பிரெஞ்ச் மொழியில் டேஜா வூ என்றால் ஏற்கெனவே கண்டது என்று அர்த்தம். ஒரு விஷயம் நடக்கும்போது அதேபோல முன்னர் ஒருமுறையும் நடந்த உணர்வு மனதில் தோன்றுவதுதான் டேஜா வூ. ஒவ்வொரு முறை ஊழல், லஞ்சம் பற்றி விவாதங்கள் எழும்போதெல்லாம், எனக்கு இந்த டேஜா வூ உணர்வு தவறாமல் ஏற்படுகிறது. ஏழு வருடங்களுக்கு முன்னர் 2004ல் ஒரு பிரபல வாரமிருமுறை இதழில் “ஊழலே உன் வேர் எங்கே” என்று ஒரு தொடர் கட்டுரை எழுதினேன். இப்போது ஊழலை ஒழிப்போம். ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்று பேசப்படுகின்றவை எல்லாம் ஏற்கெனவே கேட்ட கருத்துகளாகவே தோன்றுகின்றன. ஏழு வருடம் முன்பு எழுதிய கட்டுரைத் தொடரை எடுத்துக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தேன். டேஜா வூவாக இருக்கிறது. அதிலிருந்து சில பகுதிகள் இதோ:
ஊழலின் வேர் படிப்பில் இருக்கிறதா? கல்லாமையில் இருக்கிறதா? பண பலத்தில் இருக்கிறதா? கிரிமினல் குற்ற மனப்பான்மையில் இருக்கிறதா? எதிலிருக்கிறது? நமது எம்.பி.களில் எல்லாவிதமானவர்களும் இருக்கிறார்கள். கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும். மீடியா பொதுவாகக் கோமாளி என்று வர்ணிக்கிற லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்துதான் 2004 மக்களவைக்கு மிக அதிகமான படித்த எம்.பி.கள் வந்தார்கள்! லாலுவே ஜெயப்பிரகாஷ் நாராயணனின் மாணவர். புதிய தலைமுறையினர் அரசியலுக்குள் வந்தால் நிறைய மாற்றங்கள் வந்துவிடும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால், 2004 மக்களவையில் மிக அதிக கடன் பாக்கி, கிரிமினல் குற்றச்சாட்டுக்கெல்லாம் உள்ளான எம்.பி.கள் அதிகமாக இருந்தது லாலுவின் கட்சியில்தான்.
கடந்த பத்தாண்டுகளில் அரசியலுக்கு வந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே அரசியல் கட்சிகளுடன் ஏதாவது ஒரு தொடர்பில் இருந்தவர்கள். ஒன்று குடும்பத் தொடர்பு. அப்பா அம்மாவோ, அண்ணன் அக்காளோ, தாத்தா பாட்டியோ அரசியல் பிரமுகராக இருக்கும் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அல்லது அரசியல்வாதிகளுக்கு ரவுடித்தனத்தில் ஒத்தாசை செய்து வந்த ரவுடிக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அப்துல் கலாம் ஆசைப்படுகிற மாதிரி லட்சிய வேகம் உள்ள இளைஞர்கள் அல்ல. சமூக அறிஞர் ரஜ்னி கோத்தாரி சுட்டிக் காட்டியது போல ஒரு காலத்தில் அரசியல்வாதிகளுக்கு அடியாட்களாக இருந்து வந்த தாதாக்கள் பலரும், 1975க்குப் பிறகு சஞ்சய் காந்தியின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு, தாங்களே நேரடியாக அரசியல் தலைவராகிவிட்டால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்து அப்படி ஆகிவிட்டவர்கள். ஊழலை சட்டப்பூர்வமாக நியாயப்படுத்தும் ஒரு வேலையை அரசியல்வாதிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது செய்திருக்கிறார்கள். தொழிலதிபர்களோ, சினிமாக்காரர்களோ, வேறு யாராயிருந்தாலும் சரி, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், தாமாகவே முன்வந்து அதை அறிவித்துவிட்டால், அதற்கு வெறும் 30 சதவிகித வரி விதிக்கப்படும். வரியை செலுத்திவிட்டால் போதும். அந்தப் பணம் எப்படிச் சம்பாதிக்கப்பட்டது என்ற கேள்வி எதுவும் கேட்கப்படமாட்டாது என்று 1997ல் அறிவிக்கப்பட்டது.
அரசுக்கு வரி வருமானத்தை அதிகரிக்கவும், கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கி சுழற்சிக்குக் கொண்டு வந்து பொருளாதாரத் தேக்கத்தை உடைக்கவும் இதைச் செய்வதாக அப்போது அறிவிக்கப்பட்டது. கணக்குக் காட்டாமல் வைத்திருந்த சொத்து, பணமாக இருந்தால் 30 சதவிகித வரி. கட்டடமாகவோ, நகைகளாகவோ இருந்தால், அதன் மதிப்பில் 30 சதவிகித வரி. இந்த இடத்தில்தான் ஒரு சலுகை ஷரத்து சேர்க்கப்பட்டது. அதாவது கட்டடம், நகைகளின் மதிப்பு 1997ஆம் ஆண்டு மதிப்பாக இருக்கத் தேவையில்லை. 1987ஆம் ஆண்டு மதிப்பு அடிப்படையில் வரி செலுத்தினால் போதும்.
இதன் விளைவு என்ன தெரியுமா?
கைவசம் கோடிக்கணக்கில் ரொக்கமாக கறுப்புப்பணம் வைத்திருந்தவர்கள் எல்லாம் அந்தப் பணத்துக்கு வரி கட்டாமல், நகையும், கட்டடமும் வைத்திருப்பதாகப் பொய் சொன்னார்கள். அந்தப் பொய் நகைகளுக்குப் பத்தாண்டு பழைய மதிப்பில் வரி கட்டினார் கள். வரி கட்டியபிறகு சில ஆண்டுகள் கழித்து அந்தப் பொய் நகைகளைத் தற்போதைய மதிப்பில் விற்றுவிட்டதாக இன்னொரு கணக்கைக் காட்டிவிட்டார்கள். அதாவது கறுப்புப் பணம் வைத்திருந்ததற்கு வரி கட்ட அனுமதி தந்தால்,அதிலும் மோசடி. இப்படி சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருக்கிறது. ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.ஏன் நடவடிக்கை இல்லை? அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளுக்கு ஏராளமாகப் பணம் தேவைப்படுகிறது. அவர்களுடைய சொந்த ஆடம்பரத்துக்கும் அவர்கள் குடும்பத்தில் அடுத்த பத்து தலைமுறைகளின் தேவைக்காகவும் மட்டுமா இந்த ஊழல்கள் நடத்தப்படுகின்றன? சகிக்கப்படுகின்றன? இல்லை. நீங்கள் மிக மிக நேர்மையான தனி மனிதராக இருந்தாலும் பெரும் பணம் இல்லாமல் அரசியல் செய்யவே முடியாது என்பதுதான் உண்மை.
ஏன் அப்படி ?
இந்திய அரசியலைப் பொறுத்தமட்டில் தேர்தல் என்பதுதான் அரசியலில் உச்சக் கட்டம். தேர்தல் விதிகளின்படி சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் பத்து லட்ச ரூபாய் வரையும், மக்களவைத் தேர்தலில் 25 லட்சம் வரையும் செலவு செய்யலாம். ( இது 2004ல். இப்போது லட்சம், லட்சம் முறையே.)நேர்மையானவரான உங்களைத் தப்பித் தவறி ஏதோ ஒரு பெரிய கட்சி தன் வேட்பாளராக அறிவித்துவிட்டால் என்ன ஆகும்? வரம்பை மீறி நான் செலவு செய்யமாட்டேன் என்று முடிவு செய்கிறீர்கள். நீங்கள் ஒரு அரசு ஊழியராகவோ, ஆசிரியராகவோ, பத்திரிகையாளராகவோ, தனியார் அலுவலக ஊழியராகவோ, வேலை பார்த்து வந்த நடுத்தர வகுப்பு அறிவுஜீவி என்று வைத்துக் கொள்வோம். உங்கள் சேமிப்பு, பிராவிடண்ட் ஃபண்டு லோன் எல்லாம் போட்டு தேச சேவை செய்ய முடிவு செய்துவிட்டீர்களானால் கூட, அதிகபட்சம் ஓரிரு லட்சங்களுக்கு மேல் உங்களால் திரட்ட முடியாது.
உங்கள் எம்.எல்.ஏ, தொகுதியில் சராசரியாக இரண்டு லட்சம் வாக்காளர்கள் இருப்பார்கள். நீங்கள் போட்டியிடும் செய்தி ஒவ்வொருவருக்கும் தெரிவிக்க, அச்சிட்ட தபால் கார்டை மட்டுமே ஒரே ஒரு முறை அவர்களுக்கு அனுப்புவதானால் கூட, அச்சுக் கூலி 50 பைசா, அஞ்சலட்டை விலை 2 ரூபாய் என்று மொத்தமாக 5 லட்சம் ரூபாய் செலவாகும். ஒரு குடும்பத்துக்கு ஒரு கார்டு அனுப்பினாலே, 2 லட்சம் காலி. வீடு வீடாக நீங்கள் நடந்து போனால் கூட, உங்கள் கூட வரும் பத்து பேருக்கும் உங்களுக்கும் சுமார் 25 நாட்கள் தினப்படி ஆகும் குறைந்தபட்ச செலவுக்குக் கூட காசில்லை. மிகக் குறைந்த பட்சம் இரண்டு ஜீப், நாலு ஆட்டோ, பத்தாயிரம் சுவரொட்டிகள், இருபது பொதுக் கூட்டங்கள் இல்லாமல் நீங்கள் போட்டியிடும் செய்தியை வாக்காளர்களிடம் எடுத்துச் செல்லவே முடியாது. இதற்கான செலவே பத்து லட்ச ரூபாய் தாண்டி விடும். நீங்கள் செலவிடும் சொந்தப் பணம் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும். மீதி பத்து லட்ச ரூபாயை உங்கள் கட்சி உங்கள் நேர்மையை மதித்து உங்களுக்காகச் செலவு செய்ய முன்வருவதாக வைத்துக் கொள்வோம் (சும்மா ஒரு ஃபேண்ட்டசிதான்). கட்சிக்கு அந்தப் பணம் எங்கிருந்து வரும்? பொது மக்களிடம் உண்டியல் ஏந்தி, கட்சி அதைத் திரட்டியதால் நீங்கள் நம்பினால், நீங்கள் நேர்மையானவர் மட்டுமல்ல முட்டாளும் கூட.
கட்சி திரட்டி வைத்திருக்கிற பணம் வெவ்வேறு வியாபாரிகள், தொழிலதிபர்கள் ரகசியமாக அளித்திருக்கும் பணம்தான். இதை சும்மா கொடுக்க அவர்கள் முட்டாள்கள் அல்ல. கட்சி ஆட்சியில் இருந்தால் தங்களுக்கு சாதகமானதைச் செய்து தரவும், எதிர்க்கட்சியில் இருந்தால், தங்களுக்கு சாதகமானவற்றை எதிர்க்காமல் இருக்கவும், பாதகமாக எதுவும் செய்யாமல் இருக்கவும், அவர்கள் கொடுத்து வைத்திருக்கும் அட்வான்ஸ் லஞ்சம்தான் அது. சில ஆண்டுகள் முன்பு அப்போது முதலமைச்சராக இருந்த ஒருவரை பஸ் முதலாளிகள் சந்தித்து, ‘நன்கொடை’ தரச் சென்றார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் பதில் விருந்தளித்தார். விருந்தின் முடிவில் பிரதான எதிர்க் கட்சித் தலைவரையும் சந்தித்துவிடும்படி அறிவுரையும் வழங்கினார். அதன்படி மறு நாள் காலை எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்து அவருக்கும் ‘நன்கொடை’ அளிக்கச் சென்றார்கள். வந்தவர்களை காலை டிபன் சாப்பிட அழைத்தார் தலைவர். “அங்கே லஞ்ச் என்றால் இங்கே டிபனாவது உண்டில்லையா?” என்று இரட்டை அர்த்தத்தில் அவர்களிடம் சொன்னார். கட்சியின் காஃபிச் செலவுக்கு மட்டும் நன்கொடை தரச் சென்றவர்கள், டிபனுக்கும் கொடுத்துவிட்டுத் திரும்பினார்கள். இந்த நிலைமையை மாற்ற ஒரு முயற்சி இந்திரா காந்தி காலத்தில் நடந்தது. ஊழலை ஒரேயடியாக நிறுத்திவிடும் முயற்சி என்று தப்பாகக் கருத வேண்டாம். உள்ளூர் தொழிலதிபர்கள், வியாபாரிகள் பிடியிலிருந்து மட்டும் கட்சியை விடுதலை செய்ய வேண்டும் என்பது சஞ்சய் காந்தியின் திட்டம். அவர்களில் கணிசமானவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணனையும் ஆதரிப்பவர்கள் என்பது சஞ்சய் காந்திக்கு உறுத்தலாக இருந்தது. எனவே பிரம்மாண்டமான வெளி நாட்டு கம்பெனிகளின் பேரங்களில் கட்சிக்கு நிதி திரட்டிக் கொண்டால், உள்ளூர் முதலாளிகளை சார்ந்திருக்கத் தேவையில்லை என்பது சஞ்சயின் யுக்தி. இந்த அணுகுமுறையின் விளைவாகத்தான் இரான் கேஸ் பைப் ஊழலில் தொடங்கி, பல்வேறு ராணுவ ஆயுத பேரங்கள் வரை வளர்ந்திருக்கிறது.
கட்சியின் ஊழலால், மக்கள் பாதிக்கப்படுவதை உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. எதிர்த்தால், உங்களைக் கட்சி விரோத நடவடிக்கைக்காக கட்சி நீக்கிவிடும். நேர்மையான ஒருத்தரை கட்சி தன் செலவில் பதவியில் அமர்த்தும் என்பதே சுகமான கற்பனை தான். ஒவ்வொரு கட்சியும் தேர்தல் டிக்கட்டுக்கு விண்ணப்பிக்கும்போதே உங்களை, பணம் டிபாசிட் செய்யச் சொல்கின்றன. இருப்பதில் தனி நபர் ஊழல்கள் மோசடிகள் பெரிதும் இல்லாத இடதுசாரி கட்சிகளில் சேர்ந்து நீங்கள் எம்.எல்.ஏ, எம்.பியாக முயற்சித்தால் நிலைமையே வேறு. அங்கே கட்சி நடத்துவதற்கான பணமே குறைவு. உங்கள் எம்.எல்.ஏ, எம்.பி சம்பளத்தையே கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சியின் முழு நேர ஊழியருக்கு அவை தரும் குறைந்த தொகையை நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். இது நல்ல நடைமுறைதான். ஆனால் தியாகிகளுக்கே பொருத்தமானது. மேற்கு வங்கத்தில் ஒரு மார்க்சிஸ்ட் கட்சி பெண் எம்.எல்.ஏ தமக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம், பழையபடி ஆசிரியர் வேலைக்கே போகிறேன் என்று போய் விட்டார். காரணம் கட்சி தந்த ஊழியர் சம்பளத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. எனவே அரசியலில் சுயநலமில்லாமல், கட்சி நலம், பொது நலத்துக்கு மட்டுமே பாடுபடும் எம்.எல்.ஏ, எம்.பியாக நீங்கள் விரும்பினால், முதலில் உங்கள் குடும்பம் உங்கள் வருவாயை நம்பியிராத அளவுக்காவது உங்களுக்குப் பணவசதி இருக்க வேண்டும்.
எனக்கு எம்.எல்.ஏ., எம்.பி, கவுன்சிலர் பதவிகளே வேண்டாம். வட்டச் செயலாளர், நகரச் செயலாளர் அளவில் மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று சொல்லுகிறீர்களா? அது சாத்தியம்தானா?
இந்த வாரக் கேள்வி!
தென் மாவட்டங்களில் குரு பூஜை என்ற பெயரில் தலைவர்களுக்கு அஞ்சலி என்ற போர்வையில் ஜாதி வெறியைத் தூண்டி விடும் எல்லா குரு பூஜைகளுக்கும் ஏன் ஒரேயடியாகத் தடை விதிக்கக் கூடாது?
“சாலையோரத்திலே வேலையற்றதுகள். வேலையற்றதுகள் நெஞ்சிலே விபரீத எண்ணங்கள்” என்று அண்ணா சொன்னதற்கொப்ப, தற்போது கலவரங்கள் நடக்கும் பகுதிகளில் கடுமையான படிப்பின்மையும், அதைவிடக் கடுமையான வேலையின்மையும் இல்லாமல் இருந்தால் இப்படிப்பட்ட கலவரங்கள் நடக்குமா? மாறி மாறி 44 வருடங்கள் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஆட்சி நடத்திய பின்னரும் இப்பகுதிகளில் கல்வியும் வேலையும் ஏன் பெருகவே இல்லை ?
No comments:
Post a Comment