் போட்டு எடுத்துக் கொண்டு போவது என்பது தாண்டி, கிளப்புகளின் பங்குகளை வெளிச் சந்தையில் விற்பது, கிளப்பின் உரிமத்தினையே பல்வேறு சிறு நிறுவனங்களாகப் பிரித்து அதையும் விற்பது என நீளும் சாகசங்களில், லேட்டஸ்ட், தனியார் வங்கிச் சேவை (private banking) இப்போது இந்த மாதிரியான பங்குகளை வாங்குதலும் நடக்கிறது. வரிகளற்ற தேசங்களில், கூட்டு நிதி நிறுவனங்கள் (Collective Sports Fund) வைத்துக் கொண்டு அதன் மூலம் பரிமாற்றப்படும் பணமும் இதில் அடங்கும்
1974-இல் வெறும் 11.4% மட்டுமே தேசிய அணியில் இருந்து பிற நாட்டுக்கு ஆடிய வீரர்கள். 2006 உலகக் கோப்பை கால்பந்தின் போது இது 53.1% உயர்ந்திருக்கிறது. வெறும் 30 வருடங்களில் கிட்டத்திட்ட பாதி டீம் பணத்துக்காக ஏதோ ஒரு கிளப்புக்கு ஆடிக் கொண்டிருக்கிறது.
தொழில்ரீதியான கால்பந்து கிளப்புகளின் முக்கியமான வேலை வீரர்களை வாங்குதல் விற்றல் பரிவர்த்தனைகள் செய்தல். இது தாண்டி, வீரர்களுக்கான பணம் போகும் வழியும் முக்கியமானது. ஃபீஃபாவால் இதுவரை 4,000 ஏஜெண்ட்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தாண்டி, அங்கீகரிக்கப்படாத வீரர்களின் மாமா, மச்சான், சித்தப்பா பையன், பெரியப்பா பொண்ணு என நீளும் informal ஏஜெண்ட்களின் எண்ணிக்கை 100,000 தாண்டும். இவர்களின் வழியே நடக்கும் பரிவர்த்தனைகள் ஃபீஃபாவின் கீழ் வராது. இது தாண்டி, வீரர்கள் மேலாண்மை நிறுவனங்கள் (Sports Talent Firms) என்பது இன்னொரு ஜாதி. இவர்கள் தொழில்ரீதியான வீரர்களின் வருமானத்தினை நிர்ணயிப்பவர்கள். இந்தியாவில் ஏதோ ஒரு நிறுவனம் தான் கேப்டன் தோனியை ஐந்து வருடத்திற்கு ரூ.100 கோடிக்கு ஒப்பந்தப்படுத்தியிருக்கிறது. இதன் சட்ட திட்டங்கள், பணப்பரிவர்த்தனைகள் இன்னமும் ஒரு woodoo art.
ஜூது என்று மெட்ராஸ் பாஷையில் அழைக்கப்படும் சூதாட்டம் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களோடு கூடியது. ஆசியர்கள் தான் ஐரோப்பிய கிளப் புட்பாலில் அதிகப்படியாக சூதாடுபவர்கள். 2007 இண்டர்போல் நிலவரப்படி, 1300 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; 1088 ஜூது குகைகள் (Gambling Den) அழிக்கப்பட்டிருக்கின்றன. சூதில் ஒடிய தொகை மட்டும் ரூ.6,750 கோடிகள் ($1.5 பில்லியன்). சூதாட்டம் என்பது வெறும் பெட்டிங் மட்டுமல்ல. இதில் மேட்ச் ஃபிக்சிங் வகையறாக்களும் உண்டு. ஐரோப்பிய கிளப்புகளில் சில காசு வாங்கிக் கொண்டு, மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்கள் இருக்கின்றன. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
அடுத்த 3-5 வருடங்களில், விளையாட்டு வீரர்களின் ஆன்லைன் சந்தை வந்துவிடும் சாத்தியங்கள் இருக்கிறது. இதன் மூலம், இப்போதிருக்கும் ரெகுலர் பங்குச் சந்தைகளின் ப்யூச்சர்ஸ் /ஆப்ஷன்களுக்கு இணையாக கால்பந்து வீரர்களின் ப்யூச்சர்ஸ் /ஆப்ஷன்களும் வரலாம். நேரடியாக இல்லாமல் போனாலும், இது ஒரு பெட்டிங் ப்யூச்சர்ஸ் / ஆப்ஷன்ஸ் என்கிற வழியில் உள்நுழையலாம்.
கால்பந்து என்பது ஒரு விளையாட்டு. குதிரை ரேஸ், கிரிக்கெட், பேஸ்பால், பார்மூலா ஒன், ஹாக்கி என நீளும் பந்தயங்களில் பல பில்லியன் டாலர் பணம் வருடாவருடம் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் அசாரூதீன் காலத்தில் சொல்லப்பட்ட கிரிக்கெட் சூதாட்டமும், இப்போது ஆரம்பித்திருக்கும் ஐபிஎல் முதலாளிகளின் பண மாற்றமும், அடுத்த 5 வருடத்தில் நமக்கு புதிய பாடங்களையும், சாளரங்களையும் திறந்து வைக்கும்.
விளையாட்டே இவ்வளவு வினையென்றால், நிஜமான வினையில் எவ்வளவு விளையாட்டுகள் நடக்கும் ?
பங்கு சந்தை – பணம் ஜீவ நதியாய் ஓடக்கூடிய இடம். அங்கு கருப்புப் பணம் எப்படி உள்நுழைகிறது, மாற்றப்படுகிறது என்பது அடுத்த வாரம்.
- கல்லா நிரம்பும்…..
O
நரேன்
Posted in கருப்புப் பணம், நிதி3 Comments
ஆட்டமா, தேரோட்டமா…
Posted on 09 June 2011.
உலகின் மிக அதிகமாக பார்க்கப்படும், ஆடப்படும் விளையாட்டு. 2008 கணக்கில் 38 மில்லியன் வீரர்களும், 5 மில்லியன் ரெபரீகளும், டிவி வழியாக கிட்டத்திட்ட ஒரு பில்லியன் மக்களுக்கு மேல் பார்க்கப்படும் விளையாட்டு. பீபா (FIFA) உலகக் கோப்பை, இங்கிலிஷ் ப்ரீமியர் லீக் (English Premier League) போன்றவைகளும், ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு கோப்பை என்கிற அளவில் உலகளாவிய பார்வையாளர்களையும், வெறித்தனமான ரசிகர்களையும் கொண்ட விளையாட்டு. ஃபீஃபா – Fédération Internationale de Football Association (FIFA) ஃபீஃபா தான் தலைமையகம். கிட்டத்திட்ட 208 நாடு உறுப்பினர்களை கொண்ட உலகின் மிக சக்தி வாய்ந்த விளையாட்டினை நிர்வகிக்கும் குழுமம்.
2006-இன் டேட்டா உலகமெங்கும் 265 மில்லியன் கால்பந்து வீரர்கள் இருக்கிறார்கள். இது தொழில்ரீதியாக ஆடக்கூடியவர்கள் (Professional Players)+ உள்ளூர் அமெச்சூர் ஆட்கள். இதில் வெறும் 14.33% கிளப்புகளில், நாட்டுக்காக, தனி லீக்கில் ஆடக் கூடியவர்கள். மீதமிருக்கிற 85.67% ஆட்டக்காரர்களுக்கும் இந்த லீக், கிளப், தேசத்திற்காக ஆட வேண்டுமென்கிற கனவிருக்கிறது. அந்த கனவுக்காக எல்லாவற்றையும் ஒத்துக் கொள்வார்கள்.
முக்கியமாக பெரும்பாலான கால்பந்து கிளப்களுக்கு பணம் ஒரு தொடர்ச்சியான தேவை. பயிற்சி, அரங்கம், சாதனங்கள், வீரர்களை வாங்குதல், தக்கவைத்தல், சப்போர்ட் ஊழியர்களின் தேவை, ’கோச்’/ உடல்நல நிபுணர்கள், டோர்னமெண்டில் பங்கு பெறுதல் என பணம் ஒட்டைப் போட்ட தண்ணி லாரியாய் போய்க் கொண்டே இருக்கும். முக்கியமாக கால்பந்து கிளப்புகளை பயன்படுத்திக் கொண்டு அதில் பணத்தை உள் நுழைத்து, பின் அரங்க வசூல், டிவி உரிமப் பங்கு, கார்ப்பரேட் ஸ்பான்சர்களின் வழியாக வெள்ளையடிக்கப்பட்டு லாபத்துடன் வெளியேறும். இது பெரும்பாலும் நடப்பது ஐரோப்பாவில். அங்கு தான் லீக் மேட்சுகளும், கிளப்புகளும் அதிகம்.
கால்பந்து விளையாட்டு வணிகமயமாக்கப்பட்டதும், அதனுள்ளே மாபியாக்கள் நுழைந்து தங்களின் பணத்தினை வெள்ளையாக்குவதும் டெனிஸ் ராபர்ட் எழுதிய ”Le Milieu du Terrain”என்கிற பிரெஞ்ச் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. இதன் மூலகாரணம் சுவாரசியமானது. சோவியத் யூனியனின் சிதறலுக்கு பிறகும், உலகம் சந்தைமயமாக்கத்தினை நோக்கி நகர்ந்த 90களின் பிற்பகுதியும் மூல காரணங்களாக இருக்கிறது. முக்கியமாக, ஐரோப்பாவில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மாபியா, போதைப் பொருள் கூட்டம் உலக கால்பந்தின் மேல் தன்னுடைய பிடியினை இறுக்கமாக வைத்திருக்கிறது.
கிரிக்கெட்டில் எப்படி பிசிசிஐ, ஐசிசியை மிரட்டும் அளவிற்கு வளர்ந்திருக்கிறதோ, அதற்கு ஈடான அளவில் யுஈஎப்ஏ (Union of European Football Associations – UEFA), ஃபீஃபாவை தன் பிடிக்குள் வைத்திருக்கிறது என்பது தான் நிதர்சனம். யுஈஎப் ஏயின் கீழ் தான் இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி & ஸ்பெயின் வரும். ஐரோப்பிய கால்பந்து கிளப்கள் தான் உலகின் பணக்கார கிளப்புகள்.
இரண்டு உதாரணங்கள்
கொலம்பியா. உலகின் போதைப் பொருள் தலைநகரம். போதை தாதாக்கள் (Drug lords) ஒரு நாட்டின் நாடி நரம்பெல்லாம் ஊடுருவியிருக்கக்கூடிய தேசம். வெறும் போதைப் பொருளை உலகமெங்கும் கடத்தி விற்பதனால் மட்டுமே உங்களை ‘மேல்மட்ட’ அளவில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அந்த லெவலில் சேர இன்னொரு தகுதியும் தேவை. அது நீங்கள் எத்தனை கால்பந்து கிளப்புகளில் பணம் போட்டிருக்கிறீர்கள் என்பது. கால்பந்து கிளப் என்பது வெறும் விளையாட்டோ, பொழுதுபோக்கோ அல்ல. எக்கச்சக்க பணத்தினை கிளப்புக்குள் கொண்டு வந்து வெள்ளையாக்குவது தான் வேலை. சாண்டா ப்பீ (Santa Fé) என்று கூகிளிட்டால் அந்த கிளப்புக்கும், போதை தாதாக்கள் அதை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் பணத்தினை மாற்றினார்கள் என்பதும் தெரியவரும்.
தக்ஷின் ஷினவத்ரா – தாய்லாந்தின் முன்னாள் பிரதமர். இந்நாளில் ஊழல், பதுக்கல் குற்றங்களுக்காக தாய்லாந்தின் குற்றப்பட்டியலில் இருப்பவர். பூர்வாசிரமத்தில் தாய்லாந்து அரசக் குடும்பத்தின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர். ஊடக பில்லியனர். 2007ல் இங்கிலாந்தின் மிகப் பிரபலமான மான்செஸ்டர் சிட்டி (Manchester City) கால்பந்து கிளப்பினை $133 மில்லியனுக்கு (ரூ.603,39,40,000) வாங்கினார். வாங்கிய பணம் அத்தனையும் வெளிநாடுகளில் அவர் பதுக்கி வைத்திருந்த பணம். வாங்கிய ஒரே வருடத்தில் இந்த கிளப்பினை அபு தாபி வளர்ச்சி & முதலீடு குழுமத்திற்கு (Abu Dhabi United Group Investment and Development) $329 மில்லியனுக்கு (ரூ.1492,45,00,000) விற்று போட்டப் பணத்திற்கு வெள்ளையடித்தாகிவிட்டது. இனி இந்த $329 மில்லியனை உலகின் எந்த வங்கியிலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் வைக்கலாம். இதில் ஒரே வருடத்தில் பணமும் வெளுப்பானது; கூடவே $67 மில்லியன் லாபம் போனஸ். இது தான் கால்பந்தின் மகிமை.
ஆசியாவில் கால்பந்தின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் மட்டும் இங்கிலிஷ் ப்ரீமியர் லீக் ஆடும் எல்லா கிளப்புகளுக்கும் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. கிளப்போடு சேர்த்து கிளப்பின் ப்ராண்டினைப் பயன்படுத்தி எக்கச்சக்கமாய் வியாபார சாத்தியங்களை (Merchandise) விஸ்தரிக்கலாம். போரடித்தால், பெங்களூர் பண்ணார்கட்டா சாலையில், ஃபோரம் ‘மாலு’க்கு அருகில் இருக்கும் மேன்செஸ்டர் யுனெடட் பார் & பப்புக்கு போய் பாருங்கள். எல்லாம் யானை விலை விற்கும். ஆனால் வாங்குவது என்னமோ லோக்கல் சரக்கு. இந்த மாதிரியான வழிகளிலும் பணம் விஸ்தரிக்கப்படும்; வெள்ளையடிக்கப்படும்; கணக்கு காட்டப்படும்
1990களின் ஆரம்பத்தில் தான் கால்பந்து வணிகமயமாக ஆரம்பித்தது. இதே மாதிரியான வணிகமயமாக்கம் கிரிக்கெட்டில் கெர்ரி பேக்கர் ஆஸ்திரேலியாவில் முதலில் கொண்டுவந்தார். ஆனால் 20-20 யின் கண்டுபிடிப்பு, கிரிக்கெட் வணிகமயமாக்கலை எங்கோ கொண்டுப் போய்விட்டது. இந்தியாவில் இந்த 20-20 லீக் ஆரம்பித்தது பிசிசிஐ அல்ல. அந்த புண்ணியம் ஸீ டிவியின் சுபாஷ் சந்திராவை சாரும். அது இந்திய கிரிக்கெட் லீக் (Indian Cricket League – ICL).ஆனால் அதை சீர்படுத்தி, இந்திய ப்ரீமியர் லீக் (Indian Premier League -IPL) என்று பெயர் கொடுத்து, உலகளாவிய கோப்பையாக மாற்றிய பெருமை லலித் மோடியையும், பிசிசிஜயையும் சாரும். தற்போது ஐபில்லில் 10 அணிகள் இருக்கின்றன். இதில் ஏற்கனவே இரண்டு அணிகளின் மீது (ராஜஸ்தான் ராயல்ஸ் – ராஜ் குந்த்ரா+ஷில்பா ஷெட்டி & கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ப்ரீத்தி ஜிந்தா + நெஸ் வாடியா + இன்னபிற பங்குதாரர்கள்) வழக்கு இருக்கிறது. இதில் ராஜ் குந்த்ரா லண்டன் தொழிலதிபர் என்பது மட்டும் உப செய்தி.
