அதிமுக அணியில் இருந்து பிரிந்ததால், உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சிக்கு பாதிப்பு ஏதும் இருக்காது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.
இந்தத் தேர்தலில் தேமுதிக - மார்க்சிஸ்ட் இடையே இடப்பங்கீடு தொடர்பாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்த அறிவிப்பை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று நிருபர்களிடம் கூட்டாக வெளியிட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்காக மூன்றாவது அணி உருவாகியிருப்பதில் மகிழ்ச்சி என்று விஜயகாந்த் குறிப்பிட்டார்.
அதிமுக கூட்டணியில் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதில் பாதிப்பு ஏற்படுமா என கேட்டதற்கு, "பாதிப்பு இருக்காது," என்றார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்த கூட்டணி இப்போது தொடராதது ஏன்? அதிமுகவுடனான கருத்து வேறுபாடு என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க விஜயகாந்த் மறுத்துவிட்டார்.
இதுபற்றி இப்போது பேச விரும்பவில்லை என்ற அவர், இதனால் தனக்கு பயம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் என்றும், தேர்தல் பிரசாரங்களின்போது தாம் விரிவாகப் பேசவிருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், திருச்சி மேற்கு இடைத்தேர்தல் குறித்து சிந்திப்பதற்கு தனக்கு நேரமில்லை என்றும் விஜயகாந்த் குறிப்பிட்டார்.
மார்க்சிஸ்டுக்கு 2 மாநகராட்சிகள்...
தேமுதிக - மார்க்சிஸ்ட் இடையிலான தேர்தல் உடன்பாட்டின்படி, கோவை மற்றும் வேலூர் மாநகராட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி, பழநி, சிதம்பரம், கடலூர், ஜெயங்கொண்டம், சிவகங்கை, அனகாபுத்தூர், குழித்துறை, குளச்சல், கம்பம், பெரியகுளம், புதுக்கோட்டை உட்பட மொத்தம் 25 நகராட்சிகள் மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம், மானாமதுரை, கிள்ளியூர், திருப்புவனம், படைவீடு, குறிஞ்சிபாடி, உளுந்தூர்பேட்டை, செட்டிப்பாளையம் உட்பட 61 பேரூராட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், வார்டு ஒதுக்கீடு தொடர்பாக மாவட்டத் தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள் என்று விஜயகாந்த் அறிவித்தார்.
No comments:
Post a Comment