Tuesday, September 27, 2011

இது வரமா... சாபமா?


ர்க்கோ தத்தா - இந்தியாவின் 'போட்டோ ஜர்னலிஸ்ட்’களில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற திறமைசாலி!

கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்தில் இறந்த தன் மகனின் புதைகுழியில் சாக்லேட் போட்டுப் புதைக்கும் தந்தை, தமிழகக் கடற்புறத்தை வாரிச் சுருட்டிய சுனாமியில் மண்ணில் புதையுண்டு இறந்த தன் மகனின் சடலம் அருகில் மண்டியிட்டுக் கதறி அழும் தாய் என அழகும் அழுக்குமாக அப்படி அப்படியே பதிவு செய்பவை ஆர்க்கோவின் புகைப்படங்கள்!

மும்பையில் 'உதான் புகைப்படப் பள்ளி’யைத் துவக்கி இருக்கிறார் இவர். இந்தியாவிலேயே 3டி ஃபிலிம் மேக்கிங் பற்றிய படிப்பு இங்கு மட்டுமே உண்டு. 'மிஸ்டர். க்ளிக்’குடன் சில நிமிடங்கள்...

''நான் பிறந்து வளர்ந்தது டெல்லி. எட்டு வயசுல அம்மா வாங்கிக் கொடுத்த கேமராதான் எனக்கான மூன்றாவது கண்ணைத் திறந்தது. 13 வயசுல, சூரியன் ஒரு மரத்துக்குப் பின்னாடி ஒளிவதுபோல நான் எடுத்த படம் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்’-ல் வெளிவந்தது. அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர். ப்ளஸ் டூ, காலேஜ்லாம் சென்னையில்தான் படித் தேன். கிறிஸ்டியன் காலேஜில் படிப்பு முடிச்சதும் போட்டோ ஜர்னலிஸ்ட்டா வேலைக்குச் சேர்ந்தேன். 'வாங்க, போங்க, நல்லா இருக்கீங்களா, போயிட்டு வரேன்’னு மட்டுமே தமிழ் பேசக் கத்துக்கிட்டு, ஒரு சென்னைப் பெண்ணை கரெக்ட் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!''

''போட்டோ ஜர்னலிஸ்ட் வேலை வரமா... சாபமா?''

''நீங்க வாழ்ற வாழ்க்கை வரமா... சாபமா? அதேதான் இந்த வேலைக்கும்!

சேரியில் ஒரு குட்டிப் பொண்ணு தெரு விளக்கில் படிக்கிற மாதிரி நான் எடுத்த போட்டோ, அவளுக்குப் பல நல்ல உள்ளங்களிடம் இருந்து ஏகப்பட்ட உதவிகளைப் பெற்றுக் கொடுத்தது. இப்போ அவளைத் தத்தெடுத்துப் படிக்கவைக்கிறாங்க. அப்போ உலகமே என் கையில சுத்துற மாதிரி ஒரு பெருமிதம்!

அதே சமயம், கும்பகோணம் தீ விபத்து ஸ்பாட் டில் மனசைக் கல்லாக்கிட்டு க்ளிக் பண்ணிட்டே இருந்தேன். இறந்த குழந்தைகளின் இறுதிச் சடங்கில் ஒரு குழந்தை யோட அப்பா வாய்விட்டுக் கதறிட்டே சவக்குழியில் கிடந்த தன் பிஞ்சுக் குழந்தையின் கையில் சாக்லேட்டை வெச்சார்.

அவரோட அழுகையை ஒரு படம்தான் எடுத்திருப்பேன். அதுக்கு மேல் முடியலை. என் மனசு கேட்கலை. அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதல் சொல்ல வார்த்தை எதுவும் தோணாமல், அவர் முதுகைத் தடவிக் கொடுத்துட்டே இருந்தேன். என்னையும் அறியாமல் நான் அழுத தருணம் அது. கடைசி வரை அவர்கூடவே இருந்தேன். அப்போ, 'என்னடா வாழ்க்கை இதுனு மனசுக்குள்ள ஒரு வெறுமை!’ இப்போ நீங்களே சொல்லுங்க... என் வேலை, வரமா... சாபமா?''

- ஆனந்த விகடன்

No comments:

Post a Comment