Tuesday, September 27, 2011

நம் சுவாசக் காற்று தரும் கடலைக் காப்போம்!


மனிதன் உயிர்வாழ மிகவும் தேவை ஆக்ஸிஜன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மனிதனுக்கு மட்டுமல்லாமல் இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தேவையான ஆக்ஸிஜனை தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலமாகத் தருகின்றன என்பது நாம் அறிந்ததே.

அதேநேரத்தில், நிலத்தில் உள்ள தாவரங்கள் நமக்கு தேவையான ஆக்ஸிஜனின் அளவில் 10 சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்கின்றன. அப்படியென்றால், மீதமுள்ள 90 சதவிகித ஆக்ஸிஜனை அளிப்பது எது என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கிறார், கொல்கத்தாவில் உள்ள கடல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி செல்வின் பிச்சைக்கனி.

"கடலின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் பைட்டோபிளாங்டன் (phytoplankton) என்ற கண்ணுக்குத் தெரியாத தாவரங்கள்தான். இவை போல கடலில் உள்ள மற்ற கடற்பாசி மற்றும் கடற்புற்கள் போன்ற பசும் தாவரங்களும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. ஆனாலும் நமக்கு தேவையான ஆக்ஸிஜனை அளிப்பதில் மிதவை தாவரங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

கடலில் உள்ள சிறிய வகை மீனிலிருந்து பெரிய திமிங்கலம் வரை அனைத்து உயிர்களுக்கும் தேவையான உணவினை அளிப்பதும் இந்த மிதவை தாவரங்கள்தான். கடலில் உணவு சங்கிலியின் ஆதாரமாக இந்த மிதவை தாவரங்கள் விளங்குகின்றன. இந்தத் தாவரங்களின் சிறப்பு என்வென்றால், இவற்றை நாம் நுண்ணோக்கியின் மூலமாக மட்டுமே காண இயலும். இவை கடலின் மேற்பரப்பிலிருந்து சூரிய ஒளி செல்லக்கூடிய ஆழம் வரை காணப்படுகின்றன. இவை ஒரு செல் உயிரி தாவரங்களாகும்.

இந்த மிதவை தாவரங்கள் பல வகைப்படும். அவை ஒவ்வொன்றும் உடல் அமைப்பிலும் அளவிலும் வளர்ச்சி வேகத்திலும் வேறுபடுகின்றன. நிலத்தில் உள்ள தாவரங்களைப் போன்று, இவையும் ஒளிச்சேர்க்கையின்போது கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை எடுத்துக் கொள்வதால் (பயன்படுத்துவதால்) வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்லா வாயுவான கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் குறைத்து கார்பனை நிலைப்படுத்துகின்றன. அதன் மூலமாக புவி வெப்பமாவது தடுக்கப்படுகிறது.

இந்தத் தாவரங்கள் அளவில் மிகச் சிறியவை. அதனால், வெறும் கண்ணால் பார்க்க முடியாது. ஒரு லிட்டர் கடல் நீரில் சுமார் ஐம்பதாயிரம் செல்கள் இருக்கும் என்றால், இவற்றின் அளவை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்களேன். இந்த எண்ணிக்கை இடத்துக்கு இடம் கடலின் நீர், தரம் மற்றும் தாதுக்களின் அளவைப் பொறுத்து வேறுபடும். ஒரு சில பைட்டோபிளாங்டன்கள் வெளியிடும் வேதிப்பொருளானது காற்றில் கலந்து வானில் கந்தகத் தன்மையை ஏற்படுத்தி மேகங்கள் உருவாவதற்கு வழிசெய்து மழைப் பொழிவுக்கு காரணமாக அமைகின்றன.

ஆனாலும், ஒரு சில தாவரங்கள் அவை அதிக எண்ணிக்கையில் வளரும்போது நச்சுக்களை பெருமளவில் உற்பத்தி செய்கின்றன. அதனால், கடல் சூழலுக்கும் மனிதனுக்கும் தீய விளைவுகள் ஏற்படும். இவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வானது சிவப்பு அலைகள் எனப்படும் விளைவுகள், அதாவது திடீரென இவை கூட்டம் கூட்டமாக பலுகிப் பெருகி கடலின் நிறத்தையே சிவப்பாக மாற்றி விடுகின்றன.

பருவநிலை மாற்றம்..

பருவ நிலை மாற்றத்தால் பூமியின் வெப்பநிலை அதிகரித்து, அதனால் கடல் நீரின் வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. அதிக வெப்பநிலையில் இத்தாவரங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் படிப்படியாக தாவரங்களின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.

புவி வெப்பமடைவதால் நீர் அமிலத்தன்மை அடையும். இது சில வகை தாவரங்களை மிகவும் பாதிக்கும். கடலின் நீரோட்டங்கள் (water current) திசை மாறுவதால், கடலின் கீழிருந்து கடலின் மேற்பரப்புக்கு வரக்கூடிய தாதுக்களின் அளவும் குறையும். அதனால், தாவரங்களின் வளர்ச்சி வீதம் குறைய வாய்ப்புள்ளது.

கடலில் கழிவுநீர் கலப்பதினால் கடல்நீர் மாசுப்பட்டு இந்தத் தாவரங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.

நம்மால் முடிந்த அளவு கடல் மாசுபடாமல் பார்த்துக் கொண்டாலே போதும். நமக்கு பல வழிகளில் உயிர்காக்கும் தோழனாய் திகழ்ந்து நம்மை வாழ வைக்கும் தாவரங்களை பாதுகாக்க முடியும்," என்கிறார் செல்வின் பிச்சைக்கனி.

நமது பங்குதான் என்ன?

பருவநிலை மாற்றத்தையும் புவி வெப்பமடைவதையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கடல் மாசுபடுவதில் இருந்து தடுப்பதற்கு தனி மனிதர்களாகிய நாமும் பங்காற்ற முடியும். அவற்றில் சில வழிகள்:

* பழைய டீசல் வாகனங்களையும், பெரிய இயந்திரங்களையும் உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின் உபகரணங்களை பயன்படுத்தும்போது மட்டுமே சுவிட்சினை ஆன் செய்ய வேண்டும், மற்ற நேரங்களில் ஆஃப் செய்ய வேண்டும்.

* மின்சார நிலையங்களில் இருந்து அதிக அளவு நச்சு வாயு-க்கள் (கார்பன்) வெளியேறுகின்றன. அதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

* குறைந்த தூரங்களுக்கு செல்ல மிதி வண்டியை பயன்படுத்தலாம் அல்லது நடந்து செல்லலாம். இதன் மூலம் வாகனங்களில் இருந்து வெளியேறக்கூடிய கார்பன் அளவினை குறைக்க முடியும். நடந்து செல்வது உடலுக்கும் ஆரோக்கியம் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

* வீடு மற்றும் தெருவோரங்களில் சிறு செடிகளையும், மரங்களையும் வளர்க்க வேண்டும்.

* பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகள் அதிக அளவில் கரியமில (கார்பன் டை ஆக்ஸைடு) வாயுவை வெளியிடுகின்றன.

* கழிவு நீர்களை சுத்திகரிப்பு செய்த பின்னர்தான் ஆறுகளிலோ அல்லது கடலிலோ விட வேண்டும்.
இவ்வாறு நம்மாலானவற்றைச் செய்தால்தான் கடலில் உள்ள உயிர்களை பாதுகாக்க முடியும்.
நம்முடைய அடுத்த தலைமுறைக்கு சொத்து, பணம் சேர்த்து வைப்பதைவிட நல்ல ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் தூய காற்றையும் வைத்துவிட்டு செல்வது நமது கடமை.

இந்தப் பூமியில் நாம் வாழ்வது குறைந்த காலம்; நாம் வசிக்கும் இந்தப் பூமி, நம்முடைய சந்ததியினரும் குடியேறப்போகும் ஒரு வாடகை வீடு என்பதை மறந்துவிடாது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொள்ளாமல் இருந்தால், குடிநீரைப் போல நாம் சுவாசிக்க நல்ல காற்றினைக் கூட வரும் காலங்களில் விலை கொடுத்துதான் வாங்க வேண்டி வரும் என்ற எச்சரிக்கைமணியின் ஓசையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment