Wednesday, September 28, 2011

விஜயகாந்த்தை வளர்த்துவிட்டது என் தப்பு - ஜெ ஆவேசம





http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/news_88483393193.jpg
மிஸ்டர் கழுகு: ''விஜயகாந்த்தை வளர்த்துவிட்டது தப்பு!''

கார்டனில் கர்ஜித்த ஜெ.!
ச்சி வெயில் உலுப்பி எடுப்பதை கழுகார் முகத்தில் பார்க்க முடிந்தது. வந்ததும், ஐஸ் வாட்டரை அருந்துவதற்குப் பதிலாக தலையில் தெளித்துக்கொண்டார். சூட்டைக் குறைக்கும் ஐடியா!

''கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் ஜெய லலிதா கை கழுவுவதைத்தான் தண்ணீர் தெளித்து சிம்பாலிக்காகக் சொல்கிறீரோ?'' என்றோம். அவர், மெள்ளச் சிரித்தபடி,

''அ.தி.மு.க. அணியில் நடப்பதைச் சொல்வதற்கு முன்னால் ஒரு சுவாரஸ்யம்... அதைக் கேட்டுவிடும்!'' என்று பீடிகை போட் டார்!

''தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் விஜயகாந்த் மனம் திறந்து பேசியதை உமது நிருபர் விலாவாரியாக எழுதி இருந்தார். இது கட்சிக்குள் பலத்த சலசலப்பைக் கிளப்பியது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் விஜயகாந்த். 'கூட்டம் நடக்குறது வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது. யாரும் காரில் வர வேண்டாம். ஆட்டோவில் வாங்க. வரும் எல்லாரும் கூட்டமா வராதீங்க... தனித்தனியா வந்துடுங்க. வெளியில் யாரும் நின்னும் பேசாதீங்க!’ என்று மாவட்டச் செயலாளர்களுக்குச் சொல்லப்பட்டு இருந்ததாம்.

கூட்டத்தில் விஜய்காந்த் பேசும்போது, 'உங்களை காரில் வர வேண்டாம். கூட்டமா நிற்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லி இருப்பாங்க. எல்லாம் காரணமாகத்தான் சொன்னோம். நம்ம கட்சி ஆபீஸ்ல ஒரு குண்டு ஊசி கீழே விழுந்தாக்கூட, அதைப் பத்திரிகைக்காரங்களுக்கு யாராவதுசொல்றீங்க.

நமக்குள் நாம் என்ன வேணும்னாலும் பேசிக்கலாம். அதை சிலர் பத்திரிகைகளுக்கு சொல்லிட்டா, அவங்களும் பரபரப்பா செய்தி வெளியிடுறாங்க. ரகசியக் கூட்டம்னு நடத்திட்டு அதை வெளியில் சொல்றது எப்படி தர்மமாக இருக்கும்?

நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா நிர்வாகிகள் கூட்டம் நடத்துறதையே நான் தவிர்க்க வேண்டி இருக்கும். உள்ளாட்சி தேர்தலில் எதுவும் நடக்கலாம். எதைப்பத்தியும் நீங்க கவலைப்பட வேண்டாம். எல்லோரும் உற்சாகமா வேலைகளைப் பாருங்க. கோவை மாநாட்டில் எல்லா விஷயங்களையும் முடிவு பண்ணிக்கலாம். நான் இப்படி எல்லாம் பேசினேன் என்று அதையும் போய் பத்திரிகைகாரங்ககிட்ட சொல்லிடாதீங்க!’ என்று கர்ஜித்து முடித்தாராம்.''

''அதையும் சொல்லீட்டாங்களா?'' என்று நாம் கேட்டதும்... சிரிப்பைச் சிந்தியபடி தொடர்ந்தார் கழுகார்.


''உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி விஷயத்தில் என்ன நடக்கிறது என்கிற கதைக்கு அடுத்து வருகிறேன். விஜயகாந்த் மீது அளவில்லாத கோபத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. அதைவிட அவரை தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைத்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னவர்கள் மீதும் ஆத்திரத்தைக் கொட்டுகிறார். 'அவருக்கு அவ்வளவு செல்வாக்கு... இவ்வளவு செல்வாக்குனு சொல்லி என்ன ஏமாத்திட்டீங்க... அவரைத் தேவை இல்லாம நாமதான் வளர்த்துவிட்டுட்டோம். அப்பவே அவரைக் கூட்டணியில் வெச்சிருக்கக் கூடாது’ என்றாராம் ஜெயலலிதா.

