Friday, August 3, 2012

இந்தியாவின் தேசிய பானம்!



மனிதர்கள் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் பருகும் பானம் என்றால் அது தேநீர்தான். தினம்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் பெரும்பாலான மக்கள் தேநீரைப் பருகுகின்றனர். இந்தியாவில் பெரும்பாலும் பால், சர்க்கரை சேர்த்தே தேநீர் தயாரிக்கப்படுகிறது. ஏலக்காய் தேநீர், சுக்கு தேநீர், புதினா தேநீர், இஞ்சி தேநீர், கருந்தேநீர், எலுமிச்சை தேநீர், ஐஸ் தேநீர் என்று பலவித சுவைகளில் தேநீர்கள் வந்துவிட்டன. மாம்பழம், திராட்சை, மல்லிகை போன்ற சுவைகளிலும் தேயிலைத் தூள்கள் விற்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான சாக்லெட், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி போன்ற சுவைகளில் பிரத்யேகமாகத் தேயிலைத் தூள்கள் வந்துவிட்டன. சாப்பிடாமல் இருந்தாலும் இருப்பார்கள், தேநீர் இன்றி இருக்கமாட்டார்கள். சிலர் ஒரு நாளைக்கு 7,8 தடவை கூட தேநீரைச்சுவைக்கிறார்கள். தேநீரில் அப்படி என்ன கிடைக்கிறது? தேநீர் குடித்தவுடன் புத்துணர்ச்சி கிடைக்கிறது; சுறுசுறுப்பு வருகிறது. 

தேயிலையின் பயன்பாட்டைக் கண்டறிந்தவர்கள் சீனர்கள். உலக தேயிலை உற்பத்தியில் சீனா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. காட்டு மரங்களாக வளர்ந்திருந்த தேயிலைகளில் இருந்து மருத்துவக் குணம் இருக்கிறது என்று கண்டறிந்து இந்தியாவில் கிறிஸ்த்து பிறப்பதற்கு முன்பே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு... சீன மன்னர் ஷென்னாங் விவசாயத்திலும் மருத்துவத்திலும் ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். மூலிகைச் செடிகள் மூலம் மருந்துகளை உருவாக்கினார். விவசாயத்துக்குத் தேவையான உபகரணங்களையும் கண்டுபிடித்தார். காய்ச்சியநீரைப் பருகினால் ஆரோக்கியம் என்று அவர் அறிந்திருந்தார். 

ஒருமுறை படைகளுடன் தொலைதூரத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் போது, காட்டுப் பகுதியில் ஓய்வெடுத்தார். அப்போது குடிப்பதற்காக வேலைக்காரர் ஒருவர் நீரைக் கொதிக்க வைத்தார். பக்கத்தில் இருந்த மரத்திலிருந்து ஓர் இலை பறந்து வந்து தண்ணீரில் விழுந்தது. உடனே தண்ணீரின் நிறம் மாறியது. அதிலிருந்து மூலிகை மணமும் வந்தது. உடனே ஹென்னாங் மன்னர் அந்தநீரைப் பருகிப் பார்த்தார். களைப்புநீங்கி, புத்துணர்வு கிடைத்தது போல இருந்தது. அதன் பிறகு தேயிலையைக் கொண்டு வந்து பல்வேறு இடங்களில் பயிர் செய்தனர். சீனாவிலிருந்து புத்த துறவிகள் மூலம் தேயிலை ஜப்பானுக்குச் சென்றது.


யெசி என்ற புத்த துறவி ஜப்பானில் தேயிலையை அறிமுகம் செய்து, பயன்பாட்டையும் விளக்கினார். இவரே ஜப்பான் தேயிலையின் தந்தை என்று கொண்டாடப்படுகிறார். சீனா, ஜப்பான் நாட்டில் தேயிலையின் பயன்பாடு பல பரிமாணங்களை அடைந்தது. 15-ம் நூற்றாண்டுக்குப் பிறகே ஐரோப்பிய நாடுகளுக்குத் தேயிலை அறிமுகம் கிடைத்தது. அப்படியே பல நாடுகளுக்கும் பரவியது.

தேயிலையையும் நீரையும் குறிக்கும் விதத்தில் cha என்று சீன மொழியில் அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் டீ ஆக மாறியது. 

இந்தியாவில் மருத்துவத்துக்காகத் தேயிலைப் பயன்படுத்தப்பட்டு வெகு காலத்துக்குப் பிறகே பானமாக உருவெடுத்தது. கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவில் கால் ஊன்றிய பிறகே வியாபார ரீதியாகத் தேயிலைப் பயிர் செய்யப்பட்டது. அசாம், டார்ஜிலிங் பகுதிகளில் ஏராளமாகத் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகளில் 70 சதவிகிதம் உள்நாட்டிலேயே செலவாகிவிடுகிறது. மீதி தேயிலை ஏற்றுமதியாகிறது. இந்திய தேயிலைகளில் அசாம், டார்ஜிலிங் தேயிலைகள் உலகப் புகழ்பெற்றவை.

தேயிலையின் அறிவியல் பெயர் கமெலியா சினென்சிஸ் (Camellia sinensis). இது ஒரு பசுமை மாறாத செடி. சிறிய இலை தேயிலைகள் சீன வகையைச் சேர்ந்தவை. பெரிய இலை தேயிலைகள் அசாம் வகையைச் சேர்ந்தவை.

தேயிலை காடுகளில் வளர்ந்தபோது பெரிய மரங்களாகவே இருந்தன. தேயிலைத்தூளுக்கு நுனி இலைகள்தான் தேவை என்பதால் பெரிய மரங்களில் ஏறி இலைகளைப் பறிப்பது கடினம். எனவே குற்றுச் செடிகளாக வெட்டி விடுகிறார்கள். தேயிலை மரத்தின் ஆயுள் சுமார் நூறு ஆண்டுகள். பத்து நாள்களுக்கு ஒருமுறை தேயிலைகளைப் பறிப்பார்கள். முன்பு கைகளால் பறிக்கப்பட்ட தேயிலைகள், இன்று சிறிய கருவி மூலம் பறிக்கப்படுகின்றன.



பறித்த இலைகள் தேயிலைத் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு பெரிய இயந்திரத்தில் கொட்டப்பட்டு, நசுக்கப்படுகின்றன.

நசுக்கிப் பிழியப்பட்ட தேயிலைகள், நொதிக்கும் நிலைக்கு வருகின்றன. இங்குதான் தேயிலை பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறத்துக்கு மாற்றமடைகிறது.

நொதிக்கப்பட்ட தேயிலைத் தூள் உலர்த்தும் இயந்திரத்துக்கு வருகிறது. இங்கு தேயிலையில் உள்ள ஈரத்தன்மை நீக்கப்படுகிறது. காற்று, வெப்பநிலை, நேரம் எல்லாம் மிக முக்கியமானது. எல்லாம் சரியாக இருந்தால்தான் சுவையான தேயிலைத் தூள் கிடைக்கும். 

உலர்ந்த தேயிலைத் தூள் தரம் வாரியாகப் பிரிக்கப்படுகிறது. இலைகள், உடைந்த இலைகள், தூள் என்று மூன்று வகைகளில் தேயிலைத் தூள் பிரிக்கப்படுகிறது. இலைகளின் மூலம் நல்ல நறுமணமும் வெளிர் நிறமும் கிடைக்கும். உடைந்த இலைகளில் இருந்து கூடுதல் நிறமும் குறைவான மணமும் கிடைக்கும். தேயிலைத் தூளில் ஆழ்ந்த நிறமும் குறைவான மணமும் கிடைக்கும். 

தேயிலையில் சுமார் 700க்கும் மேற்பட்ட வேதிப்பொருள்கள் இருக்கின்றன. காபியை விட தேநீர் மனிதனுக்கு அதிக நன்மை கொடுக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு நாளைக்கு 6 தடவை தேநீர் அருந்து பவர்களுக்கு இதயக் கோளாறு வருவதற்கான வாய்ப்பு மூன்றில் ஒரு பங்கு குறைவு என்கிறார்கள். அதற்காக தேநீரைக் குடித்துக்கொண்டே இருந்தால் இதயக் கோளாறு வரவே வராது என்று சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவில் தேநீரின் செயல்பாடு நின்று விடும். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும் சக்தி ஓரளவு தேநீரில் இருக்கிறது என்கிறார்கள்.


பாஸ்டன் தேநீர் விருந்து



அமெரிக்கப் புரட்சியில் தேயிலைக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்தது அமெரிக்கா. தொழில் செய்தாலும் வரி; பொருள் வாங்கினாலும் வரி. இங்கிலாந்தின் மூலமே அமெரிக்காவுக்குப் பொருள்கள் இறக்குமதியாக வேண்டும் என்று சட்டம். ஆனால் இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு அதிக அளவு வரி செலுத்த வேண்டும். அமெரிக்கர்கள் இந்த வரிகளுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்கா இங்கிலாந்தின் காலனியில் இருந்தாலும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை. பிரதிநிதித்துவம் வேண்டியும் வரிகளை ரத்து செய்யவும் போராட்டங்கள் தொடர்ந்தன. 1773-ம் ஆண்டு டிசம்பர் 16 அன்று பாஸ்டன் துறை முகத்தில் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி கப்பல்களில் தேயிலை மூட்டைகள் வந்திருந்தன. போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் தேயிலை மூட்டைகளை எடுத்து கடலில் வீசி எறிந்தனர். பாஸ்டன் தேநீர் விருந்து என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சிக்குக் காரணமாக அமைந்தது. 

தேநீர் சடங்கு


சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் தேநீர் சடங்குகள் நடைபெறுகின்றன. குளிர் மற்றும் வெயில் என இரண்டு பருவங்களில் தேநீர் சடங்குகள் நடத்தப்படுகின்றன. தேநீர் சடங்கு நடைபெறும் வீடு சுத்தமாகவும் அழகாகவும் அலங்கரிக்கப்படுகிறது. இதற்காக உறவினர்கள், நண்பர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களை வரவேற்று, அமரவைத்து, தேநீரைப் பரிமாறுவது மிக முக்கியமான விஷயங்களாக இந்தச் சடங்கில் பார்க்கப்படுகிறது. பெண்கள் ஜப்பானின் தேசிய ஆடையான கிமோனோவைக் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். விருந்தினர்களைக் குறிப்பிட்ட வரிசையில் அமர வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment