Saturday, September 24, 2011

சிதம்பர ரகசியம்



எல்லாம், எல்லாருக்கும் தெரியும்! என்ன ஏதேனும் பகவத் கீதை வ்யாக்யானம் போல் தெரிகிறதா? இல்லை, ஸ்பெக்ட்ரம் ராசா, இப்பிரச்சனையில் சிக்கிய நாள் முதலாகக் கதறும் மூன்று வார்த்தைகள் இவை. இதன் அர்த்தம் சமீபமாக இரண்டு நாட்களாகத்தான் முழுமையாக வெளி வரத் துவங்கியுள்ளன. இம்முறை சிக்குபவர் முன்னாள் நிதியமைச்சரும், இந்நாள் உள்துறை அமைச்சருமான, சிவகங்கைச் சீமான், ப.சிதம்பரம்.

நமத்துப் போன பட்டாசு திடீரென பெரும் சத்தத்துடன் வெடிப்பது போல இப்பிரச்சினை வெடித்துள்ளது. கடந்த மார்ச் மாதம், நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகத்திற்கு எழுதியுள்ள பதிநான்கு பக்கக் கடிதத்தில், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால், இரண்டாம் அலைக்கற்றை ஊழல் நடைபெறாமல் தடுத்திருக்க முடியும் என்று எழுதியிருக்கிறது, எழுதியவர் ஒரு மூத்த அதிகாரி; இக்கடிதம் தற்போதைய நிதியமைச்சர் ப்ரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பிறகுதான் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். அதாவது ப்ரணாப் எழுத சொல்லி அதிகாரி எழுதினார் என்று கூட வைத்துக்கொள்ளலாம்.

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் ஸ்வாமி, உச்சநீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதாவது, 2G அலைக்கற்றை விவகாரத்தில் விலை நிர்ணயம் செய்வது தொடர்பான பிரச்சனையில், ராசா, மற்றும் சிதம்பரம் ஆகிய இருவரும் சேர்ந்தே செயல்பட்டுள்ளனர். விலை நிர்ணயம் ராசாவால் மட்டும் தனித்து எடுக்கப்படட் முடிவு அல்ல, எனவே சிதம்பரத்தையும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் என்பதே சாமியின் மனுவினுடைய நோக்கம்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு இதனைக் கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், இது உச்ச நீதிமன்றத்தின் வரையறைக்குள்ளேயே வராது, ஆதலால் இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று ஒரு போடு போட்டது. தவிர, சாமி இதே போன்றதொரு மனுவை கீழ் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ள படியால், இவ்விஷயம் முற்றிலும் சிபிஐயின் சிறப்பு நீதிமன்றத்தாலேயே முடிவெடுக்கப் பட வேண்டிய ஒன்று; இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்பது சிபிஐ தரப்பு வாதம். மத்திய அரசின் அணுகு முறையும் அதுவே.

சாமியின் வாதப்படி, கீழ் நீதிமன்றத்தில் தாம் தாக்கல் செய்துள்ள மனுவிற்கும், தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கும் மனுவிற்கும் யாதொரு தொடர்பும் அல்ல; கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 2G அலைக்கற்றை வழக்கில் சிதம்பரத்தையும் ஒரு கூட்டு சதியாளராகச் சேர்க்க வேண்டும் என்றே கோரியுள்ளேன், அவர் மீது சிபிஐ விசாரணை கோரவில்லை. அதனால் அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று வாதாடினார். எதிர்பார்த்தவாரே, உச்ச நீதிமன்றம் சிபிஐ யின் வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் கீழ் நீதிமன்றத்தில், தாம் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு வலு சேர்க்கும் விதமாக ஸ்வாமி, மார்ச் மாதத்தில் நிதியமைச்சகத்திற்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒரு கடிதப் போக்குவரத்தைத் தாக்கல் செய்தார். அதுதான் மேற்கூறிய கடிதம். இக்கடிதம் பற்றி சிதம்பரம் கருத்தேதும் தெரிவிக்க மறுத்து விட்டார். ப்ரணாப் நேரடியாக கருத்தேதும் தெரிவிக்காவிடினும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகத்தான் அக்குறிப்ப்ட்ட கடிதம் வெளியாகியுள்ளது: ஊழல்வாதிகளைத் தோலுரிக்க இச்சட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று அர்த்தம் தொனிக்கும்படியாக ஒரு கருத்தைப் ப்ரணாப் வெளியுட்டுள்ளது இன்னமும் வேடிக்கை. சில மாதங்களுக்கு முன்னர் நிதியமைச்சகத்தை, உள்துறை அமைச்சகம் கண்காணிப்புக் கேமராக்கள் வாயிலாக வேவு பார்க்கிறது என்ற பிரச்சனை வெடித்தது. அதன்பிறகு பிரணாப் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று மறுத்த பிறகு அமுங்கிப் போனது. இப்போது அது எதற்காக என்பது தெளிவாகிறது. ப்ரணாப் - சிதம்பரம் இடையிலான இதுகாறும் இருந்த பனிப் போர், இப்போது முற்றி சந்தைக்கு வந்து விட்டது என்றே கொள்ளலாம்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்; இங்கு கூத்தாடி யாரென்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. சந்தேகமே இல்லாமல் திமுகதான். ஏற்கனவே திமுகவின் ராசாவும், கனிமொழியும் இவ்விவகாரத்தால் சிறையிலிருக்கும் நிலையில், மூன்றாவதாக தயாநிதி மாறன் பதவியிழந்தார். இந்நிலையில் திமுக தரப்பு சிதம்பரத்திற்கெதிரான இக்கடிதத்தை, ராசாவிற்கும், கனிமொழிக்கும் சாதகமாக எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என யோசிக்கத் துவங்கியிருக்கிறது. அதாவது சிதம்பரத்தின் அனுமதியுடன்தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனை செய்யப்பட்டுள்ளது; இதில் ராசாவின் தவறு ஏதுமில்லை என்று நீதிமன்றத்தில் ராசாவின் சார்பாக வாதாட இது வழி வகுக்கும். ஆனால் கனிமொழிக்கு இது எவ்வகையில் உதவுமென்பது தெரியவில்லை. கலைஞர் டிவிக்கு 216 கோடி ரூபாய் லஞ்சப்பணம் வந்த வழக்கில்தான் கனிமொழி முக்கியக் குற்றவாளி. அது ஸ்வான் டெலிகாம் மூலமாகப் பெறப்பட்ட பணம்; ஸ்வான் டெலிகாம் 2G ஒதுக்கீட்டின் மூலம் லாபமடைந்த நிறுவனங்களில் ஒன்று. சிதம்பரம் மீதான இந்தக் கடிதம், அதற்குத் தொடர்பில்லாத கனிமொழி விவகாரத்தில் எப்படி உதவ முடியும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

பிரதமரையும், சிதம்பரத்தையும் நீதிமன்றத்திற்கு சாட்சியாக அழைப்பேன் என்று சில வாரங்கள் முன்பு ராசா நீதிமன்றத்தில் முழங்கியது; 2G வழக்கில் தயாநிதி மாறன் பெயர் இடம் பெறக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிற மூன்றாவது குற்றப் பத்திரிக்கை தாக்கலாவதில் ஏற்படுகிற தாமதம்; ஏர்செல் சிவசங்கரன் விவகாரத்தில் சிபிஐ தாம் முன்பு கோர்ட்டில் கூறியதற்கு முற்றிலும் மாறாக தயாநிதி மாறனுக்கு நற்சான்றிதழ் வழங்கியது போன்றவை அனைத்திற்கும் முழுமுதற் காரணம் ஏன் என்ற கேள்விக்கு இந்த நிதியமைச்சகத்தின் கடிதப் பரிமாற்றம்தான் பதிலாக இருக்க முடியும். அதனால்தான் சிதம்பரத்தைக் காப்பாற்ற மத்திய சர்க்காரும், சிபிஐயும் இவ்வளவு மெனக்கெடுகின்றன. சிதம்பரம் சிக்கினால், வேறொருவரும் சிக்குவார் என்பதே அதற்குக் காரணம்!

ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென தி.மு.க., காங்கிரஸ் எடுத்துள்ள முடிவுக்கு பிறகும், திருச்சி இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஆதரிக்குமா என்று கலைஞரிடம் கேட்டதற்கு "எனக்கு தெரியாது" என்ற கலைஞர் பதில் எல்லாம் வைத்து பார்க்கும் போது 2G வழக்கில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்.

Closed Chapter என்று சிதம்பரம் எழுதிய கடித்தை பார்த்தும் கண்டுக்கொள்ளாமல், மன்மோகன் சிங் எப்படி பிரதமராக நிடிக்கிறார் என்பது பெரிய ஆச்சரியம்.

சிபிஐக்கு முன்பு இருந்த வேகம் இப்போது குறைந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் ராசாவும் க்வாட்ரோச்சி போல அன்னையின் ஆசியுடன் வெளியே வந்துவிடுவார் என்று தோன்றுகிறது. அவர் ஜெயிலில் இருந்த நாட்களுக்கு அவருக்கு நஷ்ட ஈடாக அரசு பணம் கொடுத்தாலும் ஆச்சரியப்பட கூடாது.

No comments:

Post a Comment