Monday, August 6, 2012

எம்-4 ரக துப்பாக்கிகள் (M-4 assault rifles)


அமெரிக்க தயாரிப்பான எம்-4 ரக துப்பாக்கிகள் (M-4 assault rifles) வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை, அமெரிக்க செனட்டின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அதையடுத்து, பல கோடி ரூபா பெறுமதியான எம்-4 ரக துப்பாக்கிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.
பாகிஸ்தானில் மறைந்திருந்த அல்-காய்தா தலைவர் பின் லேடன் வேட்டைக்கு, அமெரிக்க நேவி சீல் அதிரடிப் படையினர் கொண்டு சென்ற துப்பாக்கிகள் அனைத்துமே, எம்-4 ரக துப்பாக்கிகள்தான். பின் லேடன் கொல்லப்பட்டது, எம்-4 ரக துப்பாக்கிகளில் இருந்து கிளம்பிய தோட்டாக்களால்தான்!
எம்-4 ரக துப்பாக்கி
இந்திய ராணுவத்தில் உள்ள 7 சிறப்பு படை பிரிவுகளின் உபயோகத்துக்காகவே எம்-4 ரக துப்பாக்கிகள் வாங்கப்படுவதாக புதுடில்லியில் உள்ள ராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
இதுவரை காலமும் அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை உபயோகத்துக்காகவே இவ்வகை துப்பாக்கிகளை அமெரிக்கா பிரத்தியேகமாக தயாரித்து வந்தது. அமெரிக்க ராணுவம், ஈராக் மற்றும், ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட அனைத்து கமாண்டோ ஸ்டைல் ஆபரேஷன்களிலும், பிரதான தாக்குதல் ஆயுதமாக (main attack weapon) பயன்படுத்தப்பட்டதும், இதே துப்பாக்கி ரகம்தான்.
இந்திய ராணுவத்தின் சிறப்பு படைப் பிரிவுகளில், 1, 2, 3, 4, 9, 10 ஆகிய படைப்பிரிவுகளும், 21-ம் பரா யூனிட் படைப்பிரிவும் மட்டுமே, எம்-4 ரக துப்பாக்கிகளை உபயோகிக்க போகின்றன. மும்பையில் நடைபெற்ற 26/11 பாணியிலான தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு, இந்திய ராணுவத்தின் இந்த 7 படைப் பிரிவுகளுக்கும்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment