கிணறு வெட்டப் பூதம் கிளம்பும் என்பார்கள். அந்தக் கதையாக, மேலூர் பகுதியில் கிரானைட் ஊழலைக் கிளறப்போய், திக் கெட்டும் திகில் பூதங்கள் வெவ்வேறு வகையில் கிளம்புகின்றன.
ஐந்து கண்மாய்கள் அபேஸ்!
பி.ஆர்.பி-யின் கிரானைட்ஸ் கம்பெனியின் நிர்வாக அலுவலகம் இருக்கும் தெற்குத் தெருவுக்குள் கடந்த 9-ம் தேதி காலையில் சோதனைக்குப் போன அதிகாரிகள் இன்னமும் வரவில்லை. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் அந்தக் கம்பெனிக்குள் காரில் போய்வரவே, கலெக்டருக்கு முக்கால் மணி நேரம் ஆனதாம். இந்தக் கம்பெனிக்குள் சுமார் 20 ஏக்கர் அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதில் 1.31 ஏக்கர் கொண்ட வாய்க்கால்கள், ஐந்து கண்மாய்கள், இரண்டு கால்வாய்கள் அடக்கம். ஐந்தில் இரண்டு கண்மாய்களில், கிரானைட் கற்களைப் போட்டு புதைத்தும் கட்டடங்களை எழுப்பியும் ஆக்கிரமித்து உள்ளார்கள். எஞ்சிய மூன்று கண்மாய்களில் கிரானைட் பாலீஷிங் யூனிட்டுகளில் இருந்து வெளியேறிய கழிவுத் தண்ணீரை நிரப்பி மாசுபடுத்தி இருக்கிறார்கள். எங்கிருந்தோ வெட்டிக் கொண்டு வரப்பட்ட கிரானைட் கற்களை எல்லாம் இங்கே வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதிகாரிகளால் முதல்நாள் 840 கற்களை மட்டுமே எண்ண முடிந்ததாம். 'மண்ணுக்கு உள்ளேயும் வெளியேயும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கற்களை முழுமையாகக் கணக்கெடுக்க மாதக்கணக்கில் ஆகும்’ என்று மலைக்கிறார்கள் உள்ளே சென்று வந்த அதிகாரிகள்.
சிக்குகிறார் அ.தி.மு.க. மாஜி!
கீழையூர் ஏரியாவில் சி.சி.கண்மாய் பகுதியில் அத்துமீறிக் கற்களை வெட்டி எடுத்திருப்பதாக ஏற்கெனவே பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது வழக்குப் போட்டு இருக்கிறது போலீஸ். 'இந்தக் குவாரிக்கு கோட்டை வீரன் பெயரில்தான் லைசென்ஸ் இருக்கிறது. எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை’ என்று சொல்லித்தான் முன்ஜாமீன் கேட்டு இருக்கிறது பி.ஆர்.பி. குடும்பம். இப்போது, கீழையூர் ஏரியாவில் அனுமதி இன்றி இயங்கிய இன்னொரு குவாரியையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். சர்வே எண் 99-ல் சுமார் 4 ஏக்கர் 35 சென்ட் உள்ள சர்க்கார் களம் புறம்போக்கில் இருக்கிறது அந்தக் குவாரி. 1995-ல் அ.மா.பரமசிவம் தொழில் துறை அமைச்சராக இருந்த போது, அவரது மைத்துனர் மச்சம் என்ற கோட்டை வீரனுக்கு விதிமுறைகளை மீறி இந்தக் குவாரிக்கு லைசென்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு கட்டத்தில், கோட்டை வீரனிடம் இருந்து அந்தக் குவாரி சேலம் யூசுப் பாட்சா என்பவர் கைக்குப் போய், பிறகு, மன்னார்குடி மக்களின் பிரஷரால் பி.ஆர்.பி. வகையறாக்களுக்கு மாறியதாம். 2005-லேயே இந்தக் குவாரிக்கான லைசென்ஸ் முடிந்து விட்டது. ஆனாலும், சமீபகாலம் வரை அங்கே கற்களை வெட்டி எடுத்திருக்கிறார்கள். நடவடிக்கை பாயப்போகிறது என்றதுமே சுமார் மூன்று ஏக்கரில் இருந்த பள்ளத்தை மட்டும் மூடி இருக்கிறார்கள். இதுசம்பந்தமான ரிப்போர்ட் இப்போது கலெக்டர் கையில். இந்தக் குவாரியில் கடந்த தி.மு.க. ஆட்சியில் மீசை மந்திரி ஒருவரும் புகுந்து விளையாடி இருக்கிறாராம். ஆட்சி மாறும் நேரத்தில் ஜாக்கிரதையாக அவர் பிசினஸை விட்டு வெளியேறியதாகச் சொல்கிறார்கள்.
குவாரிகளுக்கு உதவிய தி.மு.க. புள்ளி!
கீழையூரில் செட்டிக்காடு என்ற பகுதியில் சுமார் 15 ஏக்கரில் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 ஆயிரம் கிரானைட் கற்களை கடந்த 9-ம் தேதி வருவாய்த் துறையினர் கண்டுபிடித்தனர். ''சர்க்கரை பீர் மலையில் இருந்து வெட்டிக் கடத்தி வரப்பட்ட இந்தக் கற்களும் பி.ஆர்.பி. சம்பந்தப்பட்டவைதான்'' என்கிறார்கள் அதிகாரிகள். இந்தக் கற்களை அளந்து நம்பர் போடும் வேலையை ஏழு வி.ஏ.ஓ-க்கள் 30 தலையாரிகள் கொண்ட குழு மூன்று நாட்களில் செய்து முடித்திருக்கிறது. கிரானைட் சுரங்கங்களை அதிகாரிகள் குழு அளந்துவரும் அதே நேரம், கிரானைட் சுரங்கங்களின் உண்மையான முதலாளிகள் யார் யார் என்ற விவரங்களையும் தோண்டுகிறார்கள். அப்படி விசாரித்ததில் தி.மு.க-காரர்கள் பலபேர் மூன்றெழுத்துக் குவாரி நிறுவனத்துக்கு பினாமிகளாக இருப் பதைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். 'தி.மு.க. ஆட்சியில் மதுரை வி.ஐ.பி-க்குப் பக்கத்தில் இருந்து பந்தா காட்டிய ஆர்ப்பாட்ட பிரமுகர், கிரானைட் முதலாளிகளுக்கு சாதகமாக சில காரியங்கள் செய்யச் சொல்லி 'பட்டு... பட்டு’ன்னு சொல்வார். அவருடைய உத்தரவைத் தட்ட முடியாமல்தான் குவாரி விஷயங்களில் நாங்களும் விதிமீறல்களுக்கு உடந்தையாகி விட்டோம்’ என்று வருவாய்த் துறை அதிகாரிகள் சிலர் கலெக்டரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து சரண்டர் ஆகி இருக்கிறார்களாம். பி.ஆர்.பி-யின் பினாமிகள் மட்டுமே 15 பெரும்புள்ளிகள் சிக்கி இருப்பதாகத் தெரிகிறது. இவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. 12 மற்றும் 13-ம் தேதிகளில், பினாமிகள் சம்பந்தப்பட்ட சிலரையும் கிரானைட் புள்ளிகளுக்கு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்த ஓய்வுபெற்ற கனிமவளம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சிலரையும் போலீஸார் தங்களது கஸ்டடிக்குக் கொண்டு போய் விசா ரணையைத் தொடங்கி விட்டனர்!
கிரானைட் கம்பெனிகளில் ரிட்டையர்டு அதிகாரிகள்!
மதுரை மாவட்டத்தில் கனிமவளத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பலர் இப்போது பி.ஆர்.பி-யின் குவாரி நிறுவனங்களில் பணியில் இருக்கிறார்களாம். அரசு அதிகாரிகள் சிலருக்கு மாதச்சம்பளம் வழங்குபவர்கள், 'மிஞ்சிப் போனா உங்களுக்கு வேலைதானே போகும். பயப்படாதீங்க, வேலை போச்சுன்னா, அதைவிட டபுள் சம்பளம் குடுக்குறோம்’ என்று சொல்லியே அதிகாரிகளின் கண்களைக் கட்டி இருக்கிறார்கள். இப்படிக் கண்ணை மூடிக்கொண்டு இருந்த அதிகாரிகள், கிரா னைட் குவாரிகளில் பணியில் இருக்கும் முன்னாள் அரசு ஊழியர்கள், கிரானைட் கம்பெனிகளுக்கு அடித்துப் பறித்து நிலங்களை வாங்கிக் கொடுத்த ரியல் எஸ் டேட் புரோக்கர்கள் உள்ளிட்டவர்களின் ஜாதகங்களும் திரட்டப்படுகின்றன.
பணத்தைக் கடத்துறாங்க!
கடந்த 11-ம் தேதி இரவு கொடுக்கம்பட்டி கிராமத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கர் வீரையா என்பவரது வீட்டு வாசலில் ஒரு காரும் ஆம்னி வேனும் நிற்பதைப் பார்த்த கிராமத்தினர், 'பண மூட்டைகளை காரில் கடத்துகிறார்கள்’ என்று எஸ்.பி-க்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். அந்த வாகனங்களை போலீஸார் சோதனை போட்டதில், வி.ஏ.ஓ-க்களிடம் இருக்க வேண்டிய 'ஏ’ ரிஜிஸ்டர் நகல்கள், 'எஃப்.எம்.பி. ஸ்கெட்ச்’கள், சுமார் 50-க்கும் மேற்பட்ட பட்டா புத்தகங்கள், இவற்றோடு குவாரிகள் சம்பந்தப்பட்ட நிலங்கள் தொடர்பான ஒரிஜினல் பத்திரங்களும் இருந்தனவாம். வீரையாவைக் கைது செய்திருக்கிறது போலீஸ்.
ஒரே எண்ணில் இரண்டு லாரிகள்!
கிரானைட் சுரங்கங்களில் நடக்கும் அளவீட்டுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக 12-ம் தேதி காலை 10 மணிக்கு கீழவளவு ஏரியாவுக்கு வந்தார் கலெக்டர். முதலில் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் குவாரியைப் பார்வையிட்டவர், 'துல்லியமா அளந்துருங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். சி.சி. கண்மாய் பகுதியில் பதுக்கப்பட்ட 10 ஆயிரம் கற்களைப் பார்த்து மூக்கில் விரலை வைத்தார். கீழவளவில் உள்ள மதுரா கிரானைட்ஸ் நிறுவனத்தில் அவருக்கு இன் னொரு அதிர்ச்சி. அந்தக் குவாரிக்குள் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களில் இரண்டு லாரிகள் ஒரே பதிவு எண்ணில் இருந்ததைப் பார்த்துவிட்ட துணை ஆட்சியர் குணசேகரன், விஷயத்தை கலெக்டரிடம் சொல்ல, ''இது வேறயா..?'' என்று அதிர்ந்தார்.
தூத்துக்குடி மற்றும் சென்னை துறை முகங்களுக்கும் கிரானைட் கற்களை ஏற்றிச் செல்வதற்கு லாரிகளுக்கு பர்மிட் வழங்கப்படும். ஒரே பெர்மிட்டில் ஒரே எண் உள்ள பல லாரிகளில் கற்களை ஏற்றி அனுப்பி பெர்மிட்டிலும் முறைகேடு செய்து இருக்கிறார்கள். பாப்பாக்குடி கண் மாயில் கொட்டப்பட்டிருந்த கிரானைட் கழிவு மேட்டின் மீது ஏறிப்பார்த்த கலெக்டர், கண்மாயின் உள்பகுதியில் அடுக்கி வைத்திருந்த ஒரு லட்சம் கிரானைட் கற்களைப் பார்த்து மேலும் அதிர்ந்தார். 'இந்த மல்ட்டி கலர் கிரானைட் வகைக் கல் ஒரு கன மீட்டர் 700 டாலர் வரை போகும்’ என்று அதிர்ச்சி ரேட்டிங்கை மேலும் அதிகரித்தனர் அதிகாரிகள். கீழையூர் சமண மலையில் சமணர் படுகைகள், கல்வெட்டுகள் இருப்பதால் அந்த ஏரியாவைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறது தொல்லியல் துறை. அந்த இடத்துக்கு அருகிலேயே கற்களை வெட்டி எடுத்தவர்கள், அந்த ஏரியாவை 'ஸ்டாக் யார்டு’ ஆகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதேபோல், நெவுலி கண்மாய் பகுதியிலும் திருப்பத்தூர் ரோட்டில் மண்முத்தாறு படுகையில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களையும் பார்த்துவிட்டுக் கிளம்பினார் கலெக்டர். இந்த விசிட்டின்போது கலெக்டரைப் பின்தொடர்ந்தே வந்தார் ஒரு நபர். கலெக்டரின் உத்தரவுப்படி அவரைக் கைது செய்து ரிமாண்டுக்கு அனுப்பியது போலீஸ். கலெக்டரை உளவுபார்த்த செந்தில்முருகன், பி.ஆர்.பி. நிறுவன ஊழியர்!
கலெக்டர் விசிட்டுக்கு மறுநாளே போலீஸ் ஆக்ஷன் டீம் களத்தில் இறங்கியது. ஏ.டி.எஸ்.பி. தலைமையில் இரண்டு டி.எஸ்.பி-க்கள் 13 இன்ஸ்பெக்டர்கள் 16 எஸ்.ஐ-க்கள் கொண்ட போலீஸ் படை ரெய்டுக்குக் கிளம்பியது. மதுரையிலும் மதுரை புறநகரிலும் பி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் சம்பந்தப்பட்ட 22 இடங்களில் சோதனை நடத்தியது. மேலூரில் பி.ஆர்.பி. ஊழியர்கள் தங்கி இருந்த ஒரு கட்டடத்தில் இரண்டு அறைகளில் இருந்து ஆவணங்களை அள்ளிய போலீஸார், அங்கிருந்த கம்ப்யூட்டர்களில் ஹார்டு டிஸ்க்குகள் கழற்றப்பட்டுக் கிடந்ததைப் பார்த்துத் திகைத்தனர். யூனியன் அலுவலகம் அருகே பி.எஸ்.கிரானைட் அதிபர் பெரியசாமி என்ற துரைபாண்டியின் வீட்டில், ஒரு பிளாஸ்டிக் பையில் உரிமம் பெற்ற பிஸ்டல் ஒன்றும் இருந்தது. பி.ஆர்.பி. நிறுவனங்களுக்குச் சொந்தமான லாரிகள், கார்கள், என 31 வாகனங்கள் இந்த ரெய்டில் போலீஸ் கஸ்டடிக்கு வந்து விட்டன.
இந்த வட்டாரத்தில் நடந்துள்ள மரணங்கள் குறித்தும் போலீஸார் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர். விபத்தின் காரணமாக பலரும் இறந்ததாகச் சொல்வார்கள். ஆனால் அதை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளது போலீஸ். ''பெரும்பாலும் அமாவாசைக்கு முந்தைய மற்றும் பிந்தைய மூன்று நாட்களுக்குள்ளேயே நடக்கும் இந்த மரணங்கள். எல்லாமே போலீஸில் சந்தேக மரணங்களாகப் பதிவு செய்யப்பட்டு, அப்படியே மறைக்கப்பட்டு விடும்'' என்று அதிர வைக்கிறார்கள் குவாரியின் முன்னாள் தொழிலாளர்கள். டாக்டர்களையும் கிரானைட் கரன்ஸியில் குளிப்பாட்டி விடுவதால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் உண்மையைக் கொன்று புதைத்து விடு வார்களாம்!
அ.தி.மு.க. பத்திரிகையில் தலைமறைவுக் குற்றவாளிகள்!
இந்த கிரானைட் வழக்குகளில் மேலூர் நகர தி.மு.க. செயலாளர் இப்ராஹிம் சேட். ஒன்றிய ஜெ. பேரவைச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் தலை மறைவாக இருக்கிறார்கள். இந்தநிலையில், மேலூர் யூனியன் சேர்மனும் மேலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான செல்வராஜ் தனது மகள் சுகன்யாவுக்கு வரும் 22-ம் தேதி பூப்புனித நீராட்டு விழா வைத்திருக்கிறார். மேலூர் எம்.எல்.ஏ-வான சாமி தலைமையில் நடைபெறும் இந்த விழாவுக்கான வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் கிரானைட் வழக்கு எஃப்.ஐ.ஆர்-களில் இருக்கும்
பி.ஆர்.பழனிச்சாமி, மதுரா கிரானைட்ஸ் ராஜாபாய் உள்ளிட்ட ஐந்து நபர்களின் பெயர் களையும் துணிச்சலுடன் போட்டு பத்திரிகை கொடுத்து வருகிறார் செல்வராஜ்.
அட்வைஸர்களும் கைது!
கைது மற்றும் ரெய்டு நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் பேசிய எஸ்.பி-யான பாலகிருஷ்ணன், ''கிரானைட் குவாரிகள் குறித்து நிறைய புகார்கள் வருவதால் அவற்றை விசாரிக்க ஒரு டி.எஸ்.பி. தலைமையில் நான்கு இன்ஸ்பெக்டர்களைக் கொண்ட நான்கு தனிப்படை அமைத்திருக்கிறோம். குவாரிகளுக்குள் நடந்ததாகப் பதிவாகி இருக்கும் சந்தேக மரணங்கள் மற்றும் விபத்து மரணங்களை மீண்டும் தூசிதட்டி விசாரிக்கச் சொல்லி இருக்கிறோம். ஒலிம்பஸ் குவாரியை விட்டு விலகி விட்டதாக துரை தயாநிதியும் நாகராஜனும் சொல்லி இருந்தார்கள். அவர்களுக்குப் பதிலாக பாலசுப்பிரமணியன், தனபாலன் என்ற இருவர் பொறுப்பை ஏற்று இருக்கிறார்கள். இதில் தனபாலன் தலைமறைவாகி விட்டார். பாலசுப்பிர மணியனைக் கைது செய்திருக்கிறோம். இதுவரை 13 வழக்குகளில் 23 பேர் கைதாகி இருக்கிறார்கள். கிரானைட் புள்ளிகளுக்கு அட்வைஸராக இருந்த முன்னாள் கனிமவளத் துறை உதவி இயக்குநர் பழநிவேலுவும் விசாரணையில் இருக்கிறார். அனேகமாக அவரும் கைது செய்யப்படுவார். இன்று நாங்கள் நடத்திய சோதனைகளில் மூன்று லட்ச ரூபாய் ரொக்கமும் சி.டி-க்கள், ஹார்டு டிஸ்க்குகள், சொத்துப் பத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களும் சிக்கின'' என்றார். கிரானைட் குவாரிகள் மீதான பிடி அசுரத் தனமான இறுகுவதைப் பார்த்தால், ஊழல் சுரங்கம் உடைந்து விடும் என்றேதெரிகிறது!
நீங்களும் தகவல் தரலாம்...
கிரானைட் கொள்ளை தொடர்பாக மதுரையில் அதிகாரிகள் களத்தில் இறங்கி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 12 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ''சட்டத்துக்கு புறம்பாக கிரானைட் கற்கள் தோண்டப்பட்ட குவாரிகள் மற்றும் இடங்களைப் பற்றியும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தவர்கள் மற்றும் நில அபகரிப்பு செய்துள்ளவர்கள் பற்றியும் போலீஸுக்கு பொதுமக்களும் தகவல் தரலாம். அரசு ஊழியர்கள் இதுபோன்றவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, சொத்து வாங்கிக் குவித்திருந்தாலும் போலீஸுக்குத் தகவல் தரலாம். தகவல் தர விரும்புபவர்கள், 94897 09003 மற்றும் 0452 2525307 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment