Wednesday, August 15, 2012

'எங்கள் பஸ்ஸில் வந்து உட்கார்ந்தால் கேள்வித்தாள் தருவோம்! குரூப் 2-ல் டுபாக்கூர்


ரசுத் தேர்வாணையம் மூலம் நேர்மையாகத் தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களைத் தேர்வு செய்கிறோம்’ என்று டி.என்.பி. எஸ்.சி-யின் தலைவர் ஆர்.நடராஜ் பெருமையாகச் சொன்ன வார்த்தைகளின் ஈரம் காய்வதற்குள், ஆணையத்தின் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டு விட்டனர் சிலர். மூன்று மாவட்டங்களில் கேள்வித்தாள் வெளியானது உறுதி செய்யப்பட்டதால், இந்தத் தேர்வையே ரத்து செய்யும் அதிரடியாக  அறிவித்து விட்டது டி.என்.பி.எஸ்.சி.! 
நகராட்சிக் கமிஷனர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சுமார் ஆறரை லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வுக்கான கேள்வித்தாள் ஏற்கெனவே வெளியாகி விட்டது என்பதுதான் விவகாரம்.
ஈரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பள்ளியில் தேர்வு எழுதி முடித்து வெளிவந்த ரேவதி, பரபரப்பாக கேள்வித்தாள் விவகாரத்தை அம்பலப்படுத்தினார். ''தேர்வு ஆரம்பிக்கும் முன்பு, தனக்கொடி என்பவர் மாதிரி கேள்வித்தாள் ஒன்றைப் படித்துக்கொண்டு இருந்தார். நானும் தற் செயலாகப் பார்த்தேன். அந்தக் கேள்வித்தாளில் இருந்த கேள்விகள்தான் அப்படியே குரூப் 2 தேர்வில் கேட்கப்பட்டு உள்ளது'' என்று சொல்லவே தேர்வு எழுதிய அத்தனை பேரும் அதிர்ந்தனர். உடனே, தனக்கொடியைக் கண்டுபிடித்தனர். 'என்னுடைய கணவர்தான் அந்தக் கேள்வித்தாளைக் கொடுத்தார்’ என்று அவர் கூறவே, உடனே அவரை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கே, 'இந்தப் பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று அதிகாரிகள் அறிவுறுத்தவே, உடனே ஊடகங்களைத் தேடி ஓடினர். அதன்பிறகே, ஆர்.டி.ஓ. மற்றும் மாவட்ட ஆட்சியர் வந்து அந்தப் பெண்ணின் கணவரை அழைத்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். தனியார் கல்லூரியில் நூலகராக இருக்கும் தனக்கொடியின் கணவர் செந்தில்குமார், ''மனைவியைத் தேர்வுக்கு அழைத்து வந்த நேரத்தில், ஈரோடு பேருந்து நிலையத்தில் இந்தக் கேள்வித்தாள் கீழே கிடந்தது. அதைத்தான் எடுத்து என் மனைவியிடம் கொடுத்தேன்'' என்று தெரிவித்து இருக்கிறார். இப்போது, தனக்கொடியும் அவரது கணவரும் போலீஸ் விசாரணை யில் இருக்கிறார்கள்.
அன்றைய தினம் தர்மபுரியிலும் ஓர் அதிர்ச்சி. கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குரூப்-2 தேர்வு நடந்த நேரத்தில், 'பறக்கும் படை’ விசிட் செய்தது. அப்போது தேர்வு எழுதிக்கொண்டு இருந்த அரூரை அடுத்த முத்தானூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மீது சந்தேகப்பட்டு, சோதனை நடத்தி இருக்கிறார்கள். அவர் கையில் அனைத்து விடைகளும் 'டிக்’ செய்யப்பட்ட வினாத்தாள் இருந்தது. அவரை மேலும் சோதனை செய்ததில், அவரிடம் இன்னொரு வினாத்தாளும் கிடைத்தது.
உடனே சுரேஷ்குமாரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போதுதான், முதல்நாளே அவருக்குக் கிடைத்துவிட்ட வினாத்தாளில் விடைகளைக் குறித்து வந்திருப்பது தெரிந்தது. உடனே, போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டார் சுரேஷ்குமார். விசாரணையில் கிடைத்த தகவல் அதைவிடப் பகீர். திருவண் ணாமலையைச் சேர்ந்த ஒரு புரோக்கரிடம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒருநாள் முன்பே வினாத்தாளைப் பெற்றிருக்கிறார் சுரேஷ். அவர் கொடுத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவேகானந்தன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கராஜன் ஆகிய இரு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். இந்த நெட்வொர்க்கில் சில தனியார் பயிற்சி மையங்களுக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைக்கவே, அந்தக் கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
இந்த நேரத்தில் இன்னொரு தகவலும் ஏரியாவில் கிசுகிசுக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு முன், பெங்களூ ருவைச் சேர்ந்த ஒரு குழு தர்மபுரிக்கு வந்ததாம். பிரதான ஹோட்டலில் தங்கியவர்கள், குரூப்-2 தேர்வுக்குத் தயாராகி வந்த ஒரு சிலரை அணுகிப் பேரம் பேசி இருக்கிறார்கள். 'தேர்வு நேரத்துக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் எங்கள் பஸ்ஸுக்கு வந்தால், உங்களுக்கு வினாத்தாள் தருவோம். பதில் களை நீங்கள் படித்த பிறகு தேர்வு மையத்தில் இறக்கி விடுவோம்’ என்று இரண்டு லட்சம் ரூபாய் வரைக்கும் டீல் பேசினார்களாம். இந்த டீமுக்கும் சுரேஷ்குமாருக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
சம்பவம் குறித்து தர்மபுரி மாவட்ட எஸ்.பி-யான அமித்குமார் சிங், ''இதற்குக் காரணமான மொத்த நெட்வொர்க்கையும் விரைவில் வளைத்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். இப்படிக் குறுக்கு வழியை நாடுபவர்களால்தான், உண்மையாக படித்துத் தேர்வு எழுதும் திறமைசாலிகள் பாதிக்கப்படுகின்றனர்'' என்று கூறினார்.
''டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான வினாத்தாளை தமிழ்நாட்டில் பிரின்ட் செய்தால் மோசடி நடக்க வாய்ப்பு உண்டு என்பதால்தான், ஆந்திராவில் அச்சிடப்படுகிறது. ரகசிய உயர் நிலைக் குழு இறுதி செய்து கொடுக்கும் வினாத்தாள் வடிவம், ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் குழுவின் மேற்பார்வையோடுதான் ஆந்திராவுக்கு அனுப்பப்படுகிறது. அதன்பிறகும், லீக் ஆகிறது என்றால், கறுப்பு ஆடுகள் மேலிடத்தில்தான் இருக்கிறார்கள். சென்னை அலுவலகத்தில் இருந்துதான் கேள்வித்தாளை பணம் வாங்கிக்கொண்டு லீக் செய்து இருக்கிறார்கள்'' என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளே முகம் மறைத்துப் பேசுகிறார்கள்.
குரூப் 2 வினாத்தாள் லீக் ஆனது பற்றி டி.என்.பி.எஸ்.சி-யின் சேர்மன் ஆர்.நடராஜிடம் பேசினோம். ''கேள்வித்தாள் வெளியானதாக சந்தேகம் எழுந்த பிறகு, அந்தத் தேர்வை ரத்து செய்வதைத் தவிர வேறுவழி இல்லை. இப்போது, வருவாய்த் துறையினர் விசாரித்து வருகிறார்கள். கேள்வித்தாள் வெளியான விவகாரம் குறித்து அறிந்துகொள்ள, எங்கள் தேர்வாணையத்திலும் ஒரு குழு அமைத்து இருக்கிறோம். விசாரணை முடிந்து அறிக்கை வந்த பிறகு விரிவான நடவடிக்கை இருக்கும்.  உஷாரான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தும் இப்படி எங்கோ சில கறுப்பு ஆடுகள் இருப்பது தெரிகிறது. எங்கள் தலைமை அலுவலகத்தில் படுகவனமாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். அச்சகத்தில் இருந்துதான் எல்லா ஊர்களுக்கும் கேள்வித்தாள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. எங்கே, எப்படி  கேள்வித்தாள் வெளியானது என்பது பற்றித் தெரிய வந்ததும் கூறுகிறேன்'' என்றார்.
இனி நடக்க இருக்கும் தேர்வாவது, நல்ல முறையில் நடக்கட்டும்!

No comments:

Post a Comment