பிரணாப் முகர்ஜிக்குப் போதாத காலம் அண்ணா ஹஜாரே வடிவத்தில் வந்துவிட்டது!
ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, மகாத்மா காந்தி சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற சில மணி நேரங்களில், அண்ணா ஹஜாரேவும் தனது குழுவினருடன் காந்தி சமாதிக்கு வந்தார். அங்கிருந்து நேராக ஜந்தர் மந்தர் சென்றவர், ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தைத் தொடங்கி விட்டார்!
குடியரசுத் தலைவர் பதவியை பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டதும், அவர் பேசிய பேச்சு நாடு முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப் பட்டது.
''கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்துவாராக்கள், யூதர் வழிபாட்டு தலங்கள் எல்லாம் நம்முடைய மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டு ஆகும். விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள், ஊழியர்கள், ராணுவ வீரர்கள் என எல்லோரும் சேர்ந்துதான் இந்த நாட்டை உருவாக்கி உள்ளனர். ரத்தத்தால் நம் சரித்திரம் எழுதப்பட்டு உள்ளது. அமைதியின் மூலம்தான் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காண முடியும். எல்லோருக்கும் சம உரிமை, ஆண், பெண் மற்றும் மத வேறுபாடுகள் இல்லாமை போன்றவற்றோடு பொருளாதாரத்திலும் வேறுபாடு இல்லாது இருந்தால்தான், நாடு உண்மையான வளர்ச்சியைக் காணும். மேற்கு வங்காளத்தில் இளம் பருவத்தில் பல பட்டினிச் சாவுகளை பார்த்துள்ளேன். நாட்டில் அங்கம் வகிப்பவர்களில் ஏழைகளும் முக்கியம் என்பதை உணர்ந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டவர், ''நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பது ஊழல். அதை அகராதியில் இருந்து அறவே நீக்கவேண்டும்'' என்றும் முழங்கினார்.
இப்படி ஊழலுக்கு எதிராக ஜனாதிபதி கருத்து சொன்ன அடுத்த சில நிமிடங்களில், அண்ணா ஹஜாரே குழுவினர் ஜந்தர் மந்தரில் கொந்தளிப்பைக் காட்டினார்கள்.
'வலுவான லோக்பால் மசோதா உருவாக்கப்பட வேண்டும். இப்போது மத்திய அமைச்சர்களாக இருக்கும் 15 பேருக்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணையை மேற்கொள்ளவேண்டும்’ என்கிற கோரிக்கைகளை வைத்து அண்ணா ஹஜாரே குழு உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறது. அண்ணா டீம் உறுப்பினர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கோபால் ராய் போன்றவர்கள் மட்டுமே காலவரையற்ற உண்ணாவிரதத்தில் குதிக்கப்போவதாக முதலில் அறிவித்தனர். அண்ணா, தன்னுடைய உடல்நிலையைக் கருதி உடனடியாக இறங்கப்போவது இல்லை என்று குறிப்பிட்டதோடு, மத்திய அரசுக்கு 96 மணி நேரக் கெடு விதித்தார். இந்த நான்கு நாட்களுக்குள் தங்களுடைய கோரிக் கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால், தானும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் குறிப் பிட்டார்.
வழக்கம்போல் எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை. எனவே, கடந்த ஞாயிற்றுக் கிழமை உண்ணாவிரதத்தில் உட்கார்ந்து விட்டார் அண்ணா ஹஜாரே!
''இது மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம். இந்த நாட்டின் முதலாளிகள் மக்கள்தானே தவிர, ஆட்சியாளர்கள் அல்ல. அவர்களுக்கு இந்த அரசாங்கம் அநீதி இழைப்பதற்கு முன்னால் நாம் விழித்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறேன். லோக்பால் சட்டம் நிறைவேற நான் உயிரை யும் கொடுப்பேன். மக்களின் ஆதரவு இருக்கின்றவரை நாடு என்னை சாகவிடாது.
பிரதமர் வீட்டுக்கு முன்னால் போராட்டம் நடத்தியவர்கள் அந்நியர்கள் அல்ல. இந்த நாட்டின் குடிமக்கள்தான். அவர்களை நாங்கள் தூண்டிவிடவில்லை, ஆனால் இது மக்கள் கோபத்தின் வெளிப்பாடு. மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பையே இது காட்டுகிறது'' என்று அண்ணா ஹஜாரே சொல்லச் சொல்ல ஒட்டுமொத்த கூட்டமும் ஆமோதித்தது.
அண்ணா குழுவினர் குற்றம் சாட்டும் 15 அமைச்சர்களில் பிரதமர் மன்மோகன் சிங்கும் இருக்கிறார். ஜனாதிபதியான பிரணாபும் இருக்கிறார். 15 அமைச்சர்களின் புகைப்படங்களோடு பிரதமர் படமும் உண்ணாவிரத மேடையில் வைக்கப்பட்டது. ஆனால் சட்டச் சிக்கல் வருமோ என்று எதிர் பார்த்த அண்ணா டீம், பிரணாப் படத்தை மட்டும் துணியால் மூடி மறைத்தது. பொதுவாக எதையாவது மூடி மறைத்தால்தான் அதற்குள் என்ன இருக்கிறது என்பதைத் திறந்து பார்க்கும் ஆர்வம் அதிகம் ஆகும். அப்படித்தான் உண்ணாவிரத மேடையைப் பார்ப்பவர்கள், 'அது என்ன?’ என்று அதீத ஆர்வத்துடன் விசாரிக்கிறார்கள்.
பிரணாப் முகம் அந்த அளவுக்கு ரிப்பேர் ஆகிக்கிடக்கிறது!
No comments:
Post a Comment