Saturday, September 17, 2011

திரிவேணி சங்கமம் - பூமிக்குள் நதி


நம் நாட்டில், திரிவேணி சங்கமம் என்று அலஹாபாத் நகரைச் சொல்வார்கள். அங்கே கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கின்றன. அதனால்தான் இந்தப் பெயர். நீங்கள் அங்கே சென்றால், கங்கை மற்றும் யமுனை நதிகள் சங்கமிப்பதைக் கண்களால் காண முடியும். சரஸ்வதி எங்கே என்று கேட்டால்...? 'அது பூமிக்கு அடியில் ஓடுகிறது’ என்பார்கள். இதைப் பலரும் நம்பமாட்டார்கள். ஆனால், இப்போது பிரேஸில் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம், பூமிக்குள் நதிகள் ஓடுவது உறுதி ஆகிவிட்டது. அங்கே அமேஸான் பிரதேசத்தில் சுமார் ஆறாயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு, பூமிக்குள் நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில்... நதி ஒன்று ஓடுவதாக ஹம்ஸா என்பவரின் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த இவர், பிரேஸில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள 'தேசிய புவி வெப்ப ஆய்வு மையத்’தில் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

''பூமிக்குள் ஓடும் இந்த நதியை, புவியின் வெப்ப மாறுதல்களை அடிப்படையாக வைத்துக் கண்டறிந் துள்ளோம். இந்த நதி, ஒரு வினாடிக்கு 3,900 கன மீட்டர் அளவுக்குத் தண்ணீரைக் கொண்டுசெல்கிறது. இந்த நதிக்கு என்னுடைய மாணவர்கள் ஹம்ஸா நதி என்று பெயரிட்டுள்ளனர். நதியைக் கண்களால் காண 4 கி.மீ. ஆழத்துக்குக் கிணறு வெட்ட வேண்டும். அந்த அளவுக்கு செலவு செய்ய பணம் இல்லை என்பதால் அந்த முயற்சியில் இறங்க வில்லை'' என்கிறார் ஹம்ஸா.

இப்போது சொல்லுங்கள்... நம் நாட்டில் பூமிக்குள் சரஸ்வதி நதி ஓடுவதை நம்பலாம் தானே!

No comments:

Post a Comment