அரசாங்கத்தின் கிடுக்கிப் பிடியைச் சமாளிக்க முடியாமல் 'கிரானைட் கிங்’ பி.ஆர்.பி. பதறிப்போய் சரண் அடைந்து விட்டார். 'இந்தியன் வங்கியில் எங்களுக்கு 250 கோடி கடன் இருக்கிறது’ என்று அவர் போலீஸிடம் பாடிய பஞ்சப்பாட்டுத்தான் காமெடியின் உச்சம்!
கிரானைட்டுக்குள் ஹெராயின்?!
13 வழக்குகளைப் பதிவு செய்து பி.ஆர்.பழனிசாமிக்கு வலை விரித்திருந்தார் மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன். ஜாமீன் வாங்கிவிட வேண்டும் என்று வக்கீல் படையுடன் காத் திருந்தது பி.ஆர்.பி. தரப்பு. ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்த 17-ம் தேதி கோர்ட் வளாகத்துக்குள் விஜிலென்ஸ் அதிகாரிகளும் ஊடுருவினர். அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனால் குறித்த நேரத்தில் ஆஜராக முடியவில்லை என்பதால், விசாரணையை 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி மதிவாணன். சோர்ந்து போன பி.ஆர்.பி. தரப்பு, 'போகிற போக்கைப் பார்த்தால் முன்ஜாமீன் கிடைக்காது போலிருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் வேறொரு வழக்கைப் போட்டு விரட்டுவார்கள்’ என்று முணுமுணுத்தது. இதனிடையே, பி.ஆர்.பி. தரப்புக்குத் தூது அனுப்பிய சிலர், 'வெளியில் இருந்தா பிரச்னைதான். சரண்டர் ஆகச் சொல் லுங்கள். மத்ததை நாங்க பாத்துக்கிறோம்’ என்று தைரியம் கொடுத்தார்களாம். இதில் அமைச்சர் ஒருவரும் உண்டு என்கிறார்கள்.
'பி.ஆர்.பி. சரண்டர் ஆகலைன்னா வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் சங்கடம் வரும்’ என்று போலீஸ் தரப்பிலும் செக் வைக் கப்பட்டது. இந்தநிலையில், 17-ம் தேதி இரவு இன்ஃபார்மர் ஒருவர் எஸ்.பி-யைச் சந்தித்து, 'இங்குள்ள கிரானைட் கம்பெனிகளில் இருந்து இரண்டு நாடுகளுக்கு ஹெராயின் கடத்து கிறார்கள். கிரானைட் கற்களில் ஒரு அடி ஆழத்துக்குத் துளையிட்டு பி.வி.சி. பைப்களை இறக்கி, அதற்குள் ஹெராயினை நிரப்பி கல்லின் வெளிப்பகுதியை மெழுகு வைத்து அடைத்து விடுகிறார்கள்’ என்று தன் போக்கில் திகில் கிளப்பியதாக ஒரு தகவல் காவல் வட்டாரத்திலிருந்தே பரவியது.
இந்தத் தகவல் எப்படியோ கிரானைட் வட்டாரத்துக்கும் கசிந்திருக்கிறது, 'கஞ்சா மற்றும் ஹெராயின் வழக்குகள் பாய்ந்தால் வெளியே வருவது கஷ்டம்’ என்று மிரண்டு போனார்களாம் கிரானைட் புள்ளிகள். அதனால்தான் மேலும் தாமதிக்காமல் சரண்டர் ஆனாராம் பி.ஆர்.பி!
நள்ளிரவைக் கடந்தும் விசாரணை
சரண்டர் ஆனாலும் போலீஸ் தரப்பில் ரூட்டை மாற்றி அவரை இல்லீகல் கஸ்டடியில் வைத்து நொங்கெடுத்து விடுவார்கள் என்று சந் தேகித்த பி.ஆர்.பி-யின் வக்கீல்கள், சரண்டர் ஆகும் இடத்தையும் நேரத்தையும் மீடியாக்களுக்குச் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினர். 18-ம் தேதி மதியம் 12.45 மணிக்கு வக்கீல்கள் புடை சூழ மதுரை எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்த பி.ஆர்.பி., ரொம்பவே வதங்கிப் போயிருந்தார்.
கூடுதல் எஸ்.பி-யான மயில்வாகனன் முன் ஆஜரான அவரை, விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்காக டெம்போவில் ஏற்றியது போலீஸ். அப்போது, 'என் மீது சொல்லப்படும் குற்றச் சாட்டுகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டு தொழில் செய்கிறோம். அதிகாரிகள் சிலர் தங்களது சுய விளம்பரத்துக்காக எங்கள் மீது அபாண்டமாய் பழி போடுகிறார்கள்’ என்று பி.ஆர்.பி. சார்பாக அவரது வக்கீகள் மீடியாக்களிடம் பேசினர். மீடி யாக்கள் பி.ஆர்.பி-யிடம் மைக்கை நீட்ட, 'அடப் போங்கய்யா...’ என்பது போல் வலதுகையை மட்டும் அசைத்துவிட்டு இறுக்கமான முகத்துடன் வேனில் ஏறினார்.
அழகர்கோயில் ரோட்டில் ஒதுக்குப்புறமாய் உள்ள அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் வைத்தே விசாரணையைத் தொடங்கியது போலீஸ். ஆரம்பத்தில், 'எனக்கு எதுவும் தெரியாது. அப்படி எல்லாம் இல்லை’ என்று மொட்டையாகப் பேசினாராம். முதல்கட்ட விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 8.30 மணிக்கு எஸ்.பி. அங்கிருந்து கிளம்பிவிட, மேல் விசாரணையை, தனிப்படை டி.எஸ்.பி-யான தங்கவேல் தலை மையிலான டீம் தொடர்ந்தது. இரவு 1.30 மணி வரை விசாரணை நடந்ததாகச் சொல்கிறார்கள். அதன்பிறகு, வீட்டிலிருந்து அவருக்காக பிரத் யேகமாகக் கொண்டு வரப்பட்ட படுக்கை விரிப்பு மற்றும் தலையணைகளைக் கொடுத்து, தூங்க அனுமதித்தது போலீஸ்.
''தேடினீங்களா... இல்லையா?''
சரண்டர் ஆகி 24 மணி நேர கெடு முடிவதற்குள் காலை 10 மணிக்கு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, மதியம் 1 மணிக்குப் பிறகும் பி.ஆர்.பி-யிடம் விசாரணை நீடித்தது. எதற்காக போலீஸ் இன்னும் தாமதப்படுத்துகிறது என்று புரியாமல் குழம்பிப்போன அவரது சொந்தபந்தங்களும் நண்பர்களும் போலீஸ் ஸ்டேஷனில் குவிந்தனர். இவர்கள் வந்த சொகுசுக் கார்கள் மட்டுமே 50-க்கும் மேல்.
ஒரு வழியாக விசாரணையை முடித்துக் கொண்டு மாலை 6.45 மணிக்கு, மாஜிஸ்திரேட் கண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்றது போலீஸ். முப்பதுக்கும் மேற்பட்ட கார்களில் விசுவாசிகள் பின்தொடர்ந்தனர். இரவு 7.45 மணிக்கு பி.ஆர்.பி. வழக்கைக் கையில் எடுத்த மாஜிஸ்திரேட், 'கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக மீடியாக்களில் செய்தி வந்துகொண்டே இருக்கிறதே. இவரை இத்தனை நாளும் கைது செய்யாமல் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? தேடினீர்களா... இல்லை, அவரே வருவார்ன்னு காத்திருந்தீங்களா? நேற்று மதியம் 1 மணிக்கு சரண்டர் ஆனவரை 24 மணி நேரம் கடந்து கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறீர்கள். இந்த இல்லீகல் கஸ்டடிக்கு நான் எப்படி உங்களுக்குத் துணை போவது?’ என்று போலீஸை நெட்டி எடுத்தார்.
'மதியம் ஆஜரானவரை விசாரணை நடத்தி இரவு 9 மணிக்குத்தான் கைது செய்தோம். அதனால், இல்லீகல் கஸ்டடி இல்லை’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதை ஏற்காத மாஜிஸ்திரேட், விசாரணையை ஒரு மணி நேரம் ஒத்திவைத்தார். அதன்பிறகு, மீண்டும் விசாரணை தொடங்கியபோது, 'இல்லீகல் கஸ்டடி குறித்து தனியாக மனு போடுங்கள்’ என்று பி.ஆர்.பி. தரப்பிடம் சொல்லிவிட்டு, பி.ஆர்.பி-யை 12 நாட்கள் ரிமாண்டில் வைக்க உத்தரவிட்டார். பி.ஆர்.பி-க்கு மருத்துவச் சிகிச்சை கேட்ட மனுவுக்கு, 'சிறையில் இவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு வசதி இல்லாத பட்சத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கலாம்’ என்று உத்தரவிட்டார். அப்போது இரவு மணி 10.30. அவரை மதுரை மத்தியச் சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் மாஜிஸ்திரேட் உத்தரவு. ஆனால், 'லோக்கல் வி.ஐ.பி-க்களை இங்கே வைப்பதில்லை’ என்ற காரணத்தைச் சொல்லி, அதிகாலை 4.30 மணிக்கு பி.ஆர்.பி-யை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது போலீஸ்!
மெகா பட்டியல்!
பி.ஆர்.பி-யிடம் நடத்தப்பட்ட 24 மணி நேர விசாரணை குறித்து நம்மிடம் பேசிய விசாரணை டீம் அதிகாரி ஒருவர், ''சில விஷயங்களுக்குப் பாதி உண்மையைச் சொன்னார். பல விஷயங்களுக்கு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைச்சார். 'இத்தனை நாளும் எங்கே இருந்தீங்க’ன்னு கேட்டதுக்கு, 'சென்னையில சோழா ஹோட்டலுக்குப் பின்னால சொந்தக்காரங்க வீடு இருக்கு. அங்கதான் தங்கி இருந்தேன்’னு சொன்னவரிடம், 'வழக்கில் சம்பந்தப்பட்ட உங்க குடும்பத்து ஆட்கள் எங்கே?னு கேட்டோம். 'வழக்குகள் பதிவானதுமே நாங்க எல்லாரும் ஆளுக்கு ஒரு திசையில போயிட்டோம். அதுக்கப்புறம் எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை’னு நழுவினார்.
கைதாகி இருக்கிற கனிமவளத் துறை முன்னாள் உதவி இயக்குனர் சண்முகவேலுவுடன் உள்ள உறவு குறித்து விசாரித்தோம். 'அவர் யாருன்னே எனக்குத் தெரியாது. அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே’ன்னார். எந்த சம் பந்தமும் இல்லேன்னா அவரு எப்படி உங்க கம்பெனியோட கார்ப்பரேட் செல்போனைப் பயன்படுத்தினார் என்று கொக்கி மாட்டி கேட்ட பிறகு உண்மையைச் சொன்னார்.
'சண்முகவேலுதான் குவாரிக்குத் தோதான இடங்களை அடையாளம் காட்டுவார். கிரானைட் சம்பந்தமான டெக்னிக்கல் விவகாரங்களையும் குடுப்பார்’னு சொன்னார். 'சுமார் 300 கோடி ரூபாய் வரை பேங்க்ல பணம் இருக்கு. மத்தபடி எல்லாமே சொத்துக்களாத்தான் கிடக்கு’னு சொன்னவர், தோகைமலையில 100 ஏக்கர், சிவகாசியில 100 ஏக்கர், புதுக்கோட்டையில 100 ஏக்கர், எடப்பாடியில 50 ஏக்கர், கீழவளவு கீழையூர் பகுதிகள்ல 100 ஏக்கர்னு சுமார் 1,000 ஏக்கர் குவாரி நிலங்கள் பற்றிச் சொன்னார்.
தேனி மாவட்டம், வருஷநாட்டில் 100 ஏக்கரிலும் வெள்ளையத்தேவன்பட்டியில் 250 ஏக்கரிலும் ராயப்பன்பட்டியில் 100 ஏக்கரிலும் தென்னந்தோப்பு இருக்கிறதாம். தெற்குத் தெருவில் இருக்கும் பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனி 400 ஏக்கரில் இருக்கிறது, ஆனால் அதை '250 ஏக்கர்’னு சொல்கிறார். 24 நாடுகளுக்கு கிரானைட் ஏற்றுமதி செய்ததாகச் சொன்னவர்... தூத்துக்குடி, சென்னைத் துறைமுகம் வழியாக மட்டுமே ஏற்றுமதி நடப்பதாகச் சொன்னார். ஆனா, மங்களூர் வழியாகவும் நடந்திருக்கிறது. 'ஸ்டேட் பேங்க்ல 250 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி இருந்தோம். அதுல பிரச்னை வந்ததால அதை க்ளோஸ் பண்ணிட்டோம். இப்போ இந்தியன் பேங்க்ல 250 கோடி கடன் இருக்கு’னு சொல்கிறார்.
கண்மாய் ஆக்கிரமிப்பு பற்றிக் கேட்டதுக்கு, எதுவுமே தெரியாது என்கிறார். 'ஒரு கண்மாயை பாதியளவுக்கு மூடி அதுல மரமெல்லாம் வச்சிருக்கீங்க... தெரியாதுன்னா எப்படி?’னு கேட்டதுக்கு சைலன்டா இருந்துட்டார். குவாரிகளில் நடந்த மரணங்கள் குறித்து கேட்டதுக்கு, 'விபத்துகள் நடந்திருக்கு. அது எப்படி நடந்துச்சுன்னு தெரியாது’னு சொன்னவர், 'என்கிட்ட வேலை செய்யுற அனுமந்தன், ஐயப்பன், புகழேந்தி, முருகேசன் இவங்களுக்குத்தான் எல்லா விஷயமும் தெரியும்’னு சொன்னார். கூடவே, தன்னிடம் ஆதாயம் பெற்ற அரசு அதிகாரிகள்னு ஒரு பெரிய பட்டியலையே குடுத்திருக்கார்'' என்று விளக் கமாகச் சொன்னார்.
அழகிரிக்கு பக்கத்தில் இருந்த புள்ளி!
''துரை தயாநிதி உள்ளிட்ட அரசியல்வாதிகளை பற்றி பி.ஆர்.பி-யிடம் விசாரித்தீர்களா?'' என்று அந்த அதிகாரியிடம் கேட்டோம். ''நேரடியாக துரை தயாநிதியை சம்பந்தப்படுத்திக் கேட்கவில்லை. ஆனால், 'அரசியல்வாதிகள் யாருக்கெல்லாம் பணம் குடுத்தீங்க? அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட சில குவாரிகளில் எடுக்கப்பட்ட கற்கள் உங்க கம்பெனி மூலமா மார்க்கெட்டிங் செய்யப்பட்டதா சொல்றாங்களே’னு கேட்டோம். அதை எல்லாம் திட்டவட்டமா மறுத்துட்டார். 'அழகிரிக்குப் பக்கத்தில் இருந்து அதிகாரம் செய்த ஒருத்தர், உங்க மூலமா ஏராளமான பலன் அடைஞ்சதா இன்னொரு வழக்குல கொடுத்த வாக்குமூலம் எங்ககிட்ட பத்திரமா இருக்கு’ன்னு சொன்னதும் கப்சிப் ஆகிட்டார். திருட்டு வழக்கில் கைது செய்யப்படும் நபர்களுக்கு கைரேகை எடுக்கப்படுவது வழக்கம். பி.ஆர்.பி. மீது திருட்டு வழக்குக்கான செக்ஷன் 379 உட்பட பல பிரிவுகளில் வழக்கு போட்டு இருப்பதால் அவருக்கும் கைரேகை எடுத்தோம். முதலில் மறுத்தவர், வக்கீலிடம் பேசிவிட்டு கைரேகையைப் பதிவு செய்தார்'' என்றார் அந்த அதிகாரி.
'இது இல்லீகல்!’
பி.ஆர்.பி. தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான பீட்டர் ரமேஷ்குமார், ''பி.ஆர்.பி-யை இல்லீகல் கஸ்டடியில் வைத்திருந்ததை ஆதாரபூர்வமாக நிரூபித்து விட்டோம். இதைவைத்தே பி.ஆர்.பி-க்கு பெயில் வாங்கி விடுவோம். போலீஸ் கஸ்டடி கேட்டால், தொடக்கத்திலேயே சட்டத்தை மதிக்காதவர்கள் விசாரணையின் போதும் இல்லீகலாகத்தான் செயல் படுவார்கள்னு எடுத்துச் சொல்லுவோம். ஒருவேளை, கஸ்டடி கிடைத்தாலும், இதுபோன்ற வழக்குகளில் விசாரணை விவரங்கள் காதில் விழும் தூரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் இருக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் முந்தையத் தீர்ப்பை மேற்கோள்காட்டி, அதற்கான அனுமதி கேட்போம்'' என்று தங்கள் வியூகத்தை லேசாகச் சொன்னார்.
ஹெராயின் விசாரணை!
பி.ஆர்.பி. கைது விவகார சர்ச்சை குறித்து எஸ்.பி-யான பாலகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ''இனியும் தலைமறைவாக இருந்தால் நாங்கள் வேறு மாதிரியான நடவடிக்கைகளுக்குப் போகவேண்டி இருக்கும்னு வக்கீல்களிடம் தெளிவுபடுத்தியதால்தான் பி.ஆர்.பி. மறைவிடத்திலிருந்து வெளியில் வந்தார். போலீஸில் சரண் அடைவதற்கு சட்டத்தில் இடமில்லை. ஏற்கெனவே, பி.ஆர்.பி. மீது போடப்பட்ட வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி அவரது வீட்டில் சம்மனை ஒட்டினோம். அதற்காகத்தான் அவர் ஆஜரானார். தன் மீது சொல்லப்பட்ட புகார்களை அவர் மறுத்ததால், எங்களிடம் உள்ள ஆவணங்களைக் காட்டி அவர் செய்திருக்கும் குற்றங்களை ஒப்புக்கொள்ள வைத்தோம். அதன்பிறகு, இரவு 9 மணிக்கு எஃப்.ஐ.ஆர். போட்டு, கைது செய்தோம். அதற்குப்பிறகுதான் விசாரணை நடத்தி மறுநாள் இரவு மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி விட்டோம்'' என்று சொன்னார்.
கிரானைட்டில் மறைத்து ஹெராயின் கடத்தல் என்று கசிந்த ஒரு விவகாரம் பற்றிக் கேட்டதற்கு, ''பி.ஆர்.பி. சரண்டருக்கு முந்தைய நாள் இரவு நானும் கலெக்டரும் பேசிக் கொண்டிருந்தபோது. இந்தத் தகவலை ஒருவர் வந்து சொன்னார். அதுகுறித்து விசாரிக்க முடிவெடுத்திருந்த நிலையில் பி.ஆர்.பி. சரண்டர் ஆகி விட்டார். ஹெராயின் கடத்தல், கன்டெய்னரில் சுற்றும் பணம், குவாரி மரணங்கள்... இப்படியெல்லாம் பரவி உள்ள செய்திகள் குறித்து விசாரணை நடக்கிறது. பி.ஆர்.பி-யிடம் முதல்கட்ட விசாரணையிலேயே பல உண்மைகள் வெளி வந்திருக்கிறது அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் பல அதிர வைக்கும் விஷயங்கள் வெளியில் வரலாம்'' என்றார்.
இந்தப் பரபரப்புகளுக்கு மத்தியிலும், மேலூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட கிரானைட் குவியல்களை தினம் தினம் புதிதாகக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள் அதிகாரிகள்!
No comments:
Post a Comment