பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பார்கள். அந்த நிலைக்குத்தான் ஆளாகி உள்ளன, ஈமு கோழிகள்!
பண ஆசை காட்டி அப்பாவி மக்களை மோசடி செய்த நிறுவனங்கள் திடீரென காணாமல்போய்விடவே, அதன் ஆதரவில் வளர்ந்துவந்த ஈமு கோழிகள் பசியால் மயங்கி... செத்து விழுகின்றன. செத்துக் கிடக்கும் ஈமுகளை அப்புறப்படுத்தவும் ஆட்கள் இல்லாத சூழல். அதனால் பசியால் துடிக்கும் மற்ற ஈமுகள், செத்த ஈமுகளைக் கொத்தித் தின்று பசியாறு கின்றன. இந்தக் கொடுமையைப் பார்க்கும் மக்கள், தங்களது இழப்பையும் மறந்து பரிதாபக் கண்ணீர் சிந்துகிறார்கள்!
''ஈமு கோழியைக் காப்பாற்ற வழி இருக்கிறதா... ஏமாந்த முதலீட்டாளர்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன?'' என்று தமிழ்நாடு ஈமு அசோசியேஷன் தலைவர் ராஜேந்திரகுமாரிடம் பேசினோம்.
''இப்போது தமிழகம் முழுவதும் சுமார் 10,000 ஈமுகள் இருக்கின்றன. இவை, 45 நாட்கள் வரை தண்ணீர், உணவு இல்லாமல் உயிர் வாழும் தன்மை கொண்டவை. ஆனால் இப்போது உணவு இல்லாமல் 10 நாட்களிலேயே அவை இறந்துவிடுகின்றன. அதற்குக் காரணம், அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட தீவனங்கள் தரம் இல்லாதவை என்பதால்தான். இந்த நிறுவனங்கள் ஒன்றுக்குக்கூட சொந்தமாகத் தீவனக் கம்பெனி இல்லை. அதனால் உண்மையான தீவனங் களைக் கொடுக்காமல், வெறும் தவிடு மட்டுமே கொடுத்து ஏமாற்றி இருக்கிறார்கள். சத்து இல்லாத தவிட்டைத் தின்று இத்தனை நாட்கள் அந்த ஈமு உயிர் வாழ்ந்ததே அதிசயம்தான்.
இப்போது பருவநிலை மாற்றம் அடைந்திருப்பதால், ஈமு கோழிகளுக்கு ஊசி, மருந்து போன்றவையும் கொடுக்க வேண்டும். மேலும் ஈமுகள், அனைத்து வகையான காய்கறிகள், இலைகளைச் சாப்பிடும். தனது ஜீரண சக்தியை அதிகரிக்க கல்லையும் மண்ணையும் சாப்பிடக்கூடியது. ஒரு கோழிக்குத் தினமும் 700 கிராம் உணவு போதுமானது. கால்நடைத் துறையின் ஆலோசனையைக் கேட்டு மக்காச்சோளம், சோயா, தவிடு, புண்ணாக்கு போன்றவற்றை சரியான விகிதத்தில் அரைத்துக் கொடுக்கலாம். தீவனத்துக்காக யாரையும் எதிர்பார்க் காமல், ஈமுவை வளர்க்கும் விவசாயிகளே இதனை உடனே செய்யவேண்டும். வரும் 17-ம் தேதி இந்திய அளவில் ஈமு பற்றி கருத்தரங்கு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. அப்போது, 'வெளினியா ஈமு ஃபார்ம்ஸ்’ நிறுவனம் ஈமுகளைக் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட இருக்கிறது. ஒரு கிலோ 320 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் விவசாயிகள் ஈமுவைக் காப்பாற்றிவந்தால், நஷ்டத்தை ஈடுகட்டிவிடலாம். அரசும் ஈமு கோழிகளைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஈமு வளர்ப்பானது, ஒப்பந்த நிறுவனங்கள் சொல்வதுபோல அபரிமிதமான லாபம் தரும் தொழில் அல்ல. ஆனால் நிச்சயமாக, நியாயமான லாபம் தரக்கூடிய ஒன்றுதான்'' என்றார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பேசினோம். ''நாங்கள் போட்ட பணம் கிடைக்காமல்போன அதிர்ச்சியில் இருப்பதால், அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. கோழிக்குத் தீவனம் வாங்கிப் போடவும் முடியாத நிலைமையில்தான் இருக்கிறோம். எங்கள் இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசியல் விழா, காது குத்து போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஈமு கோழிகளை ஆயிரம் ரூபாய்க்கும் இரண்டாயிரம் ரூபாய்க்கும் கேட்கின்றனர். எங்களால் வளர்க்க முடியாது என்பதால், கிடைக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு கொடுத்து வருகிறோம். தீவனம் வாங்கிக்கொடுக்கும் நிலையில் இல்லை என்பதால் அரசு ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டும்'' என்றனர் சோகமாக.
இந்த சோகமான சூழ்நிலையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். ''ஈமு கோழிகளைக் காப்பாற்றும் வேலைக்குத்தான் மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை தருகிறது. பருவ நிலை மாற்றம் காரணமாக சில கோழிகள் இறந்துவிட்டன. அதற்காகத் தனி மருத்துவக் குழு அமைத்து சிகிச்சை செய்துவருகிறோம். தமிழகம் முழுவதும் இந்த நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு, இப்போது உணவு இல்லாமல் தவிக்கும் கோழிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை கவனமாகச் செய்துகொடுப்போம்'' என்றார்.
இது பற்றி பேசிய கால்நடைத் துறை அமைச்சர் சின்னையா, ''கால்நடைத் துறை சார்பாக இப்போது ஈமு கோழிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. நான் சட்டசபையில், 'ஈமு கோழித் தொழிலுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. அங்கீகரிக்கவும் இல்லை’ என்று பேசி ஏற்கெனவே எச்சரிக்கை கொடுத்து இருக்கிறேன். மக்கள் இதுபோன்ற முதலீடுகளில் இனியாவது ஜாக்கிரதையாகவும் அதிக விழிப்பு உணர்வோடும் இருக்க வேண்டும்'' என்றார்.
மனிதர்களின் பேராசையில் மாட்டிக்கொண்டது, பாவம்... ஈமு!
No comments:
Post a Comment