பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்ற அரசாங்கத்திடம் பணமில்லை என்று கேட்டிருக்கிறோம். ஆனால், நமது வங்கிகளில் முதிர்வு அடைந்த ஃபிக்ஸட் டெபாசிட், உபயோகத்தில் இல்லாத சேமிப்புக கணக்கு, முடிந்துபோன பிராவிடெண்ட் ஃபண்ட் கணக்கு, முதிர்வு பெற்ற இன்ஷூரன்ஸ் பாலிசிகள் ஆகியவற்றில் மட்டும் சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் கேட்பாரற்றுக் கிடக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?
நம்பித்தான் ஆகவேண்டும். காரணம், இது அரசே தரும் உண்மைத் தகவல்.
இப்படி கேட்பாரற்றுக் கிடக்கும் பணம், ஏதோ ஒரு காலத்தில் நீங்கள் எடுக்க மறந்த பணமாகக்கூட இருக்கலாம். அந்த பணத்தை எப்படி திரும்ப பெறுவது? அதற்கான வழிமுறைகள் என்ன? என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.
பிராவிடெண்ட் ஃபண்ட்..!
கேட்பாரற்றுக் கிடக்கும் பணத்தில் பெரும்பகுதி பிராவிடெண்ட் ஃபண்டில்தான் இருக்கிறது. இதில் மட்டும் 22,600 கோடி ரூபாய் பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கிறது. இதற்கு பல காரணங்கள். பலர் ஒரு நிறுவனத்தில் ஒரு சில மாதம் வேலை பார்த்துவிட்டு வேறு நிறுவனத்துக்கு மாறிவிடுகிறார்கள். இவர்கள் சம்பளத்திலிருந்து எடுக்கப்பட்ட பி.எஃப். பணத்தை திரும்பப் பெறுவதே இல்லை. காரணம், இத்தொகை சிறிதாக இருப்பதால் அதற்காக அலைய விரும்புவதில்லை.
அடுத்து, வேலை பார்த்த நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் சுமூகமான உறவு இல்லாமல் இருப்பது. அதனால், பி.எஃப். பணத்தைத் திரும்ப பெறும் விண்ணப்பத்தில் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கையெழுத்திட மறுப்பது, அப்படியே கையெழுத்துப் போட்டாலும் அந்த படிவத்தை பி.எஃப். அலுவலகத்திற்கு அனுப்பாமல் இருப்பதால், நான்கைந்து ஆண்டு வேலை பார்த்தவர்கள்கூட தங்கள் பணத்தைத் திரும்ப எடுக்காமலே இருக்கின்றனர்.
இன்னும் சிலர் நிறுவனத்தில் வாங்கிய கடனை திரும்பத் தராமலே வேலையை விட்டுப் போய்விடுகிறார்கள். கடனை கட்டாததால், கடனுக்கான தொகையை பி.எஃப். பணத்திலிருந்து அந்த நிறுவனம் எடுத்துக்கொள்ளும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இப்படி செய்ய நிறுவனத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே, அந்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். சிலர், பி.எஃப்.-ல் இருக்கும் பணத்துக்கு வட்டி கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆக்டிவ்வாக இல்லாத பி.எஃப். கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி கிடைக்காது.
பி.எஃப். பணத்தை எப்படி பெறுவது?
பி.எஃப்-ல் இருக்கும் பணத்தை திரும்பப் பெற வேலை பார்த்த நிறுவனத்தின் பி.எஃப் எண், ஊழியரின் பி.எஃப். எண் ஆகியவற்றைத் தெரிந்து வைத்திருந்தாலே போதும். வேலை பார்த்த நிறுவனத்துடன் சுமூகமான உறவு வைத்திருந்தால் பணத்தைத் திரும்ப பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஒருவேளை நல்ல உறவு இல்லை எனில், அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி மேலாளரிடம் கையெழுத்து வாங்கி, அதை பிராவிடெண்ட் ஃபண்ட் அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரியிடம் தந்தால், அவர் உங்கள் விண்ணப்பத்தை ஏரியா என்குளோஸ்மென்ட் ஆபீஸருக்கு அனுப்பி, உண்மை நிலையை விசாரிக்கச் சொல்லி, அதன்படி முடிவெடுப்பார். ஒருவேளை நிறுவனம் மூடப்பட்டு இருந்தால், அதற்கான சான்றுகளோடு வங்கி மேலாளரிடம் கையெழுத்து வாங்கி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
பி.எஃப்.-ல் இருக்கும் உங்கள் பணத்தைத் திரும்பப் பெற வங்கிக் கணக்கு எண் (ஜாயின்ட் அக்கவுன்ட் கூடாது), சரியான முகவரி, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை கொடுப்பது முக்கியம். இவற்றில் எது இல்லை என்றாலும் உங்களின் பி.எஃப். பணம் பெறுவதில் காலதாமதம் ஏற்படும்.
வங்கிச் சேமிப்பு கணக்கு!
வங்கிச் சேமிப்பு கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் மட்டும் 425 கோடி ரூபாய் (கடந்த மார்ச் 2012 நிலவரம்) திரும்பப் பெறாமலே கிடக்கிறது. இவற்றில் வேலை நிமித்தமாக ஊர் மாறிச் செல்பவர்கள் விட்டுச்செல்லும் தொகை, இறந்து போனவர்களின் கணக்கு போன்றவற்றில் மட்டுமே அதிகத் தொகை இருக்கிறது. இறந்தவர்களின் வாரிசுகள் நாமினியாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் அந்த பணத்தை சட்டரீதியாக கேட்டு பெறலாம். இதற்கு நாமினியாக இருப்பவர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றைக் கொடுத்து அந்த பணத்தைப் பெறலாம்.
ஃபிக்ஸட் டெபாசிட்..!
தன் பிள்ளைகள், பேரக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என ஃபிக்ஸட் டெபாசிட்டில் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பணத்தைப் போட்டு வைத்திருப்பார்கள் சிலர். இந்த விவரத்தை குடும்பத்தில் யாரிடமும் சொல்லாமலே ஏதாவது ஒரு அசம்பாவிதத்தில் இறந்துவிடுவார்கள்.
உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா /பாட்டி டெபாசிட் ஏதும் செய்திருந்த விவரம் தெரிந்தால் அதற்கான ஆதாரங்களை தேடி பார்க்கலாம். இல்லை எனில், அந்த வங்கியின் கிளைக்குச் சென்று விசாரிக்கலாம். டெபாசிட் இருப்பது உறுதி செய்யப்பட்டபிறகு, தகுந்த வாரிசுச் சான்றிதழை பெற்று பணத்தைப் பெறலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்தால், அவர்கள் ஒன்றுகூடி அந்த பணத்தை யாரிடம் ஒப்படைக்கலாம் என்பதை முடிவு செய்து, அதை வங்கிக்குத் தெரியப்படுத்தி, பணத்தைப் பெறலாம். இதற்கு ஃபிக்ஸட் டெபாசிட் போட்ட ரசீது இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
இன்ஷூரன்ஸ் பாலிசிகள்..!
இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் முதிர்வுத் தொகை சுமார் 3,000 கோடி ரூபாய் கோரப்படாமலே கிடக்கிறது. பிரீமியத்தைத் தொடர்ந்து கட்ட முடியாதவர்கள் பாலிசிகளை அப்படியே விட்டுவிடுகிறார்கள். இந்த பாலிசிகளை சரண்டர் செய்தால் குறைந்த அளவு பணமே கிடைக்கும் என்பதால் பணத்தைத் திரும்ப எடுக்க அவர்கள் முயற்சிப்பதில்லை. அதன் விளைவே இந்த துறையில் முடங்கிக் கிடக்கும் 3,000 கோடி ரூபாய். மூன்று வருடம் கட்டாயம் கட்டிவிட்டால் சரண்டர் தொகையை வாங்கலாம்.
இனிமேலாவது நாம் பரிவர்த்தனை செய்யும் எல்லா நிதி சம்பந்தமான விவரங்களையும் கணினியிலோ அல்லது டைரிகளிலோ குறித்து வைப்பதோடு மட்டுமல்லாமல் நம் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிகிற மாதிரி செய்வோமே!
No comments:
Post a Comment