'என்னை அவமானப்படுத்துற மாதிரி பேசினார்னு தெரிஞ்சே கூட்டணி வைக்கக் காரணம், கருணாநிதிக்கு எதிரான ஓட்டு சிதறிடக் கூடாதுங்கற ஒரே நோக்கம்தான். ஆனால், ஜெயிச்சு வந்ததும் நம்மை அவர் மதிக்கவே இல்லை. அத்தோட அவமானப்படுத்துற மாதிரி நடந்துக்கிறார்!’ என்றாராம் ஜெயலலிதா.

இந்தக் கோபமே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மொத்தமாக ரியாக்ஷன் காட்டுகிறது!''


''என்னதான் பிரச்னை?''

''உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது கணிச மான இடங்களை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஏகத்துக்கும் அடக்கி வாசித்தது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற விஷயங்களில்கூட சட்டசபையில் பெரிய அளவில் கோபத்தைக் காட்டவில்லை. ஆனால், நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் ஒவ்வொரு 'மூவ்’வும் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படிதான் நடக்கிறது.

அதற்காக தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதற்காக ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்தார் ஜெயலலிதா. பேருக்குதான் அது குழு. அந்த குழு மூலமாக, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குத் தேவையான தொகுதிகளின் பட்டியலை தயார் செய்து காத்திருந்தார்கள்.


http://www.tribuneindia.com/2008/20080225/nat3.jpg


குழு மூலம் பட்டியலைக் கேட்டு ஜெயலலிதா வாங்கிப் பார்ப்பார்... என்று இலவு காத்த கிளியைப்போல கூட்டணிக் கட்சிகள் காத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்துகொண்டு இருந்தார் ஜெயலலிதா. சட்டசபைத் தேர்தலில்கூட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளைத் தவிர்த்துதான் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போதோ மொத்தத் இடங்களையும் வெளியிட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டார்.''

''தே.மு.தி.க.வின் நிலைமை?''

''மூன்று மேயர்கள், 30 நகராட்சித் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட நினைத்தது தே.மு.தி.க. ஆனால், மேயர் பதவிகளை தர முடியாது என்று முதலிலேயே கைவிரித்துவிட்டதாம் அ.தி.மு.க. துணை மேயர் பதவிகள் மற்றும் சில நகராட்சித் தலைவர் பதவிகளை வேண்டுமானால் விட்டுக்கொடுப்பதாக சொன்னதாம். இதெல்லாம் அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரையில் அதிகாரப் பூர்வமான பேச்சுவார்த்தை தே.மு.தி.க-வுடன் நடத்தவில்லை.

பேருக்கு தொகுதி பங்கீட்டுக் குழுவை நியமித்து, பட்டியல்களை எல்லாம் வெளியிட்டு, தேர்தல் தேதியும் அறிவிக்க வைத்து சரியாக காய்களை நகர்த்தி, கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்துவிட்டார்கள் என்றே நினைக்கிறது தே.மு.தி.க.''


''கம்யூனிஸ்ட்களுக்கு?''

''கம்யூனிஸ்ட்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிலும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லையாம். திருவொற்றியூர், சிதம்பரம், கோவில்பட்டி ஆகிய நகராட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் இருக்கிறது. அதை வாங்கினாலே போதும் என்று போராடுகிறார்கள். இதே நிலைதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும். இவர்கள் கதியே இப்படி என்றால்... டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர் சரத்குமார் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை அல்லவா!'' என்று சொல்லி மீண்டும் சிரித்தார் கழுகார்!


''கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஷாக்கானதைத் தானே உம்மிடம் சொன்னேன். இப்போது அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியைக் கேளும்!''


''சொல்லும்!''

''போயஸ் கார்டனில் இருந்து ரிலீஸ் ஆன வேட்பாளர் பட்டியலைப் பார்த்து, அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களே அரண்டுபோனார்கள். காரணம், கட்சியின் மா.செ-க்களுக்கும் ஜெ. செக் வைத்திருப்பதுதான். 'நகராட்சித் தொடங்கி ஒன்றிய கவுன்சிலர்கள் வரையிலான பதவிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்துகொடுக்கும்படி கார்டனில் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போடப்பட்டது.

சாதி, செல்வாக்கு உள்ளிட்ட சகல விவரங்களையும் கணக்கிட்டு, தர வாரியான மூன்று நபர்களை வரிசைப்படி ஒவ்வொரு பதவிக்கும் தேர்வு செய்து கொடுக்கும்படி கார்டன் தரப்பு சொல்லி இருந்தது. அதற்கேற்றபடி, தங்களது விசுவாசிகளை முதல் இரண்டு இடங்களிலும், ஆகாத ஆட்களை மூன்றாம் இடத்திலும் குறிப்பிட்டு பட்டியல் அனுப்பினார்கள் மாவட்டச் செயலாளர்கள்.


இந்த விஷயம் அம்மாவுக்கு எப்படித் தெரிந்ததோ... மாவட்டச் செய லாளர்கள் கொடுத்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தவர்களின் பெயர்களை மட்டுமே அவர் டிக் செய்ய, மாவட்டச் செயலாளர்கள் மிரண்டுவிட்டனர். அறிவிப்பு வந்த பிறகு ஆட்களை மாற்றச் சொல்லியும் அம்மாவிடம் பேச முடியாது. அதனால், அம்மாவின் டிக் பட்டியலில் உள்ளவர்கள் தங்களுக்கு ஆகாதவர்களாக இருந் தாலும், அவர்களின் வெற்றிக்காக மா.செ-க்கள் போராட வேண்டிய இக்கட்டு உருவாகிவிட்டது!’ எனச் சொல்லும் சீனியர் நிர்வாகிகள், ஜெயலலிதா இப்படி செய்ததற்கான பின்னணிகளையும் விளக்கினார்கள்...''


''அது என்ன?''

''சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் உள்ளாட்சித் தேர்தலில் தீவிரமாக இருக்கும் என்பதை ஜெயலலிதா தெளிவாக அறிந்து வைத்திருந்தார். சசிகலாவின் உறவினர்கள் கைகாட்டும் ஆட்களுக்குத்தான் மாவட்டச் செயலாளர்கள் முதல் இடம் கொடுத்து இருப்பார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான், மூன்றாவது இடத்தில் இருந்த ஆட்களைத் தேர்வு செய்து மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் அல்லாது, சசிகலா வகையறாக்களுக்கும் அம்மா செக் வைத்தார் என்கிறார்கள்.

கார்டனில் இருந்து வெளியான பட்டியலில் இப்போது ஒரு சில இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்கள் மாற்றப்படுகின்றனர். அம்மாவிடம் வேறு விதமான காரணங்களைச் சொல்லி, மாற்றப்படும் பட்டியலில் உள்ள பலருமே சசிகலா உறவினர்கள்தானாம்!''


''தி.மு.க. விஷயத்துக்கு வாரும்!''

''கனிமொழி ஜாமீன்தானே இப்போதைய தி.மு.க. விஷயம்... கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்ததும், அதிக நம்பிக்கையுடன் இருந்தார்கள். இரண்டொரு நாளில் ஜாமீன் கிடைத்துவிடும் என்பதுதான் அவர்களது நினைப்பு. ஆனால், நீதிபதி சைனி, 'இந்த மனுவைப் படிக்க எனக்கு அவகாசம் தேவை. அக்டோபர் 1-ம் தேதி பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டு எழுந்து சேம்பருக்குள் சென்றதும், நீதிமன்றத்தில் உட்கார்ந்திருந்த ராஜாத்தி அம்மாள் கலங்கிவிட்டாராம்.

அவரை ஆசுவாசப்படுத்த கனிமொழியால் முடியவில்லையாம். 'நீ சென்னைக்குப் போம்மா... நான் பார்த்துக்கிறேன்’ என்று மகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், தாய்க்கு தாளவில்லையாம். நீதிமன்ற வளாகத்துக்குள் இருக்கும் சிறு செல்லில் வைத்திருந்துவிட்டு... திகார் செல்ல வாகனம் தயாரானதும்தான் கனிமொழியை அழைத்துச் செல்வார்கள். அந்த செல்லுக்குள் உள்ளே நுழையும் வரை கனிமொழியும் தைரியமாகத்தான் இருந்துள்ளார். ஆனால், உள்ளே நடந்து போனவர் தலையைத் திருப்பி ராஜாத்தியைப் பார்த்ததும் கண்கலங்கிவிட்டாராம்.''


''வருத்தம் இருக்கத்தானே செய்யும்!''


''கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவர் குறித்தும் கவலைப்பட்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை தி.மு.க-விலும், டெல்லியிலும் பலத்த சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. 'ஆ.ராசா உள்ளிட்டவர்களுக்கு ஏதோ ஒரு சம்பந்தம் இருந்தாலும் கனிமொழி, சரத்குமாருக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லையே?’ என்று கருணாநிதி அந்த அறிக்கையில் சொல்லி இருந்தார்.

'ஆ.ராசாவை கருணாநிதி கழற்றிவிடுகிறாரா?’ என்று சிலர் கேட்க ஆரம்பித்துள்ளனர். கருணாநிதியின் இந்த அறிக்கையையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சோனியா கவனத்துக்கு டி.ஆர்.பாலு கொண்டுசென்றதாகவும் சொல்கிறார்கள். சோனியா ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைக்கிறார். இதற்கிடையே, ஆ.ராசா மீது கருணாநிதிக்கே சில வருத்தங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்!''


''அது என்ன?''

''செப்டம்பர் 15-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்வதாக நீதிபதி சைனி சொல்லி இருந்தார். அதற்கு மறுநாள் கனிமொழி ஜாமீன் மனுத் தாக்கல் செய்ய தயாராகிக்கொண்டு இருந்தார். ஆனால், அன்று குற்றச்சாட்டு பதிவு செய்யவிடாமல் டிராய் அறிக்கையை முன்வைத்து ஆ.ராசா பேச ஆரம்பிக்க... அதையே மற்றவர்களும் எடுக்க, விவகாரம் நீண்டுகொண்டே போய் அக்டோபரைத் தொட்டுவிட்டது.

செப்டம்பர் 30-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்ய இருப்பதாக நீதிபதி சொல்லி இருக்கிறார். எனவே கனிமொழி, சரத்குமாருக்கு ஜாமீன் கிடைப்பது வரைக்கும் ஆ.ராசா அமைதியாக இருக்க வேண்டும் என்று கருணாநிதி சொல்லி அனுப்பி உள்ளாராம்!'' என்ற கழுகார் சிறிது இடைவெளிவிட்டு பேசினார்...


''செப்டம்பர் 15-ம் தேதி அன்று, நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஆர்.சௌந்திரபாண்டியனாருக்கு பிறந்தநாள் விழா. சென்னை பாண்டிபஜாரில் உள்ள அவரது சிலைக்கு முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜாத்தி அம்மாள் தவறாமல் வருகை தந்தார். ஆனால், இந்தமுறை ஆப்சென்ட். 'நான் வரலை!’ என்று சொல்லிவிட்டாராம். அவர் டெல்லியிலேயே தங்கி இருப்பது கருணாநிதியை இன்னும் வருத்தமடைய வைத்துள்ளது.


கலைஞர் டி.வி-யின் மேலாளர்கள் மூவர், சமீபத்தில் டெல்லிக்குப்போய் இருந்தார்களாம். திகார் ஜெயிலுக்குப்போய் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார்களாம். சரத்குமார்தான் டல்லாக காணப்பட்டாராம். கனிமொழி உற்சாகமாய் பேசினாராம். 'இந்த மாத இறுதிக்குள் நான் பெயிலில் வெளியே வந்துவிடுவேன்... அப்பாகிட்ட சொல்லுங்க.' என்று தகவல் சொல்லி அனுப்பினாராம். இது ஒன்றுதான் கருணாநிதிக்கு ஆறுதலான விஷயம்!'' என்று கிளம்பத் தயாரான கழுகார்


''சாதித் தலைவர் ஒருவரை போலீஸ் அதிகாரி சந்தித்ததாக ஒரு செய்தியை உமக்குச் சொல்லி இருந்தேன். அந்த இடத்தில் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை என்றும் பரமக்குடி விவகாரத்துக்கும் அந்த அதிகாரிக்கும் அப்படி எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சிலர் அடித்துச் சொல்கிறார்கள்!'' என்றார்.

அவரிடம், ''உள்ளாட்சித் தேர்தல் தேதியைப் பார்த்தோம். அக்டோபர் 17, 19... என்று சோ.அய்யர் அறிவித்திருக்கிறார். ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகும் அக்டோபர் 20-க்கு முன்னதாக தேர்தல் நடந்துவிடும் என்று சொன்னீர். அது மாதிரியே நடந்துள்ளதே!'' என்றோம்.

அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டவராக வானத்தில் மிதந்தபடி வணக்கம் வைத்தார் கழுகார்!


1. நரேந்திர மோடியைப் பாராட்டுவதைப் பார்த்தால்... தமிழகத்தை குஜராத் போல வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்துவிடுவாரா ஜெயலலிதா?
தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த இரண்டு முக்கிய மோட்டார் நிறுவனங்கள் குஜராத்துக்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டதற்கு உண்மை யான காரணம் என்ன? இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம் எப்படி முன்னேற்றத்தில் குஜராத் ஆகும்?

2.பரஞ்சோதி - கே.என்.நேரு?


ஒருவர் மீது பாலியல் புகார்!
இன்னொவருவர் மீது கிரிமினல் புகார்!
சபாஷ்... சரியான போட்டி!

3.அரக்கோணம் ரயில் விபத்துக்கு உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் ஏன் இத்தனை குழப்பங்கள்?
சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு ரயிலைக் கடத்திச் சென்று விபத்துக்குள்ளாக்கியவன் யார் என்று இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லையே! ஒரு அரசாங்கத்துக்குப் பல்லாயிரம் கோடிப் பணத்தை ஆண்டுதோறும் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு துறை எப்படி பொறுப்பில்லாமல் இயங்குகிறது பார்த்தீர்களா?

4. 'பெட்ரோல் விலை உயர்வை நாங்கள் ஏற்கவில்லை’ என்கிறாரே தங்கபாலு?

தமிழகத்தில் இருக்கும் 'துணிச்சலான அரசியல்வாதி' என்று தங்கபாலுவை நான் சும்மா சொல்லவில்லை என்பது இப்போதாவது தெரிகிறதா?

5. மதச்சார்பின்மையைப் பற்றிப் பேச நரேந்திர மோடிக்கு அருகதை உண்டா?

கடந்த காலத் தவறுகளில் இருந்து மோடி பாடம் கற்கக் கூடாதா? பிராயச் சித்தம் தேடுவதற்கு எல்லா மனிதர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர் திருந்தி விடக் கூடாது என்று சிலர் நினைப்பதுதான் ஏன் என்று புரியவில்லை!

6.உண்மையான இந்தியர்கள், தூக்குத் தண்டனையை ஆதரிக்கவே செய்வார்கள் என்கிறேன் நான்...?


தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கால்கோள் நாட்டியவர்களில் இவரும் ஒருவர். சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்தபடி தனது அனுபவங்களை எழுதினார். 'சிறையில் தவம்’ என்ற தலைப்பில் அது புத்தகமாக வந்தது. அந்த டைரியில் 21.2.1922-ம் நாளைப் பற்றி அவர் எழுகிறார்..


'அப்பாத்துரை என்ற சமையல்காரரை தூக்கிலிடப் போகிறார்கள். இன்று நான் அதிகாலையில் எழுந்துவிட்டேன். அன்று தூக்கிலிடப்பட இருந்த மனிதனின் நினைவு என்னை முன்னதாக எழுப்பி இருக்க வேண்டும். என் படுக்கையில் உட்கார்ந்தவாறே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அந்த நிமிஷங்கள் ஒரு யுகம் போலத் தோன்றின.

அவர்கள், துரதிர்ஷ்டம் பிடித்த அப்பாத்துரையை கைவிலங்கிட்டு அழைத்து வந்தனர். காலடி ஓசையில் இருந்து அவர்கள் வந்ததை உணர்ந்தேன். சில நிமிஷங்களில் தலைமை வார்டர் என் அறையைத் தாண்டிச் சென்றார். அதிலிருந்து அப்பாத்துரையின் வாழ்வு முடிந்தது என்று தெரிந்து கொண்டேன். கடவுள் கொடுத்ததை மனிதன் பகிரங்கமாகப் பறித்துக் கொண்டான். அதைச் சட்டப்படி நியாயம் என்றும் எண்ணிக் கொண்டான்!’


- இப்படி எழுதி இருப்பவர் மூதறிஞர் ராஜாஜி.


7. யாரையும் கேட்காமல் பட்டியல் வெளியிட்டு விட்டாரே ஜெ.?

யாரைக் கேட்க வேண்டும்_ இது ஜெ. வாய் திறந்து சொல்லாத பதில்!


ஒரு உண்மை மட்டும் புரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் கூட்டணிகளுடன் பேசுவதற்கு முன்னதாக ஒரு பட்டியல் வெளியாகிவிட்டது. 'அம்மாவுக்குத் தெரியாது’ என்று அப்போது சிலர் சொன்னார்கள். இன்று நடப்பதைப் பார்த்தால், அதுவும் 'அம்மாவுக்குத் தெரிந்து நடந்ததுதான்’ என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே தனித்து நிற்கலாம் என்ற ஐடியா அவருக்கு இருந்திருப்பதும் தெரிகிறது.





8.அடுத்த மாதம் திருமணம் ஆகப் போகும் எனக்கு உங்களது அறிவுரை?

கேள்வி கழுகாருக்குதானே.! புதுமணத்தம்பதிக்கு புத்திமதி சொல்லாதே என்கிறது சாஸ்திரம். ஆனால், வி.ஸ.காண்டேகர் தனது கதை ஒன்றில் சொன்ன வாசகம் கவனத்துக்கு வருகிறது.

'திருமணம் என்பது ஒரு போர். என்னதான் லாகவமாகச் செயல்பட்டாலும் சேதாரம் இருக்கத் தான் செய்யும்’.

9 முதல் நாள் அணு உலைக்கு ஆதரவு... மறுநாள் எதிர்ப்பு.. என்ன ஆச்சு ஜெயலலிதாவுக்கு?


பேரறிவாளன், சாந்தன், முருகன் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்து கொண்டார். இனிமேல் ஜெயலலிதா எந்தப் பிரச்னை தொடர்பாகவும் முதல் நாள் எழுதும் அறிக்கையை ரிலீஸ் பண்ணாமல் இருந்து... மறுநாள் யோசித்த பிறகு வெளியே விட்டால் நல்லது!

10. ரயில் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் அடைந்தால் முன்பெல்லாம் ரயில்வே மந்திரி பதவி விலகுவார். ஆனால், தற்போதைய மந்திரி, ஆறுதல் மட்டும் கூறிவிட்டு கடமையை முடித்துக் கொள்கிறாரே?


ஆறுதலாவது சொல்ல வருகிறாரே! ஆறு மாதங்களுக்கு முன்னால் பீகாரில் ஒரு விபத்து ஏற்பட்டபோது மத்திய மந்திரி போகவே இல்லை. முன்பெல்லாம் எப்பவாவது விபத்து நடக்கும். அது பெரிய விஷயமாகி பதவி விலகுவார். இப்போது மாதம் தோறும் இந்தியாவில் எந்தப் பகுதியிலாவது நடக்கிறது விபத்து. பதவி விலக ஆரம்பித்தால் விலகிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!

11. வைகோ இன்னும் எவ்வளவு காலம்தான் மைக் பிடித்துக் கொண்டே இருக்கப் போகிறார்?


மைக் இருக்கும் வரை..
நன்றி - ஜூ வி

No comments:

Post a Comment