ராபர்ட் ஆலன் ஸ்டான்பார்டு – கரீபியன் தீவுகளில் முக்கியமாய் பர்புடா & ஆண்டிகுவாவில் முளை விட்ட ஆள். சரியான பந்தா பேர்வழி. 1980களில் ஹூஸ்டனில் நிலத்தினை வாங்கி பின் விற்று கல்லா கட்டி, அந்த காசில் மேற்கிந்திய தீவுகளில் செட்டிலாகி, வங்கி ஆரம்பித்து, காசு வாங்கி, பிரதமர் வரைக்கும் பேசிய செல்வாக்கான ஆள். 2006-இல் ஸ்டான்போர்ட் 20/20 என்றொரு பந்தயத்தினை ஆரம்பித்தார். இரண்டாவது பந்தயம் 2008-இல் நடந்தது. டிரினிடாட் & டொபோகோ தான் முதல் பந்தய வெற்றியாளர்கள். பரிசுத் தொகை $280,000. அதே வருடத்தில் இதன் வெற்றியை பார்த்த இங்கிலிஷ் & வேல்ஸ் கிரிக்கெட் அமைப்பு (English & Wales Cricket Board – ECB) அவரோடு ஒரு ஒப்பந்தம் போட்டு மேற்கிந்திய அணியும், பிரிட்டிஷ் அணியும் ஆடும் ஒரு பந்தயத்தையும், பரிசுத்தொகையாக $20 மில்லியனையும் அறிவித்தது.
2009-இல் ஆலன் ஸ்டான்போர்டு, ஊழல், கறுப்புப் பணம் வரி ஏய்ப்பு மற்றும் வாடிக்கையாளர்களை ஏமாற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவரின் பல்வேறு நிறுவனங்களின் வழியே போண்டியான பணம் கிட்டத்திட்ட $8 பில்லியன் டாலர்கள். அவருக்கும் மெக்சிகோவின் 13 மாகாணங்களில் போதைப் பொருள் விற்ற நெட்வொர்கான கல்ப் கார்டெலுக்கும் (Gulf Cartel) சம்பந்தம் உண்டென்று கண்டறியப்பட்டது. இப்போது அவர் அமெரிக்க சிறையில்.
கிரிக்கெட்டில் இதே மாதிரியான சம்பவங்கள் மேட்ச் பிக்ஸிங், பெட்டிங் மாதிரியான விஷயங்களில் நடந்திருக்கிறது. இன்றைக்கும் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் உலகத்தில் எங்கு நடந்தாலும், துபாயில் பில்லியன் டாலர் அளவுக்கு ஒடும். அத்தனையும் கள்ளப் பணம். கருப்புப் பணம். கணக்கில் காட்டாதப் பணம். மேட்ச் பிக்சிங், பெட்டிங் மாதிரியான சமாச்சாரங்களில் விளையாடப்படும் பணம் பெரும்பணம். உலகக் கோப்பை 2011ல் இந்தியா – பாகிஸ்தான் மேட்சில் சச்சினின் 50க்கு கட்டப்பட்ட பெட்டிங் பணம் 1:7.5 அதாவது நீங்கள் 10,000 கட்டி, சச்சின் 50 அடித்தால் உங்களுக்கு 75,000 கிடைக்கும். தெளிவாக இதுப் பற்றிய அறிவு வேண்டுமானால், மேட்ச் நடக்கும் நாளில் ஒரு எட்டு சென்னை செளகார்பேட்டை போய் வாருங்கள். மேலே டிவியும், டேபிளின் மீது 500,1000 ரூபாய் கட்டுகளுமாய் ஜெகஜோதியாய் இருக்கும்.
ஏன் இவை நடக்கிறது ? எப்படி நடக்கிறது ? எவ்வாறு பணம் வெள்ளையாகிறது ? எப்படி மாபியாக்கள் விளையாட்டில் உள்நுழைகிறார்கள் ? வேறென்ன விளையாட்டுகளில் இது நடக்கிறது ? இது அத்தனையும் அடுத்த வாரம்.
கல்லா நிரம்பும்……
No comments:
Post a Comment