Monday, August 13, 2012

கடலுக்கடியில் வெள்ளிக்கட்டிகள்! - வெளிவரும் ராணுவ ரகசியம்



ஆழ்கடலின் அடிமட்டத்தில் என்ன கிடைக்கும்? அரிய கடல் தாவரங்கள், மீன் வகைகள், சிப்பி, சங்கு, முத்து போன்றவைதானே. ஆனால் சமீபத்தில் கிடைத்திருப்பது வெள்ளிக்கட்டிகள். அதுவும் அரசு முத்திரையிடப்பட்ட சுத்த வெள்ளிக் கட்டிகள். கடலின் கீழே மிக ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை கிடைத்ததில் மிகப்பெரிய கனமான புதையலாக வர்ணிக்கப்படுகிறது இந்தக் கண்டுபிடிப்பு.1941ல் கல்கத்தா துறைமுகத்திலிருந்து இங்கிலாந்துக்கு இந்த 240 டன் வெள்ளிக் கட்டிகள் எஸ்.எஸ். கரிஸோப்பா என்ற கப்பலில் அனுப்பப்பட்டன. கர்நாடக மாநிலத்தின் அழகான ஜோக் ஃபால்ஸ் அருவியின் பெயர் கரிஸோப்பா. இந்தியாவில் நிறுவப்பட்ட ஒரு கம்பெனிக்குச் சொந்தமான அந்தக் கப்பலுக்கு அதன் நினைவாக இந்தப் பெயர். வெள்ளியைத் தவிர தேயிலை, இரும்பு போன்ற மற்ற சரக்குகளுடன்; வேறு ஆறு சரக்குக் கப்பல்களுடன் ஒரே வரிசையில் சென்று கொண்டிருந்தபோது போதுமான நிலக்கரியில்லாததால் மற்றவை வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கிவிட்டது. தனித்து விடப்பட்ட கப்பல் நாஜி படைகளின் போர்க்கப்பல் ஒன்றின் டார்பிடோவால் தாக்கப்பட்டு மூழ்கிப்போனது. 85 பணியாளர்களுடன் மூழ்கிய இந்தக் கப்பலில் வெள்ளிக்கட்டிகள் அனுப்பிய விஷயம் ராணுவ ரகசியமாகையால் அந்தத் தகவல் வெளியிடப்படவில்லை.சர்வதேச கப்பல் பயணங்களின் விவரங்களைப் பதிவு செய்து வைக்கும் லாயிட்ஸ் நிறுவனம் தொண்ணூறுகளில் வெளியிட்ட தகவலினால் அயர்லாந்து கடல் பகுதியில் மூழ்கிப்போன இந்தக் கப்பலை உலகம் அறிந்தது. அதைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிரிட்டிஷ் அரசு அப்பணியை, தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க முன்வந்தது. மூழ்கிய கப்பலைக் கண்டுபிடித்து வெள்ளிக்கட்டிகளை எடுத்தால் எண்பது சதவிகிதம் நிறுவனத்துக்கும் மீதி அரசுக்கும் என்பது ஒப்பந்தம். கப்பலைக் கண்டுபிடிக்கும் சர்வே கட்டத்திலேயே சில கம்பெனிகள் முயற்சியைக் கைவிட்ட நிலையில், ஒடிசி என்ற அமெரிக்க நிறுவனம் டெண்டரை ஏற்று ஆழ்கடல் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில் நுட்பத்துடன் களமிறங்கியது.

ஒடிசி எக்ஸ்ப்ளோரர் என்ற தாய் கப்பலிலிருந்து கம்ப்யூட்டர்கள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய சிறிய நீர்மூழ்கிக் கப்பல்களையும் ரோபோக்களையும் பயன்படுத்தி வெற்றிகரமாக வெள்ளிக்கட்டிகளை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். முதல் முயற்சியில் கிட்டத்தட்ட 48 டன் (20%) எடையளவில் வெள்ளிக்கட்டிகளைக் கொண்டுவந்துவிட்டார்கள். எழுபது ஆண்டுகள் ஜலவாசம் செய்திருக்கும் இந்தக் கட்டிகளில் படிந்திருக்கும் கடற்பாசியைத் தவிர வேறு பாதிப்புகள் ஏதுமில்லை. எடுத்த வரை புதையலின் இன்றைய மதிப்பு 38 மில்லியன் அமெரிக்க டாலர்கள். (ஒரு மில்லியன் 10 லட்சம்) விரைவில் இதைப் போல் இன்னும் 4 பங்கு வெளியே வரும். இதில் தங்கள் சொந்தச் செலவில் இந்த முயற்சியை மேற்கொண்ட ஒடிசி கம்பெனிக்கு 80% கிடைக்கும். மீதி பிரிட்டிஷ் அரசுக்கு. இந்தியாவிலிருந்து போனதுதானே, நமக்கு? அதெல்லாம் ஒன்றும் கிடையாதாம். அரசாங்க சொத்தான அது அன்றைய அரசுக்குத்தானாம். ரோபோக்களை ஈடுபடுத்தியிருக்கும் இந்த முயற்சி ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனை. மூழ்கிப்போன கப்பல்களை மீட்க மட்டுமில்லை, பல ஆராய்ச்சிகளுக்கும் உதவும்" என்கிறார்கள் வல்லுனர்கள்.ஒடிசியின் அடுத்த முயற்சி 1995ல் கண்டுபிடிக்கப்பட்ட கடலடியில் கிடக்கும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல். ஏன் அந்தக் கப்பல்? அதில் 2 டன் தங்கம் இருக்கிறது!

No comments:

Post a Comment