ஆளே இல்லாத டீக் கடையில் டீ ஆற்றலாம். ஆளே இல்லாத ரோடில் கார் ஓட்டலாம். ஆனால் ஆளே இல்லாமல் ஆட்டோமேடிக்காக கார் ஓடுமா? கூகிள் கார் ஓடும். இது கரடி விடும் கதை இல்லை. கூகுளின் லேட்டஸ்ட் ஆராய்ச்சி அறிவிப்பு!
அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி மையம் நடத்திய போட்டியில் கலந்துகொண்டு முன்பே ஆட்டொமேடிக் கார்கள் தயாரித்த என்ஜினியர்கள் ஒரு 15 பேர், கொஞ்சம் வீடியோ கேமரா, ரேடார் சென்சார், லேசர், மேப், இத்யாதி இத்யாதி, அப்புறம் நிறைய ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜன்ஸ். அவ்வளவு தான், டிரைவர் இல்லாமல் டிராபிக்கில் தானே ஓடும் கார் ரெடி என்கிறது கூகிள்.
இந்த மாதிரி சாப்ட்வேர் சமாசாரங்கள் எல்லாம் தாராளமாக தாறுமாறாக டெஸ்ட் செய்யப்படவேண்டும். அதற்கு இந்த ஆளில்லா கார்களை ஓட்ட கூகிள் கூப்பிட்ட ஆட்கள், காரை கன்னாபின்னாவென்று ஓட்டாத, மாமாவிடம் மாட்டவே மாட்டாத மனிதர்கள். அட அந்தளவு திறமையான ஆசாமிகளால்தானே, சட்டென்று சாப்ட்வேர் செத்துப்போனால் சடாரென்று காரை கண்ட்ரோல் செய்ய முடியும்.
டிராபிக் போலீஸ் தவிர யாரிடமும் சொல்லாமல், ஆனால் எல்லாரும் ஓட்டும் சாலைகளில் கூகிள் சாப்ட்வேர் பொருத்தப்பட்ட ஏழு கார்களில், திறமையான டிரைவர்களை, ஒப்புக்குச் சப்பாணியாக டிரைவர் சீட்டில் உட்காரவைத்து, பின் சீட்டில் சாப்ட்வேர் ஆசாமியை உட்காரவைத்து சான் பிரான்சிஸ்கோவைச் சுற்றிப் பலமுறை ஜானவாசம் வந்திருக்கிறார்கள். ஒரு சில லாங் டூரும் அடித்துள்ளனர். எந்தவித மனித உதவியுமின்றி சுமார் 1,000 மைல்களும், லைட்டான உதவியுடன் இதுவரை 1,40,000 மைல்களுக்கும் மேலாக இதுவரை ஓடியுள்ளன.
என்ன ஆச்சரியம் என்று கொட்டாவிவிடும்முன்னர் இன்னுமொரு விஷயம். இவ்வளவு ஓட்டியும் ஒரே ஒரு விபத்துகூட நடக்கவில்லை என்று மார், தொடை எல்லாம் டூப் போடாமல் தட்டுகிறார்கள். சும்மாங்காட்டியும் த்ருஷ்டிக்கு ஒரே ஒரு முறை, டிராபிக் சிக்னலில் நிற்கும்போது ஒரு ஆள் ஓட்டி வந்த கார் பின்பக்கம் இடித்தது மட்டும்தானாம். அமெரிக்காவில் சரி, அசோக் பில்லரிலிருந்து கத்திப்பாராவரை ஓட்டிப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் இதன் உண்மையான பவிசு என்கிறீர்களா?
சாப்ட்வேர், சரக்கடிச்சுட்டு, பேசிக்கிட்டு, பராக்கு பாத்துக்கிட்டு, மெசேஜ் பண்ணிகிட்டு, தூங்கிட்டு எல்லாம் ஓட்டாது. அதனால ஆக்ஸிடண்ட்டும் ஆகாது. ஆனா எல்லாத்தையும் நாம ஹாயா பின்னாடி உக்காந்துக்கிட்டு செய்யலாம் என்று இதன் பாதுகாப்பு பற்றிப் போற்றிப் பாடுபவர்களிடம், கம்பூட்டர் சாப்ட்வேர் எவ்ளோ வாட்டி கிராஷ் ஆகுது, அந்த மாதிரி இது கிராஷ் ஆச்சுன்னா இன்னாபா பண்றது என்கிற கோயிந்துவின் கேள்விக்கு பதில் இல்லை. ஏரோப்ளேனில் ஆட்டோ பைலட் சாப்ட்வேர் போலத்தானே இதுவும்? அது எல்லாம் என்ன அடிக்கடி கிராஷ் ஆகிறதா? அதுபோல இதுவும் தயார் செய்யப்படலாம். ஆட்டோமேடிக் கண்ட்ரோலைத்தான் ஒவர்ரைட் செய்யலாமே என்கிற வாதங்கள் எழலாம். அந்தச் சமயத்தில் ஏரோபிளேனின் விலையையும் விபத்துகளையும் மனத்தில் கொள்ளலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக கூகிள் பெரும்பாலான சாப்ட்வேர்களைப் பொதுப் பயன்பாட்டுக்கு விட்டாலும், பீட்டா என்றே வைத்திருக்கும். சில சமயம் இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தும் அளவுக்கு இன்னும் மக்கள் வளரவில்லை; காம்பிளான் குடிக்கவேண்டும் என்று கொடுத்த சாப்ட்வேரை வேரோடு பிடுங்கிக்கொள்வார்கள். ஆசை காட்டி மோசம் செய்வார்கள். அவர்களை எல்லாம் நம்பி கார் வாங்க முடியுமா என்பது எல்லாம் ரூம் போட்டு யோசிக்கவேண்டிய விஷயம்.
பாதுகாப்பைத் தவிர்த்து இதன் முக்கியப் பயனாக கூகிள் முன்வைக்கும் வாதம், நேர மிச்சம். எவ்வளவு நேரம் வண்டி ஓட்டி வீணாக்குகிறோம்; டிராபிக்கில் தேமே என்று கிடக்கிறோம். அதை எல்லாம் மிச்சப்படுத்தி மனித குலம் முன்னேறலாம். இல்லை மஜாவாக மீனாகுமாரி பாட்டு பார்க்கலாம். மேலும், ஆட்டோமேடிக்காக ஓட்டுவதால் சிக்னல் விழுந்தவுடன் மைக்ரோ நொடியில் வண்டியைக் கிளப்பலாம். உரசல் இல்லாமல் மிகப் பக்கத்தில் ஓட்டலாம். இருக்கும் ரோடுகளில் இரண்டு மடங்கு வண்டி ஓட்டலாம் என்று எல்லாம் சொல்லும் கூகிளைப் பார்த்து சிக்னலை மதிக்காத, இருக்கும் ரோட் பாதியானாலும் அதே எண்ணிக்கையிலான வண்டிகள் ஓடுவதைப் பார்க்கும் நமக்கு ஆட்டோமேடிக்காகச் சிரிப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
முட்டு சந்துக்கெல்லாம் மேப், எல்லா இடங்களுக்கும் வேக நிர்ணயம், வேலை செய்யும் சிக்னல்கள் இருக்கும் அமெரிக்காவில் இப்படிப்பட்ட புரோகிராம் செய்யப்பட்ட கார்கள் சரி. எப்ப எந்தப் பக்கம் ஒன் வே ஆகும், எருமை வரும், எந்த ரோட்டில் எப்போது யாருக்காக, எதற்காக பிளாக் ஆகும் என்பதை எல்லாம் மனத்தில் கொண்டு புரோகிராம் எழுத பத்து பில் கேட்ஸ் வந்தாலும் முடியாது!
லைசன்ஸ் எடுக்க கப்பம் கட்டத் தேவையில்லை; ஓவர் ஸ்பீட், சிக்னல் நிற்கவில்லை போன்ற பிரச்னைகள் எல்லாம் எழாது என்ற கொண்டாட்டங்களுக்கு இடையே, ஆட்டோமேடிக் ஒன்று நினைக்க ஆண்டவன் ஒன்று நினைக்க நடக்கும் ஆக்ஸிடண்ட்களுக்கு எல்லாம் யார் பொறுப்பாளி; ஷேர் ஆட்டோவில் யாரிடம் காசு கொடுப்பது என்பதெல்லாம் இன்னும் பிரித்து மேயப்படாத பிரச்னைகள்!
இந்த வண்டிகள் எல்லாம் பாமரனின் பயன்பாட்டுக்கு வர குறைந்தது எட்டு ஆண்டுகளாவது பிடிக்கும் என்று கூகிள் அறிவித்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அரசாங்கம் அசால்ட்டாக அனுமதிக்குமா, அதற்குள் மீசை முளைக்காத அத்தைக்கு சித்தப்பா என்று பெயர் ஏன் வைப்பானேன், அப்படி சித்தப்பா என்றோ மாமா என்றோ பேர் வைக்கும் பட்சத்தில் வரும் கார்கள், பெட்ரோல் கம்மியாகும்போது அதுவே பெட்ரோல் கடையில் பிரேக் அடித்து நின்று, இந்த ஓனர் அக்கவுண்டல இவ்வளவுதான் காசு இருக்கு அதுக்குத் தகுந்தமாதிரி போட்டாப் போதும் என்னும் அளவுக்கு டெவலப் ஆகலாம். நான் ரொம்ப அழுக்கா இருக்கேன், வாட்டர் வாஷ் தவிர வேறு எங்கும் போக மாட்டேன் எனக் குளிப்பதற்கு அடம் பிடிக்கலாம். ஏன், டயர் பஞ்சர் ஆனால் இந்த இடத்தில் இருக்கிறோம் என்று மெக்கானிக்குக்கு கால்கூடச் செய்யலாம். ஆனால் அந்தக் காலத்திலும், தெரியாமல் இடிபட்டால், யார்டா சோமாறி என்று இறங்கித் திட்ட கண்டிப்பாக நாம் தேவை.
No comments:
Post a Comment