விடியாத இரவு
சிறையிலிருந்து நளினி எழுதும் திடுக் தொடர்!
அன்பான சகோதர சகோதரிகளே! இந்தத் தொடரின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். 21 ஆண்டுகளாக, சிறைக் கம்பிகளும், கான்கிரீட் சுவர்களுமே எனக்கு நண்பர்கள். வெளி உலகத்தை பார்த்தது கிடையாது. வெளி உலகம் எப்படி வாழ்கிறது, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை தினந்தோறும் எனக்கு வரும் செய்தித் தாள்களை வைத்தே தெரிந்து கொள்கிறேன்.
‘எனக்கு விடுதலை உண்டா, இல்லையா?’ என்பதே தெரியாமல் நான் தவித்துகொண்டிருந்தபோது, பேரிடியாக வந்தது, என் கணவர் முருகன் உள்ளிட்டோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட செய்தி. இந்தச் செய்தி வெளியான நாள் முதல், தமிழகம் மற்றும் உலகமெங்கும் எழுந்த ஆதரவு எங்களை நெகிழச் செய்கிறது. இன்று நீதிமன்றத் தடை உத்தரவால், மரணம் தற்காலிகமாக தள்ளிப் போடப்பட்டிருந்தாலும், உத்தரவு என்னவோ மகிழ்ச்சி அளிக்கவே செய்கிறது.
மரண தண்டனை ஒழிப்பு என்கிற சமீபத்திய விவாதத்தின்போது, ‘‘உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த பிறகு, உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்கலாமா? வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள்தான் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்களே! இவர்களை உடனே தூக்கில் போடவேண்டும்’’ என்பதுபோன்ற பரவலான கருத்தாக்கங்கள் எழுந்தன.
இந்த விவாதங்களுக்குள் போகும் முன்பாக, ‘நாங்கள் எப்படி கைது செய்யப்பட்டோம், எவ்வாறு நடத்தப்பட்டோம், எந்த சூழலில் எங்களிடம் ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன’ என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
இந்த சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இளைய தலைமுறையினருக்கு எங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் தெரியாதல்லவா? அதற்காகத்தான் உங்களை பத்திரிக்கை வாயிலாக சந்திக்க விழைகிறேன்.
எம் மீதான சித்ரவதைகளை எழுதுவதே இன்னுமொரு சித்ரவதைதான்.
அன்புடன்
நளினி ஸ்ரீகரன்.
14, ஜூன் -1991. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டு மூன்று வாரங்கள் முடிந்துவிட்டது. வழக்கத்திற்கு மாறாக அன்று ரொம்பவும் இருட்டாக இருப்பதுபோல உணர்ந்தேன்.
நானும் என் கணவர் ஸ்ரீகரனும்(முருகன்) இரவு 11 மணிக்கு சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டோம். அப்போது நான், இரண்டு மாத கர்ப்பம். மூன்று போலீசார் எங்கள் அருகில் வந்து என்னையும், முருகனையும் கைது செய்கிறோம் என்றும், ஆட்டோவில் ஏறுங்கள் என்றும் உத்தரவிட்டனர்.
நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏற்றப்பட்டோம். ஆட்டோவின் இடது ஓரத்தில் ஒரு காவலர் அமர்ந்து கொண்டார். காவலர் அருகில் என் கணவர் முருகனும், முருகன் அருகில் நானும், எனக்கு அருகில் ஒரு உதவி ஆய்வாளரும், மற்றொரு காவலரும் அமர்ந்துகொண்டனர். மூன்று பேர் உட்காரும் இடத்தில், நான்கு பேர் உட்காந்து இருந்ததால், அந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, அந்த உதவியாளர், என் உடலில் படக்கூடாத இடங்களில் தன் கையை வைத்து, செய்யக்கூடாத காரியங்களைச் செய்தார். ஒரு தாயாக இருக்கும் என்னை, என் கணவர் அருகில் இருக்கும்போதே, இப்படி அசிங்கமாக நடந்துகொண்ட அந்த காவலர் எப்படிப்பட்டவராக இருக்க முடியும்? இப்போது நினைத்தாலும் உடல் கூசுகிறது.
‘கைது செய்யப்பட்டோம்’ என்கிற அதிர்ச்சியில் இருந்து மீள, ஒரு சில வினாடிகள்கூட கொடுக்கப்படாமல், எனக்கு நேர்ந்த இந்தக் கொடுமையின் வேதனையை அனுபவித்தால் மட்டுமே உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், க்ரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது சி.பி.ஐ என்று அழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுக் குழுவின் ‘மல்லிகை’ அலுவலகம். அந்த மல்லிகை அலுவலகம் எனக்கும், என்னோடு கைது செய்யப்பட்டவர்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு நரகத்தை காண்பிக்கப்போகிறது என்பது, அந்த ஆட்டோ காம்பவுண்டுக்குள் நுழையும்போது எனக்கு தெரியாது.
ஆனால், மல்லிகைக்குள் நுழைந்த ஒரு சில நிமிடங்களிலேயே நரகம் தெரிந்துவிட்டது. பெயர்தான் மல்லிகையே தவிர, மல்லிகை மலருக்கு உண்டான மென்மையோ, மணமோ அந்த கட்டிடத்தில் துளியும் கிடையாது. மாறாக மலருக்கு நேர் மாறான மிருககுணம் உடைய மனிதர்களும், மலத்திலும், சிறுநீரிலும், வாந்தியிலும் என்னைப் போன்றவர்களைப் புரள வைக்கப்பட்ட அவலமும்தான் அந்தக் கட்டிடத்தின் அடையாளங்கள்.
மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, எந்த விதத்திலும் மனித உரிமைகளை மீறாமல், ராஜீவ் வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது என்று புத்தகம் எழுதும் அளவுக்கு மேடைதோறும் இப்போதும் பேசிவரும் அந்த முன்னாள் அதிகாரியின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
எங்களைப் பார்த்ததும், “கொலைகாரி சிக்கிட்டாளா? ரெண்டு நாய்களும் சிக்கிட்டாங்களா? அடிச்சு இவங்க முதுகுத் தோலை உரிங்க. அப்போதான் வழிக்கு வருவாங்க” என்று கடும் குரலில் உத்தரவிட்டார். நானும், என் கணவரும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, தனித்தனி அறைகளுக்குள் இழுத்துச் செல்லப்பட்டோம். மிகவும் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் திட்டி, இடக்குமடக்கான கேள்விகளை கேட்டனர். அரை மணிக்கும் மேலாக எனக்கு ஆபாச அர்ச்சனைகள் நீண்டுகொண்டிருந்தபோது, பக்கத்து அறையில் இருந்து நீண்ட அலறல் சத்தம் கேட்டது. அது, என் கணவர் வைக்கப்பட்டிருந்த அறை. வேகவேகமாக அந்த அறைக்குள் நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.
அங்கே நான் கண்ட காட்சி! இப்போது நினைத்தாலும் என் உடல் நடுங்குகிறது. எழுதும் என் விரல்கள் ஆடுகின்றன. என் கணவரை நிர்வாணப்படுத்தி பல பேர் சுற்றி நின்று லத்தியால் அடித்துக் கொண்டிருந்தனர். என் கணவர் வேதனை தாங்க முடியாமல் அலறிக் கொண்டிருந்தார். நான், கண்களை மூடிக்கொண்டு “அவரை விட்டுவிடுங்கள், அடிக்காதீர்கள்” என்று அலறினேன், அழுதேன், கெஞ்சினேன். ஆனால், லத்தி அடிகள் விழுந்துகொண்டே இருந்தது. அங்கிருந்த ஒரு அதிகாரி, “என்ன நடக்கிறது என்று பார்த்தாயா? சொல்லுகிறபடி கேட்காவிட்டால் உனக்கும் இதே கதிதான். உன் கணவரை அடித்தே கொன்று விடுவோம்” என்று கூறிவிட்டு, என்னை பழைய அறைக்கே இழுத்துச் சென்றுவிட்டார்கள்.
அன்று இரவு முழுவதும் என்னை தூங்கவிடவில்லை. குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்கவில்லை. அந்த இரவிலும் அந்த அறையில் பளிச்சென எரிந்து கொண்டிருந்த விளக்குகள் என் கண்ணை உறுத்தின. அப்போது உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் கைகள் என் கழுத்தை நோக்கி நீண்டது!
-இரவுகள் நீளும்
நன்றி மீடியா வாய்ஸ் வார இதழ்
No comments:
Post a Comment