-அ.மார்க்ஸ் பார்த்த ஈழ அனுபவங்கள்! பாகம்-4
புதுக்குடியிருப்பில் இருந்து ஒட்டுசுட்டான் செல்லும் சாலையில் சற்றுத் தொலைவில் இருந்த இன்னும் அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பங்கர் வீடு உள்ளது.
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சிறிதும் பெரிதுமான நீர்மூழ்கிப் படகுகள், பெரிய தாக்குதல் படகுகள், டாங்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள், ரொக்கெட்டுகள், கையெறி குண்டுகள், பல்வேறு வகைத் துப்பாக்கிகள், ரவைகள், தற்கொலைத் தாக்குதலுக்காகக் குண்டுகள் பொருத்திக் காலால் மிதித்துச் செல்லும் மிதக்கும் ஸ்கூட்டர்கள், கப்பலில் பயன்படுத்தப்பட்ட எஞ்சின்கள் என அந்த அஸ்பெஸ்டஸ் கூரையிட்ட கட்டடத்துக்கு உள்ளும் வெளியிலும் போர்த் தளவாடங்கள் நிறைந்து இருந்தன.
எங்கள் வாகன சாரதி அந்த எஞ்சின்களைப் பார்த்துவிட்டு அவை எந்த வகைக் கார்களில் இருந்தவை எனச் சொல்லிக்கொண்டு இருந்தார். கார், பஸ் எஞ்சின்களைப் பிரித்து நீர்மூழ்கிப் படகுகளுக்கு மாற்றி அமைத்திருந்தனர்.
நாங்கள் சென்றபோது இரு பௌத்த பிக்குகளும் பார்வையாளர்களில் இருந்தனர்.
ஒவ்வொன்றையும் பொறுமையாகப் பார்த்துச் சென்ற அவர்களோடு கூடவே சென்ற இராணுவ வீரன் ஒருவன் அவற்றை விவரித்துச் சொல்லிக்கொண்டு இருந்தான்.
புலிகள் தண்டனை கொடுப்பதற்காகப் பயன்படுத்திய இரண்டு கம்பிக் கூண்டுகளும் அங்கே இருந்தன.
அந்த இடத்தைவிட்டு நாங்கள் நகர்ந்தபோது மாலை 4 மணி ஆகி இருந்தது.
புதுக்குடியிருப்பில் இருந்து ஒட்டுசுட்டான் செல்லும் சாலையில் சற்றுத் தொலைவில் இருந்த இன்னும் அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பங்கர் வீடு உள்ளது.
இங்கும் அடர்ந்த காடு அகற்றப்பட்டு, பஸ்கள் நிற்க இடம், வீட்டின் அருகே வரை கார்கள் செல்வதற்கு சாலை முதலியன அமைக்கப்பட்டு உள்ளன.
வீட்டின் அருகில் அதன் அமைப்பு குறித்த ஒரு பெரிய 'லே-அவுட்’ வைக்கப்பட்டு ஒரு இராணுவ அதிகாரி அங்கு நின்று, ஒவ்வொன்றையும் குச்சியால் சுட்டிக்காட்டி சிங்களத்தில் விளக்கிக் கொண்டிருந்தார். மக்கள் கூடி நின்று கேட்ட பின் வீட்டுக்குள் நுழைந்து ஒவ்வொரு தளமாகக் கீழே இறங்கிப் பார்க்கின்றனர்.
வீட்டு அருகில் கார் பார்க்கிங் ஒன்று பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு உள்ளது. காரை நேராக ஓட்டிச் சென்று கீழே பார்க் செய்யலாம். வீட்டைச் சுற்றி பயிற்சிகள் செய்யலாம்.
நுழைவாயிலின் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அரங்கம் உண்டு. அருகே சற்று நிதானமாக அமர்ந்து பேச இரும்புக் கம்பிகளால் வேயப்பட்ட மேசை, நாற்காலிகள் போடப்பட்டு உள்ளன.
வீட்டுக்குள் நுழைந்தால் நடுத்தரமான ஒரு ஹோல், ஒரு சமையலறை, ஒரு பாத்ரூம் ஆகியவை அருகருகே நீளவாக்கில் அமைந்துள்ளன.
மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இதுவே முழு வீடும் எனத் தோன்றும்.
ஆனால், சுவரை ஒட்டி அமைந்திருந்த இரகசியக் கதவைத் திறந்தால் படிகளின் வழியாகக் கீழே இறங்கலாம்.
கீழே ஒன்றன் கீழ் ஒன்றாக நான்கு தளங்கள் உள்ளன. இன்று கதவுகள் எல்லாம் நீக்கப்பட்டு, தற்காலிக மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஒருவேளை, இராணுவம் இந்த வீட்டைக் கைப்பற்றியபோது கண்ணிவெடி முதலிய அச்சத்தின் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் நுழைந்து இருக்கலாம்.
அதனால், பெரும்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம். எனினும் சேதங்கள் எல்லாம் திருத்தம் செய்யப்பட்டு கீழே சிவப்புச் சிமென்ட் தரைகளுடன் இன்று அந்த வீடு காட்சி அளிக்கிறது.
இப்போது ஃபேன், ஏ.சி. முதலான வசதிகள் இல்லை. ஆனால், அத்தகைய ஏற்பாடுகள் இல்லாமல் அங்கு வாழ்ந்திருக்க இயலாது.
கீழ்த்தளத்தில் இருந்து, அவசியமானால் தப்பிச் செல்ல சுரங்க வழி ஒன்றும் உள்ளது. இப்போது அது கம்பியால் மூடப்பட்டு உள்ளது.
ஏனோ அதிக பவருடன் உள்ள விளக்குகள் போடப்படவில்லை. அந்தச் சற்றே மங்கலான ஒளியில் நாங்கள் வைத்திருந்த சாதாரணக் கைக் கேமராவால் கூடியவரை எல்லாவற்றையும் படம் எடுத்துக் கொண்டோம்.
வசதிகளைக் காட்டிலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துக் கட்டப்படிருந்த அந்தப் பங்கர் வீட்டைச் சுற்றிலும் ஆறு அடுக்குகளில் பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மெய்க் காவலர்கள் நின்று பாதுகாப்பதற்கும், பயிற்சி அளிக்கப்பட்ட மோப்பநாய்கள் நிற்பதற்கும் வீட்டைச் சுற்றி ஆங்காங்கு ஏற்பாடுகள் இருந்தன.
அவசரத்துக்குத் தப்புவதற்கான வழிகள் கடும் ஆயுதப்பாதுகாப்புடன் கூடிய பங்கர்கள், கிணறு, சமையற்கட்டு என்பதாக அமைக்கப்பட்ட ஒரு வலிமையான கோட்டை அது.
மேலிருந்து நோட்டம் விட்டால் தெரியாதவாறு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அது அமைக்கப்பட்டு இருந்தது.
வீட்டுக்குள் இருந்த தளங்களில் கலந்தாலோசிப்பு அறை, ஒபரேஷன் அறை, ஆயுதப் பாதுகாப்புடன் கூடிய கதவுகள் முதலிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
நாங்கள் அந்த வீட்டுக்குள் இருந்தபோது ஒரு பெரிய வேடிக்கை நடந்தது.
பூமிக்குக் கீழே இருந்த அந்த நான்கு அடுக்கு தளங்களில் கீழே செல்லச் செல்ல, அதுவும் அளவுக்கு அதிகமான கூட்டம் செல்லச் செல்ல ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சுவிடக் கஷ்டமாக இருந்தது.
நாங்கள் கீழ்த் தளத்தில் இருந்த சமயம் ஒரு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
சிங்களத்தில் ஏதோ கத்திக்கொண்டே எல்லோரும் தாறுமாறாக மேலே ஏறத் தொடங்கினர்.
என்ன நடக்கிறது எனத் தெரியாமலும் ஏதும் நெரிசல் விபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்துடனும் நாங்களும் பின்தொடர்ந்தோம்.
ஏதோ ஒரு வகையில் மேலேறி வந்தவுடன் என்ன கத்திக்கொண்டு ஓடினார்கள் என்று தேவாவிடம் கேட்டேன்.
அரைகுறை சிங்களம் அறிந்த அவர் சிரித்துக் கொண்டே, 'ஒன்றுமில்லை. பிரபாகரனின் ஆவி வந்துவிட்டது... ஆவி வந்துவிட்டது எனக் கத்திக்கொண்டே ஒடினார்கள்’ என்று சொன்னார்.
சிங்களர்கள் ஆவிகளில் நம்பிக்கை உடையவர்கள். உயிருடன் இருந்தபோது மட்டுமல்ல, 'ஆவியான’ பிறகும் கூட சிங்கள மக்களை அச்சுறுத்தக்கூடியவராகப் பிரபாகரன் இருப்பதை நினைத்துக் கொண்டே வெளியே வந்தபோது பொழுது சாய்ந்திருந்தது.
ஒட்டுச்சுட்டான், நெடுங்கேணி வழியாகப் புளியங்குளத்தை நாங்கள் அடைந்தபோது இருள் கவ்வத் தொடங்கியது.
பயணக் களைப்பைக் காட்டிலும் இந்த அனுபவங்கள் ஏற்படுத்திய மனக்களைப்புதான் எங்களை அதிகம் சோர்வுறச் செய்திருந்தது.
யோ.கர்ணனுக்கு விடை சொல்லிவிட்டு வவுனியா, ஓமந்தை. மடு, மன்னார் வழியாக நாங்கள் தலைமன்னார் அடைந்தபோது இரவு மணி 10.
அடுத்த எட்டு நாட்களும் எனக்கு யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு முதலான இடங்களில் இலக்கியக் கூட்டங்கள், அரசியல் உரையாடல்கள், சமூகப் பிரச்சினைகளில் அக்கறையுள்ள நண்பர்களுடன் சந்திப்பு என்பதாகக் கழிந்தது.
இந்தச் சந்திப்புகளில் பல தரப்பட்டவர்களும் இருந்தனர். யாழ் வாழ் தமிழர்கள், கிழக்கு மாகாணத்தவர், மலையகத்தார், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், மன்னார் பகுதி கிறிஸ்துவ மீனவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கூத்துக்கலைஞர்கள், மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் எனப் பல தரப்பினரும் இருந்தனர்.
இந்த உரையாடல்கள் போருக்குப் பிந்திய சூழலில் உருவாகியுள்ள பல்வேறு வகைப்பட்ட சிக்கல்களையும், இவற்றின் ஊடாக அங்கு எழுந்துள்ளள எதிர்பார்ப்புகளையும் விளங்கிக்கொள்வதற்கு எனக்குப் பெரிதும் உதவியது.
இந்தச் சிக்கல்களின் முழுப் பரிமாணங்களையும் இங்குள்ள நாம் எந்த அளவுக்கு உணர்ந்துள்ளோம் என்ற கேள்வியையும் எழுப்பியது.
போருக்குப் பிந்திய இராணுவமயப்படுத்தல், நிலப் பறிப்பு, தொடரும் மனித உரிமை மீறல்கள், அரசியல் தீர்வு என்ற அம்சத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாதது, போரில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலவாழ்வு ஆகியவை குறித்து ஆங்காங்கே சொல்லி இருக்கிறேன்.
இதன் மத்தியில், கொஞ்சம் ஆறுதல் அளிக்கக்கூடியதாக எனக்குத் தோன்றியது நிலப் பறிப்பு, மதச் சின்னங்கள் தாக்கப்படுதல், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்குச் சிறிய அளவிலேனும் ஆங்காங்கே எதிர்ப்புகள் எழுவதுதான். திருமுறிகண்டியில் ஏற்பட்ட அப்படியான ஓர் எதிர்ப்பு குறித்து ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தேன்.
இதுதவிர சம்பூர், மாதகல், இரத்தினபுரம், பொன்னகர், பரவிப்பஞ்சான், சாந்தபுரம் முதலான பகுதிகளிலும் இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
மன்னாரில் இராணுவம் இப்படியான ஒரு நில ஆக்கிரமிப்புக்கு முயற்சித்தபோது பெண்கள் இயக்கம் ஒன்று பெரியஅளவில் கையெழுத்து இயக்கம் நடத்தி இந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.
சம்பூர், வலிகாமம் வடக்கு, திருமுறிகண்டி பகுதி மக்கள் நிலப்பறிப்புக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்துள்ளனர். புத்த பிக்குகள் முன்னின்று நடத்திய தம்புள்ள பள்ளிவாசல் இடிப்புக்கு எதிராக இலங்கை முழுவதிலும் முஸ்லிம்கள் கிளர்ந்து எழுந்தனர்.
வடக்குக் கிழக்கில் மட்டும் காணிகள் பதியப்பட வேண்டும் என்ற அரசு ஆணைக்கு எதிராக வவுனியா நகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக உண்ணாவிரதம் ஒன்றும் நடத்தப்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணி, பிளாட் போன்ற அமைப்புகளும் இதில் பங்குபெற்றன. சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக அதே இடத்தில் மே 24 அன்று ஒரு உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.
அதே நேரத்தில் பெருகிவரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ராஜபக்ச அரசுக்கு எதிராக சிங்கள மக்களும் எதிர்ப்புக் காட்டத் தொடங்கி உள்ளனர்.
கொழும்பு ரயில் நிலையம், லிப்டன் சதுக்கம் முதலான இடங்களில் ஏதேனும் ஒரு ஆர்ப்பாட்டம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
சிறிய அளவிலேனும் இத்தகைய எதிர்ப்புகள் உருவாவது வரவேற்கத்தக்கதாக இருக்கும். அதே நேரத்தில், கவலை அளிக்கத்தக்க சில அம்சங்களும் உள்ளன.
சிங்களப் பெருந்தேசிய இன வெறிக்கு எதிராக சிறுபான்மைச் சமூகமாக உள்ள தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் மத, பிரதேச அடிப்படைகளில் மேலெழுகிற சில வேறுபாடுகள்தான் அவை.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக முஸ்லிம் மற்றும் மன்னார் கிறிஸ்துவ மக்களிடையே ஏற்பட்டுள்ள சமீபத்திய பிளவு அவற்றில் ஒன்று.
ka.
No comments:
Post a Comment