நாங்க சாதாரணமா நெனச்சோம். ஆனா, தோண்டத்தோண்ட வர்ற விஷயங்களைப் பார்த்தால் கர்நாடகாவின் ரெட்டி பிரதர்ஸின் சுரங்க ஊழலை மிஞ்சிடும் போலிருக்கு'' - மதுரை கிரானைட் குவாரி ஊழல்களை விவரிக்கும்போது ஆச்சர்யத்துடன் சொன்னார் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா!
ஆகஸ்ட் 8-ம் தேதி நிலவரப்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள 175 குவாரிகளில் 128 குவாரிகளை அதிகாரிகள் குழு சல்லடைபோட்டு சாட்சியங்களை அள்ளி விட்டது. இதில், 49 குவாரிகளில் மோசடி நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் பி.ஆர்.பழனி சாமி., துரை தயாநிதி சம்பந்தப்பட்ட ஒலிம்பஸ் குவாரி உள்ளிட்ட 12 குவாரிகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதால், அந்த நிறுவனங்கள் மீது இதுவரை 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மதுரை மாவட்டத்தில் 175 குவாரிகளுக்கு மட்டுமே அரசின் அனுமதி இருந்தபோதும் அதையும் தாண்டி அனுமதி பெறாமல் ஏராளமான குவாரிகள் இருப்பதாக அதிகாரிகள் குழு, கலெக்டருக்கு அறிக்கை கொடுத்திருக்கிறது. ''அதிகாரிகளுக்கே தெரியாமல் இன்னும் பல குவாரிகளை மண்ணுக்குள் புதைத்து விட்டனர்'' என்கிறார்கள் மேலூர் பகுதி சமூக ஆர்வலர்கள்.
கீழையூரில் உள்ள சி.சி. கண்மாய் பகுதியில் உள்ள பி.ஆர்.பி. குவாரியில், அனுமதிக்கப்பட்ட இடத்தை யும் தாண்டி கண்மாய் பகுதியிலும் சுமார் 2.70 ஏக்கரை சுரண்டி எடுத்து மூடிவிட்டதை அதிகாரிகள் குழு கண்டுபிடித்ததை கடந்த இதழில் சொல்லி இருந்தோம். 6-ம் தேதி இந்தப் பகுதியை மேலும் துருவியது முத்திரைத்தாள் சிறப்பு துணை ஆட்சியர் இளங்கோவன் தலைமையிலான குழு. இந்தக் குவாரிக்கு அருகிலேயே அனுமதி பெறாத இன்னொரு குவாரியையும் இவர்கள் கண்டுபிடித்தனர். சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கைச் சுரண்டிஇருந்த அந்தக் குவாரியைச் சோதனையிட மறுநாள் அதிகாரிகள் சென்ற போது குவாரி பூட்டிக் கிடந்தது. பூட்டை உடைத்து சோதனை நடத்தினர் அதிகாரிகள்.
யார் வெட்டியது என்றே தெரியவில்லையாம்!
இதேபோல், மேலப்பட்டியில் சுந்தரி அம்மன் கோயில் பின்புறம் உள்ள குவாரியிலும் புறம்போக்கில் கற்களை வெட்டி எடுத்து அவற்றை அவசர அவசரமாக பூமிக்குள் போட்டுப் புதைத்திருந்தனர். இ.மலம்பட்டி ஏரியாவில் இரண்டு இடங்களில் அரசு நிலத்தில் கிரானைட் தொழிலாளர்கள் தங்குவதற்காக அமைத்து இருந்த ஷெட்டுகள் மற்றும் சமையல் கூடங்கள் அவர்களே இடித்து விட்டனர். இதே ஏரியாவில் பி.ஆர்.பி நிறுவனத்துக்குச் சொந்தமான குவாரிக்கு அருகில் சுமார் ஒன்றரை ஏக்கர் அளவுக்கு அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் தோண்டி இருக்கிறார்கள். அதற்குள், அதிகாரிகள் ஆக்ஷன் தொடங்கியதால் வெட்டி எடுத்த கற்களை அதே குழிக்குள் போட்டுப் புதைத்து அங்கே குவாரி இருந்த தடயமே இல்லாமல் மூடி மறைத்திருக்கிறார்கள்.
கலால் துறை உதவி ஆணையர் ரவீந்திரன் 8-ம் தேதி இதையும் கண்டுபிடித்துத் தோண்ட, பரபரப்பானது ஏரியா. இப்படியே ஏகப்பட்ட குவாரிகளைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். வெட்டி எடுக்கப்பட்ட கற்களின் அளவைத் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக 'டோட்டல் ஸ்டேஷன்’ என்ற கருவி கொண்டுவந்து இருக்கின்றனர். திருவாதவூர் ஏரியாவில் சுமார் 500 அடி ஆழத்தில் ஒரு கிரானைட் குவாரி. இதற்கு யாருமே சொந்தம் கொண்டாடவில்லை. யாருக்கும் அந்த இடத்தில் லைசென்ஸும் கொடுக்கவில்லை. ஆனால், யார் யாரோ அவ்வப்போது வந்து அங்கே கிரானைட் கற்களை வெட்டிக் கொண்டுபோய் இருக்கிறார்கள். இதைப் பார்த்துமிரண்டுபோன அதிகாரிகள், யார் மீது வழக்குப் போடுவது என்று புரியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள்.
கிரேட் எஸ்கேப்!
அதிகாரிகள் இப்படித் துருவுகிறார்கள் என்றதுமே தெற்குத் தெரு பகுதியில் பிரபல கிரானைட் நிறுவனத்துக்குச் சொந்தமான கம்பெனி வளாகத்தில் கண்மாய் புறம்போக்கை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த மூன்று மாடிக்கட்டடம் ஒன்றை, 7-ம் தேதி அந்த கிரானைட் நிறுவனமே இடித்துத் தரைமட்டம் ஆக்கிவிட்டதாம். அத்துமீறி அரசுக்கு சொந்தமான இடத்தில் கிரானைட் கற்களை வெட்டிக் கடத்தியதாகவும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் 8-ம் தேதி நிலவரப்படி மொத்தம் 12 வழக்குகள் பதிவாகி இருந்தன. இதில் பெரும்பாலான வழக்குகள் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் சம்பந்தப்பட்டவை. இதற்காக தாங்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்த்த பி.ஆர்.பி. மற்றும் பி.கே.செல்வராஜ், துரை தயாநிதி உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
தான் 2010-ம் ஆண்டும் தனது பார்ட்னர் நாகராஜ் 2011-ம் ஆண்டும் ஒலிம்பஸ் குவாரி நிர்வாகத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக துரை தயாநிதி மனு போட்டுள்ளார். 'கோட்டை வீரணன் (இவர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அ.மா.பரமசிவத்தின் மைத்துனர்) என்பவர் பெயரில்தான் அந்தக் குவாரி லைசென்ஸ் இருக்கிறது. நாங்கள் சட்டத்தை மதித்துத் தொழில் செய்கிறோம்’ என்று பி.ஆர்.பி. தரப்பு தனது மனுவில் சொல்லி இருக்கிறது. இதன் மீதான விசாரணை 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, அதற்கு முன்னதாகவே கிரானைட் அதிபர்களை வளைக்கக் களம் இறங்கியது போலீஸ். ஆனால், அதையும் தெரிந்துகொண்டு கிரானைட் ஓனர்கள், கம்பெனிகளின் முக்கியப் பொறுப்பாளர்கள் எஸ்கேப் ஆகி விட்டனர்.
''வேலை பார்ப்பவர்களைக் கைது செய்யலாம்!''
8-ம் தேதி மதியம் இடையப்பட்டி திருவாதவூர் குவாரிகளுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார் மாவட்ட எஸ்.பி-யான பாலகிருஷ்ணன். இதையடுத்து, மேலூர் டி.எஸ்.பி-யான மணிரத்னம் இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் பி.ஆர்.பி. கிரானைட்ஸ், மதுரா கிரானைட்ஸ், சிந்து கிரானைட்ஸ், ஜி.ஜி. கிரானைட்ஸ் அலுவலகங்களுக்குள் புகுந்து 21 பேரைக் கைது செய்தனர். இவர்களில் பி.ஆர்.பி. நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் 13 பேர். இதுகுறித்து, எஸ்.பி-யான பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''அத்துமீறலில் ஈடுபட்ட கிரானைட் அதிபர்கள் தலைமறைவு ஆகிவிட்டனர். இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் கிரானைட் கம்பெனிகளையும் வழக்கில் சேர்த்தோம். வழக்கில் கம்பெனியும் இருப்பதால் அங்கு பணிபுரியும் நபர்களைக் கைதுசெய்து விசாரிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. சட்ட விரோதமாகக் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பாக சில எந்திரங்களையும் பறிமுதல் செய்திருக்கிறோம். எங்களது நடவடிக்கை இதோடு நிற்காது... வழக்குக்குத் தேவையான ஆவணங்களைச் சேகரிப்பதற்காக சம்பந்தப்பட்ட கிரானைட் கம்பெனிகளில் அதிரடி சோதனையும் நடத்துவோம்'' என்றார்.
15 பூட்டுகளுடன் கலெக்டர்!
சொன்னபடியே 9-ம் தேதி காலை 6.10. மணிக்கு எஸ்.பி-யும் கலெக்டரும் தெற்குத் தெருவில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட்ஸின் நிர்வாக அலுவலகத்துக்குள் 15 பூட்டுகள் மற்றும் சங்கிலிகள் சகிதம் நுழைந்தனர். முன்னதாகவே, அலுவலகத்தின் முன்பகுதியில் இருந்த ஆவணங்களை எல்லாம் பின்பக்க அறைகளுக்கு அவசர அவசரமாக மாற்றிக்கொண்டது பி.ஆர்.பி. நிறுவனம். அங்கிருந்த அனைத்து அறைகளும் திறந்தே கிடந்தன. அதிகாரிகளுக்கு பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை. 'எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று செக்யூரிட்டிகள் ஒதுங்கிக்கொள்ள, ஆவணங்கள் இருந்த அறைகளைப் பூட்டி சீல் வைத்தார் ஆர்.டி.ஓ. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த அலுவலக வளாகம் அமைந்திருக்கிறது. பின்பகுதியில் பிரமாண்டமான கிரானைட் பாலிஷிங் யூனிட் செயல்படுகிறது. 2,500 பேர் வேலை செய்யும் இந்த யூனிட்டைச் சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கிரானைட் கற்களை பரப்பி வைத்திருக்கிறார்கள். இந்த கம்பெனிக்குள் மூன்று கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கணக்கு எடுத்துவிட வேண்டும் என்பதற்காக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கனிம வளத்துறை, பொதுப் பணித் துறை, ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அத்தனை துறை அதிகாரிகளையும் வரவழைத்திருந்தார் கலெக்டர்.
'பத்தாயிரம் குடும்பம் பி.ஆர்.பி-யை நம்பி வாழுறோம்!’
அத்தனை பேரும் அறிக்கை கொடுக்க இரவு ஆகிவிடும் என்பதால், வந்த வேலையை முடித்துக்கொண்டு காலை 10 மணிக்கு எஸ்.பி-யும் கலெக்டரும் அங்கிருந்து கிளம்பினர். அப்போது கம்பெனிக்கு வெளியே திரண்டிருந்த பி.ஆர்.பி. நிறுவன ஊழியர்கள் கலெக்டரின் காரை மறித்துக்கொண்டு, ''நீங்க பாட்டுக்கு கம்பெனியை சீல் வெச்சுட்டீங்க. நடுத்தெருவுல நிக்கிற எங்களுக்கு ஒரு வழியைச் சொல்லுங்க சார்'' என்றனர். ''இந்த நடவடிக்கைகள் முடிந்தால்தான் உங்கள் பிரச்னையைப் பேச முடியும். பத்துப் பேர் மட்டும் அலுவலகத்துக்கு வாங்க பேசுவோம்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் கலெக்டர். சமாதானம் அடையாத ஊழியர்கள் கம்பெனிக்குள் இருந்த ஆயிரம் ஊழியர்களையும் வெளியில் வரச் சொல்லி பஸ்ஸை மறிக்க ரோட்டுக்கு வந்தனர். ''தேவை இல்லாமப் பிரச்னை செய்தால், உள்ள போயிடுவீங்க'' என்று போலீஸ் அதிகாரிகள் மிரட்டவும், கம்பெனிக்குள் சென்றனர். அங்கிருந்த அன்னக்கொடி என்பவர், ''பத்தாயிரம் குடும்பங்கள் பி.ஆர்.பி-யால் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. அரசி யல்வாதிகள் தூண்டுதலால் அவர் மேல் அபாண்டமாப் பழிபோடுறாங்க. கம்பெனிக்குப் பூட்டிப் போட்டுட்டா, எங்களுக்கு யாரு சார் வேலை குடுப்பாங்க? அஞ்சாவது கூட படிக்காதவங்களுக்கு அரசாங்கம் வேலை கொடுக்குமா? இதுக்கு ஒரு வழியை சொல்லாட்டி எங்களில் சில பேரு தீக்குளிக்கிறதுக்கும் தயாரா இருக்கோம்'' என்று கண்கலங்கினார்.
கனிமவளத் துறையிலேயே விதிகள் இல்லை!
கிரானைட் குவாரி ஊழல்களை முழுமையாக வெளிக்கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். அவர் தனது மனுவில், 'சகாயம் எழுதிய குறிப்பின்படி, விஞ்ஞானபூர்மாக விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. இதை விசாரிக்க வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்’ என்று கேட்டுள்ளார். அந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வருகிறது. எனவே, அரசு உஷாராக நடவடிக்கை எடுத்து வருகிறது. பி.ஆர்.பி. அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் பேசினோம். ''நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு முறைகேடுகள் செய்திருக்கிறார்கள். பி.ஆர்.பி. அலுவலக வளாகத்தின் பின்பகுதியில் கண்மாய் ஆக்கிரமிப்புகள் இருக்கு. பாலீஷ் கழி வுகளைக் கொட்டி கண்மாயைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூர்த்து விட்டனர். அதனால், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளையும் களத்தில் இறக்கி இருக்கிறோம். ஆக்கிரமிப்புகள் குறித்து இரண்டு குழுக்கள் அளவெடுக்கிறார்கள். கம்பெனியை சீல் வைத்திருக்கிறோம். அவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்தால் அவர்களை வைத்தே ஆவணங்களை சரிபார்ப்போம். இல்லாவிட்டால் துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்துவோம்'' என்றார். துரை தயாநிதி மற்றும் நாகராஜ் ஆகிய இருவர் பெயரில்தான் ஒலிம்பஸ் குவாரி இருப்பதாக ஆவணங்களில் இருக்கு. . அதனால், அவங்க மீதுதான் வழக்குப் போடமுடியும்'' என்றார்.
அடுத்த அதிரடியாக பி.ஆர்.பி-யின் சொத்துப் பட்டியலைத் தோண்ட ஆரம்பித்திருக்கிறது போலீஸ்!
கிருஷ்ணகிரியில் இருந்துதான் கடத்தலா?
மதுரையைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் கிருஷ்ணகிரி மாவட்டக் குவாரிகளிலும் ரெய்டு ஆரம்பம்.
''தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கிரானைட் குவாரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் செயல்படுகின்றன. உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'பாரடைஸ்’ கிரானைட் இந்த மாவட்டத்தில்தான் அதிகமாக வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கே இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தை அடைய சில மணி நேரப் பயணமே போதும். அதனால் சட்ட விரோதமாக வெட்டும் கனிமங்களை அண்டை மாநிலங்களுக்கு உடனுக்குடன் கடத்திவிடுகிறார்கள். சாமானியர்களுக்கே இந்தத் தகவல் தெரியும். ஆனால் அதிகாரிகள், 'அப்படியா? எங்களுக்குப் புகார் வரவில்லையே’ என்று ஆச்சர்யம் காட்டுகிறார்கள். இங்கே பெரும்பாலான குவாரிகளை நடத்துவது மதுரை மாவட்ட கிரானைட் அதிபர்கள்தான். மேலும், அரசியல் பிரபலத்தோடு இணைத்துப் பேசப்பட்ட ஒரு நடிகைக்கும் குவாரி இருக்கிறது. இதுதவிர, முக்கியக் கட்சியைச் சேர்ந்த அத்தனை புள்ளிகளுக்கும் சொந்தமான குவாரிகள் இருக்கின்றன. அதிகாரிகள் நடத்தும் விசாரணை சீரியஸ் ஆனால் இவர்கள் அனைவருமே வெளிச்சத்துக்கு வருவார்கள். இந்தத் தவறுக்குத் துணைபோன அதிகாரிகள் பட்டியலும் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் குவாரிகள் விஷயத்தில் மீண்டும் தவறுகள் நிகழாது'' என்கிறார்கள் ஏரியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.
வெளியே தோப்பு... உள்ளே குவாரி!
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே இருக்கும் மேட்டுப்பட்டி என்னும் கிராமம் முழுக்கவே கிரானைட்டுக்காக சுரண்டப்பட்டு இருக்கிறது. இதுவும் மதுரையில் அதிரடிக்கு உள்ளான பி.ஆர்.பி-க்கு சொந்தமான குவாரி என்கிறார்கள். இந்தக் குவாரிகளில் இருந்து பாறைகளை எடுத்தவுடன் அந்தப் பள்ளங்களில் மண்ணை நிரப்பி மா, பலா, தென்னை போன்ற மரங்களை வளர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் வெளியே இருந்து பார்க்க தோப்பு போன்ற தோற்றத்தைக் கொடுத்து விடும். அதற்குப் பின்னே மலைகளைக் குடையும் வேலை எந்தச் சிக்கலும் இல்லாமல் நடக்கிறது. இங்கேயும் ரெய்டு நடத்த வேண்டும் என்பதுதான் ஏரியாவாசிகள் கோரிக்கை.
வெறிச்சோடிய குவாரிகள்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாத்தூர், மண்டையூர், கீரனூர், குளத்தூர், அம்மாசத்திரம், வந்தனாகுறிச்சி, பொம்மாடி மலை, ராக்கதன்பட்டி, விளாத்துப்பட்டி, பரம்பூர் எனப் பல கிராமங்களில் பரந்து விரிந்து கிடக்கிறது கிரானைட் குவாரிகள். பொம்மாடி மலை, சித்தன்னவாசல், குடுமியான் மலை ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் குவாரிகள் தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து நடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். மதுரை பி.ஆர்.பி-க்குச் சொந்தமாக இங்கேயும் குவாரிகள் இருக்கின்றன. அதிக மதிப்புள்ள 'யெல்லோ ஷேட்’ எனும் கிரானைட் கற்கள் இங்கு அதிக அளவில் கிடைக்கிறது. மதுரையைத் தொடர்ந்து இங்கும் அதிரடி ரெய்டு நடக்கும் என்று பயந்துபோன குவாரி அதிபர்கள், அனுமதி இன்றி இயங்கி வந்த அத்தனை குவாரிகளையும் மூடிவிட்டார்கள்.
No comments:
Post a Comment